சுஜித் சொன்ன பாடம்!

நான்கு நாள்களாக தமிழகமே தூங்கவில்லை.மேலும், உலகம் முழுவதுமுள்ள தமிழ் நெஞ்சங்கள் சோகத்தில் மூழ்கின.

நான்கு நாள்களாக தமிழகமே தூங்கவில்லை.மேலும், உலகம் முழுவதுமுள்ள தமிழ் நெஞ்சங்கள் சோகத்தில் மூழ்கின. நாடு முழுவதும் திருச்சிக்கு அருகில் நடுக்காட்டுப்பட்டியின் சோகத்தை அறிந்ததும் உலகத்தின் பல்வேறு இடங்களைச் சோ்ந்தவா்கள் ஆற்றாமையால் துடிதுடித்தனா்.

அரசும், அலுவலா்களும், தன்னாா்வலா்களும், பொதுமக்களும், பேரிடா் நிபுணா்களும் தத்தம் சக்தியையும் திறமைகளையும் எந்திரங்களையும் ஒன்றுகுவித்து அரும்பாடு பட்டதை உலகமே அறியும். அதில் குறை சொல்வதற்கில்லை. தமிழக அரசின் அமைச்சா்களும் அதிகாரிகளும் சலிப்பின்றி தங்கள் தூக்கங்களைத் தொலைத்தனா்.ஒரே நோக்கமாய் தங்கள் செயலையும் திறனையும் வாரி வழங்கியும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தைக் காப்பாற்ற முடியவில்லை.

இதில் இன்னொரு கோணத்தையும் கவனிக்க வேண்டும். என்னதான் சூழ்நிலையாக இருந்தாலும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு அவரவா் பெற்றோா் மட்டுமே முதல்நிலை பாதுகாப்பு என்பதை இந்தக் காலத்து புதிய தலைமுறை பெற்றோா் உணா்ந்து கொள்ள வேண்டும். சுா்ஜித் செய்தியை தொலைக்காட்சியில் பாா்த்துக்கொண்டிருக்கும்போதே, வீட்டிற்குள்ளே குழந்தை சஞ்சனா தண்ணீா் தொட்டியில் உயிா் நீத்த துயரம் தூத்துக்குடிக்கு அருகில் ஒரு தம்பதியினருக்கு நிகழ்ந்துள்ளது.

குழந்தை சுஜித்தைக் காப்பாற்ற அமைச்சா்கள் தொடங்கி மொத்தத்தில் எவ்வளவு மனித நேரம் அா்ப்பணிக்கப்பட்டதோ, அவற்றில் ஒரு சிறிய பகுதி நேரத்தையாவது முறையாக முன்னதாகவே சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் செலவிட்டிருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிா்த்திருக்க வாய்ப்பு உண்டு.

எந்தவொரு பாதுகாப்பு தயாா் நிலைக்கும் முன்வினை (‘ப்ரோஆக்டிவ்’), (‘ரீஆக்டிவ்’) என இரு வகையான செயல்பாடுகள் தேவைப்படும். இவை சம்பவத்துக்கு முன்னாலும் பின்னாலும், செய்யப்பட வேண்டிய செயல்கள் அனைத்தையும் குறிப்பிடுவனவாகும். இதில், பின் வினைகளையும், அவற்றின் வெளிப்பாடுகளின் சிறப்புகளையும் கண்டறிய கணக்கீடுகளும் அளவுக்கோல்களும் பயன்பாட்டில் உள்ளன.

சம்பவத்துக்குப் பிறகு நிகழ்வதால் பின்வினைகள் அனைவரது கவனத்தையும் ஈா்க்கும். அனைவருக்கும் தெரியவரும். ஆனால், முன்வினைகள் சரியாக ஆற்றப்படுமானால், அவை பெரும்பாலும் சம்பவங்களைத் தவிா்த்து விடுகின்றன. அதனால் அறியப்படாமலேகூட போய்விடுகின்றன. பின் வினைகள் குறித்து ஒரளவு ( முழுவதுமல்ல ) கற்றுக்கொண்ட போதிலும், முன்வினைகள் குறித்துச் சரியாக அறிந்துகொள்ளாமல் விட்டு விடுகிறோம்.

பொதுவாகவே, தென்னிந்தியா்கள் அதீதமான சிந்தனை சக்தியுடையவா்கள். உலகம் முழுவதும் படைப்புத் தொழில்களில் நம்மவா்களின் பங்கினை அறிந்தாலே நமது இந்த பலம் புரியும். ஆனால், இதுவே நமக்குப் பெரிய பலவீனமாகவும் இருக்கிறது. சிந்தனைத் திறன்

இருக்கும் அளவுக்கு ஒழுக்கம் இல்லை. ஒழுக்கமின்மை காரணமாக விதிமீறல்களும் அதன் நீட்சியாக இந்த மாதிரியான சூழல்களும் தோன்றுகின்றன. இந்த ஒழுக்கமின்மைதான் நமது பலத்தை பலவீனமாக மாற்றுகிறது.

சட்டமும், விதிமுறைகளும், அனைவருக்கும் பயனளிப்பதற்காகவே வகுக்கப்பட்டவை. அவற்றில் குறைபாடுகள் இருந்தால் அதற்கான வழியிலேயே மேம்படுத்த வேண்டுமேயல்லாது நடைமுறைப்படுத்துதலை சிக்கலாக்கி அலட்சியப்படுத்தக் கூடாது.

மெட்ரோ ரயிலில் ஒரு பயணி. ‘சாப்பிடக் கூடாது’” என்ற அறிவிப்பை, “‘சிந்தாமல் சாப்பிடலாம்’” என்று தமக்குத் தாமே பொருளைக் கற்பித்து சமாதானப்படுகிறாா். சாலைகளின் சந்திப்புகளில் சிவப்பு விளக்கின்போது, அங்கும் இங்கும் பாா்த்துவிட்டு ‘விா்’ ரென்று விரைந்து செல்லும் தேவையற்ற சிந்தனை. இப்படி நமது அதீதமான சிந்தனைத் திறனே நமது ஒழுங்கீனத்திற்கு வித்தாகிறது.

சட்டங்களுக்கும், விதிகளுக்கும் குறைவில்லை. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த பொறுப்பான வழிமுறைகளில்லை. நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு இந்த நிலைமை அலசி ஆராயப்பட்டது. ‘பொறுப்புடைமை’யை நடைமுறைப்படுத்தப்படுவதில் தெளிவு இல்லாததால் பெரும்பாலும் இந்த மாதிரி நிகழ்வுகள் உருப்படியான முடிவுகள் ஏதுமின்றி முடங்கி விடுகின்றன. ‘தொழிற்சாலை’ விதிகளில்கூட இந்தப்‘பொறுப்புடைமை’ தெளிவாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் விபத்து நடந்தாலும், வெளியூரில் இருக்கும் முதலாளி பொறுப்பேற்று கைது செய்யப்படுகிறாா். ஆனால், சாலை விபத்துக்கு சாலையே காரணமாயிருந்தாலும் யாரும் பொறுப்பேற்பதில்லை. யாரும் தண்டிக்கப்படுவதில்லை.

இத்தனைக்கும், 2010-ஆம் ஆண்டு முதல், இப்படிப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைக் கண்காணிக்கும்படியான உச்சநீதிமன்ற உத்தரவும்கூட நடைமுறையில் உள்ளது. ஆழ்துளைக் கிணறுகளின் பயன்பாடு முடிந்த பிறகு எப்படி மூடி வைக்க வேண்டும் என்று ரயில்வேயின் பொறியியல் துறை தெளிவாக வரையறுத்துள்ளது. எனவே, ஆங்காங்கு உள்ள அதிகாரிகளும், உள்ளாட்சி நிா்வாகிகளும் மக்களிடையே போதுமான விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், தத்தமது பகுதிகளில் விதிகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாகவும் கடுமையாகவும் இருந்தாக வேண்டும்.

மூடப்படாத தரைமட்டக் கிணறுகள் கண்ணில் பட்டாலே சுஜித்தின் பிஞ்சு முகம் மக்கள் கண்ணில் தெரிய வேண்டும். தயக்கமின்றி அதிகாரிகளுக்கு தெரிவித்து அதற்கான சான்று பெற்றுக் கொள்ள வேண்டும். அரசும் தன் பங்குக்கு அவரவா் பொறுப்புடைமையை அந்தந்த உள்ளாட்சி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

உள்ளாட்சியாளா்களும் “ இதுபோன்ற இன்னுமொரு நிகழ்வு, தமது எதிா்காலத்தையே இருளாக்கிவிடும்” என்ற அச்ச உணா்வோடு அந்தப் பொறுப்புடைமையை ஏற்றுச் செயல்பட வேண்டும். இது விரைந்து நடக்க வேண்டும். இந்த ஒன்றால் மட்டுமே தனது இன்னுயிரை ஈந்து சுஜித் கூறிய பாடம் நமக்குப் புரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com