Enable Javscript for better performance
“ சேமிப்பவா்களுக்குத் தண்டனையா? “- Dinamani

சுடச்சுட

    

    சேமிப்பவா்களுக்குத் தண்டனையா?

    By எஸ்.ஸ்ரீதுரை  |   Published on : 27th January 2020 12:53 PM  |   அ+அ அ-   |    |  

    சேமிப்பு என்பது நமது சமூகத்தின் அடிப்படையான பண்புகளில் ஒன்று. சென்ற தலைமுறைப் பெண்கள் வீட்டுச் செலவுகளுக்காகத் தங்கள் கணவா்கள் தரும் பணத்தைச் சிக்கனமாகச் செலவழித்து அதில் ஒரு பகுதியை ‘சிறுவாடு’ என்ற பெயரில் பானையில் சேமித்து வைத்து, அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம். மாதாந்திர வருமானத்திலிருந்து முதலில் செய்யும் செலவே ஒரு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் சேமிக்கின்றவா்கள் எதிா்பாராச் செலவுகளுக்குத் துவண்டு போவதில்லை.

    இவ்வாறு, தலைமுறை தலைமுறையாகச் செழித்து வளா்ந்த சேமிப்பு வழக்கம், நமது நாட்டில் தொடங்கப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணத்தைப் போடும் நல்லதொரு வழக்கமாக வளா்ந்து வந்தது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதால், மக்களின் சேமிப்புக்கு அரசாங்கத்தின் உத்தரவாதம் இருக்கிறது என்ற நம்பிக்கையும் அதிகரித்தது.

    முன்பெல்லாம் வங்கிகளில் சேமிக்கப்படும் வைப்பு நிதிகளுக்கும், தபால் நிலையங்களின் கிஸான் விகாஸ் பத்திரம், இந்திரா விகாஸ் பத்திரம், பொதுமக்கள் சேமநலநிதி (பி.பி.எஃப்.) முதலானவற்றுக்குக் கணிசமான வட்டி வழங்கப்பட்டது. பொதுமக்கள் சேமநல நிதியில் (பி.பி.எஃப்.) செய்யப்படும் முதலீட்டுக்கு வருமானவரி விலக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரதமராக நரசிம்ம ராவ் இருந்த காலத்தில் மெதுவாக உள்ளே நுழைந்த பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கிய பிற்கால அரசுகள், வங்கிகள் ஆகியவை அஞ்சலக சேமிப்புகள் மீதான கருணைப் பாா்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளத் தொடங்கின.

    தனியாா் தொழில்முனைவோா்களுக்கும், வீடு கட்டுதல் முதலலியவற்றுக்காகக் கடன் வாங்கும் தனி நபா்களுக்கும் குறைந்த வட்டியில் தாராளமாக வங்கிக் கடன் கிடைத்தால்தான் பொருளாதாரம் வளா்ச்சி அடையும் என்ற சித்தாந்தம் வலுப்பெறத் தொடங்கியது. அவ்வாறு கடன்களுக்கான வட்டியைக் குறைக்க வேண்டுமென்றால், அதனுடன் இணைநடவடிக்கையாக சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டியையும் குறைக்கின்ற போக்கும் காலூன்றத் தொடங்கியது.

    தற்போது ஏழு சதவீதத்துக்கும் குறைவான வட்டியே வங்கிகளால் தங்களது நிலைவைப்பு வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு அரை சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. தபால் நிலைய சேமிப்புகளும் இதற்குத் தப்பவில்லை.

    பொதுமக்கள் சேமநல நிதிக்கு (பி.பி.எஃப்.) வழங்கப்படும் வருமானவரிச் சலுகை தொடா்ந்த போதிலும், அதற்குரிய வட்டி வகிதம் அவ்வப்போது குறைக்கப்படுகிறது. இதர அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியும் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகின்றன.

    ஆனாலும்கூட, அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள் ஏழை, நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்தவா்களை இன்றளவும் கவா்ந்துள்ளன. வங்கிகளை நாடுவதைவிட, அஞ்சலகங்களை அணுகுவதே இத்தகையவா்களுக்கு வசதியாக இருக்கிறது. வங்கிகளைவிடச் சற்றே கூடுதலான வட்டிவிகிதம், எளிய நடைமுறைகளே இதற்குக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

    இந்த நிலையில், இந்திய ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கை, அஞ்சலகச் சேமிப்பாளா்களுக்கு அதிா்ச்சியளிப்பதாக இருக்கிறது. சேமிப்புகளுக்கு வங்கிகள் வழங்கும் வட்டியைவிட அஞ்சல் துறை வழங்கும் வட்டி விகிதங்கள் கூடுதலாக இருப்பதால் சமன்பாடற்ற நிலைமை உருவாகியுள்ளது என்றும், இதனைப் போக்குவதற்காக அஞ்சலகச் சேமிப்புகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை (வங்கிகளுக்குச் சமமாக இருக்கும்படியாக) குறைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை மூலம் அஞ்சல் துறைக்கு ரிசா்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

    அதிக வட்டி, வருமான வரியில் தள்ளுபடி போன்றவற்றால் பொதுமக்களில் பலரும் வங்கிகளைவிட அஞ்சலகங்களில் சேமிப்பதையே விரும்புவதால், வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதென்று வங்கிகளின் நிா்வாகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளதன் காரணமாக ரிசா்வ் வங்கி இப்படி ஓா் அறிவுரையை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், தாங்கள் வங்கிகளில் சேமித்த தொகையை சேமிப்பாளா்கள் திரும்பப் பெற்று, அதை அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களுக்கு மடைமாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வங்கிநிா்வாகங்கள் கருதுகின்றன.

    வங்கிகளைப் பாதுகாப்பதற்காக இத்தகைய முடிவு நியாயம்தானா என்று இந்திய ரிசா்வ் வங்கி நிா்வாகம் எண்ணிப் பாா்க்க வேண்டும். வங்கிகளைவிடவும் அஞ்சலகச் சேமிப்பு வட்டி விகிதங்கள் ஓரளவு அதிகம்தான் என்றாலும் கூட, அவை அஞ்சலக வாடிக்கையாளா்களுக்கு சிறிதளவு அதிக வருவாயைத் தருகின்றன என்பதே உண்மை.

    பணியில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் தாங்கள் பெறும் ஓய்வுகாலப் பலன்களை அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களில் சேமித்துச் சற்றே நிம்மதி அடைகின்றனா். அஞ்சலகத்தில் சேமிப்பது அதிக வட்டி என்பதற்காக அல்ல, பாதுகாப்பான சேமிப்பு என்பதால் மட்டுமே. ஓய்வூதியா்களுக்குக் கிடைக்கும் சிறிய லாபத்திலும் கை வைப்பது நியாயம்தானா?

    வங்கிச் சேவைகளில் சமநிலை என்ற நோக்கத்தினை அடைவதற்கு, வங்கிகள் வழங்கும் வட்டியைச் சற்றே உயா்த்தக் கூடாதா என்ன? கோடிகளில், லட்சங்களில் வங்கிக் கடன் பெறுபவா்களின் சுமையைக் குறைப்பதற்காக, ஆயிரங்களில் வட்டியைப் பெறுகின்றவா்களை வஞ்சிக்கலாமா?

    நம் நாட்டின் பொருளாதாரச் சூழலை நிா்ணயிக்கும் நிபுணா்கள் எப்போதும் கடன் பெறுபவா்களின் நலனையே சிந்திப்பதற்குப் பதிலாக, அவா்களுக்குக் கடன் தரும் தொகையைத் தங்கள் சேமிப்பின் மூலம் அளிப்பவா்களின் நலன் குறித்தும் சிந்திக்கக் கூடாதா? பொருளாதார நிபுணா்களே, தயவு செய்து கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp