அதிபர் தேர்தல் பரபரப்பில் இலங்கை

இலங்கை என்றாலே கடல் நடுவே ஒரு கண்ணீர்த்துளி என்கிற கவிதை எல்லோரையும் நெகிழ வைக்காமல் இருக்காது.

இலங்கை என்றாலே கடல் நடுவே ஒரு கண்ணீர்த்துளி என்கிற கவிதை எல்லோரையும் நெகிழ வைக்காமல் இருக்காது. அதே சமயத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த இன அழிப்பை மறந்து விடவும் முடியாது. மகிந்த ராஜபட்சவும், கோத்தபய ராஜபட்சவும் செய்த இன அழிப்புக்காக கடந்த தேர்தலில் தூக்கி எறியப்பட்டார்கள். தாய்த் தமிழர்கள் வாழ்வை இழந்து எண்ணற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அந்த நிலையிலும், தமிழை வளர்த்து வருகிறார்கள்.
இலங்கை என்றால், ராணுவம் என்கிற கோத்தபய ராஜபட்சவின்  ஆணவப் பேச்சை இன்னும் ஈழத் தமிழர்கள் மறந்து விடவில்லை. ஆனால், இப்போது ஒரு திருப்புமுனை நிகழ்ந்திருக்கிறது. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. சிறை வைக்கப்பட்டிருக்கும் ராணுவ அதிகாரிகளையும், ராணுவப் புலனாய்வு அதிகாரிகளையும் விடுதலை செய்வதுதான் கோத்தபய ராஜபட்சவின் பிரதான நோக்கம் என்பதை அனுராதாபுரத்தில் நடந்த பிரசாரப் பேரணியில் அவரே பிரகடனப்படுத்தி விட்டார்.
அந்தப் பிரகடனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் தமிழர்களின் ரத்தமும், சதையுமான அழித்தொழிப்புகளின் அலறல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பனி பெய்தால் மழையில்லை, பழம் இருந்தால் பூ இல்லை. இந்த நிலைதான் தமிழர்களுக்கான உறவை ஈழ மண் மறுபடியும் மறுபடியும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. தமிழ் மொழிக்காக அன்று நடந்த போராட்டம், தற்போது தமிழ் இனத்துக்கான போராட்டமாக நீண்டு கொண்டே இருக்கிறது. மொழி காக்கும் நம் மண்ணில் உயிர்நீத்த தாளமுத்து நடராஜனில் தொடங்கி ஈழ மண்ணில் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் வரை நீளுகிறது இந்தப் போர்.
இப்போராட்டத்தின் உணர்வு திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே.
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் 
தீராதி தீரரென்று ஊது சங்கே!
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு 
என்று பாரதிதாசனுடன் பாடம் படித்த தமிழினம்  எப்படி தனது போர்க் குணத்தை மறைத்துக் கொள்ளும்? ஈழ மண்ணில் நடந்த துயரம், கண்ணீர், வேதனை சாக்காட்டை எப்படி நாங்கள் மறப்போம்?  
2009-இல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து, தீரம் மிக்க பெண்களை தீயிட்டுக் கொளுத்திய இனவாத வெறியர்களில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லையே. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் முண்டியடிக்கும் கோத்தபய ராஜபட்ச விடுதலை செய்யப் போவதாகச் சொல்வது யாரை? அதிபராக மகிந்த ராஜபட்ச  இருந்தபோது, துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களே விரைந்து பாய்வதைப் போல, அதிகாரம் என்னவோ கோத்தபயவிடம் அல்லவா இருந்தது?
இன்னொரு பக்கம் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு தேசியப் பாதுகாப்பு பொறுப்பு வழங்கப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா வாக்களித்துள்ளார். இதில் கோத்தபயவுக்குப் போட்டியாக பொன்சேகா உருவாக்கப்பட்டிருக்கிறார். இரண்டு பேருக்கும் இடையில் தமிழர்களுடைய நிலைகள்தான் கேள்விக்குறியாய் நிற்கின்றன. தமிழர்கள் என்று ஒரு இனமுண்டு, தனியே அவர்களுக்கொரு குணமுண்டு என்று சொல்லப்படுவதில் ஒற்றுமையில்லாத இனம் என்ற குற்றச்சாட்டும் இருக்குமோ என்கிற மன வேதனையும் இல்லாமல் இல்லை.
கடந்த காலத்தை அசை போட்டுப் பார்க்கும்போது, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த் விக்கிரமதுங்க படுகொலையைச் சொல்லலாம். இலங்கையில் நடக்கப் போகும் இந்த சிங்கள அதிபருக்கான தேர்தலில், தமிழர்களுக்கு எந்த வாக்குறுதியையும் சிங்களத் தலைவர்கள் தரமாட்டார்கள். தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கிற விதத்தில்கூட ஒரு வாக்குறுதியையும் சிங்களத் தலைவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அப்படி அவர்கள் வழங்குவார்களானால், சிங்கள இனம் முற்றாக அவர்களை நிராகரித்து விடும்.
இவ்வாறு நிலைமை இருக்கையில், தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் அதிபரிடம் எந்த வகையான நியாயத்தை தமிழர்கள் கேட்டுப் பெற முடியும். குள்ளநரி தின்ற கோழி கூவவா போகிறது?
தொடர்ந்து தமிழர்களின் மீது பரவலாகவும், தீவிரமாகவும், ஆதிக்கம் செலுத்தி வந்த சிங்கள அரசியலில் இவையே பரபமபத விளையாட்டாக நம்முள் விரிந்து பரவுகிறது. இதனால்தான் என்னவோ, நம்முடைய வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கின்றன.
விமானப் படைக்கு உக்ரைனில் இருந்து பழுதடைந்த விமானங்களை வாங்க நடந்த பேரத்தில் கோத்தபயவின் குடும்பம் அடித்த கொள்ளையை இலங்கை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார் பத்திரிகையாளர் லசந்த் விக்கிரமதுங்க.
இலங்கையின் கருவூலம் கோத்தபய ராஜபட்சவின் கைகளில் இருப்பதைக் கண்டு அதிர்ந்தது நாடு. ஆகவே, அந்த ஊழலை வெளிப்படுத்திய பத்திரிகை ஆசிரியர் லசந்த் விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். கோத்தபயவின் ரகசிய ராணுவக் கொலைக் குழு லசந்த் விக்கிரமதுங்க படுகொலையைத் தொடர்ந்து, இலங்கை பத்திரிகையாளார்கள் மத்தியில் நியாயத்தையும், சத்தியத்தையும் எடுத்து வைக்கத் துணிந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் சிலர் உயிருக்கு அஞ்சி வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர்.
மகிந்த ராஜபட்ச பதவியில் இருந்த வரை லசந்த் கொலை வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது. அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்ச தோல்வி அடைந்த பின்னர் மைத்ரி சிறீசேனா அதிபரான பிறகு, லசந்த் படுகொலை தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டது. 
நிசாந்த்சில்வா என்கிற சிங்கள அதிகாரி நேர்மையானவராக இருந்ததால், மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. லசந்த் சுட்டுக் கொல்லப்படவில்லை, நீண்ட கூர்மையான கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். போலி பதிவெண் கொண்ட மோட்டார்சைக்கிள் ஒன்றை சம்பவம் நடந்த இடத்தருகே கண்டுபிடித்ததாக நாடகம் ஆடிய காவல் துறை, அந்த மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த இரண்டு தமிழ் இளைஞர்களை இரக்கமற்று உயிருடன் எரித்தது.
லசந்த் கொலைக் குழுவை பற்றி நாடு முழுவதும் நன்கு அறிந்திருந்தாலும், அவற்றைப் பற்றி மேலும் தீர்க்கமாகத் தெரிந்த ஒருவர் மர்மமான முறையில் சிறையில் மடிந்துள்ளார். இவ்வளவு புதையுண்ட ரகசியங்களை தனது புலனாய்வின் மூலம் மீட்டெடுத்தார் நிசாந்த் சில்வா.
இதன் பின்னர் கோத்தபயவின் ரகசிய ராணுவ கொலைக் குழுவில், நிசாந்த் சில்வாவின் தீவிர புலனாய்வுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கு தீவிர நிலையை அடைந்தபோது, அதிபர் சிறீசேனாவிடம், கோத்தபய சரணடைய நேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. 
இப்படி கோத்தபயவின் ஓரங்க நாடகம், ஒரு முறையல்ல, ஓராயிரம் முறை நடந்திருக்கிறது; இவற்றில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களும், கார்ட்டுனிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையான விஷயம். ரகசிய கொலைக் குழுவில் இருந்த ராணுவத்தினர் கைது செய்யப்படுவதைப் பார்த்து, தனது பிரதான எதிரி அதிபர் சிறீசேனாவிடம் சரணடைந்த கோத்தபய, ராணுவத்தினரை விடுதலை செய்வதுதான் எனது முதல் வேலை என்று சொல்லியிருப்பது இரக்கமற்ற இதயத்தில் இருந்து வெளிவரும் அர்த்தமற்ற பேச்சாகத் தெரிகிறது.
அதே சமயம், ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கிற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குரல் எங்கும் எழவில்லை. அது காற்றோடு கரைந்து போய்க் கொண்டே இருக்கிறது. இவற்றில் இருவேறு நிலைப்பாட்டை சிங்கள இனவாத அரசு  தொடர்ந்து எடுத்து வருகிறது என்பது வெட்ட வெளிச்சமான ஒன்றாகும்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி அடையப் போவது யாராக இருந்தாலும், தமிழர்களுக்கு அவர் செய்யப் போகும் கைங்கரியம்தான் என்ன? தமிழர்களின் உரிமைகளைப் பறித்த, தமிழினத்தை அழித்த சிங்களப் பேரினவாதத்துக்கு தார்மிக எதிர்ப்பைத் தெரிவிக்க இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிப்பது குறித்த முடிவை தமிழர்கள் எவ்வாறு எடுக்கப் போகிறார்கள்? இரு சிங்களத் தலைவர்கள் தேர்தல் நிற்கிற களத்தில், வெற்றி பெறப் போவது என்பது ஏதோ ஒரு சிங்களத் தலைவர். அப்படியானால், இந்தத் தேர்தல் களத்தில் தமிழர்களுக்கு என்ன வேலை? 
அதற்கான ஒரு வேலை வந்து விட்டது. இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் சுப்ரமணியம் குணரத்னம் என்பவர் போட்டியிடுகிறார். மேலும் இலங்கைத் தமிழரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் போட்டியிடுகிறார். 
இனப் படுகொலை செய்த ஒரு தேசத்தில் நடைபெற உள்ள தேர்தலில் தங்களுக்கான நியாயம் எந்த வகையில் இருக்கும் என்பதை தமிழர்கள் சீர்தூக்கிப் பார்க்கப் போகும் தருணமாகவே இந்த அதிபர் தேர்தல் பார்க்கப்படுகிறது.

கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com