சுடச்சுட

  

  மீடியேஷன் என்ற ஆங்கில வார்த்தையை  சமரசம் அல்லது பேச்சுவார்த்தை என்று தமிழில் கொள்ளலாம்; அது அவ்வளவு சரி என்று எனக்குப் படவில்லை. என் எதிரிக்கும் எனக்கும் அறிவும் விவேகமும் இருந்தால் நாங்களே சமரசம் செய்துகொண்டு விடலாம். ஆனால் மீடியேஷனுக்கு  நடுநிலையாளர்கள் இருந்தாக வேண்டும்.  நான் சமரசம் என்று குறிப்பிடும்போது  இதை மனதில் இருத்திக் கொள்ளவும். 
  நம் நாட்டின் இதயத்தில் ஆழமான காயம் ஏற்படுத்திய அயோத்திப் பிரச்னைக்குத்  தீர்வு காண உச்ச நீதிமன்றம் ஒரு சமரசக் குழுவை நியமித்துள்ளது. இதைவிடச் சிறப்பான குழு அமைக்கப்பட்டிருக்கலாமோ?, இந்தக் குழுவின் அங்கத்தினர் மீது நம்பிக்கை இல்லை; இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றம்தான் தீர்வு காணமுடியும்; இது காலம் தாழ்த்தவென்று செய்த முடிவு - இது போன்ற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
  சமரசம் என்றால் என்ன என்று புரியவைக்க முடியுமா என்று பார்க்கிறேன். பிரச்னை தீர்வுக்கு வழக்கு தாக்கல் செய்வதற்கு மாற்றாக, உரிமையியல் சட்டம்  நான்கு வழிகளைச் சொல்கிறது.  ஆர்பிட்ரேஷன்,  மீடியேஷன், கன்ஸிலியேஷன், செட்டில்மென்ட் லோக் அதாலத் ஆகியவை அந்த நான்கு வழிகள்.
  நீதிமன்றத்துக்குப் போனால் நாம்தான் ஜெயிப்போம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது; அது மட்டுமல்ல, பொருள் செலவு, கால விரயம்; மேலும், உறவுகள் உடைந்து போகும்; அது குடும்ப உறவாக இருக்கலாம்; தொழில் தொடர்பான உறவாக இருக்கலாம். சமரசத்தின் சிறப்பு என்னவென்றால் விரைவாகத் தீர்வு கிடைக்கும்; பொருள் செலவு குறைவு; றவுகளுக்கு சேதம் குறைவு; வழக்கு தாக்கல் செய்த இருவருக்கும் வெற்றி போன்ற ஒரு முடிவு.
  சமரசம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆரஞ்சு உவமை ஒன்று சொல்கிறார்கள். வாதியும் பிரதிவாதியும் ஓர் ஆரஞ்சுப் பழத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். நீதிமன்றம் சென்றால் இரு தரப்பு வாதங்களை நீதிபதி  கேட்டு ஒருவருக்கு ஆரஞ்சுப் பழம் மொத்தமும் சொந்தம் என்று தீர்ப்பளிப்பார். மற்றவர் ஏமாற்றம் அடைவார். இவர்களே ஆர்பிட்ரேஷன் முறையைத் தேர்ந்தெடுத்தால் இரு தரப்பு வாதங்களை  நடுவர் கேட்டு பழத்தைச் சரி பாதியாக வெட்டி ஆளுக்கு ஆறு சுளை தருவார்.
  இதுவும் முழு திருப்தி அளிக்காவிட்டால், சமரசம் செய்பவர் இருவரையும்  அமரச் செய்து மனம்விட்டுப் பேசச் செய்வார். உங்களுக்குப்  பழம் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று இதமாகக் கேட்பார். ஒருவர், ஆரஞ்சு பழச்  சாறு எடுப்பேன் என்பார். மற்றவர், அதன் தோலை வைத்து ஜாம் செய்வேன் என்பார். முடிவு? ஒருவர் தோலை உரித்து எடுத்துக் கொண்டு மற்றவருக்கு  சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள கொடுத்து விடுவார். இருவருக்கும் திருப்தி. இதை ஆங்கிலத்தில் வின் வின் முடிவு என்கிறார்கள்; அதாவது, இருவருக்கும் வெற்றி. அடிப்படையில் இதுதான் சமரசம்.
  சமரசம் செய்யும் நபர் தீர்ப்பை அளிப்பதில்லை . இதை அடிக்கோடிட்டுக் கூற வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் பிரச்னையின்  முடிவை வழக்கு தாக்கல் செய்தவர்களே தீர்மானிக்க வழி வகுக்கிறார். சிங்கமும் புலியுமாக உறுமுபவர்களிடம் இதோ பாருங்கள். பிரச்னையின் பரிமாணம் இது; குறுகிய காலத்தில் இந்த இந்தப் பலன் வரலாம்; ஆனால் நெடுநோக்குடன் பார்த்தால் உங்கள் இருவருக்கும் பலன் தரும் ஒரு தீர்வைக் காண முடியும். வழக்கைக் கட்டிக் கொண்டு பல்லாண்டு காலம் அழவேண்டாம் என்பார். 
  இரண்டில் இருந்து நாலு அமர்வுகள் பொதுவாக விசாரணை நடைபெறும். இரண்டாவது அமர்விலேயே அறையில் வெப்பம் குறைந்து ஒரு சகஜ நிலை வரும். இரு கட்சிகள் சமரச நடுவரிடம் தனித்தனியாகவும் சேர்ந்து கலந்தும் பேசுவார்கள்.அவர்கள் பேசிய விஷயங்களை  நடுவர் வெளியில் சொல்ல மாட்டார். ஒருக்கால்  சமரச முயற்சி தோற்றுப்போய் மறுபடியும் வாதி பிரதிவாதிகள் நீதிமன்றத்துக்கு வந்தால், சமரச அமர்வில் பேசியது எதையும் சாட்சியமாகக் கொண்டு வர முடியாது.
   நீதிமன்றம் என்று போனால் பிராதில் சொன்னதைத் தாண்டி நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், சமரசக் குழுவிற்கு வானமே எல்லை. ஓர் உதாரணம்: சென்னையில் ஒரு புகழ் பெற்ற கார் கம்பெனி. பெரு நஷ்டம் அடைந்து திவாலாகும் சூழல். இந்தப் பிரச்னை சமரசக் குழுவிடம் வந்தது. கடன் கொடுத்தவர்கள், வங்கிகள் மட்டுமல்ல, தொழிலாளிகள் எல்லோரும் தங்களுக்குச் சேர வேண்டியதில் சிறிது விட்டுக் கொடுத்தார்கள்.  நிறுவனத்தின்  சொத்துகளை விற்று எல்லோருக்கும் ஒரு பங்காவது கிடைக்க வழி வகுக்க முடிந்தது. வர வேண்டிய  பணம் கொஞ்சமாவது வந்ததே என்று எல்லோருக்கும் மகிழ்ச்சி. 2,196 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைந்தார்கள்  என்று சொல்கிறார்கள். 
  இதுவே நீதிமன்றம் என்றால் வங்கிகள் தனி வழக்கு, மற்ற நிறுவனங்கள் தனி வழக்கு, தொழிலாளர் ஆளுக்கு ஆள் வழக்கு என நீதிமன்றத்தில் தவம் இருந்திருப்பார்கள். வழக்கு முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிறுவர் பெரியவர் ஆகி, இளைஞர் முதியவர் ஆகி, தொட்டில் கல்லறை ஆகி என்று நீண்டு போய் இருக்கும். இங்கு  சமரச முயற்சியில் அனைவரும் பயனடைந்தார்கள். வழக்கு என்ற சிவப்பு விளக்கில் நின்றுவிடாமல், சமரசம் பச்சை விளக்கு காட்டியது; அவரவர் தங்கள் வாழ்க்கைப் பாதையில் தொடர்ந்து சென்றார்கள்.
  இன்னும் ஒரு முக்கிய சிறப்பு. சமரச அமர்வுகளில் உருவாகும் யோசனைகளையோ பரிந்துரைகளையோ ஏற்க வேண்டும்  என்ற கட்டாயம் கிடையாது. சரி வராது என்று சமரச நடுவரிடம் சொல்லிவிடலாம். தயக்கமே வேண்டாம். மறுபடியும் நீதிமன்றம் சென்று நீதிபதியிடம் சமரசம் வெற்றி பெறவில்லை என்று  சொல்லலாம். அவரும் விட்ட இடத்திலிருந்து தொடர்வார்.
  சமரச நடுவராவதற்கு பயிற்சி தருகிறார்கள். அவருக்கு அசாத்திய பொறுமை வேண்டும். பிரச்னையைப்  புரிந்து கொள்ளவேண்டும். உளவியல் நிபுணரின் புரிதல் வேண்டும். அவருடைய எண்ணங்களைத் திணிக்கவே கூடாது. வழக்கு தாக்கல் செய்தவர்கள் இடையே நிலவும் வன்மத்தை மெதுவாகக் குறைக்க வேண்டும்; அவரே பேசிக்கொண்டு இல்லாமல், அவர்கள் பேசுவதை  காது கொடுத்துக் கேட்க வேண்டும். இருவருக்குமிடையே இருக்கும் உண்மையான பிரச்னை என்ன என்பதைத் தெளிவு செய்ய வேண்டும்.
  நாம் சண்டை போடும்போது  அவன் முறைத்தான், இவன் முகத்தை திருப்பிக் கொண்டான் என்று பிரச்னைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இருட்டடிப்பு செய்யும். அதுவெல்லாம் வெறும் ஈகோ சமாசாரமே அன்றி வழக்கின் ஆத்மா அதுவல்ல; பேசப் பேச வழக்கு தாக்கல் செய்தவர்கள் இதைப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. பரமபத சோபனம் போல் 92-வது கட்டத்தில் இருந்து 
  இறங்குவார்கள். 
  அப்படியும் சமரசம் செய்ய மனதில்லையா? ஏற்கெனவே சொன்னது போன்று ஒன்றும் நஷ்டம் இல்லை; திரும்ப நீதிமன்றத்துக்குப் போய் விடலாம். சாதாரண ஒப்பந்தங்கள், கட்டட ஒப்பந்தங்கள்,  நுகர்வோர் வழக்குகள், வங்கி மற்றும் காப்பீடு வழக்குகள், குடும்ப நலம், மணமுறிவு வழக்குகள் மற்றும் பலவித வழக்குகளை சமரசம்  மூலமாகத் தீர்த்து விடலாம். 
  அத்துடன் முற்றுப்புள்ளி. மேல் முறையீடு என நீதிமன்ற வளாகங்களில் அலைய வேண்டாம். அண்ணல் காந்தியே இதன் சிறப்பைப் பற்றி சிலாகித்துள்ளார்.
  மறுபடியும் பல்லவி தொடங்கிய இடத்துக்கு வருகிறேன். நம்மை அதிர வைத்த, நெஞ்சை வலிக்க வைத்த ஒரு வழக்கை சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ளது. பெரிய பிரச்னை தான், இரு பக்கமும் நிரம்பக் குமுறல்; இதற்கு முன்னரே சமரச முயற்சி செய்தும் பலிக்கவில்லை. எல்லோருக்குமே தெரியும்.
  இருந்தாலும் ஒரு சிறிய வாய்ப்பு சமரசம் வெற்றி பெற இருந்தால், வெற்றி பெற்றால் நம் நாடு சரித்திரம் படைக்கும். இங்கு அமைதி நிலவும். ரணங்கள் ஆறலாம் . அப்படி அந்தக் கனவு நனவானால் தமிழன் பெயர் அமைதி, நல்லிணக்கம் விரும்புவோர் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பெறும். அது இனிக்கும்தானே!  அயோத்திப் பிரச்னைக்குத் தீர்வுகாண உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் சமரசக் குழுவில் இடம்பெற்றிருக்கும் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூவருமே தமிழர்கள். சமரச முயற்சி வெற்றி பெற்றால், இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னைக்குத் தீர்வு கண்ட பெருமை நம்மைச் சாரும். அதனால், சமரசம் வெற்றி பெற வேண்டும். தீர்வு எட்டப்பட வேண்டும்!

  கட்டுரையாளர்:
  நீதிபதி (ஓய்வு).
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai