எச்சரிக்கை உணர்வு அடிமைத்தனம் அல்ல!

பெண்கள் தெய்வங்களாக, தேவதைகளாகப் போற்றப்படும் இதே மண்ணில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும்

பெண்கள் தெய்வங்களாக, தேவதைகளாகப் போற்றப்படும் இதே மண்ணில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன. புராண காலம் தொட்டு காலம் காலமாக நாம் இதனைக் கண்டு வருகிறோம். அதே நேரத்தில் பெண்கள் தங்களை எப்படிக் காத்துக் கொண்டனர் என்பதையும் வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. பெண்ணின் பெருமைகளை எல்லாம் பல இடங்களில் எடுத்துரைக்கும் வள்ளுவப் பேராசான்,
தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற 
 சொற்காத்துச் சோர்விலாள் பெண்
 என்று பெண்ணைக் குறிப்பிடுகிறார். இதில் பெண் என்பவளது பல பொறுப்புகளை அல்லது அவளின் பல பரிமாணங்களைக் கூற முற்படுகையில் முதலில், தற்காத்து என்று தன்னைக் காத்துக் கொள்ளும் திறம் படைத்தவள் என்று கூறுகிறார்.
தன்னைக் காத்துக் கொள்வதும் தன்னைச் சார்ந்தவர்களைப் பேணுவதும் சொல் காப்பதும் பெண்ணின் இயல்பு. இத்தகைய இயல்போடு அவள் சோர்விலாதவளாகக் காலம் தோறும் வாழ்ந்து வருகிறாள் என்பதை அவள் ஆற்றலின் வடிவம் என்பதாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் காலம்தோறும் இந்தப் பண்புகளிலிருந்து மாறுபடாமல் இயங்கிக்கொண்டே இருப்பவள் என்றும் கருதலாம். தமிழ் மறை என்று   நாம் போற்றும் வள்ளுவம் இப்படிப் பெண்ணை உயர்த்திப் பிடிக்கிறது. இதன் அடிப்படையில் நாம் இன்றைய பெண்களின் நிலை பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.
அண்மையில் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை சம்பவம் மொத்தத் தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் புதிதல்ல. இந்தத் தேசம்  இதுபோல எத்தனையோ கண்டிருக்கிறது. இது ஒற்றை மாணவிக்கு நிகழ்ந்த துன்பம் அல்ல. வெளிவந்திருக்கும் உண்மைகளும் காட்சி ஆதாரங்களும் இன்னும் பெண்கள் பலருக்கும் இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
இருந்தபோதிலும் ஒரே ஒரு மாணவி மட்டுமே துணிந்து புகார் செய்துள்ளார். இதனால் இது ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம் எனும் அளவில் சுருங்கி இருக்கிறது. 
 இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் மீதும் பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் காட்சி ஊடகங்களில் பெரும் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. ஒருபுறம் பெண்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் ஆணின் இயல்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் குறித்தும், சட்டம் கடுமையாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற ஆவேசமும் சமூக வலைதளங்களில் மக்களின் கருத்தாக பிரதிபலித்துக் கொண்டே இருக்கின்றன.
இதனை நாம் ஓர் ஊரில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த தீங்காக எண்ணி இருந்துவிட முடியாது. நாடு முழுவதும் பல இடங்களில் இதுபோன்று நடந்துகொண்டே இருக்கின்றன; சில வெளிக் கிளம்புகின்றன; பல மூடி மறைக்கப்படுகின்றன என்பதே உண்மை. இத்தகைய குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதனைக் களையாத வரை இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.
ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் வெளிப்படும்போது சமூகத்தில் உணர்ச்சிவசப்பட்ட தன்மையைக் காண்கிறோம். அதே நேரத்தில் உண்மையை உணர்ந்து அதனைக் களைவதற்குச் செய்ய வேண்டியனவற்றை செய்யத் தவறுவதும் சமூகத்தின் இயல்பாக இருந்து வருகிறது.
செல்லிடப்பேசியும் அதன் வழியே சமூக வலைதளங்களும் இன்றைய இளம் தலைமுறையினரின் கைவசம் ஆகியிருக்கின்றன. இதன் பிரம்மாண்டத்தை இதனால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களை அவர்கள் முழுமையாக உணர்ந்து இருக்கிறார்களா என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. தொடர்ந்து நாம் காணும் இதுபோன்ற சம்பவங்கள் அச்சத்தையும் சந்தேகத்தையும் அதிகரிக்கின்றன.
சமூக வலைதளங்கள் வழியாக உலகையே காண முடியும் என்ற பெரும் உற்சாக மனநிலை இன்றைய தலைமுறையினரிடம் இருக்கிறது. அதே நேரத்தில் நம்மையும் உலகம் முழுவதும் உற்று நோக்குகிறது அதற்கான வாய்ப்பும் திறந்திருக்கிறது என்பதை அவர்கள் உணரத் தவறுகிறார்கள்.
அனைத்து விதமான வக்கிரங்களும் கொட்டிக்கிடக்கும் வலைதளங்கள், வயதிற்கு மீறிய படிப்பினைகள், தேவைக்கு அதிகமான தகவல்கள், எதையும் தனதாக்கிக் கொள்ளும் பேராசையை மனித மனங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் வக்கிரங்களை அவலங்களைத் தூண்டி வெளிக்கொணரும் காட்சிகளும் கருத்துகளும் என்று எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அத்தனையும் கொட்டிக் கிடக்கின்றன.  
இதுபோன்ற குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன, யாரால் நிகழ்த்தப்படுகின்றன, எப்படி நிகழ்கின்றன-இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழியும் புலப்பட்டுவிடும். தனது கருத்தினைப் பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்திருக்கிறது என்ற நேர்மறை விளைவு இருந்தபோதிலும், முகநூல் போன்றவற்றில் அறிமுகம் இல்லாத மனிதர்கள் நண்பர்களாக இணையும்போது அவர்களை எந்த அளவுக்கு நம்புவது, எதுவரை நம்புவது, எப்படி நம்புவது, எங்கே அவர்களை நிறுத்துவது என்பதான தெளிவு இன்னமும் இளைய தலைமுறையினருக்கு வாய்க்கவில்லை என்பது இதுபோன்ற சம்பவங்களால் தெளிவாகிறது.
நவீன தொழில்நுட்பமும் சமூக வலைதளங்களும் இளைஞர்களைப் பெரிதும் அலைக்கழித்து புயலில் சிக்கிய மென்கொடிகளாகச் சிதைத்து வருகின்றன என்னும் உண்மையை உணர்ந்து அவர்களை மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இந்தக் குறிப்பிட்ட பொள்ளாச்சி சம்பவத்தைப் பொருத்தவரை இதனை வலிந்து கடத்திச் சென்றது அல்லது திடுமென ஏற்பட்ட ஓர் அதிர்ச்சி சம்பவம் என்று கொள்ள முடியாது. தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படிப் பல நிலைகளில் யாரென்றே அறியாதவர்களோடு ஏற்பட்ட நட்பும் பழக்கமும் இத்தகைய அபாயத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
பெற்றோரும் உடன் பிறந்தோரும் தராத பாதுகாப்பை வேறெவரும் தந்துவிட முடியாது. சகோதரர் என்ற எண்ணத்தோடு பழகுவோர் பெற்றோர் முன் வந்து தங்களை அறிமுகம் செய்து கொள்வதில் எவ்விதத் தயக்கமும் காட்ட மாட்டார்கள் என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாத நிலையில், இந்தப் பெண்களைப் பார்க்கிறோம். வெளியாகி இருக்கும் சில காட்சிகளும் அதிலே தோன்றும் பெண்களின் கதறல்களும் மனதை உறையச் செய்கின்றன என்றாலும், இந்த நிலை வரை அறிமுகம் இல்லாத மனிதரை எப்படி இவர்கள் நம்பினார்கள் என்ற ஆதங்கமும் தோன்றவே செய்கிறது. குடும்பத்தோடு நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டியதும் பொதுவெளியில் மிகுந்த கவனமுடன் நம்முடைய சொற்களைப் பிரயோகிக்க வேண்டியதும் அடிப்படை அறிவுதானே.
அறிவியல் கல்வியைக் கற்பதில் காட்டும் கவனமும் ஆர்வமும் நமது பண்பாட்டை, கலாசாரத்தை முன்னிறுத்தும் கல்வியைக் கற்பதில் நாம் காட்டுவதில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறார் புலவர் கணியன் பூங்குன்றனார். அதாவது, எந்தவிதமான நன்மைகள் ஆனாலும் அவை நமது சொல்லை, செயலை அடிப்படையாகக் கொண்டவை. அதேபோல, எத்தகைய தீங்கு நேரிடுமாயினும் அதற்குப் பெருமளவில் பொறுப்பு நம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும் உண்டு. இதனை உணர்ந்து ஆண்களும் பெண்களும் பொதுவெளியில் பழகும்போது சொற்களை கவனமுடன் கையாள வேண்டும். செயலில் கண்ணியத்தைப் பின்பற்ற வேண்டும்.
பெண்ணியம் போன்ற நவீன கால மேற்கத்திய சித்தாந்தங்கள், இன்னும் பல கொள்கை ரீதியான பதிவுகள் ஆகியவற்றில் பெரும் கவனம் செலுத்தப்படுகிறது. அதே நேரத்தில் இவையெல்லாம் நமது கலாசாரத்திற்கு எந்த அளவுக்குத் தேவையானவை என்பதான புரிதல் குறைவாகவே இருக்கிறது.
பெண்களுக்கு சம உரிமையும் மரியாதையும் கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கு சமூக வலைதளங்கள் போன்ற பொதுவெளி மட்டும் போதுமானது என்ற கருத்து அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. 
 யாராயினும் எச்சரிக்கை உணர்வை அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. சூழ்நிலையின் தன்மையை உணர்ந்து ஜாக்கிரதையாக நகர்வது புத்திசாலித்தனமே ஆகும். ஒரு பெண்ணின் சொல் அல்லது சின்னஞ்சிறு செயல்கூட எதிரில் இருக்கும் ஆணை அவளை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது. அறிமுகமில்லாத ஒரு மனிதர் தன்னை நெருங்குவதற்கான வாசல்களைப் பெண்ணின் சொற்கள் திறந்து விடக்கூடும் எனும் உண்மையைப் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். 
அதே நேரத்தில் கண்ணியத்தோடு ஆண் பிள்ளைகள் பெண்களை அணுக வேண்டியது கட்டாயம். இந்த இரண்டையும் அவர்கள் தெளிவாக உணரும் வகையில் நமக்கான கல்வியும் வளர்ப்பு முறையும் இருந்தாக வேண்டும்.
குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கடுமையாக, உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் இது ஒரு தனி மனிதப் பிரச்னை அல்ல; ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்னை. ஒரு தலைமுறையை முழுமையாகப் பீடித்திருக்கும் நோய் என்பதை உணர்ந்து, ஒட்டுமொத்த அடுத்த தலைமுறையை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை அரசும் சமூகமும் தனி மனிதர்களும் செயல்படுத்தியாக வேண்டும். ஆண்-பெண் உறவின் வெளிப்பாடுகள், உறவுச் சிக்கல்கள், அதிலே தோன்றும் உணர்வெழுச்சி போன்றவை குறித்துத் தெளிவான புரிதலை இளைஞர்களுக்கு அவர்களது குடும்பம் ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com