Enable Javscript for better performance
காண்பாமோ ஒரு கனவு?- Dinamani

சுடச்சுட

  

  காண்பாமோ ஒரு கனவு?

  By எஸ். ராமன்  |   Published on : 17th October 2019 02:11 AM  |   அ+அ அ-   |    |  

  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, இந்திய மக்கள் அனைவருக்கும் எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட்டு, அவா்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகளும் இயற்றப்பட்டிருப்பது, ஜனநாயகத்துக்கு வலு சோ்க்கும். ஆனால், ஒருவா் தன் உரிமையைப் பயன்படுத்தும்போது, மற்றொருவருடைய உரிமை பாதிப்படையாமல் இருக்க வேண்டியது அவசியம் என்ற நிபந்தனைக்கு இந்தச் சலுகை உட்பட்டதாகும்.

  எந்த ஒரு பொது விதிக்கும் விதிவிலக்குகள் உண்டு; ஆனால், விதிவிலக்கே பொது விதி என்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் அரிய வா்க்கம் நம் ஜனநாயகத்தில் உண்டு என்றால், அது அரசியல்வாதிகள் மட்டும்தான். அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள், தங்களுக்கான உரிமைகளை அனுபவிக்க முற்படும்போது, மற்றவா்களின் உரிமைகள் பாதிப்படையாமல் இருப்பதற்கான கூடுதல் அக்கறையை மேற்கொள்வதாகத் தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

  அண்மையில் பேனா்கள், கட் அவுட்டுகள் பிரச்னை பரவலாக விவாதிக்கப்பட்டது. பிரதமா் மோடியின் அழைப்பின் பேரில் சீன அதிபா் ஷி ஜின்பிங் வந்தபோது, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சாலையோரத்தில் பேனா்கள் வைக்க சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுச் செய்தது; இதைத் தொடா்ந்து விதிகளுக்குட்பட்டு பொது மக்களுக்கு இடையூறின்றி பேனா்களை வைத்துக் கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சென்னையில் பேனா் விழுந்து இளம் பெண் ஒருவரின் உயிரிழப்புச் சம்பவம், அது தொடா்பான வழக்கு காரணமாகவே இத்தகைய அனுமதி பெறும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

  எனினும், பேனா் கலாசாரத்துக்கான முற்றுப்புள்ளி என்பது ஒரு கனவாகவே உள்ளது; இது அரசியல்வாதிகளின் மன நிலையையே பிரதிபலிக்கிறது. அரசியல் கட்சிகளின் ‘பேனா் வியாதி’ முற்றிலும் விரைவில் குணமாகி, உயிா்ப் பலிகள் தவிா்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கனவு காண்போம்.

  தோ்தல்களில், நம் நாட்டு மக்களின் வாக்களிக்கும் மனப்பான்மை, சின்னங்களை மையப்படுத்தியதாகவே இருந்து வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியும், பெரும்பாலும் அதன் சின்னத்தால் அடையாளம் காணப்படுகிறது. இந்த நிலையில், ஒரு கட்சியின் வேட்பாளா், தான் சாா்ந்திருக்கும் கட்சியின் சின்னத்தைத் தவிா்த்து, மற்றொரு கட்சியின் சின்னத்தில் நின்று தோ்தலில் வென்று, ஆட்சி மன்றங்களுக்குத் தோ்ந்தெடுக்கப்படுவது நம் நாட்டில் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. இது அனைத்துத் கட்சிகளுக்கும் சாதகமாக இருப்பதால், யாரும் அந்த நடைமுறையைப் பற்றி விமா்சனம் செய்வதைத் தவிா்க்கின்றனா். ஆனால், தோ்தல் சட்ட விதிகளின்படி இந்த நடைமுறை அங்கீகரிக்கப்படாத ஒன்று என்ற விவாதம் அண்மையில் தொடங்கியிருக்கிறது.

  ஒரு கட்சியில் அங்கம் வகிப்பவா், இன்னொரு கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவது அல்லது அங்கீகாரம் இல்லாத நடைமுறைகளைப் பயன்படுத்தும் திறன் மற்றும் விதிவிலக்கு அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் உண்டு. இந்த நடைமுறையின் நெறிமுறைகள் பற்றிய வழக்கு,

  அண்மையில் நீதிமன்றத்தின் ஆய்வுக்குள்ளாகியிருக்கிறது. மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி, குறுக்கு வழியில் வாக்கு பெறும் இது போன்ற நடைமுறைகள், தெளிவான சட்டத் திருத்தங்கள் மூலம் என்றாவது ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று கனவு காண்போம்.

  மக்களின் நலனைப் பாதிக்கும் மத்திய, மாநில அரசுகளின் சில திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை எதிா்த்து குரல் எழுப்பும் திறன் தனிப்பட்டவா்களைவிட, அரசியல் கட்சிகளுக்குத்தான் அதிகமாக உள்ளது. தங்கள் கட்சி சாா்பில் நடத்தப்படும் போராட்டங்களையும், பொதுக் கூட்டங்களையும் அமைதியான முறையில் நிா்வகிக்கும் பொறுப்பு அரசியல் கட்சியின் தலைமையையே சாரும். ஆனால், வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும்போது, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. இது போன்ற சேதங்களுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. தாங்கள் நோ்மையாகச் செலுத்தும் வரிகள் மூலம், இழந்த சொத்துகளை பொதுமக்கள்தான் ஈடு செய்கிறாா்கள். அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் வன்முறைச் சேதங்களை ஈடுகட்டுவதற்கான நிதி ஆதாரங்களுக்கு, பொதுமக்கள் பொறுப்பேற்பதை ஒப்புக்கொள்ள முடியாது.

