பூமிக்கு "சாபம்' வேண்டாம்!

உலகிலுள்ள கோடிக்கணக்கான மனிதர்களுக்கும் கணக்கிட முடியாத உயிர்களுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து வருகிறது

உலகிலுள்ள கோடிக்கணக்கான மனிதர்களுக்கும் கணக்கிட முடியாத உயிர்களுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து வருகிறது பூமி. நம்மைத் தாங்கிப் பிடித்து வாழவைக்கும் பூமியை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கில் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ஆம் நாள் "உலக பூமி விழிப்புணர்வு தினமாக'க் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, மனித இனம் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்வதற்கேற்ப நிலப் பகுதி, உயிர் வாழ உணவுக்கான ஆதாரம், நீர், சுவாசிக்க காற்று என அனைத்தும் கொண்ட வரமாக பூமி அமைந்துள்ளது. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் நிலத்தைச் சிதைத்து, தண்ணீரைப் பாழ்படுத்தி, காற்று மண்டலத்தை மாசுபடுத்தி, சுற்றுச்சூழல் சீர்கேடு என்ற "சாபத்தை' பூமிக்கு  அளித்து வருகிறது மனித இனம்.
மனித இனத்தின் சுயநலத்துக்காக பூமி அழிக்கப்பட்டு வருகிறது. தாதுப் பொருள்கள் ஏராளமாக பூமியிலிருந்து  வெட்டியெடுக்கப்படுவதாலும் கனிம வளங்கள் கண்டறிந்து வெட்டியெடுக்கப்படுவதாலும் நிலப்பரப்பின் தன்மை தலைகீழ் நிலையை அடைந்து வருகிறது. அதாவது, நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு பயனற்றதாகி விடுகிறது. நிலப்பகுதிகள் தோண்டப்படுவதால்  தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. குறிப்பாக, வனப்பகுதியில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அங்குள்ள மரங்கள் அழிக்கப்படுகின்றன. மேலும், அந்தப் பகுதியில் உயிரினங்கள் அழிவது, அவை இடம்பெயரும் நிலை ஆகியவை ஏற்படுகிறது.
மக்கள்தொகைப் பெருக்கம், அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர்நிலைகள், வறண்ட நீர்நிலைகள் என இயற்கை ஆதாரங்கள் அழிந்து வருகின்றன. 
சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கோள்களுக்கும் இல்லாத சிறப்பு, பூமிக்கு மட்டுமே உள்ளது. பூமியில் மட்டுமே நீடித்த ஆயுளுடன் உயிரினங்கள் வாழக்கூடிய  சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
பூமியின் இயற்கை வளங்கள் மிக அதிகளவில் சுரண்டப்படுவதால், இன்று உலகை அச்சுறுத்திவரும் பிரச்னைகளில் முக்கியமானதாகப் பேசப்பட்டு வருவது "புவி வெப்பமயமாதல்' ஆகும். அதாவது, பூமியில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக ஏற்படும் பல்வேறு எதிர்மறையான விளைவுகள் மற்றும் அவற்றால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
புவி வெப்பமயமாதல் பாதிப்பைக் குறைப்பதற்கு  உரிய நடவடிக்கைகளை எடுத்து சுற்றுச்சூழலைக் காக்க ஆண்டுதோறும் சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது. இதில் உலக நாடுகள் ஆலோசித்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன; எனினும், அதற்கான தீர்வு முழுமை பெறாமலேயே உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிராகரிக்கப்பட்டு அறிவியல் வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இயற்கையான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பூமியின் இயற்கைத் தன்மை பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் உள்ளிட்ட எதிர்மறை விளைவுகள் அதிகரித்து வருகின்றன.
சுற்றுச்சூழல் மாசடைவதால் பொருளாதார பாதிப்பு மற்றும் சுகாதாரக் கேடு ஆகியவற்றின் அடிப்படையில் பல நிலைகளில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இயற்கையும் எதிர்காலமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இயற்கையை படிப்படியாகச் சிதைத்தால் நமது எதிர்காலமும் மிகப் பெரிய பாதிப்பைச் சந்திக்கும் என்பதை உணராமல் மனித இனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இயற்கையின் சமநிலையைப் பாதுகாப்பதில் போதிய  அக்கறை செலுத்தாததே இதற்குக் காரணம் ஆகும்.
பூமியின் மேற்பரப்பில் மெல்லிய போர்வைபோல் படர்ந்திருக்கும் வளி மண்டலம் (காற்று மண்டலம்), 78 சதவீதம் நைட்ரஜன் வாயு, 20 சதவீதம் ஆக்ஸிஜன், 2 சதவீதம் பசுமையில்ல வாயுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றில் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களுக்கு வெப்பத்தை ஈர்க்கும் தன்மை இல்லை. பசுமையில்ல வாயுக்களுக்கு மட்டுமே வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது. பூமியின் பரப்பில் வெப்பம் நிலவுவதற்கு இந்தப் பசுமையில்ல வாயுக்களே காரணமாகும்.
 இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் உரங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதால் விவசாய நிலங்கள் நஞ்சாக மாறி வருகின்றன. 
தண்ணீரை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாலும் நீர் நிலைகளை மாசுபடுத்தியதாலும் வறட்சி, நிலத்தடி நீர் மாசு, குடிநீர்ப் பற்றாக்குறை சுகாதாரமற்ற குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சாலைகள், தொழிற்சாலைகள் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்காக ஆக்ஸிஜன் எனும் பிராண வாயுவை அளிக்கும் எண்ணற்ற மரங்கள் அழிக்கப்பட்டு, கரியமில வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலைகள் பன்மடங்கு அதிகரித்து விட்டன. இதனால் காற்று மாசு அதிகரித்து விட்டது.
மின்சாரம், வாகனப் பயன்பாடுகளைக் குறைப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிராக அமையும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது, செயற்கை நாட்டங்களை விடுத்து முடிந்தவரை இயற்கை சார்ந்த பயன்பாடுகளை ஒவ்வொருவரும் பயன்படுத்த முனைந்தால் சுற்றுச்சூழல் மாசை கணிசமாகக் குறைக்கலாம்.
மேலும், மரங்களை வளர்ப்பதன் அவசியத்தை உணர்ந்து அதைச் செயல்படுத்த வேண்டும். பூமி வெப்பமாயமாதலுக்கு முக்கியக் காரணமாக அமையும் கரியமில வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டுமானால் அதற்கு மரங்களின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். மரங்களால் மட்டுமே கரியமில வாயுவை உறிஞ்சி சுத்தமான பிராண வாயுவை அளிக்க முடியும்.
தனது வீட்டைச் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தான் வாழும் பூமியைப் பாதுகாப்பதிலும் பொறுப்புள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் வாழ்ந்தால் மட்டும் போதும் என்று இல்லாமல், வரும் தலைமுறையினரும் வாழும் வகையில் பூமியைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com