சுடச்சுட

  

  ஸ்டாலினையும், தினகரனையும் நம்ப மக்களொன்றும் முட்டாள்கள் அல்ல! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புப் பேட்டி

  By DIN  |   Published on : 16th April 2019 02:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ops1

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர், எளிமையானவர் என அதிமுகவில் பெயர் எடுத்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அதிகார மையமாக இருந்தவர்களை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர். இப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகிப்பவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை முடித்து, தனது மகன் பி.ரவீந்திரநாத்குமார் போட்டியிடும் தேனி மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது "தினமணி'க்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
   
   ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் மக்கள் மத்தியில் அதிமுக ஆட்சிக்கு அதே அளவு ஆதரவு தொடர்கிறது என்று கருதுகிறீர்களா?

   ஜெயலலிதா இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொள்ள மற்ற கட்சிகள் எல்லாம் முயற்சி செய்தன. அவர்களது கட்சிகளுக்குச் சாதகமாக மாற்றிவிடலாம் என கனவு கண்டனர். அது நடக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரு மாபெரும் தலைவர்கள் வழி நடத்திய கட்சி அதிமுக. அந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம். ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அப்படியே தொடர்வதும், கூடுதலான திட்டங்களைச் செயல்படுத்துவதும் அதிமுக அரசு மீதான நம்பிக்கையை மக்களுக்கு அதிகப்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 2 ஆண்டுகால ஆட்சி செயல்படும் விதம், எந்தப் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படுத்த முடியும் என்ற தைரியத்தை அளித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், அதிமுக மீதான ஈர்ப்பு சக்தி மக்களிடம் சற்றும் குறையவில்லை. அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?

   எதைச் செய்ய முடியுமோ, அதைத்தான் தேர்தல் வாக்குறுதிகளாகச் சொல்கிறோம். மகப்பேறு உதவித் தொகையை உயர்த்தியது, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம், திருமண உதவித் திட்டத்தில் தாலிக்கு வழங்கும் தங்கத்தை 8 கிராமாக உயர்த்தியது என கடந்த பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.
   உங்களது அரசின் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் முடக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறதா?
   பருவமழை பொய்த்த காரணத்தால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு நீதிமன்றத்தின் மூலம் திமுக தடை பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பிறகு நீதிமன்றத்தில் உள்ள தடையை நீக்க உரிய உத்தரவு பெற்று, ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம். திமுகவின் செயல்பாட்டால் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவித் தொகை தடுக்கப்பட்டிருக்கும் கோபமும் ஆத்திரமும் விவசாயிகளுக்கு இருக்கிறது.

   திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரசாரம் எப்படி இருக்கிறது?
   ஜெயலலிதா மறைவின் வெற்றிடத்தை எப்படியாவது தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள அதீத முயற்சிகளை ஸ்டாலின் மேற்கொண்டார். அது நடக்கவில்லை. இப்போது எங்கு பார்த்தாலும் அதிமுக ஆதரவு அலை வீசும் சூழல் அவருக்குப் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. அவரது தேர்தல் பிரசார உரைகளிலும் அது வெளிப்படுகிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மக்கள் கூடும், பொதுக் கூட்டங்களில் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பது பொது நியதி. அவரிடம் இன்னும் அரசியல் முதிர்ச்சி ஏற்படவில்லை.

   ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மாநில உரிமைகளில் மத்திய அரசுடன், அதிமுக அரசு சமரசம் செய்து கொள்வதாகப் பேசப்படுகிறதே?
   கச்சத்தீவு, காவிரிப் பிரச்னை, ஈழப் பிரச்னை என்று தமிழகத்தின் எல்லா மாநில உரிமைகளையும் பதவி சுகத்துக்காக சமரசம் செய்து கொண்ட திமுக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. 1972-இல் நான்கு அணைகளைக் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தபோது, எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை எனத் தெரிவித்தது அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். கர்நாடகத்தில் 4 அணைகளைக் கட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி அனுமதி வழங்கியதால் ஏற்பட்டதுதான் காவிரிப் பிரச்னை.

   காவிரிப் பிரச்னைக்குத் திமுக மட்டுமே காரணம் என்று குற்றஞ்சாட்டுவது சரியா? அதிமுகவும்தான் ஆட்சியில் இருந்தது.

   தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னையைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-இல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டுமெனில், மத்திய அரசின், அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். இது குறித்து அப்போதைய திமுக அரசுக்கு 2007-லேயே ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் ஆட்சியிலும், மத்திய ஆட்சியில் அதிகாரம் மிக்க கட்சியாகவும் இருப்பதால், திமுக நினைத்தால் 24 மணி நேரத்தில் இதைச் செய்துவிடலாம் என்றும் குறிப்பிட்டார். ஆனால், அதைச் செயல்படுத்த திமுக முன்வரவில்லை. அதன் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா, இந்தப் பிரச்னையை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று சட்டப் போராட்டம் நடத்தி 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரசிதழில் வெளியிடச் செய்தார். தமிழகத்தின் ஜீவாதார உரிமையைக் காப்பாற்றிய தலைவராக ஜெயலலிதாதான் இருந்துள்ளார்.

   மாநில உரிமைகள் பிரச்னைகளுக்கு வருவோம். நீங்கள் சமரசம் செய்துகொள்வதாகக் கூறப்படுகிறதே?

   ஆட்சியில் திமுக இருந்தபோதுதான், பாதுகாக்க வேண்டிய விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டன. அதன் காரணமாகவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. நான் முதல்வராக இருந்தபோது அந்தத் தடையை நீக்கி, ஜல்லிக்கட்டுப் போட்டியை மீட்டது அதிமுக அரசுதான். இப்படி எத்தனையோ சம்பவங்களைப் பட்டியலிட முடியும். மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்ததெல்லாம் திமுகதான்.

   "நீட்' தேர்வை அந்தந்த மாநிலங்களே நடத்திக் கொள்ளலாம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

   அதாவது "நீட்' தேர்வு அல்லது தகுதிகாண் தேர்வை மாநிலங்களே நடத்திக் கொள்ளலாம் என்று கூறுகிறார் ராகுல் காந்தி. அதை திமுக ஏற்கிறதா? "நீட்' தேர்வு பிரச்னையில் தமிழக அரசுக்கோ, மத்திய  அரசுக்கோ எந்தவிதப் பங்கும் கிடையாது என்பது திமுகவுக்கும், இது குறித்து ஓலமிடும் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். உச்சநீதிமன்றத்தின் பிடிவாதமான தீர்ப்புதான் "நீட்' தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டதற்குக் காரணம்.

   மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தும்கூட, அதை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். உச்சநீதிமன்றத்தை விமர்சிக்க இவர்களுக்குத் துணிவில்லை. எங்கள் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.

   உங்கள் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று திமுகவும் ஏனைய எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கின்றனவே, அதற்கு என்ன கூறப் போகிறீர்கள்?

   ஊழல் பற்றி திமுக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுகதான் என்பது உலகம் அறிந்த உண்மை. திமுகவும் காங்கிரஸும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போகின்றன. ரஃபேல், ரஃபேல் என்று கூறித் தங்களது போபர்ஸ் பீரங்கி ஊழலை மறக்கடிக்க நினைக்கிறது காங்கிரஸ். எங்கள் மீது ஊழல் முத்திரை குத்தித் தனது ஊழல் பின்னணியை மறைக்க நினைக்கிறது திமுக. பிக் பாக்கெட் திருடர்கள், திருடன்...திருடன்...என்று அப்பாவிகளைக் கைகாட்டித் தப்பித்துக் கொள்வதுபோலத்தான் காங்கிரஸும், திமுகவும். எங்கள் மீது பழிசுமத்தித் தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றன. மக்கள் முட்டாள்களல்ல என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.

   தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதாக ராகுல் காந்தி உறுதி அளித்திருக்கிறாரே. அது குறித்த உங்களது கருத்து என்ன?

   எதையாவது சொல்லி, எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற அசட்டுத்தனமான வெறியில் இருக்கிறார் ராகுல் காந்தி. ஊருக்கு ஒரு மாதிரி பேசுகிறார். கர்நாடகத்தில் பேசும்போது, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று உறுதி அளிக்கிறார். சேலம், கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகளின் நலம் பாதுகாக்கப்படும் என்கிறார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்கிறார். கேரளத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அவரையும் சரி, அவருடன் கூட்டணி அமைத்திருக்கும் கட்சிகளையும் சரி, பதவிப் பித்து பிடித்தாட்டுகிறது. என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் எதையெதையோ பேசுகிறார்கள்.

   பாட்டாளி மக்கள் கட்சியுடனும், தேமுதிகவுடனும் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
   பாமகவும், தேமுதிகவும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் அது "லட்சியக் கூட்டணி', எங்களுடன் இருந்தால் அதுவே சந்தர்ப்பவாதக் கூட்டணி. நன்றாக இருக்கிறதே இந்த நியாயம். பாமகவையும், தேமுதிகவையும் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள திமுக தலைகீழாக நின்று செய்த முயற்சிகளைத் தமிழகம் பார்த்துக் கொண்டுதானே இருந்தது.

   அதாவது, திமுகவுடன் பேரம் படியாததால்தான் உங்கள் கூட்டணியில் அந்த இரண்டு கட்சிகளும் இணைந்தன என்று ஒப்புக் கொள்கிறீர்கள், அப்படித்தானே?

   இல்லை. திமுகவிடம் நம்பகத்தன்மை இல்லாததால் அந்தக் கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்வதை விரும்பி ஏற்றுக் கொண்டன. அவர்கள் மட்டுமல்ல, தமிழ் மாநில காங்கிரஸும், புதிய தமிழகமும், சமத்துவ மக்கள் கட்சியும், புதிய நீதிக் கட்சியும்கூட அப்படித்தான். திமுகவையும், மு.க. ஸ்டாலினையும் வைகோ வசை பாடியது சமூக ஊடகங்களில் சாக்கடையாக நாறுகிறது. அதற்குப் பிறகும் மதிமுகவைக் கூட்டணியில் திமுக தலைமை சேர்த்துக் கொண்டிருப்பதைவிடவா மோசம் எங்கள் கூட்டணி?

   22 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக ஆட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறதே?

   எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில், 22 தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றிபெறப் போகிறது. இதனால், சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம்தான் அதிகரிக்கப் போகிறது.

   உங்களை துரோகிகள் என்று வர்ணிக்கிறாரே டி.டி.வி. தினகரன். அவரது விமர்சனத்துக்கு உங்களது பதில் என்ன?

   தன் மீதுள்ள ஊழல் கறையிலிருந்து தப்பிக்க ஸ்டாலின் எங்கள் மீது ஊழல் பழி சுமத்துகிறார் என்றால், தனது துரோகத்தை மறைக்க டி.டி.வி. தினகரன் எங்களை துரோகிகள் என்கிறார். எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சி இது. இரட்டை இலை அவரது சின்னம். அவரது மறைவுக்குப் பிறகு கட்சி அதிமுக (ஜா), அதிமுக (ஜெ) என்று பிரிந்தது. எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்ற தங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைத் துறந்து ஜானகி அம்மையாரும், ஜெயலலிதாவும் கட்சியை இணைத்து வலுவூட்டினார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட, ஜெயலலிதாவால் வலுப்படுத்தி பாதுகாக்கப்பட்ட அந்த அதிமுகவை அழிக்கத் துடிப்பவர் துரோகியா? இல்லை, அந்தக் கட்சியையும் ஆட்சியையும் தக்க வைத்திருக்கும் நாங்கள் துரோகியா?
   நீங்களும்தான் தர்மயுத்தம் என்று கூறி கட்சியிலிருந்து வெளியேறினீர்கள்?

   உண்மை. பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்று உணர்ந்தபோது, கட்சி பிளவுபட்டுவிடக் கூடாது என்று இணைந்துவிட சம்மதித்தேன். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற, முதல்வராக இருந்த நான் துணை முதல்வராக செயல்படத் தயங்கவில்லை. டி.டி.வி. தினகரன், ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவிற்கும், அவரது சின்னமான இரட்டை இலைக்கும் எதிராக அந்தக் கட்சியைத் தோற்கடிக்கவும், ஆட்சியிலிருந்து அகற்றவும் முற்பட்டிருக்கும் உண்மைத் துரோகிகளை கட்சித் தொண்டர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவு அதைத் தெளிவுபடுத்தும்.

   டி.டி.வி. தினகரனின் அமமுக இந்தத் தேர்தலில் அதிமுகவுக்குச் சவாலாக இருக்காது என்று நினைக்கிறீர்களா?

   அமமுக உள்ளிட்ட எந்தக் கட்சியின் வருகையும் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கப் போவதில்லை. அரசியல் கட்சிகள் அனைத்திலும் எல்லா நிலையிலும் அதிருப்தியாளர்கள் இருப்பது பொதுவானது. அதைப் போலத்தான் அதிமுகவில் பதவி கிடைக்காத சிலர் அமமுகவுக்குச் சென்றுள்ளனர். சாதாரண தொண்டர்கள், பொதுவான மக்கள் யாரும் அமமுகவுக்கு ஆதரவான நிலையில் இல்லை. அமமுக என்பது அங்கீகாரம் பெறாத கட்சி. அதனால், நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிடுகிறார்கள். இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

   பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன? உங்களது கணிப்பின்படி, அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?
   மக்களின் மன ஓட்டத்தை அறிந்த வகையில், மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 22 பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

   சந்திப்பு: சிவ.மணிகண்டன், கோ.ராஜன்.
   படம்: ரா.ரஞ்சித்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai