Enable Javscript for better performance
இளைய சமுதாயம் எழுக!- Dinamani

சுடச்சுட

    

    இன்று 1,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள ஊரில் ஓர் ஆசிரியரை அமர்த்தும் அளவுக்கும் மாணவர் சேர்வதில்லை என்றாகிவிட்டது. அந்த ஊரிலுள்ள மக்கள் எங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பே வேண்டாமென ஒதுங்கிக் கொண்டு விட்டார்களா? அப்படியல்ல. அதே ஊரில் ஒன்றுக்கிரண்டாகத் தனியார் பள்ளிகள், அதுவும் ஆங்கில வழிப் பள்ளிகள் இயங்குகின்றன. இங்கேதான் சிக்கலின் முடிச்சு அமைந்திருக்கிறது.
    சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இலவசக் கல்வியளிக்க முற்பட்ட ஆங்கிலேயர் அளித்த கல்வி ஆங்கில வழிக் கல்வியாக அமைந்தது. காரணம், படித்தவர்களுடனும், அவர்கள் வழியாக மக்களுடனும் தொடர்பு கொள்ள ஆங்கில வழிக் கல்வியே சரியென ஆட்சியாளரான ஆங்கிலேயர் கருதினர். ஒரு கட்டத்துக்குப் பின்னர் பள்ளிக் கல்வி தாய்மொழி வழியிலும் கல்லூரிக் கல்வி ஆங்கில வழியிலும் என்றாகியது.
    அடுத்த கட்டமாக, கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியும் தாய்மொழி வழியாதலே முறையான வளர்ச்சியாகக் கொள்ளத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை என்ன? 1967-இல் ஆட்சிக் கட்டிலேறிய அண்ணா அடுத்த ஐந்தாண்டுகளில் பல்கலைக்கழகம் வரையும் அனைத்து நிலைகளிலும் தமிழ் பயிற்று மொழியாகும் என்பதாகப் பெருமைக்குரிய அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
    எதிர்பாராத விதமாகக் கிளம்பிய கடும் எதிர்ப்பின் காரணமாக, ஐந்தாண்டுகள் என்னும் காலக்கெடுவை படிப்படியாக என மாற்றி அறிவித்தார். அதன் பின்னர் 50 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் படிப்படியாக என்பது முதற்படிக்கும் கீழாகப் புதைந்து விட்டது. அது மட்டுமா? அண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் ஆட்சியில், பெற்றோர்கள் தரப்பில் கேட்டுக் கொண்டால் என்னும் நொண்டிச் சாக்குடன், முற்றும் தமிழ்வழியாக நடைபெற்ற அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவொன்று அமைத்துக் கொள்ளலாம் என்றொரு அரசாணை வெளியாயிற்று. அதன் வழியாகப் பள்ளியளவில் ஆங்கில வழியை நாடுகின்ற ஆர்வம் மக்களிடையே பெருகியதால் ஆங்கில வழித் தனியார் பள்ளிகள் பல்கிப் பெருகின.
    அதன் விளைவாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ஆங்கில வழி என்பது முதல் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டது. அதற்கும் அடுத்தகட்டமாக தற்போதைய அதிமுக ஆட்சியில் மழலையர் கல்வியும் ஆங்கில வழியாகிவிட்டது.
    ஆங்கிலேயர் அமைத்துக் கொடுத்த கல்வி முறையால் மக்களுக்கு உலகளாவிய அறிவு மட்டும் பயனாக அமையவில்லை. ஆங்கிலேயர் ஏற்படுத்திய ஆட்சி முறைமையின் விளைவாக அரசு வேலைவாய்ப்பு என்பதன் வழியாக வாழ்வின் வளமைக்கும் பெருந்துணையாயிற்று. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் அதன் விளைவாக நாடுகளின் நெருக்கத்தாலும் கல்வியின் பயன் சுய சிந்தனை எனும் அறிவு பெறுதல் என்பது விலகி, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்றுப் பெரும்பொருள் குவித்தலே கல்வியின் பயன் என்றாகிவிட்டது.
    திரைகடலோடியும் திரவியம் தேடுதல் இன்றைய புதுமையல்ல. திரைகடலோடித் திரவியம் தேடுவதற்கு என்னவழி என்பதிலேதான் சிக்கல் உண்டாக்கப்படுகிறது. அதாவது, ஆங்கிலம் அறிந்தால் அனைத்துலகும் அதற்கப்பாலும் சென்று வென்று வரலாம் என்னும் பொய்மைப் பிரசாரமே சிக்கலாகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என ஆங்கில மொழி வழங்கும் ஒரு சில நாடுகள் தவிர, பிரான்சு, ஜெர்மனி, ரஷியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட உலக நாடுகள் எதிலும் அந்த நாட்டின் மொழியறியாது ஆங்கில மொழியறிவு கொண்டு காலந்தள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் இயலாது என்னும் உண்மையும், சீனரும், ரஷியரும், ஜப்பானியரும் தத்தம் தாய்மொழியில் கணினிப் பொறியியல் உட்பட ஆய கலைகள் அனைத்தும் கற்று, அத்துடன் தேவையான அளவுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி பெற்றுக்கொண்டு அதனடிப்படையிலேயே மேற்கூறிய ஆங்கில மொழி நாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுப் பொருள் குவிக்கின்றார்கள் என்னும் உண்மையும், நம்மவரிடம் மூடி மறைக்கப்படுதலே சிக்கலாகிறது.
    தன்னெஞ்சு அறிவது பொய்யற்க என்றதன் வழி, இல்லது கூறுதல் மட்டுமல்ல, உள்ளது மன்றத்திலும் பொய்மையாகும் என்பதை வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். எனவே, நம் இளையோர் ஆய கலைகள் அனைத்தையும் தமிழ் வழியில் கற்றலும், அத்துடன் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சியுடன் ஆங்கில மொழிப் பாடம் கற்றலுமே அமெரிக்கா உள்ளிட்ட ஆங்கில மொழி வழங்கும் நாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுதற்குப் போதுமானது என்பதாக உள்ளது. மறைக்கப்படும் பொய்மையே இங்கே அடிப்படைச் சிக்கலாகிறது.
    மெத்தப் படித்தவர்களாக உலகம் சுற்றும் பெரிய மனிதர்கள், பல மொழிகள் அறிந்த தமிழறிஞர்கள், அறிவு ஜீவிகள் எனச் சமூகத்தின் பெருமதிப்புக்குரியோர் அனைவரும் இவ்வாறாக உள்ளதை மறைக்கும் பொய்யர்களாகும் நிலையில், ஆங்கில வழிப் பள்ளிகளை நாடும் தமிழ்ப் பெற்றோர்களை நொந்து கொள்வதில் பயனில்லை.
    இன்னொன்று, மழலையர் வகுப்பு முதல் ஆங்கில வழி, ஆங்கிலம் என்னும் மொழிப் பாடம், இவற்றுடன் ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சிக்கு எனத் தனிப் பயிற்சி - இதுதான் தற்போது தமிழகத்தின் நிலைமை. 
    மற்றொன்று, தற்போது ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களின் பிள்ளைகள் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக வேண்டுமென்பதே லட்சியக் கனவாதல் மட்டுமல்ல, பிள்ளைகளையும் அதே கனவு வெறியராக்குகிறார்கள். அதே சமயம் மருத்துவமும், பொறியியலும் ஆங்கில வழியாக நீடிக்கும் நிலையில் அதற்கேற்பப் பள்ளி அளவிலும் ஆங்கில வழியை நாடுதலைக் குற்றப்படுத்த வழியில்லை.
    தற்போது, தமிழர்களின் பேச்சு தமிங்கிலமாகிக் கொண்டிருக்கிறது. மழலையர் கல்வியும் ஆங்கில வழியானால் அடுத்த தலைமுறையினர் எனக்குத் தமிழ் தெரியும்; ஆனால், பேச வராது எனவும், அவர்க்கு அடுத்த தலைமுறையினர் எனக்குத் தமிழ் தெரியாது என ஆங்கிலத்தில் கூறும் நிலைக்கு ஆளாவர்.
    மனித உளவியலையும், நடைமுறைப் பட்டறிவையும் நினைவில் கொண்டால், உயர் கல்வி ஆங்கில வழியாக நீடிக்கும் வரை, நாம் எவ்வளவுதான் தமிழ் தமிழ் என முழக்கமிட்டாலும் தமிழ்ப் பெற்றோர் தமிழ் வழியை நாடமாட்டார்கள். எனவே, மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வி அனைத்தையும், தமிழ் வழியாக்கி, அதே சமயம், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்துக்கு ஆங்கிலத்தில் பட்டப் படிப்பும், சரளமான பேச்சுத் திறனும் உடையோராகத் தெரிந்தெடுத்து அமர்த்தி அதன்வழி ஆங்கிலப் பாடத்தைப் பேச்சுப் பயிற்சியுடையதாக ஆக்கினால், அதன் பிறகு யாரும் கேட்டுக் கொள்ளாமலே பெற்றோர் அனைவரும் தமிழ் வழியாகும் அரசு பள்ளிகளை நாடி வருவர் என்பது திண்ணம்.
    இன்னொன்று, தமிழ்ப் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதற்குக் காரணம், ஆங்கில வழி மட்டுமல்ல; மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் தனியார் பள்ளி மாணவர்களே  கூடுதல் இடம் பிடிப்பதுதான் அடிப்படைக் காரணம். அரசுப் பள்ளிகளிலும் அதற்கான கூடுதல் பயிற்சி அளித்தால் கூட்டம் தானாக வந்து சேரும்.
    இந்த இடத்தில் நியாயமான கேள்வியொன்று எழுகிறது. இந்தியாவில் அந்தந்த மாநிலத்திலும் மாநிலமொழியே பயிற்று மொழியானால், மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வோரின் பிள்ளைகள் நிலையென்ன? பள்ளி வயதுப் பிள்ளைகளையுடையோர் தமது குடும்பத்தைச் சொந்த மாநிலத்திலே வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது, அவ்வாறு மாநிலம் மாறி வருவோரின் பிள்ளைகளுக்கு மட்டுமாக அத்தகையோர் எண்ணிக்கைக்குத் தேவையான அளவில் ஆங்கில வழியாகும் உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைக்கலாம். கல்லூரியில் சேரும் நிலையிலுள்ள பிள்ளைகள் அவரவர் மாநிலத்திலேயே படிப்பைத் தொடர்தலில் இடர்ப்பாடு ஏதுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முன்னர் இருந்தபடி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதன் வழியாக மத்திய அரசுப் பள்ளிகள் - இந்திய அளவில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒழித்துக்கட்ட வேண்டும்.
    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழக்கமிட்ட திராவிடக் கட்சியினரின் ஆட்சி ஏற்பட்டு  50 ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது நிறைவாகவில்லை. தமிழ் பயிற்றுமொழி என்பது நிறைவாகவில்லை. தமிழ் வழக்காடு மொழியாகவில்லை என்னும் நிலையை யாரிடம் சொல்வது? 
    1938, 1965 என இரு முறையும் மொழிப்போரில் உயிர்விட்டோர் அனைவரும் தமிழ் வாழ்க எனும் முழக்கத்துடன்தான் உயிர் விட்டார்கள். ஒருவரேனும் ஆங்கிலம் வாழ்க என உயிர்விடவில்லை. அடுத்த 50 ஆண்டுகளில் அழியப் போகும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என உலகளாவிய ஆய்வுக் கணிப்பொன்று கூறுகிறது. தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர் மூள வேண்டும். 1965-ஆம் ஆண்டைப் போன்று கலவரமாக அல்ல; முற்றிலும் அற வழியில் மொழிப்போர் மூள வேண்டும். இந்திக்கு எதிராக அல்ல; ஆங்கிலத்திற்கு எதிராக அல்ல; தமிழகத்தில் தமிழை நிலைநாட்ட வேண்டும். இளைய சமுதாயம் விழிமின்- எழுமின். நிதானமாகச் சிந்தித்துச் சரியாகச் செயல்பட வேண்டும்.


     இன்று உலகத் தாய்மொழி நாள்.
    கட்டுரையாளர்:
    தலைமையாசிரியர் (ஓய்வு).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai