புதிய இந்தியா: வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கு!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்களின் மாநாடு (பிரவாசி பாரதிய திவஸ்) வரும் ஜனவரி 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்களின் மாநாடு (பிரவாசி பாரதிய திவஸ்) வரும் ஜனவரி 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்பதுதான் இந்த மாநாட்டின் கருப்பொருள்.
மகாத்மா காந்தி அடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவை வந்தடைந்த தினமான ஜனவரி 7 முதல் 9-ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுவதே வழக்கம். ஆனால், அலாகாபாத் புனித கங்கையில் நடைபெறும் கும்பமேளா புனித நிகழ்விலும், 70-ஆவது இந்திய குடியரசு தின விழாவிலும் (ஜன.26) வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்த மாநாடு இந்தமுறை ஜனவரி 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சகமும் உத்தரப் பிரதேச அரசும் ஒன்றிணைந்து இந்த மாநாட்டையும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. உலகம் முழுவதும் வாழும் பல்வேறு வகைப்பட்ட பல்வேறு மொழி பேசும் இந்தியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், எதிர்கொள்ளும் சவால்கள் என்பன பற்றிக் கலந்துரையாடுவதற்கான ஒரு விரிவான களத்தையும் இந்த மாநாடு அமைத்துக் கொடுக்கிறது.
இந்தியாவில் இருந்து ஏனைய நாடுகளுக்குச் சென்று குடியேறிய இந்தியர்களின் புதிய தலைமுறையினர் பலர் கல்வி, வர்த்தகம், அரசியல், விளையாட்டு, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் அங்கு தலைமைப் பதவிகளை வகிப்பதோடு பல சாதனைகளையும் செய்து வருகின்றனர். அவ்வாறு சாதனை படைத்த பிரமுகர்கள் இத்தகைய மாநாடுகளில் பங்கேற்று, தங்களது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கி சிறப்பு விருந்தினர்களாக முக்கியத்துவம் பெறுகின்றனர்.
இவ்வாறு சிறப்புப் பெற்ற ஒருவர் இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். இந்தமுறை பிரதம விருந்தினராக இந்திய வம்சாவளியான மோரீஷஸ் குடியரசின் பிரதமர் பிரவீண் ஜகுநாத் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார். புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த 15-ஆவது மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டு நிகழ்ச்சிகளின் போது, இந்தியாவின் வளர்ச்சியும் வாய்ப்புகளும், மரபுரிமை, இந்தியர் புலச்சிதறல் ஆகிய விஷயங்கள் பொது அமர்வுகளில் ஆராயப்படும். அத்துடன் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவும் இந்திய அமைப்புகள் மற்றும் சூரிய சக்தி ஆற்றலின் செயற்பாட்டு வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு, இந்தியாவின் செயற்திறன், விவேக ஆற்றல் திறன், வெளிநாட்டு இந்தியர்களின் பங்கு, கழிவு, நிர்வாக ஆற்றல் விருத்தியில் வெளிநாட்டு இந்தியர்களின் பங்களிப்பும் ஒத்தழைப்பும் ஆகிய தலைப்புகளில் அமர்வுகளும் கலந்துரையாடல்களும் நடைபெற உள்ளன. மாநாட்டின் 3-ஆம் நாள் (ஜனவரி 23) நிகழ்ச்சியின்போது, இந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படும்.
மாலை நேர நிகழ்ச்சிகளில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்த மாநாட்டில் பிரவாசி பாரதிய சம்மான் விருதுகள் வழங்கப்படுவது ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவுடனான தொடர்புகளை மேம்படுத்த பாடுபட்டவர்கள், உள்ளூர் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்தவர்கள் என இந்தியாவின் புகழை மேம்படுத்தும் வகையில் ஏதேனும் துறைகளில் சிறப்புப் பணியாற்றியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான மனோ செல்வநாதனுக்கு இந்த உயர் விருது 2011-ஆம் ஆண்டில் புது தில்லியில் வழங்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசின் கவனம் கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாடுகளில் சிறப்புப் பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் மீது திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொலைத்தொடர்பு புரட்சியினால் உந்தப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்தின் அதிநவீன முன்னேற்றங்களைக் கையாண்டு மூலதனம் மற்றும் எல்லை கடந்த மனிதவள மாற்றீடுகள் என்பனவற்றின் மூலம் கடல் கடந்து சகல நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் 2.7 கோடி இந்திய வம்சாவளி மக்களின் நல உரிமைகளையும், விருப்பங்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
கல்வித் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் முதலீட்டு வாய்ப்புகளும் போக்குகளும்..., கல்வி பெறும் உரிமையும் வெளிநாட்டு இந்தியர்களின் பொறுப்புகளும்..., சுகாதாரத்துறைசார் வளர்ச்சிக்கு இந்தியாவின் பொது மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பு, பொது சுகாதாரத் துறையின் அபிவிருத்தியில் வெளிநாட்டு இந்தியர்களை ஈடுபடுத்துதல் ஆகிய தலைப்புகளில் கடந்த மாநாடுகளில் ஆராயப்பட்டன.
இந்தத் துறைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவுவதில் வெளிநாட்டு இந்தியர்களின் ஒத்துழைப்புப் பற்றியும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பற்றிய இந்தியப் பிரதமரின் ஆலோசனை சபையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி கல்வி அறிஞர்கள் உள்வாங்கப்படல் வேண்டும்.
இந்திய பல்கலைக்கழகங்களில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு விசேஷ அனுமதி வழங்கப்படுதல் மற்றும் இலங்கையின் கலாசார மரபுகளை இனங் கண்டுகொள்ள ஒரு கலாசார மரபுரிமை கிராமத்தை ஏற்படுத்துதல் எண்ணக் கருவை வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ நிர்வாகப் பணிப்பாளர் குமார் நடேசன் முன்வைத்துள்ளார். இந்த மரபுரிமைக் கிராமத்தை நிர்மாணிக்க இந்திய அரசு பங்களிப்புச் செய்தல் வேண்டும்.
பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டில் இலங்கைவாழ் இந்திய வம்சாவளி கல்வி அறிஞர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்காவது பிரவாசி சம்மான் விருது வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணித் தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் தற்போதைய தலைவர் அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் இலங்கையுடனான தொடர்புகளை வலுப்படுத்தி வருகின்ற அதே வேளையில், மலையக மக்களின் வீடமைப்பு, கல்வி, மருத்துவ வசதி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவை தொடர்பாக கவனம் செலுத்துகிறது.
இதற்கும் மேலாக தேசிய இனப் பிரச்னையால் இடம்பெயர்ந்த, பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல திட்டங்களை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மேலும் அதன் பதவிக் காலத்தில் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கான அரசியல், சமூக பொருளாதார தலைமைத்துவத்தையும் தீர்க்கதரிசனமான வழிநடத்தலையும் பொறுப்பேற்று விவேகமானதும் சாதுர்யமானதுமான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ள தமிழர் முற்போக்குக் கூட்டணி அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவுடனான நல்லுறவை மீட்டெடுத்ததன் மூலம் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டமும், இந்திய பிரதமரின் மலையக விஜயம் மூலமும் தொப்புள்கொடி உறவுகள் மீள் எழுச்சிக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெளிநாட்டு வாழ் இந்திய பிரஜா உரிமை விஷயத்திலும் (ஓசிஐ) மலையக தலைமைகள் நடைமுறைகளை தளர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இலங்கைவாழ் இந்திய வம்சாவளியினரிடம் உள்ளது.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை இலங்கைத் தமிழர்களுடன் இணைத்துப் பார்த்து இரு சாராரையும் ஒன்றாகக் கணிக்க இந்திய அரசு பல சந்தர்ப்பங்களில் முற்பட்டது. இந்தத் தெளிவற்ற அணுகுமுறை பற்றி இந்திய அரசிடம் முன்னாள் தலைவர்களான அமரர் செளமியமூர்த்தி தொண்டமான், அமரர் பெ.சந்திரசேகரன் ஆகியோர் பலமுறை சுட்டிக் காட்டியிருந்தனர். அண்மையில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ், நாடாளுமன்றத்தில் இதை மீண்டும் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களை பெரிதும் மதிக்கின்ற அதே வேளையில், இலங்கையின் தனித்துவத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன், இந்த மாநாடு உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்பதே வெளிநாடுவாழ் இந்தியர்களின் எதிர்பார்ப்பாகும். 

கட்டுரையாளர்:
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com