முதல் முறை வாக்கு! முக்கிய வாக்கு!

தமிழகம், புதுச்சேரியில் இன்று  (ஏப்ரல் 18) தேர்தல் வாக்குப்பதிவு தினம். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர், தங்கள் வாக்கைப் பதிவு செய்ய


தமிழகம், புதுச்சேரியில் இன்று  (ஏப்ரல் 18) தேர்தல் வாக்குப்பதிவு தினம். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர், தங்கள் வாக்கைப் பதிவு செய்ய வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்காளர்கள் செல்லும்போது ஆடை அலங்காரத்துடன் செல்வார்கள். அவர்களின் நடையில் ஒரு கம்பீரம் இருக்கும். வரப்போகும் தலைவரை தாங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற இறுமாப்பு இருக்கும். 
அத்துடன் அப்போது வாக்குச்சீட்டு முறை இருந்தது. தேர்தலில் வாக்களிப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்னரே வாக்குச்சீட்டில் எப்படி தங்கள் வாக்கைப் பதிவு செய்வது, பின் அதை எப்படி மடிப்பது போன்ற பயிற்சிகளை வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆண்கள் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால், இந்த முறையில் பெரும்பாலானவை செல்லாத வாக்குகளாகி விடும் பிரச்னை இருந்தது. தேர்தல் மையங்களில் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் அனுப்பும் தபால் வாக்குகளில்கூட செல்லாதவை இருக்கும்.
அந்தக் காலத்தில் வாக்குப்பதிவும் குறைவாகவே இருந்தது. போதுமான கல்வியறிவு, வேட்பாளர்களின் தகுதியைப் பற்றிய பிரித்தாளும் திறன், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை போன்றவை குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறலாம். தங்கள் கணவன், தந்தை அல்லது மகன் கூறும் வேட்பாளர்களுக்குத்தான் பெண்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.
அத்துடன் தேர்தல் மையங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லை. பல மலைவாழ் கிராமங்கள் நகரங்களுடன் துண்டிக்கப்பட்டே இருந்தன. காலப்போக்கில், அரசியல் தலைவர்களின் சொல்வாக்கும், நாக்கும் மாறியதால், அவர்களின் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. தங்களுக்கு விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்கள், ஒரு கட்டத்தில் நாம உழைச்சாதான் சோறு என்று எண்ணத் தொடங்கி விட்டனர். அன்று ஒருநாள் கூலிப் பணம்கூட ஒரு வேளை வயிற்றுக்கு வேண்டும் எனச் சிந்திக்கும் அளவுக்கு வாழ்க்கைத் தரம் மாறியது.  எனவே, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள், கூலி வேலை செய்பவர்களின் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே இருந்தது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் பெண்களாயிருந்தால் வாக்களிப்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 
ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் எதிர்காலமும் அரசியலோடு பின்னிப் பிணைந்திருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும், தனியார் சமூக நல அமைப்புகளும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டறிக்கைகள், பெருந்திரள் ஓட்டம், கலை நிகழ்ச்சிகள் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், இன்றைய காலகட்டத்தில், கல்வியறிவு பெற்றவர்களின் விகிதமும் அதிகமாகி விட்டது. 2001, 2011 காலகட்டத்தில் 74.04%-இல் இருந்து 80.33%  என்ற அளவுக்கு கல்வியறிவு அதிகரித்திருக்கிறது. ஆண்-பெண் பேதங்கள் இல்லாமல் இருவரும் படித்து, பணியில் சேர்ந்து பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.
இளைய தலைமுறையினர் தங்கள் சுயவிருப்பப்படி முடிவெடுக்கிறார்கள். 
எனவேதான் இன்றைய உலகம் இளையோர்களை முன்னிறுத்தி நகர்கிறது. தேர்தல்களில்கூட அவர்களை நோக்கியே வாக்கு வங்கி திசை திரும்புகிறது. அதிலும், தமிழகத்தில் 18-19 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியிருக்கிறது.
எனவே, முதன்முறை வாக்களிக்க இருப்பவர்கள் தெளிவான மனப்பான்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். தந்தை, தாய், அண்ணன் என்ற மூத்த தலைமுறைகளின் எண்ணத்தைப் பிரதிபலிக்காமல் சுயமாகச் சிந்தியுங்கள். மூன்று முறைக்கு மேல் வாக்களித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அந்தக் கட்சிகளின் குறைகள் தெரிந்தாலும் அதிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை.
ஆனால், புத்துணர்ச்சியோடும், புதிய சிந்தனையோடும் வாக்களிக்க வரும் இளம் வாக்காளர்களால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். வெற்றி, தோல்வியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உரிய வேட்பாளரைத் தேர்வு செய்யுங்கள். அத்தகைய வேட்பாளர் இந்தத் தேர்தலில் தோல்வியுற்றாலும், சமுதாய மாற்றத்துக்கு அதுவே திறவுகோலாக அமையும்.
இன்று தேநீர்க் கடைகளில் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து தேநீர் அருந்துவதை பெருமையாகக் கருதி பிரபலமாக்கும் தலைவர்கள் மத்தியில், காமராஜரைப் பற்றியும், கக்கனைப் பற்றியும் படியுங்கள். கட்சிகளைத் தாண்டி தனிமனித ஒழுக்கத்துடனும், கொள்கைகளுடனும் வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டும். அனுபவமிக்கவர்களிடமும் ஆலோசனை கேளுங்கள். ஒரு வாக்குக்கு இவ்வளவு பிரயத்தனப்பட வேண்டுமா என்று யோசிக்காதீர்கள். ஒவ்வொரு வாக்கும் நம் வாழ்வை மாற்றும் வல்லமை உடையது.
தமிழகத்தில் 500-க்கும் அதிகமானபொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகிறார்கள். ஆனால், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் அளவுக்கு அவர்களின் கல்வித் தரம் இருப்பதில்லை. 
அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும், போதுமான வேலைவாய்ப்பு வேண்டும், அலட்சியமில்லாத அரசு மருத்துவமனைகள் அமைய வேண்டும் என கோரிக்கைகளை முன்னிறுத்தி தவறாமல் வாக்களியுங்கள். உங்களுடைய பிரச்னைகள், உங்களுக்கான தேவைகள் பற்றி யோசியுங்கள்.
நம்முடைய ஒவ்வொரு உரிமைக்காகவும் நாம் வீதியில் வந்து போராட முடியாது. அதற்காகத்தான் ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனிடமும் கொடுக்கப்பட்ட வலிமை மிக்க ஆயுதம் வாக்குரிமை. எனவே, முதல் வாக்கைப் பதிவு செய்யும் இளம் வாக்காளர்களே, இது முக்கியமான வாக்கு. இது உங்களுடைய உரிமை மட்டுமல்ல கடமையும்கூட என்பதை உணர்ந்து தவறாமல் வாக்களியுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com