கல்விச் சாலையும், சிறைச் சாலையும்

அண்மைக் காலமாகக் கல்லூரி மாணவர்களின் அராஜகத்தைப் பார்த்து பொது விரக்தியின் விளிம்புக்கே மக்கள் போய்விட்டனர்.

அண்மைக் காலமாகக் கல்லூரி மாணவர்களின் அராஜகத்தைப் பார்த்து பொது விரக்தியின் விளிம்புக்கே மக்கள் போய்விட்டனர். இவர்களைப் பார்த்து நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். இவர்களுக்கு இப்படிப்பட்ட பண்பாட்டைத்தான் கல்லூரிக் கல்வி  கற்றுக் கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
சில ஆண்டுகளாகவே கல்லூரி மாணவர்களின் அராஜகம் உச்சத்துக்குப் போய்விட்டது. பாவம், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று தரப்பட்ட வாய்ப்புகளையும், மன்னிப்புகளையும் அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டனர். இந்தக் கல்லூரிகளில் ஒழுக்கமும், படிப்பும், பொறுப்பும் உள்ள மாணவர்கள் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்கித் தரும் கல்லூரிகளும் இல்லாமல் இல்லை. 
சிறிது காலத்துக்கு முன்பு ரயில் வண்டிகளில் ஏறிக் கொண்டும், தொங்கிக் கொண்டும் பட்டாக் கத்திகளைப் பிளாட்பாரங்களில் உரசி நெருப்புப் பொறி பறக்கச் செய்தும் பயணிக்கும் மக்களை அச்சுறுத்தினர். அப்போதே ரயில்வே காவல் துறை சரியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போது கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.
இது வளர்ச்சியடைந்து, ஒரு குழு மாணவர்கள் எதிர்க் குழுவைச் சேர்ந்த மாணவர்களை பட்டாக் கத்திகளைக் கொண்டு பொது இடங்களில் தாக்கிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது. அண்மையில் சென்னை அரும்பாக்கத்தில் போக்குவரத்து நிறைந்த சாலையில் பேருந்துகளை நிறுத்தி நடத்திய தாக்குதல் அதன் உச்சமாகக் கருதப்படுகிறது.
சென்னையில் உள்ள குறிப்பிட்ட கல்லூரியின் மாணவர்கள் பட்டாக் கத்திகளைப் பயன்படுத்தி சக கல்லூரி மாணவர்களை பேருந்தில் வைத்தும், சாலையில் ஓட ஓட விரட்டியும் வெட்டினர். பட்டாக் கத்திகளால் வெட்டப்பட்ட எதிர்க்குழுவின் மாணவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட ஓடும் வகையில் நிகழ்ந்த  வெறிச் செயலைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பேருந்தை விட்டு இறங்கி திசை தெரியாமல் பொதுமக்கள் ஓடினர்.
இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகரில் பயணச் சீட்டு வாங்கும்படி கூறிய நடத்துநர் பட்டாக் கத்தியால் வெட்டப்பட்டார். இவ்வாறு மாணவர்கள் தங்கள் மனம்போன போக்கில் செயல்படுவதற்குக் காரணம் என்ன? இந்தச் செயல்களுக்கு அரசியல் பின்னணி ஏதேனும் இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.
சென்னையைப் பொருத்தவரை குறிப்பிட்ட கல்லூரிகளின் மாணவர்களே இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முன்னிலை வகிக்கின்றனர். பேருந்துகளை மறித்து அதன்மேல் ஏறிக் கொண்டு பஸ் டே என்ற பெயரால் இந்த மாணவர்களின் கலவரம் தொடங்கியது. 
இவர்களின் போராட்ட வன்முறைகளைக் கண்டு கல்லூரி நிர்வாகம் பயந்தது. பேராசிரியர்களும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டனர். மிகச் சிலராக இருக்கும் இந்த மாணவர்கள் தம் வீர, தீர, பராக்கிமங்களைக் காட்டிக் கொள்ள புதிய களங்களையும், தளங்களையும் அமைத்துக் கொண்டனர்.
அவற்றுள் ஒன்றுதான் ரூட்டுதல என்பதும். இந்த ரூட்டுதல கலாசாரம் சென்னையில் 1990-ஆம் ஆண்டுவாக்கில் ஆரம்பித்தது என்று கூறுகின்றனர். பேருந்து வழித்தடங்களை வைத்து  ரூட்டுதலயை உருவாக்குகிறார்கள். பெரம்பூரிலிருந்து அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் பேருந்தில் குறிப்பிட்ட கல்லூரி மாணவர்கள் செல்வார்கள். இந்த ரூட்டுக்கு ஒரு தல இருப்பார். பெரம்பூரிலிருந்து திருவேற்காடு வரை இயக்கப்படும் பேருந்தில் வேறு ஒரு குறிப்பிட்ட கல்லூரியின் மாணவர்கள் போவார்கள். இந்த ரூட்டுக்கு ஒரு தல இருப்பார்.
இப்படி ஒவ்வொரு ரூட்டுக்கும் ஒரு தல இருப்பார். இவர்கள் தலைமையில் மாணவர்கள் தாளம் போட்டுக் கொண்டும், கானா போன்ற கேலிப் பாட்டுப் பாடிக் கொண்டும் போவார்கள். இந்த அட்டகாசங்களைத் தாங்க முடியாத பயணிகள் தாங்களாகவே இறங்கிப் போய்விடுவார்கள். 
பேருந்துகளின் வழித்தடங்களில் ரூட்டுதலயாக இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு எதிரணியோடு மோதலில் ஈடுபடுகின்றனர். இதனால் கல்வி பாதிக்கப்படுவதுடன், பொதுவான சட்டம்-ஒழுங்கும் பாதிக்கப்படுகிறது.
