ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

இன்று சுதந்திரத் திருநாள். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் தேசத்தை மீட்டெடுக்க விடுதலைப் போரில் களம் கண்ட தியாக மறவர்களின்

இன்று சுதந்திரத் திருநாள். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் தேசத்தை மீட்டெடுக்க விடுதலைப் போரில் களம் கண்ட தியாக மறவர்களின் வீர வரலாறுகளை இன்றைய இளம் தலைமுறையினர் ஆழ்ந்து கற்றல் அவசியம்.
அவ்வாறு கற்றால்தான் பெற்ற சுதந்திரத்தின் பெருமைகளைப் பேணிக் காக்கும் கடமையுணர்வு ஒவ்வொரு இளைஞருக்கு ஏற்படும் என்பதுடன், நாட்டின் வளத்தையும், வலிமையையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் செழித்தோங்கச் செய்யும் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான உத்வேகத்தைப் பெற முடியும். 
இந்திய விடுதலை வரலாற்றைக் கூர்மையாக ஆராய்ந்தால், சுய ராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய பால கங்காதர திலகர் தலைமையிலும், பின்னர் அகிம்சை வழி என்னும் புதிய பாதையில் நடைபோட்ட மகாத்மா காந்தி தலைமையிலும் விடுதலைப் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
இவ்வாறான விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. 1751-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்டதோடு, நெற்கட்டாஞ்செவ்வலின் குறுநில மன்னராகத் திகழ்ந்து ஆங்கிலேயருக்கு வரி தர முடியாது என்று சூளுரைத்து களம் கண்ட பூலித் தேவன், சுதந்திர வேட்கையை மக்கள் மனதிலே ஊட்டியும் வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வரி கட்ட மறுத்தும் அதற்குப் பரிசாக தூக்கு தண்டனை பெற்ற வீர பாண்டிய கட்டபொம்மன், அதே போன்று இன்முகத்துடன் தூக்கு மேடை கண்ட சிவகங்கையை ஆட்சி செய்த மருது சகோதரர்கள், 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீர மங்கை வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, லட்சுமி, வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா, தீரர் சத்திய மூர்த்தி, ராஜாஜி, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், காமராஜர், ஜீவானந்தம், கொடி காத்த குமரன் போன்ற பலரும் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தனர்.
இத்தகைய தியாக சீலர்களில் பத்திரிகையாளர், பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, கவிஞர் என்று பன்முக ஆற்றல் கொண்டவராகத் திகழ்ந்து அடிமை விலங்கொடிக்கும் அறப் போரில் தனித்துவமிக்க அடையாளத்தைப் பெற்றவர் மகாகவி பாரதி.
சுதந்திரம் என்னும் லட்சியத்தை அடைய வேண்டுமாயின், நாட்டு மக்களிடையே நிலவும் ஜாதி சமய வேறுபாடுகள் அகன்று மனிதர்களிடம் ஒற்றுமையுணர்வு உருவாக வேண்டும் என எண்ணிய பாரதி, ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? ஓர் தாயின் வயிற்றில்  பிறந்தோர் - தம்முன் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ? என்று பாடி மக்களின் சிந்தனையைச் செப்பனிட்டார்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்று கவி புனைந்து தொன்று தொட்டு சுதந்திரமாக வாழ்ந்து வந்த இந்தத் தேசத்து மக்கள் இன்று அடிமை மோகத்தில் நாட்டின் பெருமைகளை மறந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தியும் தேசத்தை தாயாக மதித்து வணங்க வேண்டும் என்ற உணர்வினையும் ஊட்டினார்.
இந்திய தேசத்தை மீட்டெடுக்க மகாத்மா என்னும் ஒப்பற்ற தலைவர் கிடைத்து விட்டார் என்பதை பாரதியார், வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம், தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை, வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க! என்று பாடல் தொடுத்து, அவரை அடியொற்றி மக்களை நடைபோட வைத்தார்.
நம் தேசத்தை பாரத தேவி யென்றும் தேசத்தில் வாழ்வோர் பாரத தேவியின் புதல்வர்கள் என்றும் ஒரு புதிய கருத்தாக்கத்தை மகாகவி உருவாக்கி, பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி என்று பாடி மக்கள் மனங்களிலே தேச பக்தியை மலரச் செய்தார்.
ஜாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம், நீதி நெறியினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர் என்று பாடி மக்களைப் பிளவுபடுத்தும் ஜாதிய பாகுபாடு முற்றிலும் அகல வேண்டுமென்ற சமூக சீர்திருத்தப் பணியினையும் அவர் மேற்கொண்டார்.
மேலும் ஆட்சி அதிகாரம், சட்டங்களை உருவாக்குதல் போன்ற பணிகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கோலோச்ச வேண்டும் என்று பெண் விடுதலை குறித்து பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி  என்று மகாகவி பாரதி பாடி தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே, சுதந்திரம் கிடைத்து விட்டதாக ஒரு கற்பனையை தனக்குள் உருவாக்கிக் கொண்ட அவர் சுதந்திர இந்தியாவில் ஜாதிய வேறுபாடுகள் மனிதர்களிடம் அகன்று விட்டதாகவும், எல்லோரும் சமம் என்ற நிலையில், மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே என்று சமதர்ம சமுதாயக் கொள்கையைப் படம் பிடித்துக் காட்டினார். இவ்வாறு பாரதியார் சுதந்திரம் பெறுவதற்காகவும், சுதந்திரம் பெற்ற பின் மக்கள் எப்படி வாழ வேண்டுமென்பதற்காகவும் தன் உயரிய தேசபக்தி சிந்தனைகளை கவிதைகளாக வடித்தெடுத்தார்.
இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். ஆனால் ஜாதியப் பாகுபாடு என்னும் நச்சு இன்னும் முழுமையாக இந்தச் சமுதாயத்தை விட்டு அகலவில்லை. அரசியலையும் ஆட்சி அதிகாரத்தையும்கூட ஜாதிகளே நிர்ணயிக்கின்றன. இன்று பெண்கள் ஆட்டோ ஓட்டுநர் பணி முதற்கொண்டு விண்வெளி ஆராய்ச்சி வரை ஆண்களுக்கு நிகராக ஜொலிக்கின்றனர் என்ற போதிலும் ஆணாதிக்கம் முற்றிலுமாக அகலவில்லை.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. இவை அனைத்தும் களையப்பட்டு எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்னும் நிலையெய்திட மகாகவி பாரதி இன்றும் தேவைப்படுகிறார் என்ற உணர்வு நம் மனங்களில் மேலோங்குகிறது.
எனவே, பாரதியை ஆழ்ந்து படிப்போம்! அவரின் கனவுகளை முழுமையாக நனவாக்க முற்படுவோம் என்ற சூளுரையை நாம் மேற்கொண்டு ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என இப் பொன்னாளான சுதந்திர நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com