தேர்தல் ஆணையம் அதிரடி!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய 17-ஆவது மக்களவைக்கான ஏழு கட்டத் தேர்தல் விரைவில் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய 17-ஆவது மக்களவைக்கான ஏழு கட்டத் தேர்தல் விரைவில் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 19) மீதமுள்ள 8 மாநிலங்களிலுள்ள 59 மக்களவைத் தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பிகார் (8), ஹிமாசலப் பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), மத்தியப் பிரதேசம் (8), பஞ்சாப் (13), உத்தரப் பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), சண்டீகர் (1) என எட்டு மாநிலங்களிலுள்ள 59 மக்களவைத் தொகுதிகள் ஏழாவது, அதாவது இறுதிக் கட்டத் தேர்தலைச் சந்திக்கின்றன. பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேசம் வாராணசி தொகுதியும் இதில் அடக்கம்.  மே 23-ஆம் தேதியன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இல்லாத அளவுக்கு, தலைவர்களின் தரக்குறைவான தேர்தல் பரப்புரைகளை இந்தத் தேர்தலில் காண முடிந்தது. இதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் விதிவிலக்கல்ல. கடைசியாக, நாட்டின் முதல் தீவிரவாதி இந்து மதத்தைச் சேர்ந்தவர் (மகாத்மா காந்தியைச் சுட்ட நாதுராம் கோட்úஸ) என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் பேசி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். நான் பேசியது வரலாற்று உண்மை என பரப்புரையில் தொடர்ந்து அவர் விளக்கம் அளித்து வருகிறார்.
பொதுவாக, தங்கள் கடந்தகால ஆட்சியில் அல்லது தற்போதைய ஆட்சியில் முன்னுரிமை அளித்து நிறைவேற்றிய திட்டங்களைப் பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பது வழக்கமாக இருந்தது. தற்போது அந்த மனநிலை மாறி,  ஜாதியை முன்னிறுத்திப் பேசுவது, சிறுபான்மையினரைக் கவரும் வகையில் பேசுவது, எதிர்க்கட்சியினரை வசை பாடுவது என இந்தத் தேர்தல் பரப்புரை வாக்காளர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் பல்வேறு திசைகளில் திக்குத்தெரியாமல் பயணித்ததைப் பார்க்க முடிந்தது.
மேற்கு வங்க மாநிலம் தவிர மேலே குறிப்பிட்ட  மக்களவைத் தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17-ஆவது மக்களவைத்   தேர்தல் பரப்புரையில் வரம்பு மீறிப் பேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில், அவர்களின் பரப்புரைக்கு ஓரிரு நாள்கள் தடையையும் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே பிறப்பித்து தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளது.
இந்தத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் தொடர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் உச்சகட்ட தேர்தல் பரப்புரை விமர்சனங்களே இதற்குக் காரணம். பாஜகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து வருவதே இரண்டு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்குக்கு சான்றாகும்.
இறுதியாக மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றபோது, அதில் பங்கேற்றவர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கற்களால் சரமாரியாகத் தாக்கினர்; இதைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை பாஜகவினர் விரட்டத் தொடங்கி வன்முறைச் சூழல் உருவானது. தொடர்ந்து சமூக சீர்திருத்தவாதி ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை 6 கி.மீ. தொலைவுக்கு பேரணி சென்றார்.
இந்த நிகழ்வின் உச்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் மீதம் உள்ள 9 மக்களவைத் தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 19) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மே 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நிறைவடைய இருந்த தேர்தல் பிரசார காலக்கெடுவை வியாழக்கிழமையே (மே 16) முடித்துக் கொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க கொந்தளிப்புச் சூழ்நிலையைத் தணிக்கவே இத்தகைய முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
தேர்தல் பரப்புரையை ஒருநாள் முன்னதாக முடித்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு அளித்துள்ள விளக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் 324-வது சட்டப்பிரிவின்படி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடினமான நேரங்களில் தேர்தல் பரப்புரையை நிறுத்தி வைக்கும் அல்லது நிர்ணயிக்கப்பட்ட பரப்புரை தேதியை முன்கூட்டியே மாற்றி அமைக்கும் அதிகாரத்தை இந்த சட்டப் பிரிவு (324) வழங்கியுள்ளது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை எனக் கூறப்படுகிறது. தேர்தல் நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, வன்முறைச் சூழல் எங்கு ஏற்பட்டாலும் இதுபோன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தனது அதிரடி உத்தரவின் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியின் மீது புகார் கூறும் மற்றொரு கட்சி, எப்போதுமே தங்கள் பக்கம்தான் நியாயம் இருப்பதாகக் கூறுகிறது. புகார் கூறும் அனைத்துக் கட்சிகளுமே இதே நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளன. வரும் காலங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரங்களை அளிக்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்தியில் புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு எடுக்க வேண்டும் என்பதே 
நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com