நிஜம் அல்ல, நிழல்தான்! 

காளிதாஸ் திரைப்படம் வெளியான காலத்திலிருந்து இன்று வரை அதன் தாக்கம் நமது இளைஞர்களிடமும், பெண்களிடமும், சிறுவர்களிடமும்

காளிதாஸ் திரைப்படம் வெளியான காலத்திலிருந்து இன்று வரை அதன் தாக்கம் நமது இளைஞர்களிடமும், பெண்களிடமும், சிறுவர்களிடமும் நிறைந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனையும், வீரசிவாஜியின் வரலாற்றையும் மனதில் பசுமரத்து ஆணியாகப் பதிய வைத்த பெருமை திரைப்படங்களையே சாரும். மகாத்மா காந்தி, மகாகவி பாரதியாரைப் பற்றி புத்தகங்களில் படித்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள உதவியவை திரைப்படங்கள்தான்.
ஒரு நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கக் கூடிய வல்லமை படைத்த மிகப் பெரிய சக்தியாக வளர்ந்துள்ள திரைத்துறைதான், பல அரசியல் தலைவர்களை அளித்தது. தனக்குப் பிடித்த சினிமா நட்சத்திரங்களின் பிறந்தநாளை கொண்டாடும் கூட்டம் நம்மைத் தவிர வேறு யாருமேயில்லை.
எந்தக் கடையில் நாம் நகை வாங்க வேண்டும், என்ன காபி குடிக்க வேண்டும், எந்தக் கடையில் துணி வாங்க வேண்டும், என்ன சோப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நமக்குச் சொல்லித் தரும் நலம் விரும்பிகளாகவே திரைப்பட நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்.
நமது கவலைகளை மறக்கச் செய்து நகைச்சுவை மருந்து கொண்டு புத்துணர்ச்சியைத் தருபவை திரைப்படங்கள்தான். திரைப்படங்களே சென்றடையாத கிராமங்களைக் கூட திரைப்படத்தில் காட்டி உலகறியச் செய்த பெருமை திரைப்படங்களையே  சாரும். அப்படிப்பட்ட திரைப்படம் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பயணித்து வருகிறது. 
அந்தக் கால திரைப்படங்களின் கதாநாயகர்கள் நேர்மைக்காக போராடும் மனிதர்களாகவும், குடும்பத்தின் சுமையைச் சுமக்கும் பொறுப்புள்ளவர்களாகவும், பெண்களை மதிக்கும் தன்மையுள்ளவர்களாகவும், பெற்றோரை தெய்வமென பாவிப்பவர்களாகவும் காட்சியளித்தனர்.
சராசாரி மனிதர்களால் செய்ய முடியாத காரியத்தைச் செய்து காட்டுபவரைத்தான் கதாநாயகனாக திரைப்படங்கள் சித்தரித்தன.
அந்தக் கால பெரும்பாலான திரைப்படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றதில்லை. மேலும், அந்தக் காலத்தில் ஒழுக்கம், பொறுப்பு, கல்வியின் அருமை, பெற்றோரின் பெருமை ஆகியவற்றை வலியுறுத்தியே பெரும்பாலான திரைப்படங்கள் தயாரித்து வெளியிடப்பட்டன.
இந்தக் காலத்தில் கதாநாயகர்கள் தங்களது உடல் அமைப்புக்கும், முகத் தோற்றத்திற்கும் ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆனால், பொறுப்பற்ற இளைஞர்களாகவும், ஊதாரித்தனத்தை பெருமையாகப் பறைசாற்றுபவராகவும் பெரும்பாலான திரைப்படங்களில் கதாநாயகர்கள் நடிக்கின்றனர். பெற்றோரையும், மூத்தோரையும் உதாசீனப்படுத்தும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. 
இதைத் திரைப்படத்தில் பார்க்கும் சிறுவர்களும், இளைஞர்களும் அந்த உடல் மொழியையும், அந்த அழகு முறையையும் கடைப்பிடித்தால் தாமும் ரசிக்கப்படுவோம் என்பதை தவறாகப் புரிந்துகொண்டு, பெற்றோரையும், பெரியவர்களையும் அவமதிக்கும் செயலைச் செய்வது வேதனையான விஷயம். அது மட்டுமல்லாது கல்லூரி ஆசிரியரை கேலிப் பொருளாகப் பாவித்து பல திரைப்படங்கள் எடுக்கப்படுவது வரம்பை மீறிய செயலாகும். அறியாமையை நீக்கி அறிவைப் போதிக்கும் ஆசிரியரை அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் திரைப்படங்கள் அத்திபூத்தாற்போல் வெளியாவது வருத்தம் தரக்கூடிய விஷயம். தமிழகத்தின் புகழ் பெற்ற நகரங்களைக்கூட குண்டர்கள் வசிக்கும் கூடாரமாகக் காட்டி மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
மனித வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்வுகள் இருக்கின்றன, எத்தனையோ உணர்வுகள் இருக்கின்றன. அத்தனையும் இருந்தாலும் காதலை மையப்படுத்தி மட்டுமே திரைப்படங்கள் எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதிலும், சாதனையாளர்களையோ, படித்தவர்களையோ, நல்ல நிலையில் இருப்பவர்களையோ  திரைப்படத்தில் தோன்றும் கதாநாயகி காதலிப்பதாகக் காட்டப்படுவதில்லை. சோம்பேறிகளாக இருப்பவர்களையும், ஊதாரிகளாக இருப்பவர்களையும், குற்றச்செயல் புரிபவர்களையும் கதாநாயகி தேடிச் சென்று காதலிப்பதாகக் காட்சிகள் இடம்பெறுகின்றன. 
இதுதான் இன்றைய இளைய சமுதாயத்துக்கு திரைத் துறை அளிக்கும் செய்தியா? நீ எப்படி இருந்தாலும் உன்னையும் ஒரு பெண் விரும்புவாள் என்று கூறி அவர்களை வாழ்த்துகிறோமா அல்லது பெண்களின் தரத்தை தாழ்த்துகிறோமா? நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும் எங்கேயோ யாரோ தவறு செய்யலாம். அதை மிகைப்படுத்திக் காட்டி அந்தத் துறையில் பணிபுரியும் மற்றவர்கள் மனதைக் காயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
திரைப்படம் என்பது நிழல் தான், அது நிஜமல்ல என்பதைத் தங்களது வாரிசுகளுக்கு பெற்றோர் சொல்லித் தர வேண்டும்.  திரைப்படத்தில் தோன்றும் நட்சத்திரங்கள் அவர்களுடைய பணியைத்தான் செய்கின்றனர். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். நமக்கு தேர்வு நடைபெறுகிறது என்று அவர்கள் நடிப்பதை நிறுத்துவதில்லை. நாம்தான் அவர்கள் திரைப்படம் வெளியாகிறது என்று படிப்பதை நிறுத்திவிட்டு திரைப்படத்துக்குச் செல்கிறோம்.
திரைப்படத்தை பொழுதுபோக்கு அம்சமாகத்தான் கருத வேண்டும். நமது வீடுகளின் நடுவில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துக் கொண்டு குழந்தைகளை போய் புத்தகங்களை படி என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. 
பெண் குழந்தைகளுக்கு கலாசாரத்தைக் கற்றுக் கொடுங்கள்; பண்பாட்டைச் சொல்லிக் கொடுங்கள்; ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்; பொறுப்பினை உணர்த்துங்கள்; இலக்கினைப் புரிய வையுங்கள்; லட்சியத்தை அடைய உதவுங்கள்.
குழந்தைகளுக்குப் பணத்தைச் செலவழிப்பதைவிட, அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். மீன் வாங்கிக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் பலன் அளிக்கும். அடுத்த மனிதர் மீது மனிதாபிமானம் காட்ட பழக்கப்படுத்துங்கள். எதிர்கால இந்தியாவை வளமான இந்தியாவாக, வலிமையான இந்தியாவாக மாற்ற முயற்சிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com