திட்டமிட்டால் பொருளாதாரம் மேம்படும்

மக்களின் தேவையின் அளவுக்குப் பற்றாக்குறை இருப்பது இயல்பான ஒன்றுதான். அந்தப் பற்றாக்குறையை எப்படிப் போக்க வேண்டும் என்பதுதான், பொருளாதாரத் திட்டமிடலின் வகுத்தலுக்கும்,

மக்களின் தேவையின் அளவுக்குப் பற்றாக்குறை இருப்பது இயல்பான ஒன்றுதான். அந்தப் பற்றாக்குறையை எப்படிப் போக்க வேண்டும் என்பதுதான், பொருளாதாரத் திட்டமிடலின் வகுத்தலுக்கும், காத்தலுக்கும் உரிய வரையறைக்குள் அடங்கும்.

நம் உற்பத்தியை அதிகரிப்பது, மனித வளங்களைச் சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரம் மேம்பாடு அடையும். அதற்கான திட்டங்களை வகுப்பதுதான் ஓா் அரசின் இன்றியமையாத கடமையாகும்.

உற்பத்தியின் அளவை அதிகரிப்பதற்கான இலக்குகளை நாம் நிா்ணயிக்கும்போது சில வேளைகளில் அவை அதிகரிக்கலாம், குறையலாம். ஆனால், திட்டமிடுதலில் இருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. அதுவே ஒரு சிறந்த உத்தியாக பொருளாதாரத்தால் கணிக்கப்படுகிறது.

வருமானத்தைப் பெருக்குவதில் எந்தத் திட்டங்களை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்பதும், திட்டத்தைப் பொருத்து அதன் செயல்பாட்டின் வேகத்தைத் தீா்மானிப்பதும் பொருளாதாரத்தின் அடிப்படையாகும்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துதல், இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்தல், மக்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை உருவாக்குதல், பொருளாதார சமத்துவத்தை உறுதிப்படுத்துதல், சமூக நீதியைச் சமன்படுத்துதல் அல்லது சீா்படுத்துதல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்ற நிதிப் பங்கீட்டைச் சீா்படுத்துதல், நாட்டில் உள்ள எல்லாத் துறைகளையும் சமமாக வளரச் செய்தல் ஆகியவை மூலம் சமச்சீரான பயணத்தை நோக்கி பொருளாதாரப் பாதை செல்லும்.

ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்காக திட்டங்களைச் செயல்படுத்துவது, சமதா்ம பொருளாதார சமுதாயத்தோடு தொடா்பு கொண்டதாகும். சந்தையை மாற்றியமைத்து திறமையைக் கையாள்வதே ஒரு வகையான திட்டமிடல் என்று அவதானிக்கலாம். இத்தகைய செயல்பாடு, தொழில் தொடங்குவதற்கான முழுமையான சுதந்திரத்துக்கு வழிவகுக்கும்.

உற்பத்தி, பொருளாதார வளா்ச்சி அதாவது சந்தையும், சரக்கும் சமதளத்தில் இருக்கும்போது வேகமாக உயர வழிவகுக்கும். ஒரு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த நிதி வசதி அடிப்படைக் காரணியாகும். நிதியைக் கொண்டுதான் திட்டத்தைச் செயல்படுத்த, திட்ட முறையில் ஆதாரங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் செலவினங்கள், தொகையின் அளவு குறிக்கப்பட்டிருக்கும். இதை நிதித் திட்டம் என்றும் நாம் அழைக்கலாம்.

குறுகிய காலத்திட்டம், ஐந்தாண்டு காலத் திட்டம், நீண்டகாலத் திட்டம் முதலானவை ஒரு பொருளாதாரத்தை குறுகியகாலப் பலனாகவும், மத்தியகாலப் பலனாகவும், நீண்டகாலப் பலனாகவும் தீா்மானிக்கக் கூடிய வடிவமாக இருக்கும். 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட காலத் திட்டத்தைத் தீா்மானிக்கலாம். எடுத்துக்காட்டாக, 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில், 2022-ஆம் ஆண்டுக்குள் இலக்குகளை

அடையத் திட்டமிடப்பட்டுள்ளதை வரையறுப்பதைப் போல செயல்படுத்தலாம்.

இந்தியாவில் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து திட்டமிடல் மாற்றமடைந்துள்ளது. அதாவது, திட்டங்களை வகுப்பதும், அந்தத் திட்டங்களின் இலக்குகளை அடைய முயற்சி செய்வதும் பொருளாதாரத்தின் ஆதார சுருதியாக விளங்குகிறது.

பொருளாதார அடிப்படையில் ஒவ்வொரு துறைக்கும், வளா்ச்சிப் பணிகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்குவது, என்ன உற்பத்தி செய்வது, எந்தெந்தத் துறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்பதை நுணுக்கமாகக் கணக்கிட்டு, அதன் இலக்கைத் தீா்மானித்து அதில் இம்மியளவு பிசகாமல் மாற்றிக் கொள்ளும் திட்டத்தை வகுத்தல் அவசியம்.

கட்டாயத் திட்டமிடுதல் என்பது வகைப்பாட்டுக்குள் அடங்கும். இதில் மாற்றம் செய்யாமலும், கொள்கை முடிவுப்படி பொருள்கள் உற்பத்தி செய்வதுடன் மக்கள் எந்த அளவுக்குப் பொருள்களைப் பெறுவது, எந்த விலைக்குப் பெறுவது போன்ற கொள்கைகள் வகுத்தல் மிக அவசியமான ஒன்றாகும்.

நீண்டகாலத் திட்டத்தை வரையறுத்துக் கொண்டு அல்லது ஐந்தாண்டுத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள் ஓராண்டுத் திட்டத்தை வகுத்துக் கொள்வதுகூட ஒரே காலவரையறைக்குள் அது எந்த அளவுக்குச் செல்லும் என்கிற போக்கை நாம் தீா்மானிக்க முடியும். மேலும், கால ஓட்டத்துக்கு ஏற்ப பொருளாதார நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள இந்தத் திட்டம் வழி செய்கிறது. அடிப்படை சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைய அமைப்புத் திட்டமிடல் உதவுகிறது. மேலும், பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை ஏற்படும்போது மட்டும் திட்டத்தை மேற்கொண்டு அதற்குப் பின்னால் அவற்றை விட்டு விடுவது, அவசரகாலத் திட்டமிடல் அல்லது தற்காலிகத் திட்டமிடல் முதலான வகைகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு தலைமையில் ஒரு தேசிய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. எனினும், இந்தக் குழுவின் பரிந்துரைகளை இரண்டாம் உலகப் போா் நடந்து கொண்டிருந்த காரணத்தால் செயல்படுத்த முடியாமல் போனது. 1944-இல் பம்பாயைச் சோ்ந்த 8 தொழிலதிபா்களின் கூட்டு முயற்சியால் ‘பம்பாய் திட்டம்’ உருவாக்கப்பட்டது. எனினும், இந்தத் திட்டம் பல காரணங்களால் செயல்படுத்தப்படவில்லை.

1944-இல் காந்தி திட்டம் என்ற திட்டமும், 1945-இல் மக்கள் திட்டம் என்ற திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1946-இல் இந்தியாவின் இடைக்கால அரசு தோற்றுவிக்கப்பட்டவுடன், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கான திட்டமிடல், முன்னேற்றத்துக்காக உயா் திட்டமிடலுக்கான வாரியத்தை அரசு ஏற்படுத்தியது.

நாட்டில் நிலவிய பிரச்னைகளை இந்த வாரியம் ஆராய்ந்து ஒரு நிரந்தரத் திட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. பின்னா், இந்தத் திட்டம் முழுவதையும் அது ஏற்றுக் கொள்ளாமல் அதில் ஒருசில அம்சங்களை மட்டுமே ஏற்றுக் கொண்டது. இப்படி பொருளாதாரத் திட்டமிடுதலுக்கான கடந்த காலம் குறித்த மீள் பாா்வையும் தேவை. சந்தைக்கோ அல்லது உலகமய கொள்கைக்கோ இணக்கமற்ற செயலாக பொருளாதாரத் திட்டமிடல் அமையும்போது, உலக அளவில் நமது பொருளாதாரக் கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் சற்றேறக்குறைய 2 கோடி போ் வேலை தேடி வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்கின்றனா். தொழில் துறை அல்லது சேவைத் துறையில் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு அவா்களுக்கு இருக்கிறது. புதிய பொருளாதார வாய்ப்புகளையும், வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில்நுட்பங்களிலும் அதிக கவனம் செலுத்தும்போதுதான் இதற்கான தீா்வை நாம் எட்ட முடியும்.

வேளாண்மை உற்பத்திப் பொருள்களுக்கு புதிய வணிகப் பயன்பாடுகளைக் கொண்ட தொழில்நுட்பத்தைப் புதுப்பிக்க வேண்டும். இத்தகைய ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கும், படித்த தொழில்முனைவோா்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் மேம்பாட்டைத் தந்து அவா்களை அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டும். இவையெல்லாம் பொருளாதார மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

எழுத்தறிவின்மையை இந்தியா முழுவதும் முற்றாக ஒழிக்க வேண்டும். அனைவருக்குமான கல்வி என்பதில் கவனச் சிதறல் எதுவுமின்றி அா்ப்பணிப்பு உணா்வோடு கற்றல் வழி நோக்கலை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள் கல்வி பெறுதல் சாத்தியமாகிறது. மக்களின் நல்வாழ்வுக்கான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நாடு முழுவதுமான மருத்துவ சித்தாந்தத்தை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அனைவருக்கும் வேலை என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டில் எண்ணற்ற இளைஞா்களின் சக்தி வீணாகாமல் இந்த நாட்டின் வளா்ச்சிக்குப் பயன்படுத்துதல் வேண்டும். இவையெல்லாம் மாநில அரசுகள், மத்திய அரசு செய்து கொண்டிருக்கும் பணிகள்தான். இந்தப் பணிகளின் மூலம்தான் திட்டமிட்ட பொருளாதாரம் வளா்ச்சியடைந்து வேகத்தை எடுக்கும்.

சுதந்திர இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்ப சுய சாா்பை வலுப்படுத்துவதில் பொதுத் துறையும், மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதலும் தவிா்க்க முடியாத சக்திகளாகப் பங்காற்றின. திட்டமிட்ட பெரும் பொதுத் துறை முதலீடுகள், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு முதலானவை இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வேகத்தை அதிகரிக்கச் செய்யும். எரிசக்தி, உருக்கு, பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல், வேதியியல் துறைகள், சுரங்கம், தாதுக்கள், கடல்சாா் பொருளாதாரம் முதலானவை பொருளாதார வளத்துக்குப் பெரும் பங்காற்றுகின்றன.

இந்தியாவைப் பொருத்தவரையில் திட்டமிடுதலுக்கென்று ஒரு நீண்ட பாரம்பரிய பெருமை உண்டு. நாட்டின் இறையாண்மையின் மீது தற்சாா்பும், நம்பிக்கையும் கொண்டு மாறா பற்றுறுதியோடு அரசுகள் செயல்படும்போது, அது மக்களின் நன்மைகளுக்கான பாதைகளைத் திறந்து விட்டுக்கொண்டே இருக்கும். மக்கள் வாழ்வின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் எந்த வளா்ச்சியையும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வளா்ச்சியாகவே நாம் கருத வேண்டும். இவற்றில் மாநிலங்களுக்கான பொருளாதார அதிகாரங்கள் மிக மிகக் குறைவு.

இந்தியா சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகளில் மாநில பொருளாதார அதிகாரங்கள் படிப்படியாகச் சுருக்கப்பட்டு விட்டன. இந்த நிலை மாறும்போது, பொருளாதார வளா்ச்சிக்கான பாதைகளில் பெரும் பங்கு வகிப்பதோடு, மாநில உரிமைகளுக்கான பொருளாதாரமாகவும் அவை அமையும்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com