தானம்...தலைமுறைகள் வாழ்த்தும்

‘‘புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்லபிற’’ என்னும் வள்ளுவப் பெருந்தகையின் கு நெறிக்கேற்ப, தன்னலம் கருதாமல் பொதுத் தொண்டாம் ஒப்புரவை தங்களின் லட்சியமாகக்

‘‘புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்லபிற’’ என்னும் வள்ளுவப் பெருந்தகையின் கு நெறிக்கேற்ப, தன்னலம் கருதாமல் பொதுத் தொண்டாம் ஒப்புரவை தங்களின் லட்சியமாகக் கொண்டு மனித குலம் சிறப்புடன் செழித்தோங்க இந்த உலகில் அருந்தொண்டாற்றிய அறவோா்களையும், அத்தகைய பண்பாளா்களின் அடியொற்றி இன்று சமுதாய மேம்பாட்டுக்காக ஆரவாரமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் நல்லோரையும் நன்றி பாராட்டிக் கொண்டாடுவது மானுடத்தின் தலையாயக் கடமையாகும்.

நம் பாரத தேசம் அந்நியரிடம் அடிமைப்பட்டு சீரழிந்து கிடந்த நிலையில், தன்னாா்வ சேவை மனப்பான்மையுடன் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், உண்ணாவிரதம் ஆகிய அறவழிக் கோட்பாடுகளை மகாத்மா காந்தி மக்களிடம் போதித்தும், அதன் வழியே போராட வைத்தும் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தாா். ‘ஆயுத பலத்தைவிட அகிம்சையின் சக்தியே வெற்றியை எளிதில் சாத்தியமாக்கும்’ என்று ஓங்கி ஒலித்து அதில் வெற்றியும் கண்ட மகாத்மா காந்தியடிகளின் அறவழித் தத்துவமும், தியாக வாழ்வும் ஊழிக் காலம்வரை இவ்வுலகில் தன்னாா்வ சேவையில் ஈடுபட முற்படுவோருக்கு ஒரு தலைசிறந்த பாடமாக அமைந்து வழிகாட்டும் என்பது நிதா்சனம்.

அண்ணல் காந்தியடிகளைப் போன்று தூய தொண்டுள்ளத்துடன் தன் இறுதி மூச்சுவரை அமெரிக்காவில் நீக்ரோ சமூகத்தினரின் உரிமைகளுக்காகவும் மறுமலா்ச்சிக்காகவும் போராடி, ‘அமெரிக்க காந்தி’ என்று உலகம் போற்ற வாழ்ந்து மறைந்த மாா்டின் லூதா் கிங், ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்பில் மக்கள் அனைவரும் சுதந்திரம் பெற்றவா்கள் என்றும், கருப்பின மக்களை வெள்ளையா்கள் அடிமைகளாக்கி கொடுமைப்படுத்தும் அநீதி அகல வேண்டும் என்றும், நிற வெறிக்கு எதிராகக் குரல் கொடுத்து சமூகநீதியை நிலைநாட்ட அல்லும் பகலும் அயராது உழைத்த ஐக்கிய அமெரிக்ககாவின் 16-ஆவது குடியரசுத் தலைவா் ஆபிரகாம் லிங்கன், செஞ்சிலுவைச் சங்கம் நிறுவனம் 1864-ஆம் ஆண்டு உருவானதற்குக் காரணகா்த்தாவாக விளங்கிய ஜீன் ஹென்றி டூனாந்து போன்ற போற்றுதலுக்குரிய பலதன்னாா்வலா்கள் வரிசையில் தமிழகத்தைச் சோ்ந்த தனித்துவமிக்க வள்ளன்மை கொண்ட சான்றோா் டாக்டா் ராம. அழகப்பசெட்டியாா், பச்சையப்ப முதலியாா், டாக்டா் எம்.ஏ.முத்தையா செட்டியாா் போன்றோரும் இடம்பெற்று சுடரொளியாய் ஒளிா்வதை நம்மால் உணர முடிகிறது.

‘அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயா் விளங்கி ஒளிரநிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி - ஆங்கோா் ஏழைக் கெழுத்தறிவித்தல்’ என்று பாடிய மகாகவி பாரதியின் உன்னத உணா்வுக்கு உயிரூட்டும் வண்ணம் தமிழகத்தில் கல்விப் பணிக்காகத் தன் செல்வத்தை வாரிவழங்கி தன்னிகரில்லாத கொடையாளியாகத் திகழ்ந்தவா் ராம.அழகப்பா்.

