தேர்தல் களம் கண்ட காட்சிகள்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.  வேலூர் தவிர்த்த 38 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.  வேலூர் தவிர்த்த 38 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு என நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
கொளுத்தும்  கோடை வெயிலில் பலரும் மிகுந்த சிரமத்திற்கு இடையே தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டியது சற்றுப் பெருமையாக இருந்தாலும், ஒட்டுமொத்த வாக்குப்பதிவு என்பது 71.90 சதவீதம் என்பது சற்று ஏமாற்றத்தையே தருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள இடத்தில் இல்லாமல்  பணி காரணமாக வெளியூரில் இருப்பது, உடல் நலமின்மை, முதுமை உள்பட வாக்களிக்க முடியாமல் போவதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. எனினும்,  கல்வி, தொழில், வேலை, போக்குவரத்து என நாட்டின் பன்முக வளர்ச்சிக்குப் பிறகும் குறைந்தபட்சம் 90 சதவீத வாக்குப்பதிவைக்கூட நம்மால் செயல்படுத்த முடியவில்லை என்பது வருத்தமான செய்தியே.
பணி காரணமாக சென்னையில் வசித்து வரும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள், வாக்களிப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்று அரசுப் பேருந்துகள் இன்றி தவித்ததையும், வாக்களிப்பதற்குச் சொந்த ஊர் செல்ல பேருந்துகளின் கூரை மீது பயணித்ததையும் பார்க்க முடிந்தது. அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், பிரபல நடிகர்கள்-நடிகைகள் வழக்கம்போல் தங்களது வாக்கைப் பதிவு செய்தது வரவேற்கத்தக்கது. எனினும், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ்  கல்லூரியில் வாக்களித்தபோது இடது கை விரலுக்குப் பதிலாக அவரது வலது கையில் வாக்குச்சாவடி அலுவலர் தவறாக மை வைத்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தவறு தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். ஆக, வாக்குப்பதிவின்போது இடது கை விரலில்தான் மை வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இனி மேலும் வலுப்படும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், இந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் இருந்து வருவதை மறுக்க முடியாது.  வாக்குப்பதிவு செய்ய வந்த இளைய தலைமுறையினர் வாக்களித்த பின் தங்கள் நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் கைவிரல் வாக்குப்பதிவு அடையாள மை காண்பித்து வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றியதாக சமூக வலைதளங்களில் பரவலாக பதிவிட்டதைக் காணமுடிந்தது. முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு இன்றைய அரசியல் குறித்தும், சமூக அக்கறை குறித்தும் எவ்வளவு புரிதல் இருந்திருக்கிறது என்பது தேர்தல் முடிவுகளில் வெளிப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பதற்கு தயக்கம், பயம் பலருக்கும் இருந்ததை உணர முடிந்தது.  இதற்காக தேர்தல் ஆணையம் பல இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பித்தும், பலருக்கும் அந்த வாக்களிக்கும் நேர பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.  ஆனால், பெரியவர்கள் எத்தனை தேர்தல்களை பார்த்தாயிற்று என்பதைப் போல சிரித்த முகத்துடன் வாக்களித்தனர். குறிப்பாக, சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த 159 பேர் தங்களது வாக்கைப் பதிவு செய்தது இந்திய ஜனநாயகத்துக்கே பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
அனைத்துக் கண்காணிப்புகளையும் மீறி, தமிழகத்தில் பல இடங்களில் வாக்களிக்க பணம் தருவதாகவும், ஒரு இடத்தில் தந்தவர்கள் மற்ற இடங்களில் தரவில்லை எனும்போது அந்தப் பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. வாக்குக்குப் பணம் என்பது முறையற்ற செயல் எனத் தெரிந்தும் அதிலும் சில நியாயத்தை எதிர்பார்க்கும் பாமர மக்களின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.
வாக்களிக்க பணம் பெறுவது தவறு என ஊடகங்கள் உள்பட பல்வேறு சமூகநல இயக்கங்கள் தொடர்ந்து பிரசாரம் செய்ததில் கணிசமான பலன் இருந்தது. இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் மத்தியில் பணம் பெறுவது கெளரவக் குறைச்சலாகவும், அவமானகரமான செயலாகவும் பார்க்கப்பட்டது.  
பல இடங்களில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான வாகன வசதிகளைப் பயன்படுத்தி வாக்களித்தனர்.  முதியவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் வந்தும், சில இடங்களில் ஸ்ட்ரெக்சர் மற்றும் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த பொறுப்புள்ள குடிமக்களையும் காண முடிந்தது. 
இரண்டாம் கட்டத் தேர்தலின்போது கர்நாடகம், மேற்கு வங்கம், மணிப்பூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பான்மையான தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
எனினும், அரியலூர் மாவட்டத்தில் பாமகவினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மோதலில் ஈடுபட்டு வீடுகள் சேதமடைந்ததும் 8 பேர் காயமடைந்ததும் இந்தத் தேர்தலின் கரும்புள்ளியாகும்.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக இருந்த தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்துவிட்டது.  நாடு முழுவதும் இன்னும் 5 கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே, மே 23 வரை தேர்தல் முடிவுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com