பல பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் இத்தகைய செயல்பாடுகள் தெரிவதில்லை. கல்லூரிக்கு ஒழுங்காகச் சென்று படிக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது நம்பிக்கையை இந்த மாணவர்கள் தகர்த்து விடுகின்றனர். 
இது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் தடவை காவல் துறையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர்களோடும், பெற்றோர்களோடும் கலந்துபேசி தீர்வு காணவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டதோடு, நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 
கல்லூரி பேரவைத் தேர்தல்களை நடத்தி, கலை, இலக்கிய, சமூகப் பயிற்சிகளில் ஈடுபாடு காட்டப்படுவதும் குறைந்துகொண்டே வந்து, இப்போது இல்லை என்றே ஆகிவிட்டது. மது மற்றும் போதை மருந்து  போன்ற ஒழுக்கக் கேடுகளும் அவர்களைச் சீரழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று விட்டது. அண்மைக் காலமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான உறவில் இடைவெளி ஏற்பட்டு விட்டது. ஊதியம் குறைவாக இருந்தபோது, அந்தக்கால ஆசிரியர்கள் கடமையில் கண்ணாய் இருந்தனர். இப்போது ஊதியமும் உயர்ந்துவிட்டது. அவர்கள் மனமும் மாறிவிட்டது. 
கல்லூரி நேரங்களில் மாணவ மாணவிகளை நவீன மால்களிலும், தியேட்டர்களிலும் அதிகமாகக் காணமுடிகிறது. திரைப்படங்களில் காட்டப்படும் கதாநாயகர்களின் வீரதீர சாகசங்கள் அவர்களை ஈர்த்துள்ளது. அவற்றையெல்லாம் உண்மையென்று நம்பி அவற்றை வாழ்க்கையில் நடத்திக் காட்டத் துடிக்கும் அறியாமையும் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். நிழலுக்கும், நிஜத்துக்குமான வேறுபாட்டை அவர்களுக்கு அமைதியாக எடுத்துக் கூறும் ஆசிரியர்களும், இப்போது இல்லை. ஆசிரியர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் மாணவர்களும் குறைந்துவிட்டனர். 
தமிழ்நாட்டில் உள்ள அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 92. அங்கு சுமார் 6,500 ஆசிரியர் இடங்கள் காலியாக இருப்பதாக கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. இதனால், வகுப்புகள் ஒழுங்காக நடப்பதில்லை. மாணவர்களின் படிக்கும் பழக்கமும் குறைந்து விட்டது. இதனால் மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியேறிச் சுற்றுகின்றனர். தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர்.
மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டால் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். மேலும் குண்டர் சட்டத்தின்கீழ் குறைந்தது 10 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை வரும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து எழுத்துப்பூர்வமாக பெற்றோரிடமும், மாணவரிடமும் கையொப்பம் வாங்கியிருப்பதோடு, உறுதிமொழிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம். கற்கும் காலத்தில் கல்வியைத் தவற விடுகிறவர்கள், வாழும் காலத்தில் வாழ்க்கையையும் இழந்து போக நேரும் என்பது இனிமேல்தான் இவர்களுக்குத் தெரியவரும். 
மாணவர்கள் படிக்கும் காலத்தில் அவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களுக்காகச் செலவழித்த பணம் நாட்டுக்கே நஷ்டமாகிவிடும் என்றார் மகாத்மா காந்தி. நாட்டின் எதிர்காலமாகக் கருதப்படும் மாணவர்கள் ஒழுக்கமும், பண்பாடும், மனிதநேயமும் கொண்டவர்களாக விளங்க வேண்டும்.
இந்தியாவின் வலிமை என்பது மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இளைஞர்களாக இருப்பதுதான். அவர்களின் அறிவும், ஆற்றலும் இப்படி விழலுக்கு இறைத்த நீராக வீணாகக் கூடாது. 
இன்றைய இளைஞர்கள் சமுதாயத்தின் ஓர் அங்கம்தான். நம்மை வளர்த்துவிட்ட பெற்றோருக்கும், மற்றோருக்கும் நமக்கான கடமை இருக்கிறது. கடமையை விட்டுவிட்டு உரிமைக்காகப் போராடுவதும் வன்முறைதான். அந்த வன்முறைதான் அவர்களைச் சமுதாயப் புறக்கணிப்புக்கு ஆளாக்கியுள்ளது.
கடமையும், உரிமையும் இரண்டு கண்களாகும். இந்தக் கண்கள் இரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்கினால் சமூகம் கைகொட்டிச் சிரிக்கவே செய்யும். இந்த கேலிக்கும், அவமானத்துக்கும் உள்ளாவது கேவலமான செயல்.
இளமையில் கல் என்பது நீதி நூல். இளமையில் கல்வி, சிலையில் எழுத்து என்பது பழமொழி. இந்த கிடைத்தற்கரிய இளமைப் பருவத்தை படிப்பதற்கே பயன்படுத்த வேண்டும். வெட்டிப் பேச்சும், வீண் விவகாரங்களும் கல்விக்கு உதவாது. கல்வி இல்லாது போனால் எதிர்கால வாழ்க்கையே இல்லாமல் போய்விடும்.
கல்விச்சாலை ஒன்றைத் திறப்பவன் சிறைச்சாலை ஒன்றை மூடுகிறான் என்றார் மேலைநாட்டு அறிஞர் விக்டர் ஹியூகோ. இன்றைய இளைஞர்கள் கல்விச் சாலைகளில் செய்கிற வன்முறைகளால் சிறைச்சாலைகளில் அடைக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் மலர்கள் மணக்கும் மலர்களாகவே இருக்க வேண்டும். குத்தும் முள்ளாக மாறவே கூடாது. 
கட்டுரையாளர்:
எழுத்தாளர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com