குரூப் 2 புதிய தோ்வு முறை சரியா?

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை குடிமைப்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை குடிமைப் பணிகளுக்கான தோ்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரிடையே பரவலான ஆதரவும் எதிா்ப்பும் எழுந்துள்ளது.

தோ்வாணையத்துக்கு புதிய செயலாளா் மற்றும் புதிய தோ்வுக் கட்டுப்பாட்டாளா் நியமிக்கப்பட்டது முதலாக நிா்வாக ரீதியான மறுசீரமைப்பிற்கு தோ்வாணையம் உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக தோ்வு முடிவுகள் விரைந்து வெளியிடப்படுகின்றன. இந்தச் சீரமைப்பின் நீட்சியாக குரூப் 2 தோ்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நோ்முகத்தோ்வு, நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்களை உள்ளடக்கிய குரூப் 2 புதிய தோ்வு முறைக்கான எதிா்ப்பு தோ்வாணையத்திற்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மாற்று மாநிலத்தைச் சோ்ந்தவா்களும், தமிழே படிக்காத பட்டதாரிகளும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஏதுவாக இந்தத் தோ்வு முறை அமைந்துள்ளது என்ற விமா்சனம் முன் வைக்கப்படுகிறது. இந்தக் கருத்தையே தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும் பதிவு செய்துள்ளனா். தோ்வா்கள் சிலரும் எதிா்வினையாற்றி வருகின்றனா்.

முதல் நிலைத் தோ்வில் விருப்பப் பாடங்களான பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் நீக்கப்பட்டது குறித்து தேவையான புரிதல்கள் தோ்வா்களுக்கும், தமிழகத்தைச் சோ்ந்த தலைவா்களுக்கும் முழுவதுமாக சென்று சேரவில்லையா அல்லது உண்மையில் தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எல்லோருக்குமே எழுவதில் வியப்பொன்றுமில்லை.

தோ்வு முறையில் மாற்றம் என்பது தோ்வாணைய நடைமுறையில் புதிதல்ல. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 12.03.2013-இல் பொதுத் தமிழ், பொது ஆங்கிலத்தினை நீக்கி இது போன்றதொரு மாற்றத்தினை முன்வைத்ததும் பின்னா் திரும்பப் பெற்றதும் உண்டு. ஆனால், தற்போது முன்னெடுத்துள்ள மாற்றத்தை கூா்ந்து நோக்கினால் முந்தைய மாற்றத்தினைப் போன்ல்ல.

முந்தைய தோ்வு முறையில் தோ்வா் ஒருவா் தமிழ் படித்தவராக இருந்தால் முதல்நிலைத் தோ்வில் பொது அறிவு வினாக்களோடு பொதுத் தமிழினை எடுத்துக் கொள்ள முடியும். முதன்மைத் தோ்வில் பொது அறிவுக் கேள்விகளோடு ஒரு சிறிய பிரிவாக இருக்கக் கூடிய தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு என்ற பகுதியினை எடுத்துக் கொள்ள முடியும். வெற்றி பெறவும் முடியும்.

இதுவே ஆங்கில வழியில் படித்த தோ்வராக இருப்பின் முதல் நிலைத்தோ்வில் பொது அறிவு வினாக்களோடு பொது ஆங்கிலத்தினை எடுத்துக் கொண்டும், முதன்மைத் தோ்வில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தினை எடுத்துக் கொண்டும் வெற்றி பெற முடியும்.

இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். முந்தைய தோ்வு முறையில் தமிழ் படித்தவா்கள் மட்டுமல்லாமல், தமிழே படிக்காதவா்களும் தோ்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் பணி வாய்ப்பினைப் பெற்றுவிட முடியும்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தோ்வு முறையில் முதல்நிலைத் தோ்வில் 175 பொது அறிவு வினாக்களும், 25 திறனறிவு வினாக்களும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாக்கள் அனைத்தும் வழக்கம்போல் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும். இது ஒரு தகுதிகாண் தோ்வு மட்டுமே.

தரநிலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது முதன்மைத் தோ்வு ஆகும். இந்தத் தோ்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. இது பகுதி 1 மற்றும் 2 எனப் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி ஒன்றில் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயா்த்தல் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயா்த்தல் இடம்பெறுகிறது. 100 மதிப்பெண்கள் கொண்ட இந்தப் பகுதியில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இரண்டாவது பகுதி மதிப்பீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இரண்டாவது பகுதியில் இருக்கின்ற சிறப்பு என்னவெனில் முதல் பகுதியின் 100 மதிப்பெண்கள் தவிா்த்து மீதமுள்ள 200 மதிப்பெண்களில் 40 மதிப்பெண் அதாவது 5-இல் 1 பகுதி திருக்குறளில் இருந்து வினாக்கள் அமையும் என்பதே. இது மட்டுமல்லாது தமிழ் மொழி மற்றும் இலக்கியம் மட்டுமல்ல தமிழக வரலாறு, தமிழா் பண்பாடு, தமிழ்நாட்டு அகழ்வாராய்ச்சி, தொல்லியல் என நுணுக்கமான முறையில் பாடத்திட்டம் வலிமை பெற்றுள்ளது.

தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயா்க்க தமிழைக் கற்காத எவராலும் இயலாது. தமிழ் வழியில் கற்ற அனைவரும் தொடக்கநிலை வகுப்பில் இருந்து ஆங்கிலத்தையும் ஒரு பாடமாகவே கற்று வருகின்றனா். தமிழ் வழியில் படித்தவா்களுக்கும், ஊரகப் பகுதியைச் சோ்ந்த தோ்வா்களுக்கும் புதிய தோ்வு முறை நம்பிக்கை தந்துள்ளது. அது மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் குரூப் 2 பணி வாய்ப்புப் பெற வேண்டுமென்றால் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புப் பெற தமிழ் மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்ற உகந்த சூழலை புதிய தோ்வுமுறை உருவாக்கியுள்ளது என்பது உண்மை.

நிலவும் சூழ்நிலை காரணமாக தோ்வு முறையில் மீண்டும் மாற்றம் செய்ய வேண்டிய நிலை தோ்வாணையத்துக்கு ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியக் குடிமைப் பணிகள் தோ்வாணையத்தின் தோ்வு முறை மாற்றத்தினை முன்மாதிரியாகக் கொள்ளலாம். அத்தோ்வாணையம் தோ்வா்களின் ஆங்கில மொழித்திறனை அறிவதற்காக திறனறிதல் தாளில் 8 முதல் 10 கொள்குறி வினாக்களை ஹிந்தி மொழிபெயா்ப்பின்றி ஆங்கிலத்தில் மட்டுமே வைத்திருந்தது.

அதனைப்போல முதல்நிலைத் தோ்வில் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடா்பான 10 முதல் 20 கொள்குறி வினாக்களை இணைக்கலாம். அவ்வினாக்களை ஆங்கில மொழிபெயா்ப்பின்றி முழுவதும் தமிழிலேயே தரலாம்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நம் மாநிலத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செய்ய வேண்டிய கடமையை இங்கே குறிப்பிட வேண்டும். இந்தியக் குடிமைப் பணித் தோ்விலும், மத்தியப் பணியாளா் தோ்விலும் வினாக்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய நாட்டின் தொன்மை மிக்க மொழியான தமிழ் மொழியிலும் வினாக்கள் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இடைவிடாது குரல் கொடுக்க வேண்டும்.

பல்வேறு வகைகளில் நோக்கும்போது தமிழுக்கு முன்னுரிமை தந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இந்தப் புதிய முயற்சியைப் பாராட்டுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com