இதில் வேண்டாம் அரசியல்!

ஜம்மு காஷ்மீரில் மறுபடியும் ஒரு பெரிய ரத்த ஆற்றை ஓட விட்டிருக்கிறார்கள். அந்த மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கார் வெடிகுண்டு தாக்குதலில் அதிவிரைவுப் படை ராணுவ வீரர்கள் 40 பேர் இன்னுயிரை இழந்திருக்க

ஜம்மு காஷ்மீரில் மறுபடியும் ஒரு பெரிய ரத்த ஆற்றை ஓட விட்டிருக்கிறார்கள். அந்த மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கார் வெடிகுண்டு தாக்குதலில் அதிவிரைவுப் படை ராணுவ வீரர்கள் 40 பேர் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரும் அடங்குவர்.
கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர்  சுப்பிரமணியன். அண்மையில்தான் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. குழந்தைகள் இல்லை. பொங்கலை ஒட்டி விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியம், கடந்த 10-ஆம் தேதி பணிக்குத் திரும்பினார். தன்னுடைய குடும்பத்தினரிடம் முதல்நாள் பேசிய அவர் அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.  அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊரை அடுத்த கார்குடி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது சிவச்சந்திரனும் உயிரிழந்திருக்கிறார்.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தாக்குதலாக இந்தத் தாக்குதல் கருதப்படுகிறது. மனிதன் தன்னையே வீசி மனிதர்களைக் கொன்று குவித்த காட்டுமிராண்டித்தனத்தை மறுபடியும் மனிதகுலம் பார்க்கும் பரிதாபம் நேர்ந்திருக்கிறது. அதிக பலி கொண்ட மிகப் பெரும் தாக்குதலான இந்தத் தாக்குதல்  தீவிரவாத வெறித்தனத்தின் கோரமான முகத்தைக் காட்டுகிறது. 
தீவிரவாதம் குறித்து சமரசத்துக்கே இடமில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று நம் தலைவர்கள் சொன் னாலும்கூட இடையிடையே சில குரல்கள் விபரீதமாக ஒவ்வொரு கட்சியும் அவரவர் ஊகத்தில் தொடர்புபடுத்தி பரப்பப்படும் செய்திகளையும் பார்க்க முடிகிறது.  குறை கூறுவதும் எதிர்க்க வேண்டியதும் ஒவ்வொரு கட்சியின் ஜனநாயகக் கடமையாக இருந்தாலும்கூட, இது போன்ற சந்தர்ப்பங்களில் தங்களுக்குச் சாதகமான முறையில்  இந்திய இறையாண்மைக்குச் சவாலான விமர்சனங்களைச் செய்வது சரியல்ல. 
மக்களைக் காப்பதற்கென்று எல்லையில் குளிரிலும் மழையிலும் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து, பெற்றோர்களைப் பிரிந்து,  குழந்தைகளைப் பிரிந்து உணவின்றி, தூக்கமின்றி  பாதுகாப்புக்காக நிற்கின்ற வீரர்களுடைய மன உறுதி குலைந்துவிடும். ஒரு நாட்டைச் சீர்குலைக்க வேண்டும் என்றால், அந்த நாட்டின் ராணுவ உறுதியைக் குலைத்து விட்டால் போதும்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. உலக பயங்கரவாதத்தின் மொத்த ஏற்றுமதியை பாகிஸ்தான் செய்து வருகிறது என்பது அங்கே புகுந்து அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்குத் தெரியாதா என்ன?  பாகிஸ்தானில் மசூத்  அசார்  உல்லாசமாக இருப்பது அனைத்து நாடுகளுக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவறாக பந்து வீசுகிறார். தவறு செய்துவிட்டு, அடிப்பதற்கு முன் பெரிதாக அழுவது போல இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்கிறார். பாகிஸ்தான் பிரதமராக இருந்து கொண்டு பயங்கரவாதத்தை அவரால் கண்டிக்கவோ, நிறுத்தவோ முடியாது. அப்படி முயன்றால் அந்த நாட்டின் பிரதமராக இருக்க முடியாது. எனவே, அவரது பேச்சை மத்திய அரசு பொருட்படுத்தாமல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது முக்கியம். 
 உலக நாடுகளில் பாகிஸ்தானை விமர்சித்து அமெரிக்காவும் ரஷியாவும் ஆஸ்திரேலியாவும் மிகக் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இவற்றில் சில சம்பிரதாயமானவை.ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்கா, தலிபான்களுடன் பேச பாகிஸ்தானையே பெரிதும் நம்பியிருக்கிறது. இனி உனக்கு உதவி இல்லை என்று சொல்லிக்கொண்டே அனைத்து உதவிகளையும் செய்கிறது.  என்ன ஆனாலும் பாகிஸ்தானை விட்டுத் தர முடியாது என்று சவூதி வெளிப்படையாகவே கூறுகிறது.
பாகிஸ்தானுக்கு உதவியாக மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஒவ்வொரு முறையும் தனது வீடோ பவரால்  நிறைவேறாமல் சீனா தடுத்து வருகிறது.  தீவிரவாதத்தைக் கண்டிப்பார்களாம். ஆயிரக்கணக்கான பேரைக் கொன்ற  தீவிரவாதியை பகிரங்கமாக ஆதரிப்பார்களாம். இது சீனாவின் அப்பட்டமான  இந்திய எதிர்ப்பு மன நிலையின் வெளிப்பாடு. தன்னுடைய சர்வதேச அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பாகிஸ்தானை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் சீனா, இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்தது வியப்பல்ல.  
தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது ராணுவம்.ஜெஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய கமாண்டரும், மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியுமான கம்ரான் கொல்லப்பட்டிருக்கிறார். புல்வாமா தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதுடன், சதித் திட்டத்துக்கு மூளையாக இருந்து அவர் செயல்பட்டது  தெரியவந்துள்ளது. தற்கொலைப்படை தீவிரவாதி ஆதிலை தேர்வு செய்து பயிற்சி அளித்து தாக்குதலை அரங்கேற்றியுள்ளார். இன்னும் சில தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்.    
சினார் படையின் (காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ராணுவப் பிரிவு) கமாண்டர் லெஃப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். திலான்  ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். காஷ்மீரில் உள்ளுர் மக்களிடம் குறிப்பாக பெண்களிடமும் தாய்மார்களிடமும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.
காஷ்மீர் மக்களின் குறிப்பாக அங்குள்ள தாய்மார்களின் மனப்போக்கு மாற வேண்டும். ஆழமாக விதைக்கப்பட்ட விஷ விதைகள் அகற்றப்பட வேண்டும். உயிர்த் தியாகம் செய்த 40 பேரில் ஒருவரான பிகார் மாநிலம், பகல்பூரைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் ரத்தன் தாகூரின் தந்தை நான் இன்னொரு மகனையும் இந்த நாட்டுக்காக தியாகம் செய்யத் தயார் என்று உருக்கமாக அறிவித்திருக்கிறார். இந்திய இறையாண்மையின் மீதும் இந்திய ராணுவத்தின் மீதும் அவருக்குள்ள நம்பிக்கையை நமது அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிக்கான ஆதாயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com