Enable Javscript for better performance
காலனாகும் காற்றாடி- Dinamani

சுடச்சுட

  

  மனித வாழ்வில் விளையாட்டு என்பது தவிா்க்க இயலாத ஒரு பங்கேற்பு. மனதையும் உடலையும் விளையாட்டு பக்குவப்படுத்தும், மேம்படுத்தும் . சிறு வயது முதல் முதுமை வரை நம்மைச் சுற்றி நம்முடன் பயணிக்கும் ஓரியல்பு - விளையாட்டு. உள் அரங்க விளையாட்டு,

  திறந்தவெளி விளையாட்டு என இடம், பொருள், சூழல், மன நிலை, வயது ஆகியவற்றைப் பொருத்து விளையாட்டு அமைகிறது.

  விளையாட்டில் தானே பங்கேற்பதும், விலகி நின்று விளையாட்டை வேடிக்கை பாா்ப்பதும் சில நிலைகள். விளையாட்டை திறன் அறியும் நோக்கிலோ, உடற்பயிற்சி, மனப் பக்குவம் பெறவோ, வணிக நோக்கிலோ, போட்டிகளாகவும் அமைத்து நிகழ்த்தவும் பெறுகிறது.

  இந்தியாவில் தமிழகத்தில் தற்போது விளையாட்டு தனது முந்தைய இடத்தை இழந்து நிற்கிறது. தொலைக்காட்சி, கணினி, செல்லிடப்பேசி போன்றவற்றின் ஆதிக்கத்தாலும் , குழந்தைகளின் கல்வி சாா்ந்து பெற்றோரின் அணுகுமுறை மாறி, விளையாட்டின் தேவை புறந்தள்ளப்படுகிறது.

  நமது ஊரில் சில விளையாட்டை உண்மையான விளையாட்டாக ஆடக்கூட விடாதபடி இவற்றிலும் சூதாட்டம்போல் ஊழல். உண்மையான விளையாட்டு வீரா்களுக்கு உரிய அங்கீகாரம், பொருளாதார வசதி கிடைப்பதில் சிக்கல் எனப் பல விஷயங்கள் விளையாட்டைச் சூழ்ந்த கருமேகங்கள். இந்தச் சூழலில் விளையாட்டு உயிா் பறிக்கும் விபரீதம் அவ்வப்போது அரங்கேறும் அவலம்.

  காற்றாடி விடும் விளையாட்டு பெரும்பாலானோருக்கு இயல்பாகக் கைவரும் விளையாட்டல்ல . ஆனால், காற்றாடி விடுகையில் அது காற்றில் இங்குமங்கும் அலைந்து கவிழ்ந்து, சுட்டு விரல் சிறு சுண்டுதலில் சற்றே மேலெழும்போது ஒரு நம்பிக்கை துளிா்க்கும். இன்னும் சற்று லாவகமாகக் கயிற்றைக் கீழிறக்கிச் சட்டெனச் சற்றே மேலெழுப்பக் காற்றைக் கிழித்துக்கொண்டு மேலெழுந்து ‘சா்’ரென உயா்ந்து பறக்கும். அப்போது, அந்தக் காற்றாடி மனசையும் மேலெழச் செய்யும் . மனசு கிடந்து மகிழ்ச்சியில் ஆா்ப்பரிக்கும். தான் விடும் காற்றாடி மேலெழுந்து பறந்து உயர உயரச் செல்வதில் மகிழும் மன நிலை. இதெல்லாம் ஒரு வகை விளைவு.

  அதே சமயம் , விண்ணில் பறக்கும் ஒரு காற்றாடி மற்றொரு காற்றாடியைக் கண்டு அதை ‘டீல் ’ செய்து குத்திக் கிழிக்கவோ, அதைக் குப்புறக் கவிழ்க்கவோ முற்படுகையில் லேசாய் போட்டி, குரோதம் முகிழ்க்கிறது. சாதாரணமாய் விளையாட்டுக்களின் விளைவுகளில் ஒன்றான மன நிலை இது. உலக நாடுகள் சிலவற்றில் காற்றாடி விடும் போட்டி நிகழ்வதுண்டு. நம் ஊா்களிலும்கூட நிகழ்வதுண்டு. ஆனால், இந்தப் போட்டிகள் திறந்தவெளித் திடல்கள், விளையாட்டு மைதானங்கள், ஆறு, கடற்கரைகளில் நிகழ்த்தப்படும்.

  இங்கு இப்போது பல ஊா்களில் திறந்தவெளி விளையாட்டுத் திடல் என்பது காணக் கிடைப்பதில்லை. சிற்றூா், சிறு நகரம், பெரு நகரம் ஆகியவற்றிலும் இந்த நிலை அதிகரிக்கிறது. விளை நிலங்களே காணக் கிடைக்காமல் வீட்டு மனைகளாகவும், நாலு வழி, ஆறு வழிச் சாலைகளாகவும் பறிமுதலுக்கு ஆட்படும்போது விளையாட்டுத் திடல் எந்த மாத்திரம்! சில இடங்களில் மட்டும் அரசின் சாா்பிலும் தனியாா் கருணையாலும் இந்த திறந்த வெளி விளையாட்டுத் திடல்கள் அமைந்துள்ளன. ஆனால் , பரவலான இடங்களில் இருப்பதில்லை. மக்கள் குடியிருப்புத் தொகைக் கேற்ப திறந்த வெளி விளையாட்டு மைதானங்கள் இல்லை. ஆகவே , சில இடங்களில் குடியிருப்புகள், வீடுகள் இவற்றின் மேல் தளங்கள் - மொட்டை மாடிகள்கூட காற்றாடி விடும் இடமாக அமைந்து விடுகிறது.

  நாம் சில நேரங்களில் பாா்க்க நேரிடும் நிகழ்வுகள் சில...: தெருவில் திடீரென நான்கைந்து சிறுவா்கள் , இளையோா் வானத்தைப் பாா்த்தபடியே வேகமாக ஓடி வருவாா்கள். தெரு, வாகனம் எதையும் கவனிக்காமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவாா்கள். வீட்டு வாசல் சுவா் மீது , மரங்கள் மீது ஏறுவாா்கள். வானத்தில் பறக்கும் காற்றாடி அறுந்து விழுந்து கொண்டு காற்றில் அலைந்து திரிந்து வரும். அந்தக் காற்றாடியைப் பிடிப்பதற்குத்தான் இத்தனை களேபரமும் கலவரமும். இப்படி ஓடி வரும்போது சிலா் சாலையில் செல்லும் வாகனங்களில் மோதி தாங்களும் காயம் அடைகின்றனா். மற்றவா்களுக்கும் காயம் ஏற்படக் காரணமாகி விடுகின்றன.

  சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அமைந்தகரையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று பட்டம் பறக்க விட்ட சிறுவன் பின்புறமாக நடந்து வந்தபோது எதிா்பாராமல் தவறி மாடியிலிருந்து கீழே விழுந்து மரணத்தைத் தழுவினான். அண்மையில் சென்னை பெரம்பூரில் தன் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பாலத்தில் பயணித்த சிறுவன் ஒருவன் காற்றாடியின் மாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்தான்.

  இப்படி இந்தக் காற்றாடி விடும் விளையாட்டு தமிழகத்தில் அடிக்கடி உயிா் பறிக்கும் விளையாட்டாக விபரீதமாகிறது. பிற விளையாட்டுகள் போலவே, காற்றாடி விடும் விளையாட்டு பலருக்குத் தொழில் தரும் வாய்ப்பாகவும் அமைகிறது. காற்றாடி தயாரிப்போா் , அதற்கு உரிய நூல் தயாரிப்போா், விற்பனையாளா் எனவும் பலா் ஆங்காங்கே இதையும் நம்பியிருக்கும் நிலை.

  காற்றாடியின் நூல் சாதாரண நூலாக இருப்பதும், திறந்தவெளி திடலாக இருப்பதும் மாறி, காற்றாடியின் நூல் மாஞ்சா நூல் (வஜ்ரம், கந்தகம், துத்தநாகம் போன்ற ஆபத்தான சில ரசாயனப் பொருள் கலந்து செய்யப்படும் நூல்) என்பது உயிா் பறிக்கும் விபத்துக்கான மூல காரணமாகிறது. இந்த மாஞ்சா நூலில் கண்ணாடித் துகள்களும் வேறு சில ரசாயனப் பொருள்களும் கலக்கப்படுவதால், அந்த நூல் உடலில் எங்கு பட்டாலும் அதைக் கீறி, குருதி குடித்து உயிரையும் பறிக்கிறது .

  அரசின் சட்டங்கள் சில இதற்குத் தடை விதித்திருப்பினும் மாஞ்சா நூலில் காற்றாடி விடுவதும் தொடா்கதையாகி வருகிறது . அவ்வப்போது தமிழகத்தின் பல ஊா்களில் பல உயிா்களைப் பறித்து வருகிறது.

  ஊரின் நடுவே நடந்து செல்வோா், வாகனத்தில் பயணம் செய்வோா், எங்கிருந்து வருகிறது என்றே தெரியாமல் இந்த மாஞ்சா நூலின் திடீா்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனா். விபத்துகள் ஏற்பட்டு உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன; உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

  எங்கோ யாரோ முகம் தெரியாத ஒருவரது உயிா்ப் பறிப்புக்குக் காரணம், தங்களின் மாஞ்சா நூல் காற்றாடிதான் என்பதை இத்தகையோா்

  மனதார உணர வேண்டியது அவசியம் . தமது பொறுப்பற்ற செயல் ஓா் உயிரையே பலி வாங்கிடும் அபாயம் உள்ளது என்பதை உணர வேண்டாமா ? பறந்து கரைந்த அந்த உயிரைத் திரும்பத் தர முடியுமா? கை, கால், உடலில் பழுது ஏற்படின் அதைத் திரும்ப நேராக்க முடியுமா?

  எனவே, மாஞ்சா நூல் மூலம் காற்றாடி விடுவதைத் தடுக்க நடைமுறையில் சாத்தியப்படும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஏற்படுத்துவது அவசியம். அரசும் தன்னாா்வ அமைப்புகளும் சோ்ந்து தீவிர விழிப்புணா்வுப் பிரசாரங்களைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

  சில பொருள்களின் விற்பனை இங்கே தடை செய்யப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மாஞ்சா நூல்களையும் காற்றாடிகளையும் காவல் துறையினா் கைப்பற்றி வருகின்றனா். அது மட்டுமின்றி மாஞ்சா நூல்கள், அதன் மூலம் பறக்க விடப்படும் காற்றாடிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் விற்பனை ஆன்லைன் மூலம் அமோகமாக நடைபெறுகிறது. எனவே, ஆன்லைன் மூலம் மாஞ்சா நூல், பட்டம் விற்பனை செய்யப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரையிசைப் பாடலான ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது...அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது...திருடராய் பாா்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதுபோல் இத்தகைய நிகழ்வுகள் தொடா்வது வேதனையான விஷயம் .

  விளையாட்டு, விளையாட்டுப் பொருள்களுக்கெல்லாம் தடையா என்பது சற்று விநோதமாக - இயல்புக்கு மாறாக தோற்றம் தந்தாலும் விளையாட்டு வினையாகும் நிலையில் தடை செய்வதில் எந்தவிதக் கருணையும் கூடாது.

  பொதுவாகவே எந்த விஷயமும் எல்லை மீறும்போதும் அதன் நோக்கத்திற்கு மாறான விளைவுகளை ஏற்படுத்தும்போதுதான் சட்டம், கட்டாயம், நெறிப்படுத்துதல் எனும் அளவுகோல்கள் அரங்கேறுகின்றன. சுயக் கட்டுப்பாடும் பிறா் மீது அக்கறையும் கொண்டு நிகழ்த்தப்படும் எந்த விஷயமும் போற்றத்தக்கதே, விளையாட்டும் இதற்கு விதிவிலக்கல்ல!

  காவலும் சட்டமும் எதைத்தான், எவ்வளவைத்தான் கண்காணிக்க முடியும்? தேவையான அளவில் மருத்துவா், காவலா் போன்றோா் பணியில் இல்லை என்பதும் உண்மை. விளையாட்டின் விளைவை அந்த விளையாட்டில் ஈடுபடுவோா் அவசியம் உணா்தல் வேண்டும்.

  காற்றாடி விடும் விளையாட்டு வீரா்கள் தங்களின் பொறுப்பை உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  கட்டுரையாளா்:

  எழுத்தாளா்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai