தீர்வு எப்போது?

நாளுக்கு நாள் பெண்களின் பாதுகாப்புக்கான கேள்விகள் அதிகரித்துக் கொண்டே போகும் ஓர் இரக்கமற்ற சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெரும் தலைக்குனிவே. தவறு என்று அறிந்தே


நாளுக்கு நாள் பெண்களின் பாதுகாப்புக்கான கேள்விகள் அதிகரித்துக் கொண்டே போகும் ஓர் இரக்கமற்ற சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெரும் தலைக்குனிவே. தவறு என்று அறிந்தே செயல்படுத்தப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வுதான் எப்போது? 
நாட்டையே உலுக்கிய தில்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவின் பலாத்காரத்தில் தொடங்கி, ஈரோடு சிறுமி வர்ஷா (13), அரூர் கோட்டப்பட்டியில் சௌமியா (17), சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த ஆசிபா (8), அண்மையில் நடந்த பொள்ளாச்சி கல்லூரியின் மாணவி மற்றும் தெரிந்தும் தெரியாமலும் எனப் பல சம்பவங்கள்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2007-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுக்கு இடையில் 80 சதவீதம் அதிகமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், 2016-ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 40,000 கற்பழிப்புகள் பதிவாகியுள்ளது. இதேபோன்று, 2017-ஆம் ஆண்டு  கணக்கெடுப்பின் அடிப்படையில், சுமார் 70 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, அது தொடர்பாக புகார் ஏதும் தெரிவிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு தொழில்நுட்பமும், திரைப்படமும் முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. அறிமுகமில்லாத ஆண்களை நம்புவதும், அவர்களுடன் நட்பு பாராட்டுவதும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இயல்பாகிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில் செல்லிடப்பேசி  இல்லாத இளைஞர்களே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
காலை கண் விழித்து, இரவு கண் மூடும் வரை செல்லிடப்பேசியை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகச் சிலர்தான். நவீன உலகில் மலிவான கட்டணத்தில் கிடைக்கும் இணையச் சேவையைப் பயன்படுத்த பலரும் தவறுவதில்லை. அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லாத போதும், செல்லிடப்பேசியை "ரீசார்ஜ்' செய்ய யாரும் மறப்பதில்லை. இன்றைய நவீன  தொழில்நுட்பத்தைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் வாரிசுகள் செய்யும் தவறுகள் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. நள்ளிரவில் போர்வைக்குள்ளிருந்து வரும் செல்லிடப்பேசியின் வெளிச்சம், பல குடும்பங்களை இன்று இருட்டாக்கிக் கொண்டிருக்கிறது என்பது வேதனைக்குரியது.
அதேபோன்று, இந்தியாவில் இணையச் சேவையை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டு 25.99 கோடியாக இருந்தது. அது 2018-ஆம் ஆண்டில் 48.3 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இது 2020-ஆம் ஆண்டு 56.45 கோடியை எட்டும் என்கிறது ஆய்வறிக்கை. 16 முதல் 30 வயது வரை உள்ள பல இளைஞர்கள் இணைய சேவையை தவறான பாதையில்தான் பயன்படுத்துகின்றனர். 2016-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி ஆபாச வலைதளங்களை உபயோகிக்கும் நாடுகளில் அமெரிக்கா,  ஐக்கிய நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக இருந்த இந்தியா, 2016-ஆம் ஆண்டில் கனடாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பது வேதனைக்குரியது. 
மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவின் அடிப்படையில், இந்தியாவில் 827 ஆபாச வலைதளங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடக்கப்பட்டன. எனினும், போலி கணக்குகளால் முகநூல், சுட்டுரை,  யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் ஆபாச விடியோக்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது. இதுபோன்ற விடியோக்களைப் பார்க்கும் ஆண்களின் கண்ணில், தவறான  கண்ணோட்டத்தில்தான் பெண்கள் தெரிகிறார்கள். இந்த நவீன தொழில்நுட்பத்தை இன்றைய இளைஞர்கள் தவறான விதத்தில்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவைப் பொருத்தவரை திரைப்படங்களில் கூறும் கருத்து மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல கருத்துகளை வீட்டில் உள்ள முதியவர்கள் கூறினால்கூட ஏற்க மறுக்கும் இளைஞர்கள், அதுவே திரைப்படங்களில் வசனமாக வந்தால் அதை கட்செவி அஞ்சல், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கிறார்கள். 
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம்  கோரப்பட்ட விளக்கத்துக்கு இந்திய திரைப்பட தணிக்கைக் குழு பதில் அளித்திருந்தது.  அதில் கடந்த 16 ஆண்டுகளில் (ஜன. 1, 2000 முதல் மார்ச் 31, 2016 வரை) 793 திரைப்படங்களை மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை செய்துள்ளது; 2012-2013 ஆண்டுகளில் 82 திரைப்படங்களும், 2013-2014 ஆண்டுகளில் 119 திரைப்படங்களும், 2014-2015 ஆண்டுகளில் 152 திரைப்படங்களும் மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளில் 153 திரைப்படங்களும் தடை செய்யப்பட்டன. இதில் 586 திரைப்படங்கள் இந்தியாவிலும், 207 திரைப்படங்கள் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டவை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் 231 ஹிந்தி, 93 தமிழ், 55 தெலுங்கு, 39 கன்னடம், 23 மலையாளம் மற்றும் 17 பஞ்சாபி திரைப்படங்களும் அடங்கும்.
இதுபோன்ற சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்க திரைப்படத் துறை, சமூக விரோதச் செயல்களுக்கு வித்திடும் ஆபாச படங்களைத் தடுக்காதது ஏன்? பாலியல் வன்கொடுமைகளைத் தூண்டும் வகையில் திரைப்படங்களைத் தயாரிக்க துணிச்சல் எங்கிருந்து வருகிறது?
தங்கள் அரசியல் செல்வாக்கு, பண பலத்தை, சமுதாய அந்தஸ்துகளை பலர் பயன்படுத்தி, குற்ற வழக்குகளில் இருந்து தப்பி சட்டத்தின் முன்னால் உத்தமராகிவிடுகின்றனர். 
இனி வரும் காலங்களிலாவது நவீன தொழில்நுட்பத்தை நல்ல வகையில் உபயோகித்து,  தங்கள் வாரிசுகளின் நடவடிக்கையை பெற்றோர் கூர்ந்து கவனித்து தவறுகளுக்கு வாய்ப்பளிக்காமல், திரைத் துறையினரும் சமூக அக்கறையுடன் செயல்பட்டால் இதுபோன்ற கொடூர வன்கொடுமைகளை பெருமளவு குறைக்கலாம். 
கணியன் பூங்குன்றனாரின் "தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்ற கூற்றுக்கு ஏற்ப, பெரும்பாலான துன்பங்களுக்கு அவரவர் நடத்தையும் அணுகுமுறையுமே காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com