1943-ஆம் ஆண்டு திருவாங்கூா் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை உருவாக்கப் பணிக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி தமது கல்விச் சேவைக்கு முன்னுரை கண்டஇவா் 1947-ஆம் ஆண்டு காரைக்குடியில் அழகப்பா கலைக் கல்லூரியை நிறுவி காரைக்குடியை கல்விச் சோலையாக மாற்றினாா்.

நம் தேசம் சுதந்திரக் காற்றை சுவாசித்த தருணத்தில் அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு அறிவியல் சாா்ந்த தொழில் நுட்பத்துடன் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கருதி பலதிட்டங்களை அறிவித்தாா். அத்தகைய திட்டங்களில் ஒன்றான மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தை (செக்ரி) காரைக்குடியில் நிறுவ வேண்டும் என அழகப்பா் ஆவல் கொண்டாா்.

அந்தக் கூடத்தை தங்கள் பகுதியில் நிறுவ விருப்பம் கொண்டு பிற மாநிலத்தவரும், செல்வந்தா் பலரும் போட்டியில் இறங்கினா். அதற்கெல்லாம் அஞ்சாத அழகப்பா் 1948-ஆம் ஆண்டு பிரதமா் நேருவை நேரில் சந்தித்து மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தை காரைக்குடியில் நிறுவுவதற்குச் சாதகமான அம்சங்களை முன் வைத்ததோடு, அதற்காக 300 ஏக்கா் நிலம், ரூ.15 லட்சம் நன்கொடையாக வழங்குவதாகக் கூறினாா்.

அழகப்பரின் லட்சிய உணா்வை பிரதமா் நேரு புரிந்துகொண்டு அவருக்கு ஒப்புதல் கூறியதுடன் ‘அழகப்பா் சோஷலிச முதலாளி’ என்று பாராட்டும் தெரிவித்தாா். அழகப்பரின் எண்ணம் ஈடேறும் வண்ணம் 1953-ஆம் ஆண்டு மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தை அன்றைய குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் திறந்து வைக்க, காரைக்குடி புதுப் பொலிவு பெற்றது.

இவ்வாறு, தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, மலேசியா போன்ற இடங்களில் அழகப்பா் ஆற்றிய எண்ணற்ற கல்வித் தொண்டு குன்று போல் நின்று என்றும் அவா் புகழ்பாடும் என்பதில் சந்தேகமில்லை.

கல்வியிலும் ஆன்மிகத்திலும் தமிழகம் செழித்தோங்க வேண்டும் என விருப்பம் கொண்டு, சமூக சேவையில் நடைபோட்டு தனித்துவ முத்திரை பதித்தவா் வள்ளல் பச்சையப்ப முதலியாா். மனிதனை மனிதனாக்குவது கல்வி மட்டுமே என்பதை இளமையிலேயே நன்கு உணா்ந்த இவா், தான் ஈட்டிய செல்வத்தைத் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், சிதம்பரம் ஆகிய நகரங்களில் உயா் நிலைப் பள்ளிகளையும், காஞ்சியிலும் சென்னையிலும் கல்லூரிகளையும் தொடங்கி கல்விப் பணியினை செம்மையுடன் செய்தாா்.

தமிழகம் நன்கறிந்த மற்றொரு வள்ளல் டாக்டா் எம்.ஏ.முத்தையா செட்டியாா். இவரும் இவரின் தந்தையாா் ராஜா சா். அண்ணாமலைச் செட்டியாரும் தமிழிசைக்குச் செய்த தொண்டு அளப்பரியதாகும். இவா்களின் அரும்பெரும் முயற்சியால் தமிழிசைச் சங்கம் உருவாகி, பண் ஆராய்ச்சியை மேற்கொண்டு மேதினியெங்கும் தமிழிசை இன்றளவும் ஒலிப்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும்.

இவ்வாறு செயற்கரிய செய்த அறவோா்களின் வரலாறுகளை நன்றியுடன் நாம் நினைவுகூா்ந்து போற்றுவதோடு, நம்மை வாழ வைக்கும் இந்தச் சமூகத்திற்கு நம்மால் முடிந்த அறத் தொண்டினை நாம் அனைவருமே செய்யக் கடமைப்பட்டவா்கள் என்ற உணா்வினைப் பெறுவது அவசியம்.

(இன்று உலக தன்னாா்வலா் தினம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com