தங்கம் விலைச் சீற்றம் தணியுமா?

பெண்கள், ஆண்களின் அணிகலனாக  மட்டுமின்றி,  தனி மனித கெüரவத்தின் அடையாளமாக பண்டைய காலம் முதல் தங்கம் கருதப்பட்டு வருகிறது.

பெண்கள், ஆண்களின் அணிகலனாக  மட்டுமின்றி,  தனி மனித கெüரவத்தின் அடையாளமாக பண்டைய காலம் முதல் தங்கம் கருதப்பட்டு வருகிறது. பொருளாதார பற்றாக்குறை காலங்களில் உடனடி பணமாக மாற்றக் கூடிய ஒரு மூலதன சொத்தாகவும் ("லிக்விட் அசெட்') தங்கம் மதிக்கப்படுவதால், அதன் மீதான நாட்டம் காலப் போக்கில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, இந்தியர்களின் மனதில் தங்கத்துக்கு தனி இடம் உண்டு. அதனால்தான், உலக அளவில் தங்கத்தின் பயன்பாட்டில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அளவில் புழங்கிக் கொண்டிருக்கும் 2 லட்சம் டன் அளவிலான தங்கத்தில், ரூ.56 லட்சம் கோடி மதிப்புள்ள சுமார் 20,000 டன் தங்கம் இந்தியர்கள்வசம் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதாரத்தைப் பொருத்தவரை, அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும், புழக்கத்தில் இருக்கும் தங்கள் நாணயத்தைத் தவிர, தங்கத்தை ஒரு "ரிசர்வ்' நாணயமாகக் கருதி, அதை சர்வதேச சந்தையில் அவ்வப்போது கொள்முதல் செய்து கஜானா கையிருப்பில் சேமித்து வருகின்றன.  தங்க கையிருப்பைப் பொருத்தவரை, 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில், சுமார் 8,000 டன் தங்க கையிருப்புடன் அமெரிக்க அரசு முதல் இடத்தையும், சுமார் 600 டன் கையிருப்புடன் இந்தியா 10-ஆவது இடத்திலும் தற்போது நிலைகொண்டுள்ளன.

2008-ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சர்வதேச பொருளாதார மந்த நிலைமையில் சிக்கித் தவித்த பல நாடுகள் அதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டன. தங்கள் கஜானாவின் தங்க கையிருப்பை வலுப்படுத்தும் கொள்கை மேம்பாடு அதில் முக்கியமான ஒன்றாகும்.

அதன் தாக்கமாக, 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெனிசூலா போன்ற அதிக கடன் சுமையுடன் தத்தளித்த சில நாடுகளைத் தவிர, மற்ற நாடுகள் தங்கள் தங்க கையிருப்பை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதை நிறுத்தி, படிப்படியாக அந்த உலோக கையிருப்பை அதிகப்படுத்த ஆரம்பித்தன. அதன் விளைவாக, தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் படிப்படியாக உயர ஆரம்பித்து, 2011-12-இல் ஒரு அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் என்பது சுமார் 31 கிராம்) தங்கத்தின் விலை 1889.70 அமெரிக்க டாலர் (2011-இல் மதிப்பு ரூ.94,450) என்ற உச்ச நிலையை தொட்டது. அதற்கு பிறகு நிகழ்ந்த சில பொருளாதார முன்னேற்றங்களால், 2016-ஆம் ஆண்டு வரை இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை படிப்படியாக உயர ஆரம்பித்தது.

சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நிர்ணயம் பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளி, பல்வேறு நாட்டு அரசாங்கங்களின் தங்க கொள்முதல் கொள்கைகள் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி மாற்ற கொள்கைகள், பொருளாதார வல்லமை படைத்த நாடுகளுக்கிடையே ஏற்படும் வர்த்தகப் போர், உலக பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் நாடுகளில் குழப்பமான அரசியல் மற்றும் போர்க்கால சூழ்நிலை ஆகிய காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

2018-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தென்னாப்பிரிக்கா, சீனா, பெரு முதலான உலக அளவில் அதிகம் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில், பல்வேறு காரணங்களால் தங்க உற்பத்தி குறைய ஆரம்பித்தது. அதே சமயத்தில், அதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து, அதன் தாக்கம், விலையில் பிரதிபலிக்க ஆரம்பித்தது.

இந்தியாவைப் பொருத்தவரை, ஓர் ஆண்டின் மொத்த தங்க உற்பத்தியின் அளவு சுமார் 14 டன் மட்டும்தான். ஆனால், தங்கப் பயன்பாட்டில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அணிவகுத்து நிற்கிறது. எனவே, ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள 800 டன் தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்திய இறக்குமதி பொருள்கள் பட்டியலில், கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம் இரண்டாம் இடம் வகிக்கிறது. தங்கத்தின் தேவைக்கு இறக்குமதியைச் சார்ந்திருப்பதால், சர்வதேச சந்தை விலை தாக்கங்கள், இந்திய தங்கச் சந்தையில் முழுவதும் உணரப்படுகின்றன. மேலும், பெரும் அளவிலான அரசாங்க கொள்முதல் நடவடிக்கைகளின் தாக்கம், சர்வதேச சந்தை தங்கத்தின் விலையில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அண்மைக்காலமாக கணிசமான அளவில் அதிகரித்து, கடந்த வாரம், அது, அவுன்ஸிற்கு (சுமார் 33 கிராம்) 1,502 டாலர் (ரூ.1,05,140) அளவை கடந்து நின்றது. இது, ஐந்து வருடத்திய உச்சபட்ச விலையாகும். உலகின் இரு பொருளாதார வல்லமை படைத்த மையங்களான அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போரின் பக்க விளைவுகள்தான், இந்தத் திடீர் விலை சீற்றத்திற்கு  முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

2016-ஆம் ஆண்டு  தான் பதவி ஏற்ற தருணத்திலிருந்து, அமெரிக்க பொருளாதாரத்துக்கு சாதகமில்லாத சீனாவின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் குரல் கொடுக்க ஆரம்பித்தார். துரதிருஷ்டவசமாக,  இரு நாட்டு அதிகார வர்க்கம் மற்றும் அதிபர்களின் சந்திப்புக்குப் பிறகும், இந்த விஷயத்தில் எந்தவிதமான ஒப்புதலும் எட்டப்படாத நிலை உருவானது.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளால், கோபம் அடைந்த அமெரிக்கா தன் வர்த்தக வலிமையை வெளிப்படுத்த ஆரம்பித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 250 பில்லியன் டாலர் (25,000 கோடி டாலர்-ரூ.17 லட்சத்து 50,000 கோடி) மதிப்பிலான பொருள்களுக்கு சுங்க வரியை கடுமையாக உயர்த்தி,  வர்த்தகப் போருக்கு அமெரிக்கா பிள்ளையார் சுழி போட்டது. தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க பொருள்களுக்கான வரியை உயர்த்தி, சீனா தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று, 300 பில்லியன் டாலர் (30,000 கோடி டாலர்-ரூ.21 லட்சம் கோடி) மதிப்புள்ள சீனாவின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு, செப்டம்பர் முதல் வரி ஏற்ற அறிவிப்பு வெளியானது. எதிர்வினையாக, சீனாவும் 100 பில்லியன் டாலர் (10,000 கோடி டாலர்--ரூ.7 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பல பொருள்களுக்கு வரியை உயர்த்தியதோடு மட்டுமில்லாமல், அந்த நாட்டு விவசாயப் பொருள்களை வாங்கக் கூடாது என்று சீன வர்த்தகச் சந்தைக்கு அறிவுரை கூறியது.

இந்த வர்த்தகப் போர், இரு நாட்டு பொருளாதாரத்தையும் பெருமளவில் பாதிப்படையச் செய்து, அது மற்ற நாடுகளுக்கும் பரவிவிடும் என்ற பீதி சர்வதேச வர்த்தக சந்தைகளை பற்றிக் கொண்டது. உலக பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாகக் குறையும் என்ற சர்வ தேச நாணய நிதியத்தின் தகவல் அறிக்கை இந்தப் பீதிக்கு வலு சேர்த்தது.

இந்த பீதியின் தாக்கம், கச்சா எண்ணெய் விலையிலிருந்து, தங்கம் விலை வரை வியாபித்தது என்று கூறலாம். உலக அளவில் மீண்டும் ஒரு பொருளாதார தளர்வு ஏற்பட்டுவிடும் என்ற யூகத்தில், யூக வணிகத்தில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 55 டாலருக்கு (ரூ.3,850) கீழ் பின்னோக்கிச் சென்றது. கச்சா எண்ணெய் வணிக முதலீட்டாளர்கள், முதலீட்டுக்கான தங்கள் கவனத்தை தங்கத்தில் செலுத்த ஆரம்பித்ததும், அதன்  விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.

சீனாவுடனான வர்த்தகப் போர், அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்; அது அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைத்துவிடும் என்ற எண்ணம் வேகமாகப் பரவி வருவதால், அந்த நாணயத்தின் மீதான முதலீடுகள் குறைந்து, தங்க முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால், தங்கத்திற்கான தேவை அதிகரித்து, சர்வதேச சந்தையில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் பெருமளவில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதைத் தவிர, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீத அளவில் கடந்த மாதம் அமெரிக்க ரிசர்வ் வங்கி குறைத்து, வரும் காலங்களில் வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளுக்கு பச்சைக் கொடி காட்டியது. குறைந்த வட்டி விகிதம், அமெரிக்க டாலரின் மீதான பற்றை குறைத்து, தங்க முதலீடுகள் மீதான ஈர்ப்பை அதிகரித்து விட்டது. முதலீட்டாளர்களின் மாற்று முதலீட்டு நடவடிக்கைகளும், தங்கத்தின் விலை ஏற்றத்துக்குக் காரணமாக அமைந்து விட்டது.

இந்தியாவைப் பொருத்தவரை, சர்வதேச சந்தை விலையின் தாக்கத்தைத் தவிர, இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சியும், கடந்த நிதி நிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதும், உள்நாட்டு விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு பவுன் ரூ.28,552 அளவில் உயர்ந்திருக்கும் தங்கத்தின் விலை, சில ஏற்ற இறக்கங்களுடன், விரைவில் ரூ.30,000-த்தைத் தொட்டு விடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச நிகழ்வுகளால் விலையில் எதிர்பாராத பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த முதலீட்டைப் பாதுகாக்க பல முறை யோசிக்க வேண்டியது அவசியம் என்பதை சிறு முதலீட்டாளர்கள் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com