இறைவனின் பிரதிநிதி இவர்!

சுவாமி விவேகானந்தர் 1891-ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, மக்களோடு மக்களாக வாழ்ந்தார்.

சுவாமி விவேகானந்தர் 1891-ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, மக்களோடு மக்களாக வாழ்ந்தார். இவ்விதம் அவர் சுமார் நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்தார். அப்போது அவர் இந்திய மக்களிடையே நிலவிய வறுமையையும், கல்வி அறிவின்மையையும் நேரில் கண்டார். ஆதலால், அவர் இந்தியா எழுச்சி பெற வேண்டுமானால், மக்களுக்கு முதலில் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்.
அவ்விதம் மக்களுக்குக் கல்வி அளிப்பதற்குப் பணம் தேவை. அதற்கான பணம் திரட்டுவதற்கு இந்தியாவில் வாய்ப்பில்லை. எனவே சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவுக்குச் சென்று பணம் திரட்ட எண்ணினார். அவர் அமெரிக்க நாட்டு மக்களிடம் சென்று, இந்திய மக்களுக்காகப் பணம் கொடுங்கள் என்று பிச்சை கேட்கக் கூடாது. இந்திய ஆன்மிகச் செல்வத்தை அமெரிக்காவுக்குத் தந்து, அதற்குப் பதிலாக, அமெரிக்க மக்களிடமிருந்து பணம் பெற்று இந்திய மக்களின் நலனை உயர்த்த வேண்டும் என்று நினைத்தார்.
அந்த எண்ணத்தை அவர் செயல்படுத்துவதற்கு, சிகாகோ சர்வ சமயப் பேரவை அவருக்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக, வெளிநாடுகளுக்கு இந்து சந்நியாசி செல்லக் கூடாது என்ற கருத்து இருந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில் சுவாமி விவேகானந்தர், சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்வதற்கு அமெரிக்காவுக்குச் சென்றார். இதை அவர், மேலை நாடுகளுக்கு வந்த முதல் துறவி நான். உலக வரலாற்றில் இந்துத் துறவி ஒருவர் கடல் கடந்து சென்ற முதல் நிகழ்ச்சி இதுவே' என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றைக்கு சரியாக 125 ஆண்டுகளுக்கு முன்பு, 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் சர்வசமயப் பேரவை நடைபெற்றது. அதில் சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தியது இந்தியாவில் இந்து மதத்திலும் ஒரு மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவை, இந்துமதத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். சிகாகோ சொற்பொழிவுகள் சுவாமிஜியை உலகிற்கு அடையாளம் காட்டியது. முக்கியமாக, இந்தியாவிற்கு அவரை அடையாளம் காட்டின.
இந்தியாவின் பெருமையையும், இந்துமதத்தின் பெருமையையும் மேற்கு நாடுகள் அறிந்து கொள்வதற்கு, சிகாகோ பேரவை நல்ல ஒரு தொடக்கமாக அமைந்தது. இப்போது சுவாமி விவேகானந்தரை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், அவர் சிகாகோவில் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றபோது, ஒரு சாதாரண துறவியாகத்தான் இருந்தார்.
1893-ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டில் சிகாகோ மாநகரில், சிகாகோ ஆர்ட் இன்ஸ்டிடியூட்டின் கொலம்பஸ் ஹாலி'ல், சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் உலகில் முக்கியத்துவம் உடைய அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அங்கு சர்வ சமயப் பேரவை' சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11ஆம் முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாள்கள் நடைபெற்றன. பேரவையில் 1893 செப்டம்பர் 11-ஆம் நாள் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய தினம் கொலம்பஸ் ஹாலுக்கு அருகிலிருந்து, பேரவையில் சொற்பொழிவு செய்வதற்கு வந்திருந்த பிரதிநிதிகள் ஊர்வலம் புறப்பட்டது.
பிரதிநிதிகள் அனைவரையும் வரிசையாக அழைத்துச் சென்றார்கள். பிரதிநிதிகள் எல்லோரும் கம்பீரமாக நடந்து ஹாலுக்குள் வந்து மேடை மீது ஏறினார்கள். அப்போது அவர்களைப் பார்வையாளர் கூட்டம் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தியது.
1893 செப்டம்பர் 11-ஆம் தேதி, காலை 10 மணிக்கு சிகாகோ சர்வ சமயப் பேரவை தொடங்கியது. சர்வ சமயப் பேரவையில் உலகில் 10 முக்கியமான மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள்' என்பதை அறிவிக்கும் வகையில், அங்கு பத்து முறை மணியோசை முழங்கியது.
அதைத் தொடர்ந்து, சர்வ சமயப் பேரவையின் காலை நிகழ்ச்சிகள் தொடங்கின.
அவைத் தலைவர் டாக்டர் பரோஸ் ஒவ்வொரு பேச்சாளரும் பேசுவதற்கு முன்பு, அவரை அவையினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதில் முதலில் கிரேக்க சர்ச்சின் ஆர்ச் பிஷப் ஜாந்தே உரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த பிரதாப் சந்திர மஜும்தார், கன்ஃபூசியஸ் மதத்தைச் சேர்ந்த புங் க்வாங் யூ, புத்த மதத்தைச் சேர்ந்த தர்மபாலர் ஆகியோர் நிகழ்த்திய சொற்பொழிவுகளுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடங்கின. பிரதி நிதிகள் ஒருவர் பின் ஒருவர் எழுந்து சென்று. சொற்பொழிவு செய்தார்கள். அப்போது சுவாமி விவேகானந்தருக்கு முப்பது வயது. அவர் சிவப்பு உடையும், மஞ்சள் நிறத் தலைப்பாகையும் அணிந்திருந்தார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட 31 வது இருக்கையில் அமர்ந்திருந்தார். 
சர்வ சமயப் பேரவையில் கலந்து கொண்டு சொற்பொழிவு செய்ய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த குழுவின் தலைவர் டாக்டர் பரோஸ். அவர்தான் அப்போது அங்கு பேரவை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார். அவர் இரண்டு மூன்று முறை சைகைக் காட்டி சுவாமிஜியை பேசுவதற்கு அழைத்தார். ஆனால், சுவாமிஜி, பிறகு பேசுகிறேன் என்று தான் பேசுவதை ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தார். முடிவில், இதற்கு மேலும் தவிர்க்க முடியாது என்ற ஒரு நிலை வந்தபோது, சுவாமிஜி 23-ஆவது பேச்சாளராகப் பேசுவதற்கு எழுந்தார். 
டாக்டர் பரோஸ், அவையினருக்கு சுவாமிஜியை அறிமுகம் செய்து வைத்தார். சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு, தன் குரு ஸ்ரீ ராமகிருஷ்ணரையும், கல்விதேவதை சரஸ்வதியையும் நினைத்துப் பிரார்த்தனை செய்தார்.
அதன் பின்பு அவர், அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே..' என்று கூறி, தன் சொற்பொழிவைத் தொடங்கினார். சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே அவர், சகோதரிகளே, சகோதரர்களே...' என்று கூறியதன் மூலம், உலகம் முழுவதும் ஒரே குடும்பம் - எல்லாரும் உறவினர்கள் -வசுதைவ குடும்பகம்' என்ற இந்தியச் சிந்தனையை வெளிப்படுத்தினார். சுவாமி விவேகானந்தரின் இந்த சொற்கள் அங்கு ஓர் அற்புதத்தையே நிகழ்த்திவிட்டன.
அவர்கள், சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டின் சகோதரிகளே சகோதரர்களே..' என்று கூறியதைக் கேட்டு, தங்களை மறந்து இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஒருவாறு கரவொலி ஓய்ந்ததும், சுவாமிஜி தன் உரையைத் தொடர்ந்து பேசிவிட்டு, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.
சுவாமிஜியின் அந்தச் சொற்பொழிவு சிறிய ஒரு சொற்பொழிவுதான். ஆனால், அந்தச் சொற்பொழிவில், அவர் இறைவனின் பிரதிநிதி என்பதற்கு உரிய முத்திரை இருந்தது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த மெய்ஞ்ஞானிகளின் தவவலிமை அவரது பேச்சில் வெளிப்பட்டது.
பிற்காலத்தில் சுவாமிஜி, தன் சீடர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சிகாகோ சொற்பொழிவு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார். சிகாகோவில் எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும், அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்று அழைத்ததும், எல்லோரும் எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் உங்களுக்குத் தெரியும். ஆனால், அப்படி அவர்கள் பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏதோ அதிசய ஆற்றல் என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். என்னிடம் அத்தகைய ஆற்றல் இருக்கிறது. அது இதுதான் - ஒருமுறை கூட காம எண்ணம் என்னுள் புகுவதற்கு நான் அனுமதித்ததில்லை. என் மனம், எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கும் என் ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது.'
சுவாமிஜி சர்வ சமயப் பேரவையில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் சுவாமிஜியை இந்திய மக்களுக்கு அடையாளம் காட்டின. இந்தியாவில் மக்களிடம் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தின. சுவாமிஜியை இந்திய மக்கள் இந்து மதத்தின் பாதுகாவலர்' என்று கண்டார்கள்.
சிகாகோ சர்வ சயம பேரவைக் கூட்டங்கள் பதினேழு நாள்கள் நடந்தன. அவற்றில் சுவாமிஜி பலமுறை பேசினார். இவற்றில் செப்டம்பர் 11, 15, 19, 20, 26, 27 தேதிகளில் நிகழ்த்திய ஆறு சொற்பொழிவுகள் மட்டும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த ஆறு சொற்பொழிவுகளிலும் முதல் நாள் செப்டம்பர் 11-ஆம் தேதி நிகழ்த்திய சொற்பொழிவும், மூன்றாம் நாள் செப்டம்பர் 19-ஆம் தேதி இந்து மதம்' என்ற தலைப்பில் படித்த கட்டுரையும், நிகழ்த்திய சொற்பொழிவும் நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கின்றன.
அவர் இந்து மதம்' கட்டுரையைப் பேரவையில் படித்த அன்று, அதுவரையில் என்றும் இல்லாதபடி மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சுவாமி விவேகானந்தர், நான் எப்போது மேடை மீது சென்றாலும், பலத்த கரவொலி எழும். அநேகமாக எல்லாப் பத்திரிகைகளும் என்னை உயர்வாகப் பாராட்டின. கொள்கை வெறி பிடித்த பத்திரிகைகளும் கூட, அழகிய முகமும், காந்தம்போல் கவரும் தன்மையும், அற்புதப் பேச்சுத்திறனும் கொண்ட இந்த மனிதர் பேரவையில் மிகவும் முக்கியமானவராக விளங்குகிறார்' என்று சொல்ல வேண்டியதாயிற்று. இதற்கு முன்பு கீழை நாட்டினர் யாருமே அமெரிக்க சமுதாயத்தின் மீது இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை' என்று தான் எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு இந்தியாவின் வரலாற்றில் எல்லாவிதத்திலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. இந்த உண்மையை இந்திய வரலாற்றைக் கூர்ந்து கவனிப்பவர்கள் நன்கு தெரிந்து கொள்வார்கள்.
இன்று (செப்.11) சுவாமி விவேகானந்தர்
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125 -ஆம் ஆண்டு நிறைவு நாள்.
கட்டுரையாளர்:
தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மதுரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com