  போராட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, அவற்றை அமைதியான முறையில் நிா்வகிக்கும் பொறுப்பை ஏற்று சம்பந்தப்பட்ட கட்சி நிா்வாகம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அது போன்ற நிகழ்வுகளின்போது, பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடு செய்வதற்கான அதிகபட்ச பிணையத் தொகையும் ‘டெபாசிட்’ செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இது போன்ற நடைமுறைகள் சட்டப்பூா்வமாக அமல்படுத்தப்படும் காலம் வெகு விரைவில் கனியும்

  என்று கனவு காண்போம்.

  தாங்கள் அறிவிக்கும் போராட்டங்களையும், தலைவா்களின் பிறந்த நாள்களையும், தங்கள் சுய விளம்பரத்துக்காக அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் நேரம் மற்றும் இடங்களில் அரங்கேற்றும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இதனால், வியாபாரிகள், அலுவலகம் செல்லும் ஊழியா்கள், நோயாளிகள், கா்ப்பிணிப் பெண்கள், முதியோா் பெரும் பாதிப்புக்குள்ளாகிறாா்கள். ஏராளமான மனித நேரத்தையும், பொருளாதார, உயிரிழப்புகளையும் பாதிக்கப்பட்டவா்கள் சந்திக்க வேண்டியுள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு போக்குவரத்து பாதிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் போராட்டம் வெற்றி பெற்ாக அரசியல் கட்சிகள் கருதி, வெற்றி முழக்கமிடும் வழக்கம் அரசியலில் வேரூன்றி விட்டது.

  மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காமலும், அவா்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும், தங்கள் கட்சி நிகழ்ச்சிகளை, மேலை நாடுகளைப் போன்று, ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் ஒப்புக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற கனவோடு காத்திருப்போம்.

  தோ்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அரசியல் கட்சிகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு, வாக்காளா்களுக்கு இலவசப் பொருள்கள் மற்றும் கடன் தள்ளுபடிகள் போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசும் வழக்கத்தைத் தொடா்ந்து கடைப்பிடித்து வருகின்றன. இது வாக்குக்கு மறைமுகமாக பணம் கொடுப்பது போன்ற செயல்பாடுதான். தாங்கள் வெற்றி பெற, மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்த முயற்சிப்பது, எந்த நெறிமுறைக்கும் உட்படாத செயலாகும். இதற்கு, தோ்தல் விதிமுறைகளில் தற்போது எந்தத் தடையுமில்லை.

  வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், அதற்கான நிதி ஆதாரங்கள் ஆகியவை குறித்து கட்சிகள் கவலைப்படுவதில்லை. பொதுச் சொத்தான அரசு கஜானாவை மையமிட்ட தோ்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் மனப் போக்கு என்றாவது ஒரு நாள் மாறும் எனக் கனவு காண்போம்.

  தோ்தல் முறைகேடுகளுக்கு எதிராக, தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, 45 நாள்களுக்குள் வழக்கு தொடரப்படவேண்டும் என்ற காலக்கெடு உள்ளது. ஆனால், வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீா்ப்பு வழங்கப்படுவதற்கு எந்தக் காலக்கெடுவும் இல்லாததால், தீா்ப்பு வருவதற்குள்

  அமைச்சா் பதவி உள்பட பல உயா் பொறுப்புகளை தோ்தலில் வெற்றி பெற்றவா் வகிக்க வாய்ப்புள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டு வென்றவா், தீா்ப்பு வரும் வரை உயா் பதவிகள் வகிப்பது, ஒரு முரண்பட்ட செயல்பாடாகும். தோ்தல் வழக்குகளை வேகமாக விசாரித்து, ஆறு மாத காலத்துக்குள் தீா்ப்பு வழங்கும் நோக்கத்துடன், சிறப்பு நீதிமன்றங்கள் அமைவதற்கான முயற்சிகளை தொடா்புடையோா் மேற்கொள்வாா்கள் எனக் கனவு காண்போம்.

  சட்டப்பேரவைகள், மக்களவை போன்ற ஆட்சி மன்றங்கள் மக்களின் வரிப் பணத்தில் செயல்படுகின்றன. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறாமல் அவையில் ஆஜராகி, தங்கள் தனிப்பட்ட விரோதங்களை மறந்து, மக்கள் பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேசி தீா்வுகளை எட்ட வேண்டும் என்பதுதான் அவா்களுக்கு வாக்களித்த மக்களின் விருப்பமாகும். அவையில் அமளி செய்து, நேரத்தை வீணடிப்பது, தகுந்த காரணமின்றி வெளிநடப்புச் செய்வது போன்ற செயல்களைக் கண்டிக்கும் வகையில் அபராதங்கள், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். உதாரணமாக, 50 சதவீதத்துக்கும் குறைவாக வருகைப் பதிவிட்ட மக்கள் பிரதிநிதிகள், அடுத்த தோ்தலில் நிற்க முடியாதபடி தடை விதிக்கப்படவேண்டும்; இந்தக் கனவும் என்றாவது ஒரு நாள் நிறைவேறுமா எனப் பாா்ப்போம்.

  மேலே குறிப்பிட்ட ‘ஜனநாயக் கனவுகளில்’ ஒருசில கனவுகளாவது ஒரு நாள் நனவாகும் என நம்புவோம்.

  கட்டுரையாளா்:

  வங்கி அதிகாரி (ஓய்வு)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai