முதல் முறையாக...

விரைவில் மக்களவைத் தேர்தல் வர இருக்கிறது. எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு முதன்முறையாக வாக்களிக்கப் போகும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விரைவில் மக்களவைத் தேர்தல் வர இருக்கிறது. எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு முதன்முறையாக வாக்களிக்கப் போகும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும், 18 முதல் 19 வயது வரையுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 1.5 கோடி. இது மொத்த வாக்காளர்களில் 1.66 சதவீதம். இந்த முதன்முறை வாக்காளர்கள்தான், அடுத்த மக்களவையைத் தீர்மானிக்கப் போகிறார்கள். 
நாட்டின் மக்கள்தொகை தற்போது 130 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இனிவரும் தேர்தல்களிலும் முதன்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே இருக்கும். ஏற்கெனவே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, முறையாகத் தேர்தல் நடத்தப்படும் ஜனநாயக நாடு என பெயர் பெற்றிருக்கும் இந்தியா, இனிமேல் அதிக அளவிலான இளம் வாக்காளர்கள் நிறைந்த நாடு என்கிற பெருமையையும் பெறப் போகிறது.
அதே நேரத்தில், தங்களது வேட்பாளர்களைச் சீர்தூக்கி வாக்களிக்கும் பக்குவமும், அதற்கான சுதந்திரமும் பெரும்பாலான புதிய வாக்காளர்களுக்கு இருப்பதில்லை என்பதே உண்மை. பெற்றோரைச் சார்ந்திருக்கும் சூழல், சுற்றுப்புறம் போன்ற பல்வேறு காரணிகள் அவர்களது வாக்களிக்கும் சுதந்திரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. பெரும்பாலான பதின் பருவ வாக்காளர்கள் வீட்டில் பெற்றோர் சொல்லும் அரசியல் கட்சிகளுக்கே வாக்களிக்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள். 
இல்லையெனில், அரசியல் என்பதே தங்களுக்கு சம்பந்தமில்லாததுபோல் வாக்களிப்பதைத் தவிர்த்து விடும் அல்லது யாருக்கு வாக்களிப்பது என்ற தெளிவில்லாத காரணத்தினால் 49-ஓவிற்கு வாக்களித்து விடும் இளைஞர்களும் இருக்கிறார்கள். 
இந்த இடத்தில் மற்றொன்றையும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏதேனும் அரசியல் சார்பில்லாத, சாமானிய குடும்பங்களில் இன்றைய அரசியல் சூழலை எந்த அளவுக்கு விவாதிக்கிறோம்? நாம் சந்திக்கும் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து எத்தனை பேர் பேசுகிறோம்? அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களால் ஏற்படும் சாதக பாதகங்களையும், நேர்மறை மற்றும் எதிர்மறை கண்ணோட்டங்கள் குறித்தும் அலசுகிறோமா? 
அதையும் மீறி, வாக்களிக்கத் தீர்மானிக்கும் பட்சத்தில், பல்வேறு காரணிகள் நமது வாக்குகளைத் தீர்மானிக்கின்றன. தேர்தல் நடைபெறும் காலங்களில் நிலவும் பொதுவான கண்ணோட்டம் பெரும்பாலான மக்கள் மத்தியில் எதிரொலிப்பது இயற்கையே. இதில், புதிய வாக்காளர்களும் விதிவிலக்கல்ல. கடந்த மக்களவைத் தேர்தலில் வீசிய மோடி அலையை ஒட்டி வாக்குகள் விழுந்ததும், தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு சார்பாக அதிக வாக்குகள் விழுந்ததும் அத்தகைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் இளைஞர்களைக் கவர்ந்திழுப்பதைப் போன்று, அரசியல் தலைவர்களின் ஆளுமைகளும் சில இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அந்தக் கவர்ச்சி மட்டுமே வாக்குகளாக மாறிவிடுவதில்லை. அந்த ஆளுமைகளின் அரசியல் கணக்கீடுகளும் சேர்ந்துதான் தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கின்றன.
அதேபோல, அரசியல் பற்றிய புரிதல் இல்லாதவர்களிடம்கூட மதம், ஜாதி சார்ந்த உணர்வுகள் தேர்தலில் முக்கியப் பங்காற்றுகின்றன. இளம் வயதிலிருந்தே சொல்லப்பட்டு வரும் அத்தகைய உணர்வுகளைப் பாதிக்கும் நிகழ்வுகள் நடைபெறும்போது, அது தேர்தல் அரசியலைப் பாதிக்கவே செய்கிறது.  
புதிய வாக்காளர்கள் என்றில்லை. பல தேர்தல்களில் வாக்களித்த பிறகும் பெரும்பாலானோருக்கு நம் ஜனநாயகத்தின் பெருமை குறித்தோ, அதன் வரலாறு குறித்தோ ஆழமான புரிதல் இருப்பதில்லை. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டம் பற்றியும், தியாகங்கள் பற்றியும் இன்று பேசுவதே இல்லை. அத்தகைய விஷயங்களைக் கற்பிக்க  எந்த ஏற்பாடும் இல்லை. அப்படிப்பட்டவர்கள் இளம் தலைமுறையினரிடம் தேர்தலில் வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவார்கள் என்பது கானல் நீர்தான்.
வாக்குச்சாவடியை நோக்கி இளைஞர்கள் நகர்வதற்கு, அவர்களுக்கேற்ற விதத்தில் உத்திகளை மாற்றிக்கொள்ள அரசியல்வாதிகள் தயாராக வேண்டும். அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமா என்பதை இளைஞர்கள் கவனிக்கின்றனர். அதற்கேற்ற நிகழ்ச்சிகளையும், திட்டங்களையும் அரசியல் கட்சிகள் வகுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சமூக வலைதளங்களின் மூலமாக இளைஞர்களிடம் அரசியல்வாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மக்களைக் கவர்வதில் தவறில்லை. ஆனால், அத்தகைய வலைதளங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பருவநிலை மாறுபாடு, கல்வி முன்னேற்றம், வளர்ச்சிப் பணிகள், பாலின சமத்துவம் போன்ற பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக விவாதித்து, வருங்கால இந்தியா இளைஞர்களுக்கானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், கல்வியறிவு கணிசமாக உயர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில், இளைஞர்களுக்கு ஜனநாயகம் பற்றிய புரிதலையும், வாக்களிப்பு என்ற மகத்தான நிகழ்வின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் அதற்கான திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் பெருமளவில் நடத்த அரசு அமைப்புகளும், பொது நல அமைப்புகளும் முன்வர வேண்டும்.
முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில், வாக்கு எண்ணிக்கையின் சதவீதமும் அதிகரிக்க வேண்டும். அப்போது மட்டுமே ஜனநாயகத்தைப் பற்றிய புரிதல் வருங்காலத்தில் சிறிதளவேனும் உருவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com