சுடச்சுட

  


  காற்று மாசடைந்து வருவது மனித சமூகத்துக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மேலும், மனிதனின் சராசரி ஆயுள் காலத்தையும் குறைத்து வருகிறது.
  நாம் வாழும் பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலத்தில் 79% நைட்ரஜனும், 20% பிராண வாயுவும் (ஆக்ஸிஜன்), 3% கரியமில வாயுக்களும் உள்ளன. உலகம் முழுவதும் தொழில்மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலம் பாதிப்படைகிறது. இவை காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன. தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று அசுத்தமடைகிறது.
  தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன், கந்தக ஆக்ஸைடு, பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும், வாகனகளிலிருந்தும் வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன்கள், கார்பன் மோனாக்ஸைடு, தொழிற்சாலைகளிலிருந்தும், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்தும் வெளிவரும் உலோகத் துகள்கள், பிளாஸ்டிக் கழிவுகள், வேளாண் பொருள்களை தீயிட்டு எரிப்பதால் உருவாகும் புகை, கட்டுமானப் பகுதிகளில் இருந்து உருவாகும் தூசு, மரங்கள் அழிப்பு உள்ளிட்டவை காற்றை மாசுபடுத்துகின்றன.
  தில்லியில் கடந்த நவம்பர் மாதத்தில் வாகனப் புகை மாசும், கட்டுமானத் தூசியும், அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்பட்டதால் உருவான புகையும் சேர்ந்து பனிப்பொழிவு போன்ற காற்று மாசு ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த வாரத்தில் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே கார்கள், இரு சக்கர வாகனங்களை மக்கள் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தில்லி மாநில அரசு மேற்கொண்டது.
  காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு, குளோரோ புளோரோ கார்பன் உள்ளிட்ட வாயுக்களின் அளவு அதிகரித்து வருவதால், ஓசோன் படலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், சூரிய ஒளிக் கதிர்கள் நேரடியாக பூமியில் விழுவதால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது. மேலும், காற்று மாசு பருவ நிலை மாற்றத்துக்கும் முக்கியக் காரணமாக விளங்குகிறது.
  பூமியின் வெப்பநிலை கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் சராசரி வெப்பநிலையைவிட 1.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, காடுகள் தீ பிடித்து எரிதல், உணவுத் தட்டுப்பாடு, வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
  21-ஆம் நூற்றாண்டில் உலக அளவில் சராசரி வெப்பநிலையைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது இந்தியாவின் வடக்குப் பகுதி, மத்தியப் பகுதி மற்றும் மேற்குப் பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  எனினும், பூமியின் வெப்பத்தைக் குறைக்கும் வகையிலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வாயுக்களைக் குறைக்கும் வகையிலும் 196 நாடுகள் ஒன்றிணைந்து கடந்த 2016-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்திலிருந்து அண்மையில் அமெரிக்கா மட்டும் வெளியேறியது.
  காற்று மாசால் உருவாகும் 2.5 மைக்ரான் அளவுக்கும் குறைவான சிறிய துகள்கள் நுரையீரலுக்குள் ஆழமாகச் செல்வதால் சுவாசப் பிரச்னைகள், மாரடைப்பு, பக்கவாதம்,  புற்றுநோய் உள்ளிட்டவை உருவாகும் ஆபத்து உள்ளது. இதேபோன்று விலங்குகள், தாவரங்களுக்கும் காற்று மாசு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மேலும், மனிதர்களின் சராசரி ஆயுள் காலத்தை சுமார் 2 ஆண்டுகள் வரை குறைக்கிறது.
  எனவே, காற்றின் தரத்தை மேம்படுத்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனப் புகைகளின் அளவைக் கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 30 சதவீத வாகனங்களை மின்சார பேட்டரிகளில் இயங்கும் வாகனங்களாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், முதல் கட்டமாக மின்சார பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களைத் திறக்க வேண்டும். மேலும், மின்சார பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அவற்றை வாங்கும் பொதுமக்களை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இதேபோன்று, தமிழக அரசும் மின்சார பேட்டரிகளில் இயங்கும் பேருந்துகளை அதிகமாக வாங்கவும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர்களை பேட்டரிகளில் இயங்கும் ஸ்கூட்டர்களாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதைத் தடுக்க, அவை மறு சுழற்சி செய்யப்பட வேண்டும்.
  மேலும், தமிழகத்தை முன் மாதிரியாகப் பின்பற்றி, இந்தியா முழுவதும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கும் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே தெரிவிப்பதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும்.
  பிளாஸ்டிக் தவிர்த்த குப்பைகள் தீ வைத்துக் கொளுத்தப்படுவதைத் தடுக்க அவற்றை உரமாக மாற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும். வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், வேளாண் கழிவுகளை கத்தரித்து சிறு துண்டுகளாக்கி உரமாக பயன்படுத்தும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.
  மரக்கன்றுகளை நடும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதேபோன்று, மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் பொதுமக்களுக்கும் சலுகைகளை அறிவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பசுமையாவது உறுதி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai