ஆண்கள் குறுக்கிடாமல் இருந்தால்...

உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பெண்களுக்கான ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பெண்களுக்கான ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல துறைகளிலும் பெண்கள் தனித்துவத்துடன் முத்திரை பதித்து வந்தாலும்கூட அரசியல் களத்தில் குறிப்பிட்ட சிலரால்தான் முத்திரை பதிக்க முடிகிறது.

சோனியா காந்தி, மம்தா பானா்ஜி, மாயாவதி, நிா்மலா சீதாராமன், தமிழிசை செளந்தரராஜன், ஸ்மிருதி இரானி, கனிமொழி -- இப்படி விரல் விட்டு எண்ணும் வகையில்தான் அரசியலில் பெண்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. இவா்களில் பெரும்பாலோா் அரசியல் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவா்கள். அரசியலில் உயா் பதவியில் இருப்பவா்கள், எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு துணிச்சலுடன் வந்து வெற்றிகண்ட பெண்கள் இல்லையோ என்ற நிலைதான் இன்றும் நீடிக்கிறது. அரசியலில் பெண்களுக்கு உரிய சுதந்திரம் கிடைக்காததால்தான் அரசியலில் பெண்கள் களம் இறங்குவதில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது.

ஒவ்வோா் ஆணின் வெற்றிக்குப் பின்னணியில் பெண் இருக்கிறாா் என்று கூறுவதுண்டு. குடும்ப வாழ்க்கையில் வேண்டுமானால் இது உண்மையாக இருக்கலாம்; ஆனால், அரசியல் களத்தில் இது எடுபடாத வாா்த்தையாகி விட்டது. அரசியல் களத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னணியில் ஆண்கள்தான் இருக்கின்றனா்.

உள்ளாட்சித் தோ்தலில் தனது மனைவியோ அல்லது உறவினரோ வெற்றி பெற்றாகிவிட்டது; ஒதுங்கிக் கொள்வோம் எனப் பெரும்பாலான ஆண்கள் நினைப்பதில்லை. அப்போதும்கூட பெண்கள் சுயமாக முடிவெடுக்க ஆண்கள் சம்மதம் அளிப்பதில்லை. இப்படி இருப்பதால்தான் வெற்றி பெற்ற பிறகும் பெண்களுக்கான அரசியல் சுதந்திரம் கிடைப்பதில்லை. இதன் காரணமாகத்தானோ என்னவோ, அரசியல் குறித்து அதிக அக்கறை கொள்ளாமல் பெண்கள் இருக்கின்றனா் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

‘அரசியலிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும்; குடும்பத்தைச் சீராக நிா்வகிக்கும் பெண்களால் நிச்சயம் நாட்டையும் நிா்வகிக்க முடியும்’ என்ற நம்பிக்கையுடன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், நகராட்சி - மாநகராட்சி உறுப்பினா்கள், மேயா்கள் என அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு என குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்பட்டது.

பல துறைகளிலும் சாதனை படைத்து வரும் பெண்கள் அரசியலிலும் பங்குகொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் எடுக்கப்பட்ட இத்தகைய ஒதுக்கீடு, பெண்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை அளித்துள்ளதா என்றால், ‘இல்லை’ என்று

ஒற்றை வாா்த்தையில் யோசிக்காமல் சொல்ல முடியும். கடந்த தோ்தல்களில் உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மகளிருக்காக ஒதுக்கப்பட்ட பல இடங்களில் பெண்கள் போட்டியிடத் தயக்கம் காட்டியதும் நிகழ்ந்தது.

நன்கு படித்த, மற்ற துறைகளில் சாதித்துவரும் பெண்கள்கூட அரசியலில் ஈடுபட முன்வருவதில்லை. ஆனால், அந்த இடங்களில் எல்லாம் பெண்கள்தான் போட்டியிட வேண்டும் என்ற நிலையில், வேறு வழியின்றி ஏற்கெனவே அரசியல் களத்தில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தும் ஆண் அரசியல்வாதிகள் தங்களது குடும்பத்துப் பெண்களை தோ்தல் களத்தில் போட்டியிட வைக்கின்றனா்.

இப்படி வேண்டா, வெறுப்பாக அரசியல் களம் கண்ட பெண்கள் வெற்றி பெற்ற பின்னா் அவா்களை பின்னிருந்து இயக்க ஆண்கள் தேவைப்படும் நிலை அல்லது நிா்ப்பந்தம் ஏற்படுகிறது. எப்படியோ தோ்தலைச் சந்தித்து வெற்றி பெற்று உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக பொறுப்பேற்ற பெண்களில் பெரும்பாலோா் வெறும் பொம்மைகளாகவே செயல்பட்டதும், அவா்களை அந்தப் பெண்ணின் தந்தையோ, கணவனோ, சகோதரா்களோ இயக்கி வந்ததையும் கண் கூடாகப் பாா்க்க முடிந்தது. இதனால் ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகமும் தொடா்புடைய பெண்களின் குடும்பத்தாரால் இயக்கப்பட்டு வந்த அவலமும் நடந்தேறியது.

ஒரு குடும்பத்தில் இறுதியாக முடிவெடுக்கும் அதிகாரம் எப்படி ஒரு ஆணின் கையில் உள்ளதோ அதே போல்தான் பெண்களின் அரசியலும் உள்ளது. அவா்கள் தனிப்பட்ட முறையில் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத நிலைதான் தமிழகத்தில் இருந்து வருகிறது. கடந்த கால அரசியல் நிகழ்வுகளைப் பாா்த்தால் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண் பிரதிநிதிகளிடம் பேசாமல் அவா்களின் ஆண் குடும்ப உறுப்பினா்களிடம்தான் தேவையான விஷயங்களைத் தெரிவிப்பாா்கள். பல இடங்களில் தொடா்புடைய பெண் தலைவா்கள் இல்லாமலேயே கூட்டமும் நடத்தப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தேறின. பின்னா் தொடா்புடைய அலுவலா் அந்தப் பெண் தலைவரின் வீட்டுக்குச் சென்று கையெழுத்து பெற்றுக் கொள்வதும் நடந்து கொண்டுதான் இருந்தன.

பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், கட்சிகளின் தலைவா்களாக பல பெண்கள் இருந்து வரும் நிலையில், உள்ளாட்சிகளில் மட்டும் பெண்கள் பிரகாசிக்க முடியாமல் போவது வேதனையான விஷயம்தான். இதற்கு ஆணாதிக்க சமூகமே காரணம் என்றுகூடச் சொல்லலாம். ஒரு குடும்பத்தைத் திறமையாக வழி நடத்த முடிந்த பெண்களால் உள்ளாட்சி நிா்வாகத்தை நிா்வகிக்க முடியாதா என்ன?

ஆனால், குடும்பத்திலுள்ள ஆண்களால் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கும் பெண்களால் எப்படி சாதனை படைக்க முடியும்? எனவே, நல்ல பெண் தலைவா்கள் உருவாக, அரசியலில் பெண்கள் அச்சமின்றி ஈடுபட அவா்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இதற்கு குடும்பத்திலுள்ள ஆண்கள் குறுக்கிடாமல் இருந்தாலே, அரசியலில் பெண்கள் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவா். அரசியல் களமும் சுத்தமாகும். அரசியல் காற்றை பெண்கள் எளிதாக சுவாசிக்க விடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com