உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 

ஒரு மனிதன் உயிர் வாழ மிக முக்கியத் தேவை உணவு மட்டுமே.  இதில் ஆச்சர்யம் என்னவெனில், மனிதனால் போதும் என்று சொல்ல முடியும்

ஒரு மனிதன் உயிர் வாழ மிக முக்கியத் தேவை உணவு மட்டுமே.  இதில் ஆச்சர்யம் என்னவெனில், மனிதனால் போதும் என்று சொல்ல முடியும் தேவையானதும் அதுவே. அப்படிப்பட்ட உணவை நாம் எப்படிக் கையாள்கிறோம்?
இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு தானியங்களில் ஏறத்தாழ 40% வீணாகிறது; வீணாகும் உணவு தானியங்களின் மதிப்பு ரூ.58,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 15,000 டன் உணவை வீணடிக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன; இதில் 3,000 டன் உணவு வகைகள் சாப்பிடத் தகுதியானவை என்பது எவ்வளவு கொடுமை?
அமெரிக்கர்கள் தாம் வாங்கும் உணவில் பாதி அளவை வீணாக்குகிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.  அப்படி வீணாகும் உணவுப் பொருள்களின் மதிப்பு ஆண்டுக்குச் சுமார் ரூ.66.15 கோடி.
ஆனால், ஜெர்மனியில் இது தலைகீழ்.  ஜெர்மனியில் இயங்கும் ஒரு உணவகத்துக்குச் சென்ற ஒரு வேற்று நாட்டு குடும்பம் நினைத்ததை எல்லாம் கட்டளை இட்டு, பின் சாப்பிட முடியாமல் பாதிக்கும் மேல் மேஜை மீதே கிடத்தி விட்டு கிளம்பத் தயாராக, அந்த உணவக உரிமையாளர் அதை குற்றம் எனச் சாடுகிறார். நான்தான் அந்த உணவுக்கான பணம் முழுவதும் கட்டிவிட்டேனே; பின் எப்படி நான் குற்றவாளி ஆகமுடியும் என அந்தக் குடும்பத் தலைவர் கேட்கிறார்.  நீங்கள் பணம் கட்டினாலும் பல பேருடைய உழைப்பு இப்படி கண் முன்னிலையில் வீணாவது முற்றிலும் தவறு என்று மீதமாகும் உணவுப் பண்டங்களை  அவர்களுக்குக் கட்டிக் கொடுக்கின்றனர்.  
இந்திய உணவகங்களில் நாமே விரும்பிக் கேட்டுப் பெறுகிறோம், அதற்கான பணத்தை அளிக்கிறோம் என்பதால் உணவுப் பொருள் வீணாவது பெரும்பாலும் குறைவு. ஆனால், விருந்து நிகழ்ச்சிகளில்தான் நம் மனம் பதைபதைக்கிறது.  கடந்த மாதத்தில் சில திருமண  நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்துகொண்டபோது, ஆடம்பரத்தை இழைத்து இழைத்து ஊற்றியிருந்தது காண்பவர் கண்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது. 
 உண்மையில் வயிற்றுக்கான விருந்துக்காக உணவுக்கூடம் சென்றபோதெல்லாம் அந்தக் காட்சிகளைக் கண்டு மனம் துடித்தது. பல கோணங்களில் விதவிதமாய் பட்சணங்கள் செய்து இலைகளில் சுடச்சுட பரிமாறப்பட்ட உணவு சூடு குறையும் முன்பே குப்பைத் தொட்டிக்குச் செல்லும் அவலத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.  எத்தனை பெரிய உழைப்பு! என்னதான் உழைப்புக்கென ஊதியம் வாங்கினாலும் தன்னுடைய உழைப்பு 100% பிறருக்குப் பயன்படும்போது அதனால் கிடைக்கும் ஆத்ம திருப்தி அலாதியாக இருக்கும்தானே!
உணவு தயாரிப்புக்காய் அத்தனை தீவிரமாய் உழைத்து அற்புதமான சுவையைக் கொண்டிருந்தும் அது சுவைக்கப்படாமலேயே, பாதியளவு உபயோகப்படாமலேயே குப்பைக்குச் செல்வது மிகுந்த வருத்தமளிக்கிறது. 
இப்படிப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவுப் பண்டங்களை விவசாயிகள் பார்க்கும்போது, அவர்கள் மனம் என்ன பாடுபடும்? விளை நிலங்களில் அதிகாலை தொட்டு புழங்கி, புழுங்கி சேற்றில் கால் வைத்து வியர்வை வழிந்தோடவேலை செய்து வானம் பார்த்து பூமி தூர்த்து நாம் சோறு பொங்க உதவும் அவர்கள் இவற்றையெல்லாம் கண்டால்  அவர்களின் மனம் எவ்வளவு புண்படும்?  
சற்று கவனமுடன் நாம் திட்டமிட்டால் இந்த வீணடிப்புகளை 80% குறைக்கலாம்.  பந்தியில் நபர்கள் வந்து அமர்ந்த பிறகு, பந்தி பரிமாறுபவர்களிடம் பரிமாறச் சொல்லலாம். எண்ணற்ற பண்டங்கள் இருக்கும் நிலையில், வைக்கப்படும் அளவு குறைவாக இருப்பதாய் வைக்கச் சொல்லலாம்.  ஒரு திருமணத்தில் 36 பட்சணங்கள் பரிமாறப்பட்டன; இவை அத்தனையையும் உண்ண நமக்கு ஒரே ஒரு வயிறுதான் உண்டு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவருடைய கெளரவத்தை நிலைநாட்டுவதற்கும் ஆடம்பரத்தைப் பறைசாற்றுவதற்கும் உணவுப்பொருள் இழிவானது அல்ல.  நம் உடலுக்குள் சென்று உயிர் காத்து வலு சேர்க்கும் தேவாமிர்தம்.  இப்படிப்பட்ட பொக்கிஷத்தை நாம் எவ்வாறு போற்ற வேண்டும்; போற்றாவிட்டால்கூட பரவாயில்லை.  எண்ணற்ற வகையில் உதாசீனப்படுத்துகிறோம்.  
கோயில் மற்றும் திருவிழாக்களில் விநியோகிக்கப்படும் அன்னதான உணவுகளை கை நிறைய வாங்கி விட்டு மனம் நோகாது ஓரமாக வீசிவிட்டுச் செல்கிறார்கள்.  அவர்களைப் பொருத்தவரை அது இலவசமாக வந்தது.  யாருடைய உழைப்பைப் பற்றியும் கவலையில்லை.
நமக்கு தேவையானவற்றை மட்டும் கேட்டுப் பெறுவதில் என்ன சிரமம் இருந்துவிட முடியும்? 
இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கின்றன. மற்றொருபுறம் இப்படி அநியாயமாய் வீணாகுதல் ஏற்படுகிறது.  விவசாய நிலங்களிலேயே வீணாகுதல்,  போக்குவரத்தில், கிடங்குகளில், இயற்கைப் பேரழிவுகளால் வீணாகும் உணவுகள், குளிர்பதனப் போக்குவரத்து இல்லாமை, மிக மோசமான சாலைகள், மோசமான வானிலை மற்றும் ஊழல் போன்றவற்றால் இந்தியாவில் குறைந்தபட்சம் 40 சதவீத பழங்கள்,  காய்கறிகள் வீணாகின்றன.  
என்ன தான் விலைவாசி உயர்வு ஏற்பட்டாலும், நடுத்தர மக்கள்கூட வாரத்துக்கு ஒரு தரம் கண்டிப்பாக உணவகத்துக்குச் சென்று சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.  எந்தெந்த நாளில் என்னென்ன வகையான உணவு எங்கெங்கு இலவசமாக கிடைக்கும் என பட்டியல் வைத்திருப்போர் இன்னொரு ரகம்.    
நம் இளைய தலைமுறையினருக்கு நம் வீடுகளிலேயே உணவை வீணாக்காது பயன்படுத்தும் முறையை விளக்கிப் பழக்க வேண்டும். பெருவாரியான வீடுகளில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டுதான் உணவே வயிற்றுக்குள் இறங்குகிறது. அவ்வளவு மோசமாக இருக்கிறது நாம் சாப்பிடும் முறை. உண்ணல், உறிஞ்சுதல், குடித்தல், தின்னுதல், துய்த்தல், நக்குதல், நுங்குதல், பருகுதல், மாந்தல், மெல்லுதல், விழுங்குதல் என நாம் உண்ணும் முறைக்கு ஏற்ப, தமிழில் பல பெயர்கள் உண்டு.  ஆனால், தற்போது உணர்வுபூர்வமாய் அல்லாது வெறுமனே மென்று விழுங்குதல் மட்டுமே நடைபெறுகிறது.  அறிதிறன் பேசியில் உரையாடிக் கொண்டும் நன்கு சாய்ந்து கொண்டும் காலை நீட்டிக் கொண்டும் நாம் உண்ணும் உணவுப் பொருளுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் சாப்பிடுவது வேதனை அளிக்கிறது.  
உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கு இரீஇ யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகர அமை நன்கு 
உணவை எப்படி உண்பது? கிழக்குப் பார்த்து சம்மணமிட்டு உட்கார்ந்து உண்ண வேண்டும்.  தூங்கி விழாமல், ஆடாமல், அசையாமல், நன்கு அமர்ந்த நிலையில், சுற்றி வேடிக்கை பார்க்காமல், வெட்டி அரட்டை அடிக்காமல், உண்ணும் உணவை வணங்கி, மகிழ்ந்து சிந்தாமல் எடுத்து உண்பதே சிறப்பு என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவை நமக்கு உண்ணும் முறை குறித்தான உயரிய பண்பை விளக்கிச் சொல்கிறது. 
ஏனெனில், உணவுப்பொருள்களின் மேல் மதிப்பு வந்தாலே அவற்றை நாம் வீணாக்க மாட்டோம். 
தேவைக்கு அதிகமாக வாங்கும் பழக்கத்தை மக்கள் முதலில் துறக்க வேண்டும். நமக்குத் தேவையான பொருளை நாமே நேரில் சென்று வாங்குவதில் என்ன தவறு இருந்து விட முடியும் என நீங்கள் கேட்கும் அதே புள்ளியில் இருந்துதான் கிட்டத்தட்ட கண்ணால் பார்க்கும் பொருள்களை எல்லாம் நம் கை பரபரவென எடுத்து உபயோகித்துப் பார்க்க, சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கி பழகிப் போனோம். மளிகை சாமான் குறிப்பு எடுத்து அருகில் உள்ள கடைகளில் கொடுத்தபோது நம் குடும்ப வருமானத்துக்கு ஏற்ப நம் குடும்ப நபர்களுக்கு ஏற்ப அவரே பொருள்கள் சிலவற்றை மாற்றி அனுப்பி வைப்பார்.  இது பொருள் நிலையைத் தாண்டி இருவரின் மனம் சம்பந்தப்பட்ட அதிசயத்தக்க புரிதலாக இருக்கும்.  நிகழ்காலங்களில் சூப்பர் மார்க்கெட் என்னும் சுரங்கத்துக்குள் பெருவாரியான குடும்பங்கள் சிறைபட்டுள்ளன.  
  என் பள்ளிப் பருவத்தில் என் ஆசிரியர் திருவள்ளுவரைப் பற்றி பாடம் எடுக்கையில்,  அவர் எப்போதும் உண்ணும் இலைக்கு அருகில் ஒரு சிறு குமிழ் தட்டில் நீரும் ஊசியும் உடன் வைத்திருப்பார்.  உணவுப் பருக்கைகள் ஏதேனும் கீழே விழுந்தால் அதை ஊசி கொண்டு எடுத்து நீரில் அலசி பின் மீண்டும் இலையில் இட்டு உண்ணுவாராம் என்று சொன்ன செய்தி பசுமரத்தாணி போல் இன்றும் நினைவில் உள்ளது.  அதுமுதல் நானும் என் தங்கையும் வீட்டில் வந்து என் அம்மாவிடம் நச்சரித்து சில நாள்கள் அதே போல் நீரோடும் ஊசியோடும் வினை புரிந்திருக்கிறோம். அவையெல்லாம் மிகையுணர்ச்சியின் படிமங்களாக மனதுடனே நீடிக்கிறது.
எது எப்படியாயினும்,
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
எனும் குறளுக்கேற்ப அளவோடு உண்டு நோய்க்கு ஆளாகாது உடல் நலமுடன் வாழ்வோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் எனும் நல்வாக்கியத்தை இளம் தலைமுறையினரின் உள்ளத்தில் விதைத்து சமகால வாழ்வியலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். 

கட்டுரையாளர்:
எழுத்தாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com