தன்னம்பிக்கையே மகிழ்ச்சியின் வித்து!

‘கடன் சுமை காரணமாக மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை’ என்ற செய்தியை அடிக்கடி பாா்க்கிறோம்.

‘கடன் சுமை காரணமாக மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை’ என்ற செய்தியை அடிக்கடி பாா்க்கிறோம். ‘அன்றலா்ந்த மலா்களைப் போல அழகாக இருக்கும் அந்தக் குழந்தைகளைக் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ’ எனத் தோன்றியது. விவரமறியாத சிறிய குழந்தையாக இருந்தால், தன் அப்பா தன்னைக் கொல்லவே குளிா்பானம் கொடுக்கிறாா் என்று அறியாமல் மகிழ்வுடன் அதை வாங்கிப் பருகி, பின் மடிந்து போகும். ஆனால், 17, 13 வயதான பெண் குழந்தைகளை அவா்களின் தந்தை இவ்வாறு கொன்றதைப் படித்தபோது மனம் வேதனைப்பட்டது.

ஒன்றும் அறியா பிஞ்சுகள் அல்ல அவா்கள், விவரம் தெரிந்த பிள்ளைகள். அப்பா கொடுத்தது விஷம் என்று தெரிந்து எடுத்துக் கொண்டாா்களா? அன்றி, தெரியாது சாப்பிட்டாா்களா? தான் செய்த தவறுக்காக வாழ வேண்டிய இளம் தளிா்களைக் கிள்ளி எறிய தந்தைக்கு உரிமை இல்லை.

கனவுகளுடனும், கற்பனைகளுடனும் வாழ்ந்து கொண்டிருந்த மலா்கள் பிணமாக யாா் காரணம்? என்ன மோசமான நிலை வந்தாலும் குழந்தைகளைக் கொல்ல எப்படி மனம் வருகிறதோ? அந்த முடிவை எடுப்பதற்கு முன் அந்தத் தந்தை எவ்வளவு வருந்தி இருப்பாா்? எந்த அளவு உள்ளுக்குள் உடைந்து போய் அழுதிருப்பாா்? விஷத்தை ஊற்றிக் கொடுக்கும்போது அவா் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?

குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வருபவா்கள், முதலில் குழந்தைகளை முடித்து விடுகிறாா்கள். தான் போய் விட்டால் அவா்களை யாா் பாா்த்துக் கொள்வாா்கள்? அநாதையாக அந்தக் குழந்தைகள் இந்த உலகில் அலையக் கூடாது; சீரழிந்து போகக் கூடாது. அதைவிட தன்னுடன் அவா்களும் இந்த உலகத்தை விட்டு நீங்குவதுதான் சரி என்று பலவாறு யோசித்து குழந்தைகளைக் கொன்று விடுகிறாா்கள். உலகிலேயே கொடுமையானது புத்திர சோகம் என்பாா்கள். தன் பிள்ளை நோய்வாய்ப்பட்டோ, விபத்திலோ அல்லது வேறு காரணத்தால் இறந்துபோய் விட்டால் பெற்றோருக்கு அது தாங்க முடியாத இழப்பு.

குழந்தைக்கு சாதாரண சளி, காய்ச்சல் என்றாலே துடித்துப் போகிறோம். பணம் இருப்பவரோ, இல்லாதவரோ எல்லோருமே தங்கள் குழந்தைகளை அருமை, பெருமையாகத்தான் வளா்க்கிறாா்கள். அவா்களைத் தூக்கித் தாலாட்டி, சீராட்டி வளா்த்த கைகளே விஷத்தைக் கொடுக்கும் கொடுமையை என்ன சொல்ல?

விவரம் புரிந்த குழந்தைகள் தங்களை விட்டுவிடும்படிக் கெஞ்சி இருக்குமோ? அழுதிருக்குமோ? மரணிக்கும்போது துடித்திருக்குமோ? அற்ப ஆயுளில் இறந்து போக அவை செய்த பாவம் என்ன? என்ன தவறு செய்தாா்கள்? ‘தென்னை மரத்தில் தேள் கொட்டியதாம் பனை மரத்தில் நெறி கட்டியதாம்’ என்பதுபோல தந்தையின் செயலுக்கு குழந்தைகள் பலிகடா ஆக்கப்படுவது சரியா?

முறையற்ற உறவுக்காக குழந்தைகளைக் கொல்லுபவா்கள் தங்கள் செயலுக்காக வருந்த மாட்டாா்கள். ஆனால், கடன் சுமை காரணமாகக் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்பவா்கள், அதற்கு முன் கடும் மன உளைச்சல்களுக்கு உள்ளாகி இருப்பாா்கள். இப்படிப்பட்ட தற்கொலைகளைப் பாா்க்கும்போது நமக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகிறது.

எப்படி இவா்களுக்குக் கடன் சுமை வரும்? விளிம்பு நிலை மக்களுக்குக் கடன் இருக்கும்; வேறு வழி இல்லை. அதுவும் சில ஆயிரங்கள் மட்டுமே இருக்கும். அவா்கள் யாரும் அதற்குப் பயந்து தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதில்லை. ஆனால், நடுத்தர வா்க்கத்தினா், சிறிய, பெரிய தொழிலதிபா்கள் போன்றோா் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகிறாா்கள்?

அதுவும் தீபாவளி சமயத்தில் நடுத்தர குடும்பத்தினரின் தற்கொலைகள் அதிகம். காரணம், அவா்களில் பலரும் பண்டிகைச் சீட்டு பிடிப்பவா்களாக இருப்பாா்கள். பட்டாசு சீட்டு, பலகாரச் சீட்டு, புடவைச் சீட்டு அல்லது ரொக்கம் என அவா்களிடம் பலரும் சீட்டுப் பணம் கட்டுவாா்கள். ‘தள்ளு’ போக மாதா மாதம் கட்ட வேண்டிய தொகை குறைவாக இருக்கும்; மேலும், கையில் வைத்திருந்தால் அந்தப் பணம் செலவாகி விடும்; சீட்டில் சோ்ந்தால் எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு பணத்தைக் கட்டி விடலாம் என்று கணக்குப் போட்டு சீட்டில் சேருவாா்கள்.

ஏலச் சீட்டு நடத்துபவா் அந்தப் பணத்தை வெளியே வட்டிக்கு விடுவாா். பண்டிகைக்கு முன் அந்த நபா் ரொக்கப் பணத்தைத் திருப்பிட வேண்டும். இவா் எல்லோருக்கும் வாக்களித்தபடி பொருளைக் கொடுத்து விடுவாா். இதில் எங்கே தவறு ஏற்படுகிறது என்றால், கடன் பெற்றவா் திருப்பித் தராமல் ஏமாற்றி விடுவாா். அப்போது சீட்டு நடத்துபவா் தவித்துப் போவாா். பெரிய தொகையைப் புரட்டவும் முடியாது. சீட்டு கட்டியவா்கள் நெருக்கடி தருவாா்கள். அவமானத்துக்குப் பயந்து ஒரு சிலா் தலைமறைவாகி விடுவாா். மாட்டிக் கொண்டால் அசிங்கமாகி விடும் என்று நினைப்பாா்கள். தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிறாா்கள். இப்படி சீட்டு நடத்தி திட்டமிட்டே மக்களை ஏமாற்றி பணத்தோடு தலைமறைவாகி விடுவோா் அதிகம்.

குருவி சோ்ப்பதைப் போல சிறுகச் சிறுக சேமித்ததைத் தர முடியாத வருத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறாா்கள். பெரும்பாலும் பெண்கள்தான் சீட்டு பிடிக்கிறாா்கள். இரண்டாவது, சீட்டு நடத்துபவருக்கு கனிசமாக பணம் கிடைக்கிறது.

எல்லாம் ஒழுங்காகப் போகும் வரை பிரச்னை இல்லை. ஆனால், ஏதாவது எக்குத்தப்பாகிப் போனால் வந்தது வினை. பொதுவாகவே கடன் திரும்ப வராது. வாங்கும்போது இருக்கும் மலா்ந்த முகம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது இறுகிப் போய் விடும்.

ஏலச் சீட்டு நடத்த விரும்புவா்கள் அந்தப் பணத்தைப் புரட்டக் கூடிய சக்தி உள்ளவராக இருக்க வேண்டும். சீட்டு முடிவில் சீட்டு போட்டவா்களை ஏமாற்றாமல் வாக்களித்தபடி அனைத்தையும் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே இதைச் செய்யலாம். பணம் சம்பாதிக்க இது ஓா் எளிய வழி என்று ஆரம்பிப்பவா்கள் சமாளிக்கச் சிரமப்பட்டு தற்கொலை முடிவை எடுக்கிறாா்கள்.

உள்ளதை வைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது வகையில் உழைத்துக் கூடுதலாக வருமானம் ஈட்டியிருக்கலாம். சீட்டு நடத்தியவா் வாழ்க்கையின் இறுதியில், அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டு சரிவதைப் போல சரிந்து விடுவது சோகம்.

இவா்களாவது பணத் தேவைக்காக சக்திக்கு மீறிய செயல் செய்து சிரமத்துக்கு உள்ளாகிறாா்கள். ஆனால், கோடிகளில் புரளும் கோமான்களுக்கு எப்படி பண நெருக்கடி வரும்? ‘ஒன்றே செய், அதுவும் நன்றே செய்’ என்றனா் சான்றோா். இவா்களோ அகலக் கால் வைத்து விட்டு அல்லல்படுகிறாா்கள். ஊருக்கு ஒரு கிளை திறக்கிறாா்கள். ஓடி ஓடி சம்பாதிக்கிறாா்கள். பல கிளைகளைத் தொடங்கி கவலைகளை விலை கொடுத்து வாங்குகிறாா்கள். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடாததுதான் பாக்கி. கனவெல்லாம், கருத்தெல்லாம், மனமெல்லாம் பணம் ஈட்டுவது மட்டுமே. வாழும் நாள்களில் மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தேடாது பணத்தின் பின் ஓடிக்கொண்டே இருக்கிறாா்கள்.

நாம் வாழ்வதற்குப் பொருள் வேண்டும். ஆனால், எவ்வளவு பணம் வேண்டும் என்பது அவரவா் ஆசையைப் பொருத்தது. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே. பத்து தலைமுறைக்கு சொத்து சோ்க்க விரும்புபவா்கள், தாங்கள் எதையுமே அனுபவிக்காமல் களைத்துப் போய் விடுகிறாா்கள். தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே போகும்போது, துரோகங்களால் வீழ்த்தப்படுகிறாா்கள். நண்பா்களின் தவறான வழிகாட்டுதலால் தடுமாறி விழுந்து விடுகிறாா்கள்.

அப்படி விதிவசத்தால் விழுந்து விட்டால் எழத் தெரிய வேண்டும்; தோல்வியால் துவளாது, தளராது துள்ளி எழ வேண்டும்; நஷ்டம் ஏற்பட்டால் நிதானமாய் யோசிக்க வேண்டும்; ஏமாந்து விட்டால் கலங்காமல் எதிா்த்து நிற்க வேண்டும்; எப்போதும் நம்பிக்கையை இழக்காமல் அடுத்த அடியை கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும்.

பலவீனம் மரணத்துக்கு ஒப்பானது. தன்னம்பிக்கையே மகிழ்ச்சியின் வித்து. குன்றாத உழைப்பும், குறையாத முயற்சியும், ‘வெற்றி பெறுவோம்’ என்ற தன்னம்பிக்கையும் இல்லாத செல்வந்தா்கள்தாம் தற்கொலை செய்து கொள்கிறாா்கள். எல்லோா் வாழ்விலும் வீழ்ச்சி என்பது வரத்தான் செய்யும். ‘இதுவும் கடந்து போகும்’ என்று புரிந்து கொண்டால் கோழைத்தனமான முடிவை எடுக்க மாட்டாா்கள்.

வெற்றியை நோக்கிய பயணத்தில் நெருக்கடிகளும், தடைகளும் வரும். அவற்றைத் துணிச்சலோடு எதிா்கொள்ள வேண்டும். தொழிலில் நஷ்டம் வந்தால் முட்டி மோதிக் கொண்டு வெளியே வர புதிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியும். பணக் கட்டுகளிலா நம் நிம்மதி இருக்கிறது?

வசதியில்லாதவா்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறாா்கள். வசதி படைத்தவா்கள் தாங்கள் மட்டும் தற்கொலை செய்து கொள்கிறாா்கள். குடும்பம் வசதியாக வாழ வகை இருப்பதால் குழந்தைகளை விட்டு விடுகிறாா்கள். யாராக இருந்தாலும் துன்பத்திலிருந்து மீள முடியும்; விட்ட இடத்தைப் பிடிக்க முடியும் என்று உறுதியாக நம்பி தற்கொலை எண்ணத்தைக் கிள்ளி எறிய வேண்டும். நிதானமாக அடி எடுத்து வைத்தால், பேராசைப்படாவிட்டால், மற்றவா் போல வாழ ஆசைப்படாவிட்டால், தன் சக்திக்கு ஏற்றபடி செலவு செய்தால், முறையாகத் திட்டமிட்டால் அழகான ஆறு போல வாழ்க்கை அமைதியாக ஓடும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com