சட்டம் கடமையைச் செய்யுமா?

கடந்த மாதம், கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் வேகமாக வந்த ஒரு கார், பேருந்துக்காகக் காத்து நின்ற சிலரின் மேல் மோதி அவர்கள் மரணமடைய காரணமாயிருந்தது.

கடந்த மாதம், கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் வேகமாக வந்த ஒரு கார், பேருந்துக்காகக் காத்து நின்ற சிலரின் மேல் மோதி அவர்கள் மரணமடைய காரணமாயிருந்தது. அந்த விபத்து நடந்தது இரவு நேரத்திலல்ல, பட்டப் பகலில். அந்தச் செய்தியின் ஈரம் உலருவதற்கு முன்னரே சென்னை சாந்தோம் பகுதியில், இரவு ஒன்பது மணிக்கு ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்தார். அந்த கார், சாலையோரம் சவாரிக்காகக் காத்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது மோதியதில் கார் ஓட்டுநர் இறந்து போனார்.
 இத்தனைக்கும் ஓட்டுநர் ஒரு வழக்குரைஞர். ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக விரைவாகச் செல்ல வேண்டியிருந்ததாம். ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவித்தன.
 கடந்த வாரம், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயதை அடையாத சிறுவன் ஒருவன் தறிகெட்டுக் கார் ஓட்டியதில், பக்கத்தில் அமர்ந்திருந்த அவன் நண்பன் மரணமடைய நேர்ந்தது. இது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடப்பதைக் காணும் போது, தமிழ்நாட்டில் சட்டம் என்னதான் செய்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது.
 மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கும், 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டுவதற்கும் தடை உள்ளது. பின்னதற்குப் பெற்றோர் தண்டனை பெறுவார் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆயினும் ஏனோ நடைமுறைக்கு வரவில்லை.
 பிரபலங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இத்தகைய சட்டம் மீறிய செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் பெருமிதமே கொள்கிறார்களோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. பிரபல நடிகரின் பிள்ளையோ, பிரபல இயக்குநரின் மகனோ இது போன்ற நிகழ்வுகளில் சிக்கிக் கொள்ளும்போது அவர்களின் புன்னகை தவழும் முகங்களைப் பார்க்க முடிகிறது. மும்பையில் மிகப் பிரபல இந்தி நடிகர் ஒருவர் அப்பாவி பாதசாரியின் உயிரைப் பறித்ததற்காகச் சிறையில் அடைப்பட்டார். அவர் ஜாமீனில் விடுதலையானதை, ரசிகர்கள் கொண்டாடினார்களாம்.
 இதற்கு சமீபத்திய உதாரணம், பிரபல தெலுங்கு நடிகரின் மரணம். இவர் காரை அதிவேகத்தில் ஓட்டியதுமல்லாமல், இருக்கைப் பட்டையும் (ஸீட் பெல்ட) அணிந்துகொள்ளவில்லையாம்.
 இத்தகைய விபரீத நிகழ்வுகளுக்கெல்லாம் முக்கியக் காரணம், சில நற்பண்புகள் குறித்த மதிப்பீடுகள் நீர்த்துப் போனதுதான். ஒரு காலத்தில், நீதிமன்றம் ஏறுவதே மானக்குறைவு என்று கருதப்பட்டது.
 இப்போது நிலைமை தலைகீழ். மூன்று வார முன்பு கையூட்டு பெற்றதாக கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளின் படம் வெளியானது. அதில் ஓரிரு பேர் மட்டுமே முகத்தை மூடிக் கொண்டிருந்தார்கள்.
 இன்னமும் ஓர் அம்சம் புதிராகவே படுகிறது. நிதி மோசடிக் குற்றங்கள்; சீட்டுக் கம்பெனி கையாடல்; குடும்பத் தகராறால் கொலை; ஆள் கடத்தல்; வங்கிக் குற்றங்கள் போன்றவற்றை நிருபிக்கப் பல வரைமுறைகள் உள்ளன. முதல் தகவல் அறிக்கையிலிருந்து குற்றப் பத்திரிகை வரை கொண்டு போய் சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
 இந்த இடத்தில் தேவன் எழுதிய "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' நாவலிலிருந்து சில வரிகளை மேற்கோளிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும். அரசு தரப்பு வழக்குரைஞர் நண்பரிடம், "ஒரு குற்றம் நடந்தது என்றால், அது என்ன குற்றமானாலும் சர்க்காருக்கு எதிராகச் செய்ததாகத்தான் எடுத்துக் கொள்ளுகிறோம். யார் குற்றம் செய்தவனாக இருந்தாலும், சமூகத்தைப் பாதுகாக்கிறதற்காகவும், மறுபடி அதே போல செய்யாமல் தடுக்கவும், அந்த ஆளைத் தண்டிக்கிறோம்' என்று கூறுகிறார்.
 நீதிபதி தமது இறுதி உரையில், "உண்மைக் குற்றவாளியைத் தப்ப விடுவதும் சமூகத்துக்குச் செய்யப்படும் ஒரு துரோகம் என்பதில் சந்தேகமில்லை' என்று கூறுகிறார்.
 வாகன விபத்துக்களில் அசலான குற்றவாளி இன்னாரென்று தெரிந்தவுடன், காவல் துறையினர் வழக்குத் தொடுத்து, சான்றுகளுடன் நிரூபித்து அதிகபட்ச தண்டனையை வாங்கிக் கொடுக்க இயலாதா?
 பொதுவாகவே நம் நாட்டில் பணம் செலவு செய்யத் தயாராகயிருந்தால், எந்தக் குற்றத்திலிருந்தும் தப்பிவிடலாம் என்ற மனோபாவம் நிலவுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இந்தப் போக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.
 இங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமே நிலவுகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் மற்றும் ஆட்டோ கட்டணம். இந்த இரண்டு விஷயங்களிலும் 2011-இல் சுறுசுறுப்பாக காவல் துறையினர் செயல்பட்டனர். இன்று?
 இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்குகிறார்கள். எச்சரிக்கை விடுக்கிறார்கள். தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தலைக்கவசமணிந்த வாகன ஓட்டிகளுக்குப் போலீசார் இனிப்பு வழங்கினார்களென்ற செய்தியை படிக்கும்போது சிரிப்புத்தான் வந்தது. சட்ட விதியை மீறுபவர்களுக்கு ஏன் போலீசார் கடுமையான தண்டனை விதிக்க முடிவதில்லை?
 பிற மாநிலங்கள் இதில் சற்று மேல்தான். குறிப்பாக மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள். மும்பையில், மின்சார ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகள் அதிகம். இருந்தும் கூட, ஆட்டோக்காரர்கள் மீட்டரின்படிதான் வசூல் செய்கிறார்கள். பாக்கி தொகையைக் கொடுக்கிறார்கள். பெங்களூரில் தலைக்கவசம் அணியாத இரு சக்கர வாகனங்களைக் காணவே முடியாது. தமிழ்நாட்டிலும் அந்த நிலை விரைவில் வரவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com