இல்ல இடர்களைத் தவிர்க்கலாமே!

ஆங்கில நாளேடு ஒன்றில் அண்மையில் வெளியான செய்தியைப் படித்தவுடன், அதிர்ச்சியும், கோபமும் ஒருங்கே எழுந்தன.

ஆங்கில நாளேடு ஒன்றில் அண்மையில் வெளியான செய்தியைப் படித்தவுடன், அதிர்ச்சியும், கோபமும் ஒருங்கே எழுந்தன. புறநகரில் ஒரு பள்ளியில் பணிபுரியும் பார்வையற்ற நடுத்தர வயது மனிதர், பூச்சி மருந்தைத் தவறுதலாக இருமல் மருந்து என நினைத்துச் சாப்பிட்டு விட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். வீட்டைச் சுத்தம் செய்யும் பணிப் பெண், தன் வேலையெல்லாம் ஆனவுடன் பூச்சி மருந்தை உரிய இடத்தில் வைக்காமல் போனதன் விளைவுதான் இந்த விபரீதம்.
 தாம்பரத்தில் நெடுங்காலமாக வசித்து வரும் என்னுடைய உறவுப் பெண்ணின் வீட்டில் வேறொரு சம்பவம் நடந்தது. கணவர், மனைவி, வயதான தாயார் (80 வயதுக்கு மேல்) என மூவர் மட்டுமே இருந்தனர். என்றாலும், பல ஆண்டுகள் பழக்கம் காரணமாக அவர்களுக்கு உதவி புரிய பணியாள்கள் அக்கம்பக்கம் இருந்தார்கள். ஏதோ ஒரு விசேஷத்துக்கு, என்னுடைய உறவுப் பெண்ணுக்கு பரண் மீது ஓரமாக இருந்த பாத்திரம் தேவைப்பட்டது. உதவிக்குப் பணியாளைக் கூப்பிடப் போனாள்; அவருக்குப் பதிலாக, அவர் தந்தை என்னவென்று கேட்டு முன் வந்திருக்கிறார். உத்தரம், வென்டிலேட்டர், மண் தரை இவை கொண்ட மிகப் பழைய வீடு. அந்த முதியவரைக் கண்ட என்னுடைய உறவுப் பெண் "அவசரமில்லை, உங்கள் மகன் வரட்டும்' என்று கூறியும் கேட்காமல் அவர் ஏணியில் ஏறினார். பாத்திரத்துடன் கீழே இறங்கும்போது, வழுக்கி விழுந்து தலைக் காயம் ஏற்பட்டு இறந்து போனார். வீட்டு உரிமையாளரின் மூத்த மகன் விஷயமறிந்து, ஆண்டு விடுமுறைக்கு வந்தபோது பணியாளின் குடும்பத்துக்குக் கணிசமான தொகையை அளித்தார்.
 நாங்களிருந்த தனி வீட்டிலும் (40 ஆண்டுகள் பழைமையானது.) இது போன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது. சலவைக் கருவி, குளிர் சாதனப் பெட்டி, மின் விசிறிகள் அனைத்திலும் சின்னச் சின்னப் பழுதுகள். அவற்றைச் சரிப்படுத்த மின் பொருள்கள் சரிபார்க்கும் பணியாளரை வரவழைத்தோம். காலையிலிருந்து மாலை வரை நன்கு பார்த்துச் சீர்படுத்தினார்.
 தொகையைப் பெற்றுக் கொண்ட அவரிடம், "இந்த ஏஸியையும் பாரேன். கூலிங் வரவே இல்லை' என்று வேண்டினார் என்னுடைய மனைவி.
 கும்பிடு போட்டு விட்டு, "இந்த ஏஸி, நீங்கள் வைத்திருக்கிற இன்வெர்ட்டர் இதெல்லாம் தனி வகை. எனக்கு பழுதை சரி செய்யத் தெரியாது என்று கூறவில்லை; ஆனால், நான் தொட்டால் ஒன்று கிடக்க ஒன்றாகிவிடும்' என்று பணிவாக மறுத்துவிட்டார் அந்தப் பணியாளர்.
 பின்னர் தனி வீட்டிலிருந்து, தளங்களுள்ள வீட்டுக்குக் குடியேறும்படியான சூழல் வந்தது. அங்கு நாங்கள் அனுபவிக்கும் சிக்கல்கள் தனித்துவம் வாய்ந்தது. முதலாவது, மின் தூக்கி பழைய காலத்து மாடல் என்பதால், போகும் போதும் வெளியேறும் போதும் கனமான கதவை இழுத்து மூட வேண்டியிருக்கிறது. ஏதேனும் ஒரு சின்னக் கோளாறு நேர்ந்தால்கூட மின்தூக்கி "வேலைநிறுத்தம்' செய்துவிடும்.
