ஆக்கப்பூர்வமான எதிர்வினை! 

நமது நாட்டின் ஆன்மிக தளத்தில் உலாவரும் முப்பெரும் தத்துவங்களில் ஒன்று துவைதம். ஸ்ரீமத்வாச்சாரியாரால் உபதேசிக்கப்பட்ட அந்தத் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் மத்வர்கள் எனப்படுகிறார்கள்.

நமது நாட்டின் ஆன்மிக தளத்தில் உலாவரும் முப்பெரும் தத்துவங்களில் ஒன்று துவைதம். ஸ்ரீமத்வாச்சாரியாரால் உபதேசிக்கப்பட்ட அந்தத் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் மத்வர்கள் எனப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் கர்நாடக மாநிலத்தில் வசிக்கிறார்கள்.  
தானுண்டு தன் வேலையுண்டு என்ற அமைதியான சுபாவம் கொண்ட அந்தச் சமூகத்தினர் தாங்கள் எங்கு வசித்தாலும் தங்களது ஆன்மிகக் கொள்கையில் பிடிப்போடு ஒன்றுபட்டுச் செயல்படுபவர்கள். நாடெங்கிலும் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும் ஸ்ரீராகவேந்திர மிருத்திகா பிருந்தாவனங்கள் அவர்களின் பக்தியையும் செயல்திறனையும் விளக்குபவையாகும்.
துங்கபத்ரா நதிக்கரையில் ஆனேகுந்தி என்ற இடத்தில்  அமைந்துள்ள நவபிருந்தாவன வளாகம் மத்வ சமூகத்தினரை உள்ளடக்கிய இந்துக்கள் பலருக்கும்  முக்கியமான வழிபாட்டுத் தலமாகும்.   
அத்தகைய நவபிருந்தாவன வளாகத்தில் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீவியாஸராஜ தீர்த்தரின் ஜீவ சமாதியாகிய மூலபிருந்தாவனம் உள்ளது. மேலும், ஸ்ரீஉத்தராதி மடம், ஸ்ரீராகவேந்திர மடம், ஸ்ரீபாதராஜ மடம் போன்ற பிற மத்வ சம்பிரதாய மடங்களைச் சேர்ந்த எட்டு மகான்களுடைய சுவாமிகளின் புனித உடல்களும் அங்கே பள்ளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி அன்றைய காலைப் பொழுது மத்வ சமூகத்தினருக்கு மாபெரும் அதிர்ச்சித் தகவலுடன் விடிந்தது. நவபிருந்தாவன வளாகத்தில் உள்ள ஸ்ரீவியாஸராஜ தீர்த்தரின் பிருந்தாவனம் (சமாதி) சில விஷமிகளால் இரவோடு இரவாக சேதப்படுத்தப்பட்டது. 
ஸ்ரீவியாஸராஜ மடத்தை நிறுவிய அந்த மகான், புகழ்பெற்ற பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடிய புரந்தரதாஸர், கனகதாஸர் ஆகியோரின் குரு ஆவார். ஸ்ரீகிருஷ்ண தேவராயருக்கும் இவரே ராஜ குரு. எதிரிகளிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற, நாடு முழுவதிலும் 732 அனுமன் சிலைகளை நிறுவி மக்களிடையே பக்தியையும் வீரத்தையும் வளர்த்தவர் ஸ்ரீவியாஸராஜ தீர்த்தரே ஆவார். 
ஒரு மகானின் சமாதி எதற்காக இடிக்கப்படவேண்டும்? ஆந்திரம், கர்நாடகத்தில்  கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டுவந்த பலர், சமீபகாலமாகப் பாதுகாப்பற்ற பழங்காலக் கோயில்களயும் புனிதர்களின் பிருந்தாவனங்களையும் நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். திருக்கோயில்களிலுள்ள கர்ப்பக்கிரகங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மூல விக்கிரகங்களின் அடியில் பெருமளவில் தங்கமும் வைரமும் புதைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம்.
மேலும், முக்தியடைந்த சன்னியாசிகளின் புனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட பிருந்தாவனங்களிலும் இதேபோன்று புதையல்கள் இருக்கக்கூடும் என்று நம்பிய அந்தக் கள்வர்கள், அவற்றையும் கொள்ளையடிக்கத் துணிந்தனர். விளைவு, மகான் ஸ்ரீவியாஸராஜ தீர்த்தரின் பிருந்தாவனமும் இடிக்கப்பட்டது. 
மனம் கலங்கி நின்ற மத்வ சமூகத்தினர் வருத்தப்பட்டதுடன் நின்றுவிடவில்லை. மாறாக, நடைபெற்றுவிட்ட ஒரு கொடுஞ்செயலுக்கு எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்பதை நமது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் மிகவும் அழுத்தந்திருத்தமாக உணர்த்தியிருக்கிறார்கள்.
இந்தக் கொடுஞ்செயலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்ரீஉத்தராதி மடத்தலைவரான ஸ்ரீஸத்யாத்ம தீர்த்தர் வேண்டுகோள் விடுத்தார். கர்நாடக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவும் மக்களவையில் அதே கோரிக்கையை எழுப்பினார். ஆனால், அந்த நிகழ்வைக் கண்டித்து மத்வ சமூகத்தினர் யாரும் சாலைகளில் அணி திரளவில்லை; போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை.
 மாறாக, பல்வேறு மத்வ மடாதிபதிகள் நவபிருந்தாவனம் அமைந்துள்ள ஆனேகுந்தியில் அணி திரண்டனர். நாடெங்கிலுமிருந்து மத்வ சமூகத்தினர் பலர் வயது வித்தியாசமின்றி அங்கு கூடினர். கட்டடக் கலை, சிற்பக்கலை தெரிந்த சிலரும் முன்வந்தனர். 
விளைவு, ஸ்ரீவியாஸராஜ தீர்த்தரின் பிருந்தாவனம் சிதைக்கப்பட்ட 32 மணிநேரத்தில் அதே இடத்தில் புதிதாகக் கலைநயம் மிகுந்த உயிரோட்டமுள்ள பிருந்தாவனம் ஒன்று எழுப்பப்பட்டது. புதிய பிருந்தாவனம் கம்பீரமாக எழும்பும் வரையில் உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் மத்வ மடாதிபதிகள் உபவாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆனேகுந்தி நவபிருந்தாவன வளாகத்தில் கூடுதல் பாதுகாப்புக்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்களுக்கும் மகிழ்ச்சி. சற்று யோசித்துப் பார்ப்போம். 
நமது நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும், ஏதாவது ஓர் அரசியல் கட்சி அல்லது ஜாதியின்  தலைவருடைய சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டாலோ, அமரராகிவிட்ட தலைவர் ஒருவரின் சமாதி சீர்குலைக்கப்பட்டாலோ எத்தனை அமர்க்களங்கள் அரங்கேறும். 
கல்வீச்சு, கடையடைப்பு  என்று எத்தனை  ஆயிரம் பேர் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். பேருந்துகளும் இதர பொதுச் சொத்துக்களும் அடித்து நொறுக்கப்படுவது ஒருபுறம். சம்பந்தப்பட்ட கட்சி அல்லது ஜாதிக்கு எதிரணியில் உள்ளவர்கள் தாக்கப்படுவதும்  அவர்களது சொத்துகள் சூறையாடப்படுவதுமாக எத்தனையோ பேரழிவுகள் அரங்கேறும். சில தலைவர்கள் இயற்கை மரணம் எய்தினால் அதற்கும்கூட வன்முறையில் ஈடுபடுவோரும் உள்ளனர்.
இப்படி எல்லாம் நடக்கும் நம் இந்தியாவில்தான், ஒரு சமுதாயத்தினர் தாங்கள் மிகவும் மதித்துப் போற்றுகின்ற புனிதர் ஒருவரின் சமாதி இடிக்கப்பட்டபோதும், பதற்றம் அடையாமல், குறுகிய காலத்தில் அதனைப் புனர்நிர்மாணம் செய்த அதிசயம் நடந்துள்ளது. 
ஜப்பான் நாட்டுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டம் செய்வதென்றால் வேலைநிறுத்தம் செய்வதில்லையாம். மாறாகக் கூடுதல் நேரம் வேலை செய்து, உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் என்றும், நிர்வாகமும் தொழிலாளர்களின் குறைகளைப் புரிந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருவது வழக்கம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதே போன்று, தங்களது புனிதத் தலத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து வன்முறையில் இறங்காமல், ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டுள்ள மத்வ சமூகத்தினரிடமிருந்து, எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு வீதியில் இறங்கும் அமைப்புகள் கற்றுக் கொள்வதற்கு நிறையவே விஷயம் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com