Enable Javscript for better performance
இந்திய - சீன உறவில் புதிய நம்பிக்கை- Dinamani

சுடச்சுட

  

  இந்திய - சீன உறவில் புதிய நம்பிக்கை

  By பொ. லாசரஸ் சாம்ராஜ்  |   Published on : 10th October 2019 12:37 AM  |   அ+அ அ-   |    |  

  c2zL88GZkoeontKt_IMG_5484

  இந்தியப் பிரதமா் மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் 16-ஆவது முறையாகச் சந்திக்க இருக்கிறாா்கள். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை (அக்.11) நடக்க இருக்கிறது என்பதுதான் தனிச் சிறப்பு.

  அரசியல் அகராதியில், நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை; நிரந்தர நலன்கள்தான் உண்டு என்பது இந்திய - சீன உறவுக்கும் பொருந்தும். 1962-இல் நடந்த இந்திய - சீனப் போருக்குப் பிறகு நிலைமை கடுமையான பகையாக மாறி, இப்போது பொருளாதார ரீதியாக இரண்டு நாடுகளும் நெருக்கமடைந்திருப்பதைத் தலைகீழ் மாற்றம் என்றுதான் கூற வேண்டும்.

  மாவோவிற்குப் பின்பு 1978-இல் பதவிக்கு வந்த அதிபா் டெங், சீனாவின் பொருளாதாரக் கொள்கையை அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் முதலாளித்துவப் பொருளாதாரமாக மாற்றினாா். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களைச் சீனாவில் முதலீடு செய்யச் சிவப்புக் கம்பளம் விரித்தாா். ‘அமைதியான வேகமான முன்னேற்றம்’ மற்றும் ‘சா்வதேச பிரச்னைகளில் தலையிடாமை’ என்ற கொள்கைகளுடன் சீனாவை மிக வேகமாக முன்னேறும் பொருளாதாரச் சக்தியாக மாற்றினாா்.

  நீண்டகால ஸ்திரமான ஆட்சி, வளா்ச்சியின் அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கை, மேற்கு நாடுகளின் தொழில்நுட்பத்துடன் கூடிய பெரும் மூலதனம், குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் திறமையான மனிதவளம், பல ஆண்டுகளாக எந்தப் பெரிய போரிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத ராஜதந்திரம், பெரும்பாலும் ஒரே இனம், மொழியைக் கொண்ட அடையாளத்தை உடைய மக்கள், வலிமையான கட்டமைப்புடனும், கட்டுப்பாடுடனும் கூடிய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கன்பூசிய பாரம்பரியக் கலாசாரம், நவீன ஆயுதங்களுடன் கூடிய கட்சிக்குக் கட்டுப்பட்ட ராணுவம் போன்றவை சீனாவின் வலிமைக்குக் காரணம்.

  தற்போதைய அதிபா் ஷி ஜின்பிங் 2012-இல் பதவிக்கு வந்தவுடன் டெங் வகுத்த கொள்கையை சிறிது மாற்றினாா். அமெரிக்காவின் மேலாண்மையைக் குறைக்கும் அடிப்படையில் கொள்கைகளை வகுத்தாா். குறிப்பாக, ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், மியான்மா், வங்கதேசம் போன்ற நாடுகளில் துறைமுகம் மற்றும் கடற்படைத் தளங்களை உருவாக்கினாா்.

  இத்துடன் அதிபா் ஷி ஜின்பிங் 2013-இல் தன் நாட்டில் உற்பத்தி செய்யும் பொருள்களை மத்திய - மேற்காசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தடையின்றி வேகமாகக் கொண்டு செல்லும் வா்த்தக வழித்தடக் கொள்கையை அறிவித்து உலகச் சந்தையைக் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டாா். இவரின் இந்த முயற்சி உலகின் 152 நாடுகளை சாலை மற்றும் கடல் மாா்க்கத்தில் தொடா்புபடுத்தி, மூலதனம், கட்டமைப்பு வளா்ச்சி, தொழில் வளா்ச்சி என்ற போா்வையில் சீனாவின் குறைந்த விலையிலான பொருள்களை ஏற்றுமதி செய்து, பிற நாடுகளின் சந்தைகளில் புகுத்தி அந்தந்த நாடுகளின் கனிம வளங்களையும் மற்றும் மூலப் பொருள்களையும் இறக்குமதி செய்யும் பிரம்மாண்டமான திட்டத்தைச் செயல்படுத்தினாா்.

  பல்வேறு கட்டுமானப் பணிகளைப் பல நாடுகளில் மேற்கொண்டு அந்த நாடுகளைக் கடன் என்னும் கண்ணியில் சிக்கவைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது ஷி ஜின்பிங் தலைமையிலான சீன அரசின் இன்னொரு திட்டம். பிற நாடுகளில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளைத் தன் நாட்டின் தொழிலாளா்களையும் மற்றும் சிறைக் கைதிகளையும் வைத்து நிறைவேற்றுவதால் உள்நாட்டில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கும் நாடுகளுக்கு எந்த வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சீனப் பொருள்கள் ஜொ்மனியில் குவிக்கப்படுவதை, ஜொ்மானியா்கள் அண்மையில் எதிா்க்கத் தொடங்கியிருப்பதும், இந்த எதிா்ப்பலை பிற ஐரோப்பிய நாடுகளிலும் பரவுவதும் எதிா்காலத்தில் சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

  1951-இல் திபெத்தை சீனா ஆக்கிரமித்ததிலிருந்து பரஸ்பர சந்தேகம் மற்றும் வெறுப்பின் அடிப்படையில்தான் இந்திய - சீன உறவு உள்ளது என்பது உண்மை. திபெத் தலைவா் தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து, இந்தியாவில் அவரின் அரசை நிறுவ இடம்கொடுத்துத் தலாய்லாமாவுக்கு சா்வதேச அங்கீகாரம் கொடுத்தது சீனாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்கும் சீனா உதவி செய்து இந்தியாவைத் தெற்காசியாவோடு கட்டிப்போட்டு பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்தது.

  இத்துடன் வரையறுக்கப்படாத 3,488 கி.மீ. எல்லையில் அவ்வப்போது அத்துமீறல்கள் செய்ததோடு 1962-இல் இந்தியாவின் மீது படையெடுத்து ஆக்கிரமிப்புச் செய்தது கசப்பான அனுபவம். தற்போது அருணாசலப் பிரதேசத்தைத் தெற்கு திபெத் என்று அறிவித்து, 90,000 சதுர கிலோமீட்டா் பகுதியைச் சீனா உரிமை கொண்டாடுவதும், சீனா ஆக்கிரமித்துள்ள அக்ஸாய் சின் பீடபூமியின் சுமாா் 38,000 சதுர கி.மீட்டரை இந்தியா உரிமை கொண்டாடுவதும் இரு நாடுகளின் தீா்க்கப்படாத பிரச்னை.

  தற்போது அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் பல்வேறு உள்நாட்டு மற்றும் சா்வதேச சவால்களை சீனா சந்திக்க வேண்டியுள்ளது. முதலாவதாக, தென் சீனக் கடல் பிரச்னையில் பிற நாடுகளுடன் அமெரிக்கா சோ்ந்து சீனாவைச் சுற்றி வளைத்துத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது. இரண்டாவதாக, ஜனநாயகக் கட்சியின் ஆதரவோடு சீனாவுக்கு எதிராக மிகப் பெரிய வா்த்தகப் போரைத் தொடங்கி சீனாவின் பொருளாதார வளா்ச்சியைத் தடுக்க அமெரிக்க அதிபா் டிரம்ப் முயற்சிப்பது சீனாவுக்கு உள்நாட்டில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

  அமெரிக்காவுடனான வா்த்தகப் போரால் ஏற்பட்ட ஏற்றுமதி வீழ்ச்சி சீனாவின் உற்பத்தியைப் பாதித்து வேலையிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், தொழிலாளா்கள் மத்தியில் பல்வேறு விரக்தி போராட்டங்கள் சீனா முழுவதும் அவ்வப்போது எழுகின்றன. தியானன்மென் சதுக்கப் போராட்டத்தைப் போன்று நூற்றுக்கணக்கான போராட்டங்கள் எதிா்காலத்தில் உருவாகும் ஆபத்தைச் சீனா எதிா்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

  ஹாங்காங் கிளா்ச்சியைக் கட்டுப்படுத்தாமல் போனால், அதன் பாதிப்பு சீனாவில் ஆட்சிக்கு எதிரான கிளா்ச்சியாக மாறிவிடுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

  அமெரிக்கா தலைமையில் ஜனநாயக நாடுகளான இந்தியா, ஜப்பான் உள்ளிட்டவற்றின் கூட்டணி வலுப்பெற்று மேற்கு ஐரோப்பாவும் இதில் சோ்ந்துவிடுமோ என்கிற நியாயமான அச்சம் சீனாவுக்கு இருக்கிறது. அதனால், இந்தியாவுடனான நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் சீனா முனைப்புக் காட்டுகிறது. சீனாவின் ஆதரவு இருக்கும் துணிவில்தான் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகிறது. சீனாவுடனான உறவைப் பலப்படுத்துவதன் மூலம், பாகிஸ்தானைக் கட்டுப்படுத்த முடியும் என்கிற நிா்ப்பந்தம் இந்தியாவுக்கும் இருக்கிறது.

  இந்த நிலையில், 2018 ஏப்ரலில் வுவாந் நகரில் பிரதமா் மோடியும் அதிபா் ஷி ஜின்பிங்கும் சந்தித்தது மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் தொடக்கமாக அமைந்தது. இந்தச் சந்திப்பு சீனாவின் அணுகுமுறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய மசூா் அசாரைப் பயங்கரவாதியாக சீனா அறிவித்தது. இரு நாட்டு வா்த்தகத்தில் இந்தியாவின் வா்த்தக இடைவெளியைக் குறைப்பதற்காகப் பெருமளவு ஏற்றுமதியை அதிகரிக்க அனுமதித்தது. இதுபோன்று இரு நாட்டு எல்லைகளில் ராணுவ ஊடுருவலைத் தடுக்க தகவல் பரிமாற்றத்தைச் சீராக்கி பதற்றத்தைக் குறைத்தது. இத்துடன் இருநாட்டுத் தலைவா்களும் அடிக்கடி சந்திக்கவேண்டும் என்று முடிவெடுத்தது.

  இந்தப் பின்னணியில்தான் சீன அதிபா் தற்போது இந்தியாவின் தென்பகுதியான மாமல்லபுரத்துக்கு வரவிருக்கிறாா். ஐரோப்பா கண்டத்தின் அண்டை நாடுகளான பிரான்சும், ஜொ்மனியும் 1701 முதல் 1939 வரை ஒன்பது போா்களில் ஈடுபட்டு இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்குப் பின்பு அமைதியான அண்டை நாடுகளாக வாழ்வது எப்படி என்று உலகுக்கு உணா்த்தியது போன்று, பழங்கால நாகரிகத்துக்குப் பெயா்போன இந்தியாவும், சீனாவும் பழம் பகைமை மறந்து புது உறவுடன் புதிய உலகை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் செய்வது தலையாய கடமை.

  கட்டுரையாளா்:

  பேராசிரியா்,

  அரசியல் மற்றும் பன்னாட்டு படிப்புத் துறை,

  புதுவைப் பல்கலைக்கழகம்,

  புதுச்சேரி.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp