மகாத்மா போதித்த வாக்குரிமை!

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டில், மிகப் பொருத்தமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று நாம் எதையெல்லாம் சரியில்லை என்றும்,

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டில், மிகப் பொருத்தமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று நாம் எதையெல்லாம் சரியில்லை என்றும், சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ, அதையெல்லாம்  1908-1909-ஆம் ஆண்டுகளிலேயே  இந்தியத் தன்னாட்சி/இந்திய சுயராஜ்ஜியம் என்ற தொகுப்பு நூலில் தீர்க்கதரிசனத்துடன் மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார்.  அதில் அவர் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்லி இருக்கிறாரோ, அதுதான் இன்று நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. 
மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கும் இந்தத் தருணத்தில், நாடாளுமன்றம் குறித்து மகாத்மா காந்தி கூறிய வரிகள் இவைதாம்: ஆங்கில அரசாங்க முறை பரிதாபத்துக்குரியது. இது நாம் விரும்பத்தக்கதோ, தகுதியானதோ அன்று என்பதால், இப்படியொரு நிலைமை இந்தியாவுக்கு என்றுமே வந்துவிடக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன் என்று ஆரம்பித்து, பிரிட்டனைப் போன்று இந்தியா நடப்பதென்று ஆரம்பித்துவிட்டால், நமது நாடு அழிவுறும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை என்று முடிக்கிறார் என்றால், என்னென்ன சொல்லி இருப்பார் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.
ஒரு பக்கம் நாடு வளர்ச்சி அடைந்து வருவதாகக் காட்டப்பட்டாலும்கூட, இதற்கெல்லாம் அடிப்படையில் தேர்தலின் மூலம் மக்களாட்சிதான் நடக்கிறதா என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும். மகாத்மா காந்தி போதித்த அறவழியில், சட்டப்படியான வாக்குரிமையைச் செலுத்தி மக்களே மக்களுக்கான மகத்தான மக்களாட்சியை மலரச் செய்ய முடியும்.
இதற்கு முன்பாக, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மக்களாட்சியாக இருக்கிறதா என்பதை நம் எளிய புரிதலுக்காக மேலோட்டமாகப் பார்த்து விடுவோம்.  ஒரு தொகுதியில், நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றும், அந்தத் தொகுதியில் வாக்குரிமை உள்ள 100 பேரும் தங்களின் வாக்குரிமையை ஒவ்வொரு வேட்பாளருக்கும் முறையே, 27; 25; 24; 24 எனச் செலுத்துவதாகக் கருத்தில் கொள்வோம்.  இதில் யார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் என்றால், எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி 27 வாக்காளர்களின் வாக்குரிமையைப் பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். 
ஆனால், உண்மையில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக மற்ற மூன்று வேட்பாளருக்கும் மொத்தமாக 73 வாக்குகளை அந்தத் தொகுதியின் வாக்காளர்கள் செலுத்தி உள்ளனர் அல்லவா?  இப்படி அதிகபட்ச எதிர்ப்போடும், குறைந்தபட்ச ஆதரவோடும் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி மக்களாட்சியாக இருக்கும்? 
இது தவிர, ஒவ்வொரு கட்சிக்கும் என தனித்தனி கொள்கைகள் இருந்தாலும்கூட, தேர்தல் என்று வந்தால் மட்டும் எப்படி கூட்டுச் சேர்ந்து, கூட்டணி அமைத்துப் போட்டிப் போட முடியும்?
போட்டி என்றால், வயது அல்லது எடை அல்லது பிற ஏதாவது ஒரு தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே இயற்கை நியதி. ஆனால், தேர்தலில் மட்டும் ஒரு கட்சியின் தலைவராக அறியப்படுபவரை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் போட்டி போடாமல், அந்தக் கட்சியில் உள்ள யாரோ ஒருவர் போட்டி போடுவது எப்படி நியாயமாகும்? 
இப்படிப் பல காரணங்களை விவரித்துக் கொண்டே போகலாம். எனினும், எளிய புரிதலுக்கு மேற்சொன்ன முத்தாய்ப்பான மூன்றே போதும். இப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் மக்களாட்சி நடைபெறவில்லை. மாறாக, முன்பே சொன்னபடி அதிகபட்ச எதிர்ப்போடு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மக்களுக்கு எதிரான ஆட்சியே நடைபெறுகிறது.
அப்படியானால், மகாத்மா காந்தி விரும்பியபடி, மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வழிதான் என்னவென்றால், இனி அரசியல்வாதிகளை நம்பிப் பலனில்லை என்று மகாத்மா காந்தி போதித்த அறத்தின் வழியில், நோட்டா என்ற சட்டப்படியான வாக்குரிமையை நாடுவதே ஆகும்.
நோட்டா என்ற வாக்கு மட்டுமே, இனி போராட்டம் ஏதுமின்றி ஆட்சியாளர்களை மக்கள் துளைத்தெடுக்க உதவும். மக்களின் கைகளில் காலம் கனிவுடன் தந்துள்ள ஈடு இணையற்ற சட்டப்படியான தோட்டாவே நோட்டா என்னும் வாக்கு. இதை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள், மக்களுக்கு எளிதில் புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்ற பொய்யான பரப்புரையைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர்.
இவர்கள் பொய் பரப்புரை செய்வதுபோல, ஒரு தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள 1,110 பேரில், வேட்பாளர்களின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக நோட்டாவுக்கு 1,000 பேர் வாக்குகளை செலுத்திவிட, 100 பேர் வாக்குரிமையைச் செலுத்தாமல் விட்டுவிட, மீதமுள்ள 10 வாக்காளர்கள் மட்டும் வேட்பாளர்களுக்கு வாக்கைச் செலுத்தியதாகக் கொள்வோம்.  இதில் செலுத்தப்பட்ட 10 வாக்குகளில், எந்த வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளாரோ அவரே வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படுவார் என்று பரப்புரை செய்கிறார்கள். இது முற்றிலும் தவறு.
ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்கைப் பெறாத  வேட்பாளர்கள், தன்னுடைய வைப்புத் தொகையை இழந்து விடுவார்கள் என்பது நாம் அறிந்ததே. இந்த வகையில், வாக்கு எண்ணிக்கையில் நோட்டாவும் செல்லத்தக்க வாக்காக கணக்கிடப்படுவதால், இப்போது அமலில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி, மொத்தம் பதிவான 1,010 செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தது 168 வாக்குகளைப் பெறாதவர்கள் அத்தனை பேரும் வைப்புத் தொகையை இழந்து தோற்றவர்களாகிப் போவார்களே ஒழிய, சட்டப்படி ஒருபோதும் வெற்றி பெற்றவர்கள் ஆகவே முடியாது. 
மேலும், இதைவிடச் சிறப்பான செயல்பாடாக ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்கைப் பெறாத அரசியல்வாதிகளின் சின்னங்களும் முடக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனால், வேட்பாளர்களின் தகுதியைவிட, முக்கியமாகக் கருதும் சின்னங்களை வைத்து நடத்தும் ஆபத்தான அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததாகி விடும். இப்படி ஒரே வாக்குரிமையில் எத்தனை எத்தனையோ மறுமலர்ச்சி மாற்றங்களை நம் வாக்கால் மட்டுமே உருவாக்க முடியும். 
ஆம். எப்போதெல்லாம் மகத்தான மக்களாட்சி மலர வேண்டுமோ, அப்போதெல்லாம் இதை நாமே செய்ய முடியும் என்பதன் மூலம், உண்மையான அரசாட்சி அதிகாரம் அரசியல்வாதிகளிடம் இல்லை; 
நம்மிடமே இருக்கிறது என்று வரலாற்றை ஒவ்வொரு முறையும் மக்களே புதிதாக மாற்றி எழுதுவதன் மூலம், அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி உறுதி செய்ய முடியும். 
ஆகவே, காலம் நம்முடைய கையில் அளித்துள்ள நோட்டா எவ்வளவு வலிமையானது என்பதை உணர்ந்து செயல்பட்டு, அறத்தின் துணையுடன், நாம் விரும்பும் மகத்தான மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும். 
உண்மையில், 49-ஓ மற்றும் நோட்டா வாக்குகள் அறிமுகமானதிலிருந்து இதுவரை போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களைவிட அவை அதிக வாக்குகளைப் பெற்றதில்லை. அதனால், நோட்டாவின் வெற்றியில் இதுவரை சட்டச் சிக்கல்கள் எதுவும் எழவில்லை.  அதாவது, வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிகமானோர் வாக்களித்தால், வெற்றி பெற்றது யார் என்று இதுவரை இல்லாத புது சட்டச் சிக்கல்கள் எழும். 
இதற்கு சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் நல்லதொரு தீர்வே கிடைக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமே தவிர, என்ன தீர்வு கிடைக்கும் என்பதை இப்போது நான் சொல்ல முடியாது. 
நான் மட்டுமல்ல; தேர்தல் ஆணையம் உள்பட வேறு யாராலும்கூட சொல்ல முடியாது.
ஏனெனில்,  இப்படியொரு சட்டப் பிரச்னை இனிமேல்தான் வர வாய்ப்புள்ளது என்பதால், அதற்கான சட்டமும் தீர்வும்கூட, அதன் பின்னரே வரவேண்டும்.
எனவே, அவர்கள் சார்ந்துள்ள சின்னத்துக்கு அரசியல்வாதிகள் வாக்கு சேகரிப்பதுபோல, நோட்டாவுக்காக அல்ல, மகத்தான மக்களாட்சி மலர்வதற்காக மக்களில் யார் வேண்டுமானாலும், இந்தப் பிரசாரத்தை சட்டப்படி செய்யலாம் என்பதை 2009-ஆம் ஆண்டே தேர்தல் ஆணையத்திடமிருந்து கடிதமாகவே பெற்றுள்ளோம். 
எனவே, நீங்கள் வேட்பாளர்களை விரும்பாத நிலையில் நன்கு சிந்தித்து அறவழி நோட்டாவுக்கு வாக்களித்தால், முதலில் உங்களின் வாக்கை கள்ள வாக்காக வேறு யாரும் பதிவு செய்ய முடியாதபடி தடுத்த புண்ணியத்துக்கு உள்ளாவீர்கள். 
இப்படி அறத்தின் வழியில் அடுத்தவர்களிடமும் ஆதரவு திரட்டி, அனைத்து அல்லது பெரும்பான்மை வாக்குகளை நோட்டாவில் விழச் செய்வதன் மூலம், அரசியல்வாதிகளை தேர்தலில் வீழ்த்தி, அறத்தின் துணையுடன் மகத்தான மக்களாட்சி மலர பெரிதும் துணை நிற்க முடியும். 
எனவே, நோட்டா  என்பது மகாத்மா காந்தி போதித்த சட்டப்படியான அறவழி என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து தவறாமல் வாக்களியுங்கள். ஒவ்வொருவருக்கும் உணர்த்தி 100 சதவீதம் வாக்களிக்க வையுங்கள்.

கட்டுரையாளர்: 
சட்ட ஆராய்ச்சியாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com