Enable Javscript for better performance
நிலவே உன்னை நெருங்குகிறோம்- Dinamani

சுடச்சுட

  

  நிலவே உன்னை நெருங்குகிறோம்

  By நெல்லை சு. முத்து   |   Published on : 05th September 2019 02:39 AM  |   அ+அ அ-   |    |  

  வலவன் ஏவா வானவூர்தி எய்துப என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும், வான வூர்தி ஏறினள் என்று இளங்கோவடிகளும், எந்திர ஊர்தி (பெருங்கதை), பறவை ஊர்தி - மயிற்பொறி (சீவக சிந்தாமணி), எந்திரத் தேர் (கம்ப ராமாயணம்) என்றெல்லாம் தமிழ்ப் புலவர்களும் வானில் உயர்ந்து பறக்கும் ஊர்தி பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
  கிரேக்க வரலாற்றில் தேதாலஸ் என்கிற தச்சுக்கலை நிபுணர் மூங்கில் தட்டிகளில் மெழுகு பூசி இறக்கைகள் கட்டி வானில் பறக்க முயன்றாராம். 15-ஆம் நூற்றாண்டு வாக்கில் லியோனார்டோ டாவின்சி எனும் இத்தாலிய அறிஞர் தீட்டிய ஓவியங்களில் பறவை எந்திரம் காணப்படுகிறது. 
  17-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்தான் நிலாப் பயணங்களே முளைவிட்டன. சோம்னியம் (1634) என்கிற நூலில் ஜோஹன்னஸ் கெப்ளர் ஒரு கற்பனையை வெளியிட்டார். சந்திர கிரகணத்தின்போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் விழும் நிழலையே கயிறு போலப் பற்றி இருட்டுப் பாலத்தின் வழியே நிலவுக்குப் பயணம் என்ற அந்தக் கற்பனை ஆச்சரியம்தானே.
  சந்திரனில் மனிதன் (மேன் ஆன் த மூன், 1638) என்ற நூலில் பிரான்சிஸ் காட்வின் என்கிற பாதிரியார் ஒரு யோசனை தெரிவித்தார். தட்டாம்பூச்சியின் காலில் கல்லைக் கட்டித் தூக்கச் செய்வது போல, நிறைய பறவைகளின் கால்களில் ஒரு மரச் சட்டத்தைத் தொங்கவிட்டு அதில் நாற்காலி போட்டு ஏறிப் பறக்கலாமாம்.
  சைரானோ  டி  பெர்ஜராக் என்னும் பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய சந்திர மண்டலக் கற்பனைக் கதை (1656) மற்றும் சூரிய மண்டலக் கற்பனைக் கதை (1662) ஆகிய இரண்டு நூல்கள் அவர் மறைவுக்குப் பிறகு வெளிவந்தன. அதில் இக்கúஸத்ரான் என்கிற பெட்டக விண்ணூர்தி இடம்பெறுகிறது. முன்பக்கச் சுவரில் பொருத்தப்பட்ட ஒரு ஒளிவில்லை வழி, வாகனத்தினுள் சூரிய ஒளி நுழையும். உள்காற்று சூடாகி லேசாகும்; அழுத்தம் குறையும்; வெற்றிடத்தை ஏற்படுத்தும். அந்த வெற்றிடத்திற்குள் வெளிக்காற்றுச் சீறிப் பாய்வதால், வாகனம் உந்தி முன்னுக்குத் தள்ளப்படும் என்பது கருத்தாக்கம். 
  தாமஸ் லுப்தனின் கற்பனை புதுரகம். தண்ணீரில் தெப்பம் மிதப்பது போல, வெப்பக் காற்றின் மேல் காலியான முட்டை ஓடுகளில் இருக்கை அமைத்து வானில் பறக்கலாம் என்று சிந்தித்தார். காப்ரியல் டானியல் என்னும் மேலை எழுத்தாளருக்கு ஒரு விபரீதக் கற்பனை, வக்கிரத் தும்மல் தெறிப்பில் ஒரு ஆளை சந்திரனுக்குத் தூக்கி எறிய முடியும் என்கிறார். 
  18-ஆம் நூற்றாண்டு சந்திரப் பயணம் சூடு பிடித்தது. காந்தத்தினால் ஆன லாபுத்தா தீவு, மிகப் பிரம்மாண்ட காந்தத்தினால் விலக்கப்பட்டு அந்தரத்தில் மிதக்கும், ஆங்காங்கே பறக்கும் ஊர்தியைத் தயாரிக்கலாம் என்ற உத்தியை ஜோனத்தான் ஸ்விஃப்ட்டின் கலிவர் பயணம் (1726) புதினத்தில் காணலாம்.  
  ஜார்ஜ் டக்கர் எழுதிய சந்திரனுக்கோர் நெடும் பயணம் (எ வாயேஜ் டு மூன், 1827) நூலில் லுனாரியம் என்கிற வித்தியாசமான ஈர்ப்புப் பொருள் சுட்டப்படுகிறது. இவரது மாணவரான எட்கர் ஆலன்போ, தமது த அன்பாரலல்டு அட்வெஞ்சர்ஸ் ஆஃப் ஹான்ஸ் ஃபால் எனும் நூலில் பலூன்களின் உதவியால் வானில் பறக்கலாம் என்று எழுதினார். அதில் ஹான்ஸ் ஃபால் எனும் சீமான் ஒரு விண்கப்பலில் சென்று நிலவில் இறங்குவதாகக் கதை. வெறும் பலூனுக்குப் பதில் காந்தப் பலூன் இருந்தால் போதும் (ஏரியல் நாவிகேஷன் அண்ட் இட்ஸ் வொண்டர்ஃபுல் வாயேஜ்) என்பது ஜே.எல்.ரிடல் கருத்து. 
  1728-ஆம் ஆண்டு முர்தாக் மக் தெர்மோ எழுதிய எ வாயேஜ் டு காக்லோகல்லினிக்கா என்ற நூலில்தான் முதன்முதலில் வெடி விசைச் சிந்தனை குருத்துவிட்டது. 700 பீப்பாய்களில் நிறைத்த வெடிமருந்தினை வெடிக்கச் செய்து, அதன் வெடிவேகத்தில் நிலவுக்குப் போகலாம் என்று கருதினார். 
  1865-ஆம் ஆண்டு விண்வெளிப் புனைக் கதைகளின் தந்தை பிரெஞ்சு நாவலாசிரியர் ஜூலி வெர்னி பூமியில் இருந்து சந்திரனுக்கு (ஃப்ரம் த எர்த் டு த மூன்) என்ற நூல் படைத்தார். நவீன விண்வெளி வரலாறும் ஆரம்பமானது. அந்நூலில் மனிதர்கள், நாய்கள், கோழிகள் எல்லாம் விண்வெளியில் எடை இன்றி மிதக்கின்ற சித்திரமும் இடம்பெற்றது. பூமியின் ஈர்ப்பு விசையும், சந்திரனின் ஈர்ப்பு விசையும் சமனப்பட்டு விடுவதால் இந்த நிலை உண்டாகிறது என்பது நாவலாசிரியர் கருத்து. உள்ளபடியே, பூமியைச் சுற்றும் விண்கலனில் மைய விலக்கு விசையும், புவியீர்ப்பு விசையும் சமனப்படும் நிலையில் ஈர்ப்பு விசை நுண்ணளவில் இருக்கும். 
  ஒரு ராட்சதப் பீரங்கி உதவியால் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பலாம் என்கிற கருத்தாக்கமும் அந்த நாவலில் இடம்பெற்றது. மிகப் பெரிய துப்பாக்கிக் குண்டு தயாரித்து, தரைக்குள் ஆழமான விண்வெளித் துப்பாக்கி வைத்து, சொடுக்கினால் சந்திரனுக்கே விண்கலன் செலுத்தலாமாம். 
  இந்த நாவலில் இடம்பெறும் விண்வெளித் துப்பாக்கி ஃபுளோரிடா மாகாணத்தில் டாம்பா எனும் இடத்தில் அமைந்ததாகக் கற்பனை தீட்டினார் ஜூலி வெர்னி. சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்று அமெரிக்காவின் பிரபல கென்னடி விண்வெளி மையம் உண்மையில் இதே டாம்பாவிலிருந்து ஏறத்தாழ 210 கிலோமீட்டர்கள் அருகில்தான் அமைந்துள்ளது. புனைத்தன்மையிலும் அப்படி ஒரு நேர்த்தியான அறிவியல் துல்லியம். 
  20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் எச்.ஜி.வெல்ஸ் எழுதிய சந்திரனில் முதல் மனிதர்கள் (த ஃபர்ஸ்ட் மென் இன் த மூன், 1901) எனும் நூலும் மிக சுவாரஸ்யமானது. அவர் சில இயற்பியல் விதிகள் பற்றிப் பேசுகிறார். ஒளிபுகாப் பொருள், அனல் புகாப் பொருள் போன்றவை மாதிரியே, நிறையீர்ப்புப் புகாப் பொருளினால் விண்கூடு தயாரிக்கும் உத்தியை வெளியிடுகிறார். புவியீர்ப்புக்குக் கட்டுப்படாமல் சந்திரனுக்குப் பறந்து செல்வதாகக் கதை. 
  அமெரிக்காவில் மாஸசூசெட்ஸ் மாகாணம் வொர்செஸ்டர் கிராமத்தில் ராபர்ட் ஹூச்சிங் கொட்டார்டு 1915 ஜூலை 15-ஆம் தேதியன்று எச்.ஜி.வெல்ஸின் புதினத்தைப் படித்தாராம். ஆகஸ்ட் 8-ஆம் தேதி, தானே சந்திரப் பயணம் செய்ததாகக் கனவு கண்டாராம். தொலைநோக்கி வழியாக அழகான சந்திரனையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். ஒரு முக்காலியில் நிறுத்திவைக்கப்பட்ட ஏவுகலன் உதவியால் சந்திரனுக்குப் பயணம் செய்யலாம் என்று கருதினார். 
  நிலவில் சென்று இறங்கியதும் புவிவாசிகளுக்குத் தம் பயண விவரத் தகவல் தெரிவிக்க என்ன வழி என்று சிந்தித்தார். வெடிமருந்து கொளுத்திப் பிரம்மாண்டத் தீபம் ஏற்றினால், அந்த ஒளியைப் பூமியில் இருந்து கவனிக்க முடியும் என்று கணித்தார். 
  ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1919-ஆம் ஆண்டு தனது கனவுகள், கற்பனைகள் என அனைத்தையும் குழைத்து, அதிகபட்ச உயரங்களைச் சென்றடைய ஒரு வழிமுறை என்கிற ஆய்வுக் கட்டுரை எழுதினார்.
  1959 செப்டம்பர் 12-ஆம் தேதியன்று ரஷியா செலுத்திய லூனா-2 விண்கலம் மறுநாள் (13.09.1959) நிலவின் தரையில் மோதி விழுந்தது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1969 ஜூலை 20-ஆம் தேதியன்று அமெரிக்காவின் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், புஸ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் நிலவில் சென்று இறங்கினர். 
  நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 20 ஆண்டுகளில் பல நாடுகளுக்கு மீண்டும்  நிலா மோகம் பிடித்துவிட்டது. ஜப்பானின் ஹிதென் (10.04.1993), ஐரோப்பாவின் ஸ்மார்ட் (3.09.2006), ஜப்பானின் செலீனி (10.06.2009), சீனாவின் சாங்கே-1 (5.11.2009) ஆகிய பல நாட்டு விண்கலன்களும் சந்திரனில் மோதி விழுந்தன. 
  நிலாப் பயணங்கள் மேற்கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு ஆறாவது இடம். 2008 அக்டோபர் 22 அன்று சந்திரயான்-1 சுமந்து சென்ற மிப் என்கிற நிலா மோதுகலன் 2008 நவம்பர் 14 அன்று சந்திரனில் மோதி இறங்கியது. இந்தியத் தேசியக் கொடி பொறித்த மிப், நம் நாட்டு குழந்தைகளுக்கு  இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் வழங்கிய தேசியப் பரிசு. 
  3,400 முறை பூமியைச் சுற்றிவந்த சந்திரயான்-1, 2008 ஆகஸ்ட் 28 அன்று புவித் தொடர்பு அறுந்தது. இன்றும் நிலவுப் பாதையில் சுற்றிவருவதாக அமெரிக்க விண்வெளி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஏதாயினும், 1976 ஆகஸ்ட் 22-ஆம் தேதியன்று நிலவில் இறங்கிய ரஷியாவின் லூனா-24 விண்கலனுக்குப் பிறகு, இந்த நூற்றாண்டில் சீனாவின் சாங்கே-3 விண்கலம் 14.12.2013 அன்று நிலவின் தரையில் சுமுகமாக இறங்கியது. அதில் இருந்து வெளிவந்த யூது (முயல்) என்ற நிலா ஊர்தி, 42 நாள்களுக்குப் பின்னர் நின்றுபோனது. சீனர் தொன்மங்களில் நிலாக் கடவுளின் செல்லப்பிராணி முயல்தானாம். இந்த ஆண்டு 2019 ஜனவரி 3 அன்று சீனாவின்  சாங்கே - 4 விண்கலம் முதன்முறையாக சந்திரனின் மறுபக்கத்தில் சென்று இறங்கியது.
  இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதியன்று கிளம்பியது. கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதியன்று நிலவை நோக்கி விக்ரம் நிலா இறங்கி (லேண்டர் - 1.47 டன்) விடுவிக்கப்பட்டது; தற்போது நிலவுக்கு மிக அருகே 35 கி.மீ. தொலைவுக்கு லேண்டர் பகுதி வெற்றிகரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது; வரும்  செப்டம்பர் 7-ஆம் தேதியன்று அது நிலவில் தரையிறங்க உள்ளது.  அதிலிருந்து வெளியே புறப்படும் மேஜை அளவு ப்ரக்ஞான் (27 கிலோ) நிலா ஊர்தி விநாடிக்கு ஒரு விரல்கடை அளவு ஆமைவேகத்தில் ஊர்ந்து நிலா மண்ணை ஆய்வு செய்யும். 
  தென் துருவத்தில் உள்ள 40 டி.எம்.சி. தண்ணீரும், நிலா மண்ணின் விண்வெளி எரிபொருளான ஹீலியம்-3 தனிமமும் எதிர்கால நிலா முகாம்களுக்குத் தேவை அல்லவா?


  கட்டுரையாளர்:
  இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு) 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai