சுடச்சுட

  

  ஆரோக்கியம் காக்க...சிறுநீரகங்கள் காக்க...

  By நெல்லை சு. முத்து  |   Published on : 14th March 2019 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம் 2000-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முதலில் 66 நாடுகள் இதில் ஆர்வம் காட்டின. இரண்டே ஆண்டுகளில் அது 88-ஆக அதிகரித்து விட்டது. பன்னாட்டு நரம்பியல் அமைப்பு, பன்னாட்டுச் சிறுநீரக அறக்கட்டளைகள் பேரவை ஆகியவற்றின் முனைப்பில்தான் இந்த உலகச் சிறுநீரக விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  ஒவ்வோர் ஆண்டும் சூரியன் தனது உத்தராயணப் பயணத்தின்போது, பிரபஞ்ச நடுக்கோட்டினைக் கடக்கும் நாள் மார்ச் 21. அன்றைய தினம் நிலநடுக்கோட்டு நாடுகளில் இரவும் பகலும் சம அளவாக இருக்கும். அன்றைக்கு சூரியன் உதிக்கும் திசை உண்மையான கிழக்கு. (மற்றொரு நாள் செப்டம்பர் 23 ஆகும்). 
  கோடை வெயிலுக்கும் மனித சிறுநீரகத்துக்கும் பிரிக்க முடியாத உயிர்த்தொடர்பு இருக்கிறது. ரத்தத்தில் இருந்து அளவுக்கு அதிகமான சோடியம், யூரியா போன்ற உப்புச் சத்துகளை அரித்துப் பிரித்து வெளியே அனுப்ப உதவும் வடிகட்டி இயந்திரம் சிறுநீரகங்கள். உடலின் இரு விலாப்புறமும் உள்ள இரு சிறுநீரகங்களை உள்ளங்கையில் அடக்கிவிடலாம்.  உடலின் நீர்மச் சத்துச் செறிவு, பாய்மங்களின் சவ்வூடு பரவல், அமில-காரச் சமநிலை, பலவித மின்பகுளி வேதிம அளவுகள், நச்சு நீக்கம் போன்ற உடல்நலச் செயல்பாடுகளின் ஆதாரம் இந்த சிறுநீரகங்கள். 
  ஒவ்வொரு மனித சிறுநீரகத்திலும் சுமார் 10 லட்சம் சிறுநீரக வடிகட்டி அணுக்கள் (நெஃப்ரான்கள்) உள்ளன; இவை சுண்டெலிக்கு வெறும் 12,500தான். வடிகட்டி அணு முனையில் உள்ள நுண்ணிய தந்துகிக் குழாய்களின் முண்டு, இணையத்தின் பிரதான வலைப்பின்னல் போன்றது. ஒவ்வொரு தந்துகியும் செயல்பாட்டில் நுண்ணிய சிறுகுடல் போன்றது. சிறுநீரகத் தமனிகள் சுமந்துவரும் ரத்தத்திலிருந்து சத்துகள் இங்குதான் வடிகட்டப்படுகின்றன. 
  சிறுநீரகத் தமனிகள் கொண்டுவரும் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான சோடியம், தசைச்சிதைவில் வெளிப்படும் கிரியாட்டினின், நச்சு வேதிமங்கள் போன்றவற்றை வடிகட்டிகள் பிரித்து சிறுநீரோடு சேர்த்து வழி அனுப்பி வைக்கின்றன. வடிகட்டின நீர்மம், நுண்குழாய்களின் வழியே பாய்கிறபோது, அதிலிருந்து தேவையான அளவு சிறுமூலக் கூறுகளும் தண்ணீரும் மீண்டும் ரத்தத்தினால் உறிஞ்சப்படுகின்றன. ரத்தத்தில் யூரியா தேங்கினால் உடல் வீங்கியதுபோல் ஆகிவிடும். சோடியம் அல்லது பொட்டாஷியம் ஆகிய கார தனிமங்கள் சமநிலை சீர்குலைந்தாலும் பிரச்னைதான். 
  நீங்கள் புகை பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் நண்பர்களுக்கு புகைப் பழக்கம் இருந்தால், உங்களுக்கு சிறுநீரகப் புற்றுநோய் வர 50 சதவீத வாய்ப்பு உண்டு என்பது தனி எச்சரிக்கை.  பலருக்கும் பகலில் அமர்ந்த இடத்தில் நெடுநேரம் செயல் இன்றி இருந்தாலோ, இரவில் உறக்கத்தில் கால், கை தசைகளில் சிரமம் ஏற்பட்டாலோ, அதற்குக் காரணம் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை என்று அறியலாம்.
  அதனால், சிறுநீரகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் வெயிலில் நடக்க வேண்டும். சூரிய புறஊதாக் கதிர்களால் மனித உடலில் உருவாகும் இந்த டி3 -வைட்டமின் (கோலிகால்சிஃபெரோல்) ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம்.  இங்குதான் சூரிய வெளிச்சத்தில் இருந்து பெறப்படும் மூலச்சத்தில் இருந்து வைட்டமின் டி தயாரிக்கப்படுகிறது. 
  வெயில் படாமல் வாழ விரும்புகிறோம். குளுகுளு காரில் அலுவலகம் சென்று, குளிர்பதன அறைக்குள் இடுப்பு அசையாமல் வேலை பார்த்து,  குளிர் அறையில் இரவு உறங்கினால் அது சுக வாழ்வு இல்லை . உடல் நலம் பெறாது.  பணி இடங்களுக்கு மூச்சிரைக்க நடக்காமல், விடியற்காலையில் வீட்டு தோட்டப் புல்தரையிலோ கடற்கரையிலோ நடைப்பயிற்சி செய்யும் மனித இயந்திரங்கள் ஆகிவிட்டோம். உட்கார்ந்த இடத்தில் அமர்ந்தபடியே வாய் உபதேசம் சொல்லிவிட்டு, உண்டு, உறங்கி வாழ்வோரைப் பின்பற்ற ஆசைப்படுகிறோம். வெயிலில் கால் கடுக்க நின்று களை எடுத்தால் அது ராஜயோகம்தான். 
  உடல் நலம் என்பது போதிய உடற்பயிற்சி, வேளாவேளைக்குத் தேவையான உணவு, அழுத்தம் இல்லாத மனநிலை ஆகிய தங்க முக்கோணத்தினால் அமைகிறது.  உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் துள்ளல் நடை, நடனம் போன்றவை உடல் நலத்தின் அடிக்கூறுகள். தொப்பையைக் குறைக்க மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு நிற்க வைத்த சைக்கிளை நின்றபடி ஓட்டச் சொல்கிறார்கள். அதற்கு இயல்பாக சைக்கிள் ஓட்டினால் பத்து நிமிஷத்தில் அலுவலகத்துக்கே சென்றுவிடலாம். 
  அமைதியான உயிர்க்கொல்லி நோய், வயது முதிர்ந்த பின்னர் நோயாளிகள் உடலுக்கு வெளியே தனி செயற்கை சிறுநீரகப் பையுடன் இயங்க வேண்டி வரும். ஒருவகையில் இது அவர்தம் வாழ்வியலில் மனரீதியிலான பாதிப்புகளை உண்டாக்கும். 
  பன் நீர்க்கட்டி (பாலிசிஸ்டிக்) சிறுநீரக நோய் என்பது சில அரசியல் கட்சிகள் மாதிரி, ஓரளவு வாரிசு நோய்; உள்ளுக்கு உள்ளேயே சிறுநீரகத்தை உப்பிப் பெரிதாக்கிவிடும்.
  இத்தகைய சிறுநீரகக் கோளாறினால் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2 சதவீதம் பேர் இறந்து வருகிறார்கள். ஒருவர் பரம்பரையில் முன்னோர் சிறுநீரக நோயாளியா, இல்லையா என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும். உணவுப் பழக்கமும் முக்கியம். தேவையான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும். தினமும் 20 தம்ளர் அதாவது, 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  குறிப்பாக, தெருவோர வாணலியில் வறுத்த குப்பைப் பண்டங்களுக்கு குட் பை சொன்னாலே பாதி உயிர் பிழைத்தோம்.  
  நிழல் உலகில் உப்பா, சர்க்கரையா என்று காதல் பாட்டு பாடலாம். ஆனால், நிஜ உலகில் இரண்டுமே ஆபத்தானவை. உப்பினால் உயர் ரத்த அழுத்த நோயும், அதிக சர்க்கரைச் சத்து காரணமாக சர்க்கரை நோயும் வரும் என்பது உத்தரவாதம். இந்த இருபெரும் நோய்களால் இரண்டு சிறுநீரகங்களும் கோளாறு ஆகிவிடும் என்பதும் லட்சத்தில் ஒரு வார்த்தை . 
  தினமும் உணவில் ஒரு தேக்கரண்டி (5-6 கிராம்) உப்பு போதும். நம்மில் பலரும் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த அளவுக்கும் இரட்டிப்பு (தினம் 9-12 கிராம்) உப்பு சேர்த்துக் கொள்கிறோம்.  
  புகைப் பிரியர்களோடு கெட்ட சகவாசம் வேண்டாம். பக்கத்தில் நின்றாலே உங்களுக்குத்தான் கெட்ட சுவாசம். ஊளைச் சதை. மது, புகை பிடித்தல், 50 வயது முதிர்வு போன்றவை சிறுநீரக நோய்க் காரணிகள் என்றால் பரவாயில்லை; ஆப்பிரிக்க நீக்ரோ, ஆஸ்திரேலிய அபாரிஜின், ஹிஸ்பானிக், ஆசிய இனங்கள் போன்ற மரபணுப் பின்னணி உடையவர்களுக்கும் சிறுநீரகப் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 
  இத்தகைய பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கணுக்கால் வீக்கம், சோர்வு, களைப்பு, எதிலும் கவனக்குறைவு, பசியின்மை போன்றவை நோயின் சில அறிகுறிகள். ஒருவேளை சிறுநீருடன் ரத்தக் கசிவு தென்படலாம். அன்றி, முட்டை வெள்ளைக் கருவில் உள்ள ஆல்புமின் ஒத்த புரதச் சத்துகள் சிறுநீரில் வெளியேறி நுரையாக வெளிப்படலாம். இவை சிறுநீரக முழு உபாதைகளின் முன்னோட்டம்.  சிலருக்கு சிறுநீர் அளவு மாற்றம், சிறுநீர் வெளியேறுவதில் நேர மாற்றம், நிற மாற்றம், உறக்கத்தில் சிறுநீர் கழிதல், அடிவயிற்றில் அல்லது முதுகுத் தண்டின் அருகில் வலி, உறக்கம் இன்மை , தலைவலி போன்றவையும் சிறுநீரகக் கோளாறின் சிவப்பு சமிக்ஞைகள். 
  ஆரம்பக் கட்டத்திலேயே நோயின் தன்மையைக் கண்டறிந்து, அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தசைகளின் செயல்பாட்டில் சிதைபொருள் ஆன கிரியாட்டினின், ஆல்புமின் ஆகியவற்றின் அளவு அதிகரிப்பும் சிறுநீரக நோயைக் காட்டிக் கொடுத்துவிடும். 
  சிறுநீர் உற்பத்தியின் முதல் கட்டம் இது. அதிகப்படியான நீர்மத்துடன் கழிவுகளையும் வெளியேற்றும் நிலை. வடிகட்டி முடிச்சு (குளோமெருலி) அரித்து எடுக்கும் வேகம் நிமிஷத்துக்கு 100 மில்லி லிட்டர் (அரை தம்ளர்) அளவு இருக்கலாம். ஆனால், அதன் அளவு 60 மில்லி அளவாகக் குறைந்தால் பிரச்னைதான். கூடுதல் புரதச்சத்து சிறுநீரில் தென்பட்டாலும் சிக்கல்தான். ரத்தத்தில் ஆல்புமின் அதிகரித்தால் மாரடைப்புகூட வரலாம். 
  உலகம் முழுவதும் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளிகள். ஆண்டுதோறும் 24 லட்சம் பேர் இறப்பு. மரண காரணிகளில் ஆறாம் இடம் வகிக்கும் உயிர்க்கொல்லி நோய். உலக அளவில் கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு உள்ளாகப் போகிறவர்களின்எண்ணிக்கை 16 கோடிப் பேர் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். எனினும்,  ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிறுநீரக நோய்கள் குணப்படுத்தக் கூடியவையே. 
  சிறுநீரக நலம் - யாவருக்கும் எங்கும் என்ற முத்திரை மொழியுடன் உலக சிறுநீரக விழிப்புணர்வு தினத்தை இன்று (மார்ச் 14) கடைப்பிடிப்போம்.

  கட்டுரையாளர்:
  இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai