விபத்தில்லாத தீபாவளியே இனிப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகையான தீபாவளி (அக்.27)  நெருங்கிக் கொண்டிருக்கிறது. வயது வித்தியாசம் இன்றி அனைவராலும் கொண்டாடப்பட்டாலும் சிறுவர்களுக்குக்  குதூகலம்

இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகையான தீபாவளி (அக்.27)  நெருங்கிக் கொண்டிருக்கிறது. வயது வித்தியாசம் இன்றி அனைவராலும் கொண்டாடப்பட்டாலும் சிறுவர்களுக்குக்  குதூகலம் தரும் வாண வேடிக்கைகளும் - பட்டாசுகளும் நிறைந்த விழாவாகும் இது.
இந்தியாவுக்குள் சுமார்  200 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலிருந்து பட்டாசு வந்தது. எனவேதான் இன்றும்கூட கிராமங்களில், சிவகாசிப் பட்டாசையும் சீனிப் பட்டாசு என்று அழைப்பதைக் காணலாம். ஆனால், சீனாவில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் புழக்கத்தில் இருந்தன.
சில பத்தாண்டுகளுக்கு முன்னர், இந்தப் பண்டிகையின்போது பட்டாசுகளுக்கு இருந்த முக்கியத்துவம் தற்போது குறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. பண்டிகையின் மகிழ்ச்சியினை குறைக்கக் கூடிய வகையில் ஒரு சில விபத்துகள் ஏற்படுவது  வருத்தத்துக்குரியது. கவனமின்மை, தரக் குறைவான தயாரிப்பு போன்றவற்றின் காரணமாக வெடி சார்ந்த விபத்துகள், சிலரது உயிரையும், சிலரது உறுப்புகளையும் இழக்க வைக்கின்றன.
இது தொடர்பாக பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த மருத்துவ இதழ் தரும் குறிப்பு கவலை அளிப்பதாக உள்ளது. பெரு நகரங்களில், தீபாவளிக்கு முன்னும் பின்னும் மூன்று நாள்களில், மோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில்  ஒரு லட்சத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் சுமார் 150 பேர் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்படுகின்றனர். இதில், ஐந்திலிருந்து  முப்பது வயதுக்குட்பட்டோர் சுமார் 70 சதவீதம் பேர்; இவர்களுள் 10 சதவீதம் பேர் பெரும் தீக்காயங்களுக்கு உள்ளாகின்றனர். இது தவிர, மருத்துவமனைக்கு வராத சிறு காயங்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும்.
வெடி சரியாக வெடிக்காது புஸ்வாணமாகி விட்டது என்று நாம் கேலி செய்யும் பூச்சட்டி - புஸ்வாணம் எதிர்பாராது வெடிப்பது, இந்த விபத்துகளில் மூன்றில் இரண்டு பகுதி இடம்பெறுவது கவலைக்குரிய  நகைமுரண். தயாரிப்பில் இருக்கும் தரக் குறைபாடே இதற்குக் காரணம். 
ஆனால், சில நாடுகள் பிற நாடுகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்கின்றன. உதாரணமாக, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கனடா உள்ளிட்ட சில மேலை நாடுகளில் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். சில நாடுகளில் பட்டாசுகள்  தடை செய்யப்பட்ட  பொருளாகும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள்  பட்டாசு கொளுத்துதல் வித்தியாசமானது. அங்கு சிறு தீயணைப்பான் உள்ளிட்ட தகுந்த பாதுகாப்புடன் பட்டாசு கொளுத்துகின்றனர். சில இடங்களில் தீயணைக்கும் நிலையத்தின் அனுமதியும் உதவியும் பெற்று ஒரே இடத்தில் கூடி பட்டாசுகளைக்  கொளுத்துகின்றனர்.
மேலும் ஒலி எழுப்பாத, வெளிச்சம் காட்டும் பட்டாசுகளையே பயன்படுத்த  அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர, கேளிக்கை முடிந்ததும் அங்கிருக்கும் குப்பைகளை அனைவரும் அகற்றி, இடத்தைச்  சுத்தம் செய்த பின்னரே கலைந்து  செல்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடம் உள்ள இத்தகைய நல்ல பழக்கம்  இங்கும் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்று.
புது தில்லியில் தீபாவளி அன்று புகை மூட்டம் சொல்லொணாத அளவுக்கு இருந்து வந்தது; காற்று முழுமையாக மாசுபட்டு, அதில் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரண்டிலிருந்து ஆறு மடங்கு வரை அதிகமாகக்  காற்றில் கலந்து பெரும் கேடு விளைவித்தது.  
புகை மற்றும் அதிக ஒலி எழுப்பாத  பட்டாசுகளை குறைந்த நேரம் கொளுத்துவது குறித்து சில நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
முன்பைக் காட்டிலும் 35 சதவீதம் குறைந்த புகை ஏற்படக் கூடிய பசுமைப் பட்டாசுகள் அறிவியல் ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் களமிறங்கியுள்ளன. அதே போன்று, சுமார் 150- 175 டெசிபல் ஒலி அளவு இருந்த பட்டாசுகள் முழுமையாகத்  தடை செய்யப்பட்டு, அவற்றின் ஒலி அளவு 75 டெசிபலுக்கு மிகக் கூடாது என்ற கடுமையான நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருவாய் ஈட்டும்  பட்டாசுத் தொழிலில், சுமார் நான்கு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்; ஏராளமான கெடுபிடிகளை மீறி துரதிருஷ்டவசமாக கணிசமான குழந்தைத் தொழிலாளர்களும் ஈடுபடுவது  வருந்தத்தக்கது. இந்தக் குழந்தைகளின் கல்வி இடைநிற்பது மட்டுமின்றி, இளமையையும் தொலைக்கின்றனர். மேலும், பலவித தோல் மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்களுக்கும் உள்ளாகின்றனர் என்பதும் கவலைக்குரியது.
உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் பட்டாசு தயாரிக்கும் நாடு இந்தியாதான். மேலும், பட்டாசு இறக்குமதியும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் கடுமையான நெறிமுறைகளாலும், பசுமைப் பட்டாசுகள் என்ற புகை - ஒலி மாசு குறைந்த பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும் என்ற கடுமையான நெறிமுறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும்  பட்டாசுத்  தொழில், சீனாவிலிருந்து தவறான வழியில் இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளின் விலைக்கு எதிராகப்  போட்டியிட முடியாமல்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னொருபுறம், சுற்றுச்சூழல், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பெருகி வருகிறது. இவை தொடர்பான நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளில் , விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, லேசர் ஷோ போன்றவை பட்டாசுத் தொழிலுக்குக்  கடும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும்.
மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பட்டாசுத் தொழிலில் தேவையான மாற்றங்களை உருவாக்க  வேண்டும். அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வாழ்வளிக்கும் அந்தத் தொழிலும் சிறக்க வேண்டும். தீபாவளியை  விபத்தின்றி, சுற்றுச்சூழல் மாசுபடாமல்   பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com