Enable Javscript for better performance
மனவளக் கலை தந்த மகான்!- Dinamani

சுடச்சுட

  


  இப்போது உலகெங்கிலும் நிலவும் அமைதியின்மைக்குக் காரணம் அன்பு இல்லாமையே.  நீங்கள் அன்பு வைத்திருக்கும் ஒருவருக்குத் தீங்கு செய்வீர்களா?  ஒருவேளை அவர் தெரிந்தோ தெரியாமலோ தீங்கு செய்தாலும் நீங்கள் மன்னித்து விடுவீர்களா, இல்லையா?  பிறகு எப்படி வரும் சண்டை சச்சரவுகள்?  ஆகவே, அடிப்படைக் காரணம் அன்பில்லாமையே.  இதை உலகுக்கு வலியுறுத்த எளிய வழிகளைத் தந்து வாழ்ந்து காட்டிய வேதாத்ரி மகரிஷியின் நினைவு தினம் இன்று (மார்ச் 28).
  பல இடங்களில் பலவிதமாக பரிமாணம் எடுக்கிறது அன்பு.  தாய், தந்தை, உற்றார், உறவினர், நண்பர், அயலார் என எங்கு நோக்கினும் நாம் அன்பு செலுத்தி வாழவே மக்கள் இருக்கிறார்கள்.  ஆனால், நமக்குள் இருக்கும் குறுகிய மனப்பான்மையும் மனதிலே கொண்டிருக்கிற அழுக்குகளின் காரணமாக நம்மால் பிறரிடம் எளிதில் அன்பு செலுத்த முடிவதில்லை.  தற்கால பிரச்னைகளுக்குக் காரணம் உண்மையுணராமையும் ஒழுக்கமின்மையும் என்று ஒற்றை வரியில் கூறலாம். எனினும் எது உண்மை, எது ஒழுக்கம் ஆகியவை குறித்து இந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகான் வேதாத்ரி மகரிஷி  ஆழ்ந்து சிந்தித்துத் தீர்வுகளை வழங்கியிருக்கிறார்.  
  அவர் தந்த 14 அம்சத் திட்டத்தில் முதன்மையான போர் இல்லாத உலகில் எத்தகைய நன்மைகள் தெரியுமா? உலக மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ முடியும்.  பொருள் துறையில் சமநீதி எனப்படும் ஒன்றிணைந்த பொருளாதார வளர்ச்சி என்பது உலக மக்கள் அனைவருக்கம் ஏற்றதாக சமமான சமதர்ம சமுதாயமாக வாழ வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்டவை ஆகும். தனித்தனி ஆட்சி முறைகளை ஒழித்து உலகம் முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வருதல் ஆகும்.  இதன் மூலம், நாடு என்ற பிரிவினை இல்லாமல் உலகம் என்ற விரிவான சிந்தனையோடு பிணக்குகள் இன்றி வாழ முடியும். பண்பாட்டு முறைகள் சீர் செய்யப்பட்டு உலகம் முழுவதுக்கும் ஒத்ததாக உருவாக்க வேண்டும்.
  சிந்தனையோர் வழி வாழ்வு என்பது மனிதனாகப் பிறந்தவன் தவறு செய்வதற்குக் காரணம் சிந்தித்து வாழாததுதான்.  மனிதன் தவறு செய்பவன்தான்; இறைவன் மன்னிப்பவன் என்று அனைவரும் சொல்லித் தப்பித்துக் கொள்கின்றனர்.  முறையற்ற பால் கவர்ச்சி காரணமாக தனி மனித ஒழுக்கம் கெட்டு விடுகிறது என்பது உண்மைதான்.  தெய்வ நீதி வழிவாழ்தல் என்பது, அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பதுபோல ஒருவன் தவறு செய்தால் சமூகம் தண்டிக்கிறதோ, இல்லையோ தெய்வ நீதி எனப்படும் இயற்கை நியதி தண்டித்து விடும்.
  செயல்விளைவு உணர் கல்வி என்பது இன்றைய சூழலில் மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வியாகும். கல்வி முறையில் முறைப்படி எழுத்தறிவு, தொழில் அறிவு, ஒழுக்க பழக்க அறிவு, இயற்கை தத்துவ அறிவு ஆகியவற்றை வழங்க வேண்டும்.  இயற்கையை உணர்ந்தால்தான் செயலுக்கான விளைவை உணர்வர்.  சீர்காந்த நிலை விளக்கம் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்தும் காந்த சக்தி மூலமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அனைவருக்கும் விளக்க வைத்தல் என்பதாகும்.  
  உலகம் முழுதும் உணவுநீர் பொதுவாக்கல் என்பதன் மூலம் இன்றைய சமூக அவலங்கள் பலவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். பல மதம் கடவுள் ஒழித்து உண்மை ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் என்பதன் நோக்கம் நமக்குப் புரியத்தான் செய்கிறது.  காரணம், இன்று உலக பிரச்னைகளுக்கு அடிப்படையான மிக மிக முக்கியமான காரணமாக இருப்பது மதம்தான்.  அனைவரும் ஏற்கும் ஒரு சக்தியை தெய்வமாக அறிவித்து அனைவரும் ஏற்று நடந்தால் உலகம் அமைதியாகும் என்பதில் சந்தேகமில்லை. இல்லற வாழ்க்கையை நன்றாக நடத்த பெற்றோர், வாழ்க்கைத் துணை, பெற்ற மக்கள் ஆகிய மூவரும் நன்றாக வாழச் செய்தலே ஒருவரின் தலையாய கடமையாகும். 
  இறைவன் என்ற முழுமையிலிருந்து வந்த மனிதன், தன்னுள் ஏற்படுத்திக்கொண்ட களங்கங்கள் காரணமாக இறைவனின் தன்மையான அன்பு, கருணையிலிருந்து வெகுதூரம் விலகிப் போயிருக்கிறான்.   இவ்வளவு அரிய செய்தியை நமக்கு வழங்கினாலும் சிறுதுளி கர்வம்கூட இல்லாமல் பயிற்சிக்கு வரும் அன்பர்களிடமெல்லாம், நான் எனக்குத் தெரிந்ததை சொல்லியுள்ளேன். நீங்களும் உங்கள் அறிவுக்கு சிந்தித்து மேலும் பல விளக்கங்களைக் கண்டு இந்த சமுதாயத்துக்குக் கூறுங்கள் என்று தன்னடக்கமாக சொல்லும்போது வேதாத்ரி மகரிஷியின் தரம் நமக்கு விளங்குகிறது.  
  மனிதர்களிடையே நல்லிணக்கம் உருவாக இரண்டொழுக்கப் பண்பாடு எனும் கருத்தை வழங்கிய அவர் அதில்  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்; துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்பதன் மூலம் அன்பு பரவுவதை உணரலாம். மேலும், இன்றைய சமூகத்தில் நிலவிவரும் பல்வேறு தீய பழக்கங்களைப போக்கவும் சில வழிமுறைகளை ஐந்தொழுக்கப் பண்பாடு என வழங்கியுள்ளார்.  
  அதில் புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்;  போதை, போர், பொய், புகை ஒழித்து அமல் செய்வோம்; அதிக சுமை ஏதுமில்லை; அவரவர் தம் அறிவின் ஆற்றலினால் உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்  மதிபிறழ்ந்து; மற்றவர்கள் மனம் உடல் வருந்தா மாநெறியும் உணவுக்குயிர் கொல்லாத நோன்பும்;  பொதுவிதியாய்ப் பிறர்பொருளை வாழ்க்கைச் சுதந்திரத்தைப் போற்றிக் காத்தும்;  பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும் என வேண்டுகிறார்.  உடல்தான் மனித வாழ்விற்கு மிக அவசியம். உடல் நன்றாக இருந்தால்தான் மனம் நன்றாக இருக்கும்.   பின்னர் வாழ்க்கை இனிதாக அமையும்.
  எனவே, உடல் நலனுக்காக உடற்பயிற்சியும் மன நலனுக்காக மனவளக்கலை என தவம் தற்சோதனை காயகல்பம் மற்றும் தத்துவ விளக்கப் பயிற்சிகளும் வழங்கியவர் வேதாத்ரி மகரிஷி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai