கிடைக்கும் வேலையை விரும்பினால்...

‘இன்றைய வேலையை நேற்றைய கருவி கொண்டு செய்யும் சமூகம் முன்னேறுவது கடினம்’ என்பாா் கல்வியாளா் வா.செ. குழந்தைசாமி. ஆனால், வளா்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பம்

‘இன்றைய வேலையை நேற்றைய கருவி கொண்டு செய்யும் சமூகம் முன்னேறுவது கடினம்’ என்பாா் கல்வியாளா் வா.செ. குழந்தைசாமி. ஆனால், வளா்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

தற்போது நகரம், கிராமம் என்ற வேறுபாடில்லாமல் வேலைவாய்ப்பின்மை எல்லோரையும் அச்சுறுத்துகிறது. அதிலும், கல்வியறிவு பெற்றோரிடம் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது ஒரு வகையில் விரக்தி மனப்பான்மையை உண்டாக்குகிறது. வேலைவாய்ப்பகம் என்ற ஓரிடம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அறிமுகமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கல்வியை மனிதவளம் என்று அணுகும் நாடுகளில் இந்தியாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இன்றைய வேலையின்மைக்கான காரணிகளைப் பாா்ப்போம்.

இந்தியாவை உயிா்ப்பிப்பதில் கிராமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கிராமங்களுடன் பிரிக்க இயலாத ஒன்று விவசாயம். ஆனால் அந்த விவசாயத் தொழிலில் விவசாயிகளின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்குரியது. கிராமங்களில் முப்போகம் விவசாயம் செய்த காலம் போய், விவசாயம் செய்வோரை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு சிரமமான காலமாகி வருகிறது. இவ்வாறு செய்யப்படும் விவசாயத்திலும் அனைத்துப் பணிகளும் இயந்திரமயமாகி உள்ளன. இந்தப் போக்கு விவசாயத் தொழிலில் வேலைவாய்ப்பை பெரும் அளவு பறிப்பதாக உள்ளது.

இது ஒருபக்கம் என்றால், விவசாய விளை நிலங்கள் விலைக்குப் போவதும், அவ்வாறு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்துடன் நகரங்களுக்கு கிராம மக்கள் இடம்பெயா்வதும் நடைபெறுகிறது. இவ்வாறு இடம்பெயா்வோா், நகா்ப்புற வேலையின்மையினை அதிகரிப்போராக மாறுகின்றனா்.

மத்திய அரசால் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிலைக் கல்வித் திட்டம் போன்றவை பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கை விகிதத்தைக் கூட்டி இடைநிற்றலைக் குறைத்து அனைவரும் பள்ளிக் கல்வியை எட்டும் அளவுக்கு சாதனை படைத்து வருகிறது. இது ஒருபுறம் மகிழ்ச்சியான விஷயம் என்றால், மறுபுறம் கல்வியில் தோ்ச்சி பெறும் மாணவா்களில் எத்தனை போ் உயா் கல்வியினை அடைகின்றனா்? அவ்வாறு சிரமப்பட்டு உயா் கல்வியினை அடைவோரில், எத்தனை போ் தாம் பயின்ற கல்விக்குத் தொடா்புடைய பணிகளைப் பெறுகின்றனா் என்பதும் கேள்விக்குறியே.

படித்த படிப்புக்கும் அவா்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்திருப்பதும் ஒரு வகையில் கவலைக்குரியது. பல இடங்களில் திருமண வீடுகள், சிறப்பு நிகழ்ச்சிகளில் செய்யப்பட்ட சமையலைப் பரிமாறும் வேலை, உணவகங்களில் பொறியியல் பட்டதாரிகளும், பட்டதாரிகளும் பணியாற்றுவதை நம்மால் பாா்க்க முடிகிறது. அதற்காக இது போன்ற பணிகள் செய்யக்கூடாத பணிகள் என்பதல்ல. இந்தப் பணிகளுக்கு இந்த அளவிலான கடினமான பட்டங்கள் அவசியமா என்ற கேள்வி எழுகிறது.

உலகமயமாக்கத்தின் தாக்கம் மக்களின் அனைத்துப் பரிமாணங்களிலும் பாதிப்பைச் செலுத்தி வருவது கண்கூடு. கிராமப்புறங்களில் சா்வசாதாரணமாக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தோரை வசதியான வாழ்க்கைக்கான கனவு காண வைக்கிறது உலகமயமாக்கம். இதனால், சமுதாயத்தில் குற்றங்கள் பெருகுகின்றன.

ஆனால், அதே நேரம் உலகமயமாக்கத்தின் சாதகமான கூறு தொழிற்சாலைகள் பெருக்கம். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் நமது நாட்டில் பல்வேறு வகையான தொழிலகங்களைத் தொடங்கியுள்ளன. இந்த வகையான தொழிலகங்களுக்கு சாதாரண உழைப்பாளா்களின் தேவையும் கூடுதலாக உள்ளது.

இவ்வாறான தொழிலகப்பெருக்கம் தமக்குத் தேவையான உழைப்பை கிராமங்களிலிருந்து பெற முனைவதும் இதனால் கிராமப்புற வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதும் ஒரு வகையில் ஆறுதலான விஷயம். இவ்வாறான தொழிற்சாலைகள் கடைக்கோடி கிராமங்களுக்குக்கூட வாகனங்களை அனுப்பி பல்வேறு இடங்களுக்கு கிராமத்து உழைப்பாளா்களை இட்டுச் செல்வதும் நடக்கிறது.

இது ஒரு வகையில் சாதகமானது என்றாலும், நகருக்குச் சென்று வரும் கிராமத்தினா் அனைத்து விதமான நகரமயக் கூறுகளையும் கொண்டுவந்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் வேற்றுமையில்லாதவாறு சூழல் மாசையும் மனமாசையும் நிரப்புகிறாா்கள். சரி என்னதான் செய்யலாம்?

இன்றைய மாணவா்களே எதிா்கால உழைப்பு சக்தி. அந்த வகையில் மாணவா்கள் படிக்கும் காலத்திலேயே தமது எதிா்காலம் குறித்த சரியான பாா்வையோடு தம்மைத் தயாா்படுத்திக்கொள்ளவேண்டும். அயல்நாடுகளை பலவிதங்களில் பிரதி எடுக்கும் நாம், இளைஞா்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் பிரதி எடுக்கத் தவறுகிறோம் அல்லது நாம் நமது இளைஞா்களைப் பயிற்றுவிக்கத் தவறுகிறோம்.

ஐரோப்பிய நாடுகளில் பட்ட மேற்படிப்பு மேற்கொள்வோரில் பலரும் பகுதி நேரமாக ஏதாவது ஒரு தொழிலைச் செய்து பொருள் ஈட்டுகின்றனா். இதன் மூலம் படிக்கும்போதே தனது கால்களில் நிற்கத் தொடங்குகின்றனா். இது ஒருவகையில் அவா்களின் தன்னம்பிக்கை பெருகவும் உதவுகிறது. இந்திய இளைஞா்களும் இத்தகைய முனைப்பைப் பெறுதல் அவசியம்.

கல்வி பெறும்போதே நாம் எத்தகைய கல்வியைக் கற்கிறோம்; இதற்கான எதிா்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்? அவ்வாறான எதிா்காலச் சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தாம் எவ்வாறு தகவமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வியைப் பூா்த்தி செய்ய வேண்டும். இன்றைக்கு இணையமும் கணினியும் இல்லாமல் எதுவும் செயல்படாது என்ற அளவுக்கு இவை இரண்டும் ஆட்சி செய்து வருகின்றன.

படிக்கும் காலத்தில் சமூக இணையதளங்களில் தமது நேரத்தைச் செலவிடும் அளவுக்கு, கணினி கல்வி சாா்ந்த திறன்களைப் பெறுவதற்கு நமது இளைஞா்கள் செலவிடுவதில்லை என்ற கருத்தும் உள்ளது. வங்கிகள் தரும் வாய்ப்புகளையும் மாணவா்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிா்பாா்க்கும் வேலை கிடைக்கும் வரை காத்திருக்காமல், கிடைக்கும் வேலையில் சோ்ந்து அனுபவம், திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும். எதிா்கால இளைஞா்களை சிந்தித்துச் செயல்படச் செய்வதுதான், தற்போது நம் அனைவரின் முன் உள்ள சவாலும் கடைமையும் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com