தூய்மையறியாத் தொழிலாளி

கோவை மாநகரின் முக்கியப் பகுதியான சிங்காநல்லூரில் ஓரிடத்தில் கழிவு நீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணியில் உள்ள துப்புரவுப் பணியாளர் ஒருவர் அந்த அடைப்பை நீக்குவதற்கு அனுப்பப்படுகிறார

கோவை மாநகரின் முக்கியப் பகுதியான சிங்காநல்லூரில் ஓரிடத்தில் கழிவு நீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணியில் உள்ள துப்புரவுப் பணியாளர் ஒருவர் அந்த அடைப்பை நீக்குவதற்கு அனுப்பப்படுகிறார். அவரும் அடைப்பை நீக்கிவிட்டு, சாக்கடைக் குழியில் இருந்து மேலே ஏறி வருகிறார். உடல், முகம் முழுவதும் சாக்கடைக் கழிவுகள் படர்ந்துள்ளன.
அவற்றை சுத்தம் செய்ய தண்ணீரைத் தேடுகிறார். கிடைக்கவில்லை. அருகில், தேங்கியுள்ள அசுத்தமான தண்ணீரில் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறார். அண்மையில் நடந்த இச்சம்பவம் விடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. 
நாடு முழுவதும் இத்தகைய சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சாக்கடைக் கழிவுகளையும் மனிதக் கழிவுகளையும் அகற்றுவதற்கு மனித சக்தியைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டமியற்றப்பட்டுள்ளது. இருந்தாலும், இத்தகைய கழிவகற்றும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் பலர் விஷவாயுத் தாக்கி உயிரிழக்கின்றனர். உயிரிழப்போருக்கு ஏதோ ஒரு தொகையை நிவாரண நிதியாக அளித்து, பிரச்னையை முடித்து விடுகின்றனர்.
கழிவுகளை அகற்ற நவீன தொழில்நுட்பக் கருவிகள் புழக்கத்துக்கு வந்துள்ள போதிலும், இப்பணிகளில் மனிதர்களைப் பயன்படுத்துவதும், அவ்வப்போது மனித உயிர்கள் பழியாவதும் தொடர்கதையாகி வருகிறது. ஊரை சுத்தமாக வைத்திருக்க உதவும் அவர்களின் வாழ்க்கை, அசுத்தமாக இருக்கிறது. 
தூய்மை இந்தியா' திட்டத்தை நாடு முழுவதும் மேற்கொள்ள அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விழிப்புணர்வும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும், இதில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்பதே கண்கூடு. துப்புரவுப் பணிகளில் இருந்து மனிதர்களை முழுமையாக நீக்க முடியாத நிலையில், அவர்களது மறுவாழ்வு நடவடிக்கையிலும் மத்திய-மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களது வாழ்க்கைத் தரம் குறித்து மத்திய அரசு ஓர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில் நாட்டில் மொத்தம் 53,000 பேர் துப்புரவுத் தொழிலாளிகளாகப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் முதல் கட்டமாக 6,650 தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். அதாவது, நாட்டில் உள்ள 600 மாவட்டங்களில் 121 மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிகார், கர்நாடகம், தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்துவது 1953 -ஆம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், எப்படி 50,000-க்கும் மேற்பட்டோர் அப் பணியைச் செய்து வருவதாக பதிவு செய்துள்ளனர்? சட்டம் எல்லாம் புத்தகங்களில் மட்டும்தானா? அதாவது, மனிதர்களை கழிவகற்றும் பணிகளில் இருந்து முழுமையாக நீக்க மத்திய, மாநில அரசுககளுக்கு விருப்பம் இல்லையோ என நினைக்கத் தோன்றுகிறது. மேலும், அம் முறையை ஒழிக்க முற்படாமல், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலேயே அரசுகள் முனைப்புக் காட்டி வருகின்றன. 
மத்திய அரசின் ஆய்வில், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் கழிவகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்கும்போது, இந்த 5 மாநிலங்களில் இருந்து 11,348 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 28,796 பேர் பதிவு செய்துள்ளனர். அதனையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் 8,016 பேரும், ராஜஸ்தானில் 6,643 பேரும் பதிவு செய்துள்ளனர். இந்த ஆய்வு முழுமையும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். 
துப்புரவுத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், தற்போதுள்ள தொழிலாளர்களை வேறு தொழில்களில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பதுமே அனைவரின் விருப்பம்.
மனித உயிர்களைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதைத் தடை செய்யவும், அவ்வாறு ஈடுபட்டுள்ளோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு அளிக்கவும் 1993 மற்றும் 2013 -ஆம் ஆண்டுகளில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலர் கழிவறைகளை அமைக்கக் கூடாது என்றும் சட்டம் உள்ளது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் வகையில், உலர் கழிப்பறைகள் அமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தை மீறுவோர் மீது ஓராண்டு வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2013 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், கழிவகற்றும் பணிகளுக்கென ஆள்களை நியமனம் செய்யக் கூடாது எனவும், அப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டம் கடுமையாக இருக்கும் நிலையிலும், சட்ட விதிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதை நாம் தினந்தோறும் கண்டு வருகிறோம். சட்டத்தை மதிப்பவர்களை விட, மிதிப்பவர்களை அதிகம் என்று எண்ணத் தோன்றுகிறது.
சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் பிறரைப் போல மனிதர்களே என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். சுத்திகரிப்புப் பணிகளில் இயந்திரங்களைப் புகுத்தி, அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மறுவாழ்வு அளிப்பதில் மத்திய- மாநில அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com