தொல்காப்பியரைத் தொழுவோம்!

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும், தொன்மையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ் மொழிக்கு வாய்த்திருப்பது நமக்குப் பெரும் பேறாகும்.

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும், தொன்மையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ் மொழிக்கு வாய்த்திருப்பது நமக்குப் பெரும் பேறாகும்.
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் என்ற ஒரு வழக்குத் தொடரை நாம் காணும்போது, இலக்கியங்கள் பல தோன்றிய பிறகே இலக்கண நூல் அமையும் என்பது வெளிப்படை. தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கண-இலக்கிய நூல்கள் பலவாக இருந்தன. முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம்  தொகுத்தார் என்று பாயிரம் சொல்கிறது. தொல்காப்பியர், எழுத்து, சொல், பொருள் என ஆகியமூன்று அதிகாரங்கள் அமைத்துக் கொண்டு ஓரதிகாரத்திற்கு ஒன்பது இயல் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைப் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891-இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும். இந்நூலுக்குப் பனம்பாரணார் அருளிய சிறப்புப் பாயிரம் உண்டு.  
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி என்ற குறிப்பால் தொல்காப்பியன் என்பதே இவருக்கு இயற்பெயர் என்றும் தொல்காப்பியன் வழங்கியதால் அம் ஈறு சேர்ந்து தொல்காப்பியம் என்று அழைக்கப்பட்டது.  சங்க இலக்கியம், சமய இலக்கியம் சாத்திர தோத்திர நூல்கள், மறுமலர்ச்சி நூல்கள் என அனைத்து இலக்கியங்களும் தொல்காப்பியத்தைத் தொட்டே வரைந்திருக்கிறார்கள்.
எழுத்தும் சொல்லும் இணைந்து இலங்கிய பொருளாகிய இலக்கியப் பொருண்மையின் வரையறைகள் அமையுமாறு தொல்காப்பியம் அமைந்தது. இலக்கியம் வாழ்வின் பாடமாக அமைவதால், தமிழர் வாழ்வுக்கு தொல்காப்பியர் இலக்கணம் வரைந்தார் எனக்  கூறுவதோடு, இந்தத் தனிச் சிறப்புத்தான் தமிழ் மொழிக்கு செம்மொழிப் பெருமிதத்தை சேர்த்தது.
அந்நிலை மருங்கின் அற முதலாகிய மும்முதற் பொருட்டும் உரிய என்ப என்ற நூற்பா (363) குறிப்பிட்டபடியே திருவள்ளுவரும் அறம் , பொருள், இன்பம் என்ற மூன்று பாலாக வகுத்தார். மும்முதற் பொருள் முப்பால் என்று பலர் குறித்தனர்.தொல்காப்பியத்தின் பயன் திருக்குறளாகும்.
திருக்குறளுக்கு முதல் அதிகாரத்தில் மலர்மிசை ஏகினான்  என்ற தொடரில்  ஏகினான் என்பதற்கு பொருள் உரைத்த பரிமேலழகர்,
வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் 
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி 
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் 
விரைந்த பொருள என்மனார் புலவர்
என்ற தொல்காப்பிய நூற்பாவைத்தான் எடுத்துக் காட்டுகிறார்.
இன்றும்கூட நண்பர்கள் நம்மை எங்கேனும் அழைக்கும் போது விரைந்து செல்வதற்காக இதோ வந்து விட்டேன் என்று இறந்த காலத்தில் சொல்லும் வழக்கம் நம் மனத்தில் தொல்காப்பியம்  பதிந்திருப்பதைக் காட்டுகிறது.
   தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன்  என்று குறிப்பிட்டால் மிகையாகாது. 1963-இல் பேரறிஞர் அண்ணா, தொல்காப்பிய ஆங்கில மொழியாக்கத்தின் முன்னுரையில், தனக்கே உரிய எழிலார்ந்த நடையில் தொல்காப்பியத்தைப் பற்றி அவர் குறித்த வரிகள் என்றும் நீடித்து நிலைத்திருக்கும் புகழ் வரிகளாகும். 
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதியன்று தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் தன்னுடைய உரையில் தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம் விடுத்தார். மெரீனா கடற்கரையில் தமிழளந்த பெருமான் தொல்காப்பியருக்கு திருவுருவச்சிலை நிறுவ வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையினை பல ஆண்டுகளுக்கு முன்பு மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் கேட்டுக் கொண்டதை அந்தக் கூட்டத்தில் நினைவுறுத்தியதைத் தொடர்ந்து, உயிரோவியமாகத் தீட்டப் பெற்ற தொல்காப்பியர் திருவுருவச் சிலை கடந்த மார்ச் 10-ஆம் தேதியன்று  திறக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றி தொல்காப்பிய நூற்பாக்களைப் பொறித்துள்ளது தமிழறிஞர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியளிக்கிறது. 
தமிழ்த் தாத்தா உ.வே.சா.  சிலை மாநிலக் கல்லூரியிலும், தொல்காப்பியமே கடலாக வடிவெடுத்த தொல்காப்பியர் சிலையும்  சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணையகமான மெரினா வளாகத்தில் தமிழ்த் துறையின் முகப்பிலும் அமைந்துள்ளன. அலைகடல் நோக்கிய அழகுத் திருமேனியாகத் தொல்காப்பியர் சிலை அமைந்துள்ளது.
அறிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஆயிரக்கணக்கானஅளவில் பட்டங்களையும் பதக்கங்களையும் பரிசில்களையும் தமிழ் வளர்ச்சித் துறை வாரி வழங்கி வருவதை நாடறியும். தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தின் முகப்பில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 
ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7  அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது. தொல்காப்பியர் படிமத்தைத் தொழுவதில் தமிழக அரசு ஆர்வத்தோடு முன்னின்று வழிகாட்டுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com