Enable Javscript for better performance
சவால்களைச் சந்திப்போம்- Dinamani

சுடச்சுட

  

  சவால்களைச் சந்திப்போம்

  By முனைவர் அ.பிச்சை  |   Published on : 15th August 2019 01:36 AM  |   அ+அ அ-   |    |  

  சுதந்திர இந்தியா 72 வயதைக் கடந்து 73-ஆவது ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறது. இந்தியா பன்முகத்தன்மை கொண்டது; அது பலகுரலில் பேசுகிறது.  வெளிநாட்டு மக்களோ பல கோணங்களில் பார்க்கிறார்கள். எப்படியாயினும், உண்மை ஒன்றாகத்தானே இருக்க முடியும்.
  பூமத்திய ரேகை என்பது ஒரு கற்பனைக் கோடு; அது உண்மையானதல்ல. அதுபோல் இந்திய தேசம் என்று ஒரு தேசமும் இல்லவே இல்லை; அதுவும் கற்பனையானது; நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயேர்கள் உருவாக்கியது.  ஆங்கிலேயர் வெளியேறியபின் அது சுக்கு நூறாகச் சிதறுண்டு போகும்  என எச்சரித்தார் பிரிட்டனின் போர்க் காலப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
  இந்தியாவைத் தொடர்ந்து விடுதலை பெற்ற பல நாடுகளில் ஜனநாயகம் வேரூன்றவில்லை; சர்வாதிகார ஆட்சி அல்லது ராணுவ ஆட்சியே நடைபெறுகிறது.   ஆனால், கருத்துவேறுபாடுகளும், பிணக்குகளும் ஆயிரம் இருந்தாலும் நம் தேசத் தலைவர்கள் விதைத்த ஜனநாயக விதை வேரூன்றி அசைக்க முடியாத ஆலமரமாக நிழல் தருகிறது. அதன் மூலம் சர்ச்சிலின் கணிப்பு பொய்த்துப் போனது. மேலும், உலகின் மிகப் பெரிய, மிக வலுவான ஜனநாயக நாடு இந்தியா என்பதை உலகறியச் செய்துள்ளோம்.
  இந்தியாவில் இதுவரை 17 பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்திவிட்டோம்.  1952-இல் நடை பெற்ற முதல் பொதுத் தேர்தலில் 17.3 கோடி வாக்காளர்களில் வாக்களித்தவர்கள் 11 கோடி. 2019-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 91 கோடி வாக்காளர்களில், வாக்களித்தவர்கள் 58.4 கோடி.  உலகில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் தேர்தலில் மக்கள் பங்கேற்பது என்பது இந்தியாவில் மட்டுமே. இது பெருமைக்குரியது. ஆனால் வாக்குச் சீட்டுகள் வீடுகளிலும், வீதிகளிலும் விலைக்கு விற்கப்படும் வணிகப் பொருள்களாகி விட்டன என்பது வேதனைக்குரிய சூழல்.
  கடந்த 72 ஆண்டுகளில் கல்வி, தனி நபர் வருமானம், சராசரி ஆயுள்காலம், மருத்துவ வசதி, சாலைப் போக்குவரத்து வசதி, தொலைத் தொடர்பு சாதன  வசதி, உணவுப் பொருள் உற்பத்தி, குடிநீர் வசதி ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது உண்மை. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 1947-இல் 70 சதவீதமாக இருந்தது; இன்று அது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது வளர்ச்சியின் அடையாளம். ஆனால், பிற நாடுகளின் வளர்ச்சியோடு, நமது தேச வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால்தான், நம் வளர்ச்சியின் வேகம் திருப்திகரமாக உள்ளதா அல்லது  இல்லையா என்பதை அறியலாம்.
  இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில், விடுதலை பெற்ற நாடுகள் பல. அவற்றில் சீனா (1949), பாகிஸ்தான் (1947), வங்கதேசம் (1947-இல் பிரிட்டனிடமிருந்தும், 1971-இல் பாகிஸ்தானிடமிருந்தும்), இலங்கை (1948) மற்றும் இந்தோனேசியா (1949) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
  இந்த நாடுகளில், உலக வங்கி கணிப்பின்படி, பொருளாதார வளர்ச்சி, சராசரி ஆயுள்காலம், குடும்பக் கட்டுப்பாடு, மின்சார வசதி வழங்குதல் ஆகியவற்றில் சீனா முதலிடம் வகிக்கிறது.  எழுத்தறிவு பெற்றவர் விகிதத்தில் இந்தோனேசியா (95.4%) முன்னிலை வகிக்கிறது.  பாதுகாப்பான பிரசவ மருத்துவ வசதியில் இலங்கை முன்னணியில் இருக்கிறது.
  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆறு இனங்களில் இந்தியா எதிலும் முதலிடம் பெறவில்லை. அதற்கு இந்தியாவின் அதிக மக்கள்தொகை, நாம் கடைப்பிடிக்கும் ஜனநாயக அணுகுமுறை, பன்முகத்தன்மை கொண்ட பரந்த மனப்போக்கு ஆகியவையே காரணம் எனக் கொள்ளலாம். 
  இதுவரை தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின நாளன்று 72 முறை தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. 73-ஆவது முறை தேசியக் கொடி ஏற்றி உரையாற்ற இருக்கிறார் பிரதமர் மோடி. முதல் சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்தி கொல்கத்தாவின் பாலியாகட் பகுதியில் பாழடைந்த ஹைதரி மாளிகையில் தங்கியிருந்தார். அன்றைய தினம் காலை மேற்கு வங்க அரசின் அமைச்சர்கள் அனைவரும் மகாத்மாவைச் சந்தித்து ஆசி வழங்கக் கேட்டபோது, அவர் சொன்னார்: இன்று (1947, ஆகஸ்ட் 15) முதல் நீங்கள் முள் கிரீடம் சூட்டிக் கொள்கிறீர்கள். சத்தியம், அகிம்சையைக் கடைப்பிடியுங்கள். எளிமையாக இருங்கள்; ஏழைகளுக்கு சேவை செய்வதற்கே இந்தப் பதவி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றார். ஆனால் இன்றோ சத்தியம், அகிம்சை, சேவை என்பவை உச்சரிக்கப்படும் சொற்கள் மட்டுமே.
  ஏழ்மை ஒழிக்கப்படாத வரை, தீண்டாமை முழுமையாகத் துடைத்து எறியப்படாத வரை, சுதந்திரம் பெற்றதில் பொருளே இல்லை  என்றார் மகாத்மா. ஆனால் இந்த இரண்டு கொடுமைகளும் குறைந்திருக்கலாம்; ஆனால் முழுக்க மறையவில்லை.
  பண்டித ஜவாஹர்லால் நேரு தனது சுதந்திர தின உரையில், பசித்தவனுக்கு உணவு அளிக்கப்பட வேண்டும்; ஆடை இல்லாதவனுக்கு உடை வழங்கப்பட வேண்டும்; ஒவ்வொரு இந்தியனும் தன்னை வளர்த்துக் கொள்வதற்கு முழுமையான வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார். 
  மேலும், இந்தியாவில் எதுவும் காத்திருக்கலாம்; ஆனால் விவசாயம் காத்திருக்க முடியாது என்றார் நேரு. ஆனால்,  72 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்; வேதனை தீரவில்லை; விடிவுகாலம் பிறக்கவில்லை. 2022-ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என்பது இன்றைய உறுதிமொழி. வருமானம் இரண்டு மடங்கு உயரலாம். ஆனால், அவர்களின்  விவசாயச் செலவு 4 மடங்காக உயராமல் இருக்க வேண்டுமே. 
  உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வியை இந்தியாவிலேயே தருவோம்; எல்லோரும் அதனை இலகுவாகப் பெற வழிவகுப்போம் என்றார் அன்றைய மத்திய கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத். அதனால்தான், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி-க்கள்), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்.) ஆகியவை நிறுவப்பட்டன. ஆனால், இன்றைய இந்திய இளைஞர்கள் தரமான உயர் கல்விக்காக, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுக்குச் செல்கிறார்கள். பெரும் கடன் சுமையை பெற்றோர் மீது சுமத்துகின்றனர். இந்திய கல்வி நிலையங்களைத் தேடி, வெளிநாட்டு மாணவர்கள் வரும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
  ஆங்கிலேயர் ஆட்சி அகன்று, பண்டித நேரு தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது நடைபெற்ற ஐ.சி.எஸ், ஐ.ஏ.எஸ்,  ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் இவ்வாறு கூறினார்: ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நாங்கள் (அமைச்சர்கள்) ஆட்சிக்குப் புதியவர்கள்.  ஆனால், உயர் அதிகாரிகளான நீங்களோ அறிவாற்றலும், நீண்ட நிர்வாக அனுபவமும் கொண்டவர்கள். நீங்கள்தான் அமைச்சர்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி, வழிகாட்ட வேண்டும்.  நாங்கள் சொல்வதோ, செய்வதோ தவறு எனத் தெரிந்தால் தைரியமாக உங்கள் கருத்தை முன்வைக்க வேண்டும்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்வதில் தயக்கம்  ஏற்படுமானால், நீங்கள் அரசை சரியாக வழி நடத்தத் தயங்கினால், அந்த நிமிஷமே உங்கள் பதவியைத் துறந்துவிட்டு வெளியேறுவதே சிறந்ததாகும் என்றார். 
  ஆனால், இன்றோ அரசின் உயர் அலுவலர்கள் இந்தக் கருத்தைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது பெரும் கேள்விக்குறியாகிவிட்டது.  வல்லபபாய் படேலின் அறிவுரையை அரசு அலுவலர்கள் இன்று முதலாவது கடைப்பிடிக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் உரையாற்றும்போது, இன்று முதல் இந்தியர்கள் அனைவரும் அரசியல் ரீதியான சமத்துவம் பெற்று விட்டார்கள்; ஆனால் சமூக ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான சமத்துவம் பெறுவதற்கு நாம் உழைத்தாக வேண்டும்  என்றார். அவரது கனவை நாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 
  கடந்த 72 ஆண்டு கால அரசின் பணியை, பங்களிப்பை, அதனால் ஏற்பட்ட பலன்களை ஆய்வு செய்து பார்த்தால், அது சாதனையா, இல்லையா, வெற்றி பெற்றோமோ இல்லையா, நமது தேசத் தலைவர்களின் உயரிய விழுமியங்களை, லட்சியங்களைக் காப்பாற்றியுள்ளோமா என்பதைக் கணிக்கலாம். நமது சாதனையின் அளவை 40/100, 50/100 அல்லது 100-க்கு 100 என்று எந்த அளவில் நிறுத்துவது? இவை விவாதப் பொருளாகத் தொடரலாம்; தவறில்லை.
  வெற்றி பெற்றோம் என்பவர்கள் மகிழலாம்; தங்கள் பணியைத் தொடரலாம். தோல்வியே என்பவர்கள், தளர்ந்து போகக் கூடாது. மேலும் வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்பட வேண்டும். மகாத்மா காந்தி முதல் அம்பேத்கர் வரை நம் இதயத்தில் இடம்பிடித்த தலைவர்களின் லட்சியங்களை நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயல்பட உறுதி ஏற்க வேண்டும்.
  இந்திய மக்கள்  அறிவாற்றல் மிக்கவர்கள், ஆளுமைத் திறன் கொண்டவர்கள்; உழைப்பையும், விசுவாசத்தையும் முன் நிறுத்துபவர்கள்.இதை உலகம் அறியும்.  ஆகவே, பேதங்களைத் துறப்போம்; பிணக்குகளைத் தீர்ப்போம்.  ஒற்றுமையாகச் செயல்படுவோம். நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் முன்நிறுத்துவோம். ஓயாது உழைப்போம். வெற்றி பெறுவோம். உலகின் முதன்மை நாடாக முன்னேறுவோம்.  இதையே சுதந்திர தின உறுதிமொழியாக ஏற்போம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai