எது தேசப்பற்று? 

இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்தியர்களாக இருக்க வாய்ப்பில்லை.  தொழில், மருத்துவம், கல்வி, சுற்றுலா எனப் பல  விஷயங்களுக்காக ஏராளமானோர் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர்.

இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்தியர்களாக இருக்க வாய்ப்பில்லை.  தொழில், மருத்துவம், கல்வி, சுற்றுலா எனப் பல  விஷயங்களுக்காக ஏராளமானோர் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர். அவர்களைத் தவிர்த்து இந்தியர்கள் என இருப்பவர்கள், நாட்டுக்கு உதவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எதிராகச் செயல்படாமல் இருந்தாலே போதும். இந்தியா விரைவில் வளர்ச்சி அடைந்த நாடாகி விடும். 
உண்மையான இந்தியராக இருந்தால்,  இந்தியா தற்போதுள்ள நிலையில்   செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் எவை, மாற்றங்கள் எவை என ஆலோசனைகள் தந்து நாட்டின்  நல்ல நிலைக்குப் பாடுபட வேண்டுமேயொழிய, நமது நாட்டையே நாம் குற்றம் சுமத்துவது சரியல்ல.
இவர்கள் கல்வி கற்கும்  காலங்களில் முறையாக தேசிய ஒருமைப்பாடு குறித்தும், தேசப்பற்று குறித்தும் கற்பிக்கப்பட்டிருக்கவேண்டும்.  சில கல்வி நிறுவனங்களில் அவை வலிய தவிர்க்கப்படுவது தேசத்தின்  இறையாண்மைக்கு தீங்கு ஏற்படுத்துவதாகவே அமைந்து விடும். 
எனவே, நாட்டில் யாரும் கல்வி நிலையம் தொடங்கலாம்.  ஆனால், தேசப்பற்று என்பதற்கு எந்தவிதச் சமரசமும் கூடாது. 
தகுதி வாய்ந்த பிரதிநிதிகளை மக்கள்தான் கண்டறிந்துஆட்சியில் அமர வைக்கவேண்டும்.  அந்தக் கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு.  அதில் சற்று வழி தவறி சென்றுவிட்டு, பிறகு அரசுக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?  பிறகு, அவர்கள் எந்த நாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களோ அங்கேயே சென்றுவிட வேண்டியதுதானே.   உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக் கூடாது எனக் கூறுவார்கள். அதாவது, நமக்கு உதவி செய்தவருக்கு துரோகம் செய்வது எப்படியோ, அப்படித்தான் நமது தேசத்தின் (அரசியல்வாதிகளின்) செயல்பாடுகளை எதிர்ப்பதும். 
அரசியல்வாதிகள் யாரும் வேற்று கிரகத்திலிருந்து வருவதில்லை.  நம்மில் ஒருவர்தான் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிறார். எனவே, நல்லவர்களைத் தேர்வு செய்வது நமது கடமை.  ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்துவது இயல்பாக உள்ளது.  இது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்கிறது.  பிறகு யார்தான் குற்றமற்ற ஆட்சி தருவது?   
நாகரிகம் என்ற நோக்கில், நாம் வசிக்கும் நாட்டில் படித்தோம் - வேலை செய்தோம் - சம்பாதித்தோம் - சொத்து வாங்கினோம்-சந்ததிகளைப் பெருக்கினோம் என்று அவரவர் கடமையைச் செய்தால் பரவாயில்லை. நமது நாட்டின் அணியினர் விளையாட்டில் விளையாடும்போது ஆதரவு தெரிவிப்பதுகூட தேசப்பற்றுதான்.  ஆனால், அதற்காக பிற நாட்டினரை நாம் எந்த வகையிலும் இழிவுபடுத்தக் கூடாது.  இதுதான் இந்தியாவில் நாம் கற்ற பண்பாடும், நாகரிகமும்.  
இந்தியாவின் புகழை அறிந்து நமது  சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவரும் வெளிநாட்டினரை நாம் மதித்து அவர்களுக்குப் போதுமான உதவிகள் செய்ய வேண்டும்.  நாம் சில வசதிகளுக்கு ஆசைப்பட்டு அவர்களைத் தவறாக நடத்திவிடக் கூடாது.  
நம் நாட்டினை எப்போதும் புகழ்ந்து கொண்டும், நமது தேசியக் கொடியை நமது சட்டைகளில் அணிந்து கொண்டும், வாகனங்களில் தேசப்பற்று குறித்த வாசகங்களைப் பொறித்துக் கொண்டு பவனி வருவதும்தான் தேசப்பற்று என்பதில்லை.  நாம் வாழும் நாடு எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் அதைத் தரம் தாழ்த்திப் பேசாமல், நிலை உயர்வதற்குப் பாடுபட எண்ணம் கொள்ள வேண்டும்.  நாடுஎப்படிப் போனால் என்ன, நமக்குப் பணம் கிடைக்கிறதா, வேறு ஏதாவது பலன் கிடைக்கிறதா எனச் சுயநலமாக இருப்பதால்தான் நாட்டுக்கு ஏற்படும் அந்நிய அச்சுறுத்துதல்களைவிட உள்நாட்டிலேயே அச்சுறுத்துதல்கள் பெருகிவருகின்றன.  
வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு அதைப் பற்றி பெருமை பேசுவதைவிட, அந்த அளவுக்கு நம்மை உயர்த்த என்ன செய்ய வேண்டும் எனச் செயல்படுவதுதான் சிறப்பானது. தேசியம் என்பதும் தேசப்பற்று என்பதும் வெறுமனே ஒரு நாட்டில் பிறந்துவிட்டால் மட்டும்  வந்துவிடாது. உண்மையில் அந்த நாட்டில் உள்ள வளங்களை நாம் அனுபவிக்கும்போது நமக்குள் இயல்பாகவே அந்தப் பகுதிக்கு நாம் விசுவாசமாக இருந்துவிடும் நிலை உண்டாகி விடுகிறது. காரணம், பூமியின் அமைப்பு அப்படி. இயற்கையின் நியதி அப்படி.  
எனவே, கல்வி நிலையங்கள் மட்டுமல்ல, ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு அந்த நாட்டின் மீது தேசப்பற்று வளர என்னசெய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும்.  அப்போதுதான் அந்தத் தேசம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். ஒவ்வொருவரும் பிறரைக் குறை சொல்லி தானும் சரியாக வாழாமல் பிறரையும் வாழ விடாமல், ஆரோக்கியமற்ற அரசியல் சூழல் உருவாகிவிடும்.  இனிமேல் அப்படியான ஒரு சூழல் உருவாகி விடாமல்   இருக்க  நாட்டுப் பற்று வளரும் வகையில் கல்வி முறை, வாழ்க்கை முறை அமைய வேண்டும்.
இதற்கு நாட்டில் உள்ள ஆசிரியர்கள்,பெற்றோர்கள் உள்பட அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். ஒரு நாட்டுக்கு எதிரி என்பது பொதுவாக வெளிநாடாக இருக்கும். ஆனால், நமது நாட்டின் உள்ளே இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படத் தயங்காத சூழல் நிலவுகிறது. ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கிறோம் என்பதற்காக, வெளிநாட்டு எதிரிகளுக்கு உதவி செய்வது என்பது தேசத் துரோகம், மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இந்தியன் எனச் சொல்லிக்கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை. நமது உடல் செல்கள் ஒவ்வொன்றிலும் அந்த நினைவு  இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தேசப்பற்று. ஒவ்வோர் இந்தியனும் செயல்களில் ஒழுக்கம், தொழிலில் நேர்மை, கடமைகளைச் சரியாகச் செய்தல், நாகரிகம் - பண்பாடு - பாரம்பரியம் காத்தல், முறையான கல்வி, ஆரோக்கியம் போன்ற நோக்கங்களை மனதில் நிறுத்திச் செயல்படவேண்டும்.  இப்படிச் செய்தால் உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடி நாடாக  இந்தியா விளங்க முடியும். அதற்காக ஒவ்வொரு இந்தியனும் முயற்சிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com