Enable Javscript for better performance
உலகை ஈர்க்குமா "பாக்தாத்' போராட்டம்?- Dinamani

சுடச்சுட

  

  இராக் தலைநகரம் பாக்தாத் பெரும் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் வயது வித்தியாசமின்றி அரசுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர். 
  கடந்த மாத ஆரம்பத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் ஒரு தீர்வு கிடைக்கும் வரை முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. முன்னாள் அதிபர் சதாம் உசேன் 2003-இல் அமெரிக்கப் படைகளால் வீழ்த்தப்பட்ட பின்பு இதுபோன்ற போராட்டத்தை இராக் கண்டதில்லை என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.
  பிரதமர் அதெல் அப்துல் மஹ்தி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான வழக்கமான ஒரு போராட்டம் என ஒதுக்கிவிட முடியாது. பிரதமரோ, குறிப்பிட்ட அமைச்சர்களோ மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அரசியல் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் போராட்டக்காரர்கள். 
  சதாம் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்ட அரசும், அதன் பிறகு தொடர்ந்து அமைந்த அரசுகளும் குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு என அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் இப்போது வரை தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
  அமெரிக்காவின் ஊடுருவல், அதைத் தொடர்ந்து, ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போர் என, 16 ஆண்டுகளாக தினசரி வாழ்க்கையே போராட்டமான நிலையில், இப்போது வாழ்க்கைப் போராட்டத்துக்காக வீதியில் இறங்கியிருக்கிறார்கள் இராக் மக்கள். இவர்களுக்குத் தலைவர்கள் என யாரும் இல்லை, போராட்டத்தை முன்னெடுத்து நடத்துபவர்கள் எனவும் யாரும் இல்லை, அரசியல் கட்சிகளையும் தங்கள் பக்கம் நெருங்கவிடுவதில்லை. முழுக்க தன்னெழுச்சியான போராட்டம்.
  பாக்தாதில் திக்ரி நதிக்கரையில் உள்ள தஹ்ரீர் சதுக்கம்தான் பொதுமக்களின் போராட்ட மையம். அப்பகுதியில் உள்ள 16 மாடி கட்டடத்தில்தான் போராட்டக்காரர்கள் தங்கியுள்ளனர். ஒரு காலத்தில் "துருக்கி ஹோட்டல்' என அழைக்கப்பட்ட வணிக வளாகமான இக்கட்டடம், இராக் போரின்போது அமெரிக்கப் படையால் குண்டு வீசித் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அக்கட்டடம்தான் போராட்டக்காரர்களுக்கு இப்போது கைகொடுக்கிறது.
  இதற்கு அருகேயுள்ள "பசுமை மண்டலம்' என அழைக்கப்படக்கூடிய அரசு அலுவலகங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய கேந்திரங்கள் அமைந்துள்ள பகுதியை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி வருகின்றனர். ஆனால், தேசியக் கொடியைத் தவிர, கையில் வேறெதையும் ஏந்தாமல் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை இராக் அரசு எதிர்கொண்ட விதம், சீனாவின் தியானென்மென் சதுக்க போராட்ட அடக்குமுறையை நினைவுபடுத்துவதாக உள்ளது. காவல் துறையும், ராணுவமும் சேர்ந்து பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; 10,000-த்துக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.
  இந்தப் போராட்டத்தில் நாட்டின் அதிபர் பர்ஹாம் சலே பொதுமக்கள் பக்கம் இருப்பது ஆறுதலான விஷயம். அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். பிரதமர் அப்துல் மஹ்தி மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
  பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஐ.நா. சபையும் வலியுறுத்தியுள்ளது. வீடுதோறும் அடிப்படை ஊதியம் வழங்க வகை செய்யும் சட்டத்தை இயற்றுவது என்பது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 
  "பிரச்னைகளுக்குத் தீர்வுகாண மந்திரம் எதுவும் இல்லை; அதற்குக் கால அவகாசம் தேவை' என பிரதமர் கூறியதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
  "நல்ல வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள்' என உலகின் அனைத்து சாமானிய மக்களைப் போலவே இராக் மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், உலகின் பெரும்பாலான அரசுகள் போலவே, இராக் அரசுக்கும் இது தெரிவதில்லை.
  "எனது கையில் 250 லிரா (இராக்கிய பணம்- இந்திய மதிப்பில் சுமார் 20 ரூபாய்) மட்டுமே உள்ளது; அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளிடம் லட்சக்கணக்கில் உள்ளது. இந்த அரசு வீழும் வரை இங்கிருந்து போகமாட்டோம்'- தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் ஒருவரின் ஆவேசம் இது. 
  தங்கள் நாட்டு அரசியலில் அண்டை நாடான ஈரானின் தலையீடு இருப்பதை இராக் மக்கள் அறவே வெறுக்கிறார்கள். அமெரிக்கப் படைகள் இராக்கை விட்டு வெளியேறிய பிறகு ஈரானின் செல்வாக்கு இராக் அரசையே கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துவிட முடியாது. 
  "ஈரான் உள்பட எந்த நாடும் எங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது; எங்கள் நாட்டை எங்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்' என போராட்டக்காரர்கள் உயிரைக் கொடுத்து எழுப்பும் குரல் உலகத்தின் காதுகளுக்குக் கேட்குமா?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai