Enable Javscript for better performance
மிதக்கும் அணுமின் நிலையம் ஆபத்தா?- Dinamani

சுடச்சுட

  
  ship


  ஆர்க்டிக் பெருங்கடலில், கப்பலில் கட்டப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மிதக்கவிட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையில் மேலும் ஒன்றைச் சேர்த்திருக்கிறது ரஷியா.
  அகாடெமிக் லொமொனோஸோவ் என அழைக்கப்படும் இந்த மிதக்கும் அணுமின் நிலையம் வடமேற்கு துறைமுகமான முர்மன்ஸ்க்கிலிருந்து சுமார் 5,000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு கடற்கரை நகரமான பெவெக்கை நோக்கிச் செல்கிறது. இந்தக் கப்பலில் இரு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தி 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தூரகிழக்கு நகரமான பெவக்கில் உள்ள வீடுகளுக்கும், சுரங்கத் தொழில் உள்ளிட்டவற்றுக்கும் இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும்.
  ஆனால், இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தை செர்னோபில் அணு உலை விபத்துடன் ஒப்பிட்டு அச்சம் தெரிவித்திருக்கிறது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான கிரீன்பீஸ். 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி அப்போதைய சோவியத் ஒன்றியத்தில் உக்ரைனின் பிப்யாட் என்ற இடத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்து, இதுவரை நிகழ்ந்த அணு உலை விபத்துகளிலேயே மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. 
  இதேபோல, ஆர்க்டிக் பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஆய்வு செய்துவரும் பெல்லோனா ஃபவுண்டேஷன் எனும் அமைப்பு, சுனாமி பேரலை போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் இந்த மிதக்கும் அணுமின் நிலையம் கடலோரப் பரப்புக்கு அடித்துச் செல்லப்பட்டு நிலப்பகுதிக்குள் தூக்கி வீசப்படும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது. செர்னோபில் மாதிரியான விபத்து கடலில் ஏற்பட்டால் கடல்வளம், மீன்வளம், மீனவ சமுதாயம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பேரிடர் நீண்டகாலத்துக்குத் தொடரக்கூடும்.
  ஆனால், ரஷிய அணுசக்தி நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. செர்னோபில் அணுமின் நிலையத்தில் மிகப் பெரிய உலைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், மிதக்கும் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அணு உலைகள் புதிய தொழில்நுட்பத்தாலானவை. சுனாமி பேரலை போன்ற பேரழிவுகளால், மிதக்கும் அணுமின் நிலையம் தரைப் பகுதிக்கே தூக்கி வீசப்பட்டாலும், அணு உலையின் அவசரகால அமைப்புகள் மின்சார தேவையின்றி 24 மணி நேரத்துக்கு அணு உலைகளைக் குளிரச் செய்யும். கடலில் ஏதாவது விபத்து நேர்ந்தால்கூட கடல்நீர் மூலம் அணு உலைகளைக் குளிரச் செய்ய முடியும். மேலும், ஆர்க்டிக் கடலில் பெரும் பனிப் பாறைகளை அணுசக்தி மூலம் உடைக்கும் கப்பல்கள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகின்றன. அந்தக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்தான் மிதக்கும் அணுமின் நிலையத்திலும் பயன்படுத்தப்படுகிறது என பாதுகாப்பு அம்சங்கள்குறித்து ரஷியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  இந்த மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றி அடைந்தால், அதை வர்த்தக ரீதியாக உலக நாடுகளுக்கு விற்பனை செய்யவும் ரஷியா திட்டமிட்டுள்ளது.  அதன்படி, முதலாவதாக சூடான் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் ரஷியா கையெழுத்திட்டுள்ளது.
  நீர்ப்பரப்பில் அணுமின் நிலையத்தை அமைப்பது இது முதல்முறையன்று. 1968-ஆம் ஆண்டு ஒரு கப்பலில் சிறிய அளவிலான அணு உலையை வடிவமைத்து பனாமா கால்வாய்க்கு அனுப்பியது அமெரிக்க ராணுவம். 7 ஆண்டுகள் இயக்கத்தில் இருந்த அந்த அணு உலை, பராமரிப்புச் செலவு அதிகமானதன் காரணமாகக் கைவிடப்பட்டது. இப்போது ஒரே நேரத்தில் பல மிதக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டமைத்து வருகிறது சீனா. அமெரிக்காவும் இத்துறையில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தத் தொழில்நுட்பப் போட்டியில் இப்போது முந்திக்கொண்டிருக்கிறது ரஷியா.
  தரைப்பரப்பில் கட்டப்படும் அணுமின் நிலையங்களைவிட செலவு குறைவு, தரைமார்க்கமாக அணுக முடியாத பகுதிகள், பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடல்மார்க்கமாகச் சென்று மின் வசதியை அளிப்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தி என, மிதக்கும் அணு உலைகளின் பயன்களைப் பட்டியலிடுகிறது ரஷியா. அதேவேளையில், செர்னோபில், ஃபுகுஷிமா அணு உலை விபத்துகளால் ஏற்பட்ட  பாதிப்புகள் இன்றுவரை தொடர்வதால் இதுபோன்ற முயற்சிகளை சுற்றுச்சூழல் அமைப்புகளும், பொதுமக்களும் அச்சத்துடன் பார்ப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.
  உலக நாடுகளிடையே 1994-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அணு பாதுகாப்பு உடன்படிக்கையின்படி, தரைப்பரப்பில் அமைக்கப்படும் மின் உற்பத்திக்கான அணு மின் நிலையங்களில் என்னென்ன பாதுகாப்பு உறுதிகள், தரத்தைப் பின்பற்ற வேண்டுமோ, அவற்றை மிதக்கும் அணுமின் நிலையங்களும் பின்பற்றியாக வேண்டும். அணுமின் திட்டங்கள் தொடர்பான விவரங்களை பிற நாடுகள் கேட்கும்போது முறையாக அளிக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பப் பாய்ச்சல் நிகழ்த்திவரும் நாடுகள் அதன்படி நடந்துகொள்ளுமா என்பதுதான் கேள்விக்குறி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai