சொல்லாட்சி ஆளுமை கொடுக்கும்!

உலகின் பல சிறந்த அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த  வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் எனப் பலருக்கும் உள்ள

உலகின் பல சிறந்த அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த  வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் எனப் பலருக்கும் உள்ள திறமைகளில் ஒரு பொதுவான ஒரு அம்சம், அவர்களது பேச்சுத் திறமை மற்றும் உரையாடல் திறன் ஆகும். குறிப்பாக, அரசியல்வாதிகள் மக்களிடம் நேரடியாகத்  தொடர்பு கொண்டு அவர்களது வாக்குகளைப்  பெற வேண்டியிருப்பதால், அவர்களது பேச்சுத் திறன் சிறப்பாக இருக்க  வேண்டிய கட்டாயம் உள்ளது.
தொழிலதிபர்கள்-பெரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும், அரசின் நிர்வாகிகளுக்கும் இது பொருந்தும். அவர்களது திறமை சார்ந்த பட்டியலில்  பேச்சுத் திறன்,  உரையாடல் திறனுக்கு முக்கிய இடம் உண்டு. உடன் பணிபுரிவோர்-மேலதிகாரிகள்-வாடிக்கையாளர்கள்-பிற நிர்வாக அதிகாரிகள் என பலதரப்பட்டவர்களுடன் பல உயரிய பதவிகளில் உள்ளோர் உரையாடுவதில் கழிக்கும் நேரம் சுமார் 75 சதவீதம் இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது.எனவே, உரையாடல் திறன்- கருத்துப் பரிமாற்றத் திறனின் அவசியம் உணரத்தக்கது. அலுவலகம்,தொழிற்கூடம்,அரசியல் தொடர்பான விஷயம் மட்டுமல்ல, குடும்பத்தில் தந்தை- மகன், சகோதரர்கள், தம்பதியர்,  வீட்டுக்கு அருகில் வசிப்போர் எனப் பலதரப்பட்டவர்களிடமும் உரையாடல் என்பது  முக்கியப் பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது; பெற்றோரது வருமானம், அவர்கள் தங்கள் குழந்தைகளோடு பேசும் நேரம், குழந்தைகள் இளம் வயதில் கற்றுக்கொள்ளும் சொற்களின் எண்ணிக்கை ஆகியவற்றுடன் எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகள், அவர்கள் செய்யும் தொழிலில் அடையும் வெற்றி அல்லது பணியில் அடையும் வளர்ச்சி முதலானவை தொடர்புபடுத்தப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்டன.
தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள், அவர்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டன . ஒவ்வொரு மாதமும் ஒரு மணி நேரம் , அந்த குடும்பங்களில் உள்ள ஒன்றரை வயது குழந்தையுடன் அவர்களது பெற்றோர் பேசுவது பதிவு செய்யப்பட்டது.  இவ்வாறு முப்பது மாதங்கள் தொடர்ந்து செய்யப்பட்ட பதிவிலிருந்து, தங்கள் குழந்தைகளுடன் எவ்வளவு சொற்கள் பெற்றோர் பேசியிருக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டது.
குழந்தைகளுடன் பெற்றோர் ஒரு மணி நேரம் பேசுவதன் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார வசதியில் மிகவும் பின் தங்கியிருக்கும் பெற்றோர் தங்களது குழந்தைகளுடன்  616 சொற்களும், மத்திய வருவாய் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளுடன் 1,251  சொற்களும், உயர் வருவாய் பெரும் பெற்றோர் 2,153  சொற்களும் சராசரியாகப் பேசுவது கண்டறியப்பட்டது. 
நான்கு ஆண்டுகளில் வசதியுள்ள  குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் காதில் விழும் சொற்கள், ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளின் காதில் விழும் சொற்களைவிட சுமார் 3 கோடி  அதிகம் எனக் கண்டறியப்பட்டது.  
இளம் வயதில் குழந்தைகள் எவ்வளவு சொற்களை கற்றுக் கொள்கிறார்களோ, அது அவர்களது மன வளர்ச்சிக்கும், கருத்துப் பரிமாற்றத் திறனுக்கும், ஆளுமை மிக்க எதிர்காலத்துக்கும் அடிப்படையாக விளங்குகிறது என மதிப்பிடப்பட்டது.
அதிக சொற்களை காதில் உள்வாங்கும் குழந்தை வளர்ச்சியடைந்து, ஆளுமை மிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு அதிகம்  என்றும், மிகக் குறைவான சொற்களை உள்வாங்கும் குழந்தைகள் ஆளுமையற்ற பணிகளில் சேர்கின்றனர் என்றும் கண்டறியப்பட்டது. மேலும் , இதனுடன்  அவர்களது பொருளாதாரப் பின்னணி தொடர்புபடுத்தப்பட்டு குழந்தைகள் அடையும்  வளர்ச்சியில்  இருக்கும்  வேறுபாடும் கண்டறியப்பட்டது. 
வசதி உள்ள குடும்பப் பின்னணி கொண்ட  குழந்தைகள், தினசரி இரண்டு புது சொற்களை கற்றுக் கொள்வதாகவும், வசதி  குறைவான குழந்தைகள்  இரண்டு நாள்களுக்கு ஒரு புதிய சொல்லைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றும் ஆய்வு கூறியது.  குழந்தைகளிடம் கணிசமான நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டியதன் அவசியம், அவர்களோடு பேச வேண்டியதன் அவசியம் மற்றும்  தினமும் ஓரிரு புதிய சொற்களை குழந்தைகளுக்கு பேச்சின் மூலம் பெற்றோர் கற்றுத் தர வேண்டியதன் அவசியம் ஆகியவை இந்த ஆய்வின் மூலம் வலியுறுத்தப்படுகின்றன.
இந்த ஆய்வினை நம் நாட்டுச் சூழலில்  பொருத்திப் பார்க்கலாம்.  இங்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னர், கூட்டுக் குடும்ப முறை அல்லது பெரியவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள குடும்பங்கள் இருந்தன.  அவற்றில் பல்வேறு வயதினர் ஓரிடத்தில் வசித்து வந்தனர்; எனவே, ஒருவரது அனுபவம் பிறரோடு,  உண்மையான அக்கறையோடு பகிர்ந்து கொள்ளப்பட்டது; எந்தவித முன் முனைப்பும் இன்றி சுவையான உரையாடல் குறித்த நுணுக்கங்கள், புதுச் சொற்கள், பழமொழிகள் , சொலவடைகள் என ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு குறிப்பாக  குழந்தைகளுக்கு தன்னிச்சையாகக் கொண்டு செல்லப்பட்டது.
தற்போது  குடும்பங்கள் சுருங்கி விட்டதாலும், பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்வதாலும், வாரிசுகளுடன் நேரம் செலவழிக்கவும் ஏராளமான பெற்றோருக்கு முடியவில்லை. ஆகவே, உரையாடும் திறம் வளர்க்க, பணம் பறிக்கும் பயிற்சி முகாம்கள், கோடை வகுப்புகள் என  வியாபாரத் தலங்கள் பெருகிவிட்டன. 
இதிலிருந்து சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். உரையாடல் திறன்  குறித்த புரிதலுடன்  குழந்தைகளுடன்  கணிசமான நேரம் -அவர்களோடு  பயனுள்ள உரையாடலில்  செலவழிப்பது மற்றும் அவர்களுக்கு தினமும் சில  புதிய  சொற்களை கற்றுத் தந்து, அவர்கள் அவற்றைப் பேசுவதை உறுதி செய்ய வேண்டியதும் பெரும் பலன் அளிக்கும்.
அத்துடன், அவர்கள் நன்கு கவனிக்கவும்' சொல்லித்தர வேண்டும்; ஏனெனில், பெரும்பாலும் காதுகளால் நாம்  வெறுமனே கேட்கிறோம்; ஆனால், பல சமயங்களில் கூர்ந்து கவனிப்பதில்லை. குழந்தைகள் அந்தக் குறைபாட்டுக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை. 
முக்கியமாக, இவற்றை குழந்தைகளின் நான்கு வயதுக்குள் செய்ய வேண்டும்; இதை இளம் பெற்றோர்தான் செய்ய  முடியும்;  ஏனெனில் அவர்கள்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com