 இருபதுக்கும் மேற்பட்ட தளங்கள் அமைந்த இடத்தில், ஒரு சிலவற்றுக்கு மட்டுமே "பால்கனி' உண்டு. துணி உலர்த்த வசதிதான். ஆனால், புறா, மைனா போன்ற பறவைகளால் எச்சம் நிறைந்து, ஒரே குப்பைக்கூளமாகி விடுகிறது. புறாவின் கழிவுகளும், சிறகுகளும் சிலருக்கு ஒவ்வாமையை உண்டு பண்ணி விடுகிறது.
 வயதானவர்களோ, சின்னஞ்சிறு குழந்தைகளோ இல்லத்தில் இருந்தால் இடர்ப்பாடுகள் அதிகம். குறிப்பாக, பொட்டுக்கடலை போன்ற சிறிய மாத்திரைகள் மற்றும் சில முதியோர்கள் செவி பழுதுக்கு பொருத்திக் கொள்ளும் கருவியில் பயன்படுத்தும் மிகச் சிறிதான பேட்டரிகள் போன்றவற்றை முன்னெச்சரிக்கையுடன் தனிப் பெட்டியில் வைக்க வேண்டும். இதனால் தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
 அதோடு "டிமென்ஷியா' போன்ற ஞாபகமறதி நோயுள்ள மூத்த குடிமகன்களிலிருந்தால் மாத்திரை சாப்பிடுவதில் உஷார் தன்மை அவசியம். இது பற்றி ஒரு நிபுணரிடம் விசாரித்ததில் பயனான அறிவுரை கிடைத்து: "மாத்திரையை ஒரு வேளை போட்டுக் கொள்ளாவிட்டால்கூடப் பரவாயில்லை. இரண்டு தரம் எடுத்துக் கொண்டால் ஆபத்து' என்றார்.
 இந்தக் காலத்தில், கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போவதால், சமையலறையில் கணவர் ஓரளவாவது உதவ வேண்டியிருக்கிறது. கிரைண்டரில் மாவு போட; மிக்ஸியில் துவையல் அரைக்க; குளிர்சாதனக் கருவியைச் சுத்தம் செய்ய போன்ற உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதில் கொஞ்சம் கவனக் குறைவு ஏற்பட்டாலும் விபரீதம்தான். எங்கள் அடுத்த தளத்தில் - மின் விசையில் பழுதோ, "ஹை வோல்டேஜோ'-என்ன காரணமோ தெரியவில்லை; ஒரு நாள் கிரைண்டர் வெடித்துச் சிதறி, சுவர் எல்லாம் பாழ். நல்ல காலமாக குடும்ப உறுப்பினர் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
 இல்லம் நாகரிகத் தன்மை கொண்டதாக விளங்க வேண்டும் என்று பல பெண்கள் விரும்புகிறார்கள். "மாடுலர் கிச்சன்' அவற்றில் ஒன்று. இதன் மூலம் அனைத்து சமையல் சாதனங்களையும் வைத்துக் கொள்ள இடம் கிடைப்பது வசதிதான். ஆனால், இதற்காகச் சுவரை இடித்துத் துளையிட்டு, இழுப்பறைகளைப் பதிக்கும் போது, பல்வேறு பூச்சிகள் பறந்து வந்து விடுகின்றன. இதனாலேயே எல்லாப் பாத்திரங்களையும், தட்டுகளையும் மறக்காது மூடி வைக்க வேண்டும். இல்லையேல், உணவுப் பதார்த்தங்கள் பாழாகிவிடும்.
 ஆட்டுக்கல், அம்மி, "கெரசின் ஸ்டவ்' போன்ற அந்த நாளைய சாதனங்கள் இல்லத்தரசிகளின் நேரத்தை வீணாக்கின. இன்றைய நவீன, அதிநுட்பக் கருவிகள் அன்றாட வேலைச் சுமையை எளிதாக்கி விடுகின்றன என்பது உண்மைதான். ஆனால் செல்லிடப்பேசி, தொலைக்காட்சி மூலம் கவனச் சிதறல் ஏற்படாமல், மும்மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
 திருக்குறளில் பொருட்பால் அதிகாரம் 52 "தெரிந்து வினையாடலை'ப் பற்றிச் சொல்லுகிறது. அது, இந்தக் கால குடும்பப் பெண்களுக்கும், வீட்டுப் பணியாள்களுக்கும் மிகப் பொருத்தமாகவே அமைகிறது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com