Enable Javscript for better performance
விவேகமான தீர்வுக்கு பச்சைக் கொடி!- Dinamani

சுடச்சுட

  

  வங்கித் துறையில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்துகொண்டிருக்கும் முக்கிய நிர்வாகச் சீர்திருத்தங்களில் ஒன்றான வங்கிகளின் ஒன்றிணைப்பு திட்டத்தை முன் இழுத்துச் செல்வதற்கான மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பொதுவாக பொருளாதாரத்திலும், பிரத்யேகமாக வங்கித் துறையிலும் காணப்படும் தொய்வு நிலையை மாற்றவல்ல பரிகாரங்கள், இந்த இணைப்புத் திட்டத்தில் ஓரளவு உள்ளடங்கி இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
  பொதுத் துறை வங்கிகளின் சமீபத்திய தொய்வுகளுக்கு, நீண்ட காலமாக நிலவி வரும் நிர்வாகக் குறைபாடுகள் ஒரு முக்கியக் காரணம். அந்த மாதிரி நிர்வாகக் குறைபாடுகளின் ஓர் அம்சம்தான் வங்கிகளின் எண்ணிக்கையும், அது சார்ந்த நிர்வாகப் பிரச்னைகளுமாகும்.
  1969-ஆம் ஆண்டு நிகழ்ந்த தேசியமயமாக்கலுக்குப் பிறகு, 27 பொதுத் துறை வங்கிகள் புது அவதாரம் எடுத்தன. அந்த காலகட்டத்தில் நகர்த்தப்பட்ட பொருளாதாரச்  சீர்திருத்தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையாக அது கருதப்பட்டது. பெரும்பாலான மக்களை வங்கி சேவை வட்டத்துக்குள் ஈர்ப்பது போன்ற பல நன்மைகளை அந்த வேகமான விரிவாக்கம் செய்தாலும், சில எதிர்மறையான பக்க விளைவுகளையும் உருவாக்கியது. 
  நிர்வாக எல்லைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சி, அந்த வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் நிர்வாகத் திறமைகளை வங்கித் துறை வளர்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஆகியவை அந்த மாதிரி பக்க விளைவுகளில் அடங்கும். நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள், அரசியல் சார்ந்த நியமனங்கள் ஆகிய காரணிகளும் பக்க விளைவுகளுக்கு உரமிட்டு வலு சேர்த்தன. அதன் எதிரொலியாக, வங்கிகளின் வாராக் கடன்கள் ஒரு கட்டத்தில் வளர ஆரம்பித்து, அந்த வளர்ச்சி பூதாகரமாக உருவெடுக்க ஆரம்பித்தது. அதனால், பொதுத் துறை வங்கிகளின் ஆணிவேர்கள் ஆட்டம்காண ஆரம்பித்தன.
  அந்த ஆட்டத்தினால் பாதிக்கப்பட்ட வங்கிகளின் வாராக் கடன் சுமை, சுமார் ரூ.9 லட்சம் கோடி அளவில் வளர்ந்ததால், பல வங்கிகளின் மூலதனம் பெருமளவில் சுருங்கி, அவை தங்கள் பொருளாதார வலிமையைப் பலி கொடுக்கும் தற்போதைய நிலைமைக்கு தள்ளப்பட்டன.
  இதனால், பெரும்பான்மையான வங்கிகள் வளர்பிறை பருவத்திலிருந்து தேய்பிறை பருவத்துக்கு திரும்பின. வாராக் கடன்களால் பீடிக்கப்பட்டு, தங்கள் வலிமையை இழந்து நிற்கும் வங்கித் துறைக்கு இது ஒரு கிரகண காலம் எனலாம்.
  வளர்பிறை பருவத்தில், சமூக நோக்குடன் கூடிய இந்திய பொருளாதாரத்தின் சீரான மேம்பாட்டுக்கான ஒவ்வொரு அசைவிலும் நிதி சேவகர்களாக தோள் கொடுப்பதில் பெரும் பங்கு வகித்த வங்கிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறுவதை, அதன் அளப்பரிய மதிப்பை அறிந்தவர் எவரும் விரும்பவில்லை.
  எனவே, பாதிக்கப்பட்ட வங்கிகளை பொருளாதார  நலிவுகளிலிருந்து காப்பாற்றும் முனைப்பில், அவற்றின் பெரும் பகுதி பங்குதாரரான மத்திய அரசு களத்தில் இறங்கியது. களத் திட்டங்களில் ஒன்றாக, நலிவுற்ற வங்கிகளின் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கடந்த சில ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் ரூ.70,000  கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ரூ.55,000 கோடி உடனடியாக வழங்கப்படும் என்பது, நலிவுற்ற பல வங்கிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
  இதுபோன்ற ஒதுக்கீடுகள் மூலம் வங்கிகளின் மூலதனம் மேம்படுத்தப்படும்; அதன் மூலம், அவற்றின் கடன் வழங்குவதற்கான பொருளாதாரத் திறன் அதிகரித்து, அந்தத் திறன் நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது  அனைவரது எதிர்பார்ப்பாகும்.
  மூலதன குறைபாடுகளினால் பாதிக்கப்பட்ட சில வங்கிகள், வழங்கிய கடனை வசூல் செய்ய முடியாமலும், அதனால் மேற்கொண்டு கடன் வழங்க முடியாமலும் திணறி, திவால் நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. பெயரளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த வங்கிகளை, அதே நிலையில் எவ்வளவு காலம் பராமரிக்க முடியும் என்பது பெரும் கேள்விக்குறியாகும்.  
  நிதி ஆதாரங்கள் என்ற பிராண வாயுவை அவ்வப்போது செலுத்துவதன் மூலம், அவற்றின் ஆயுள் காலம் தற்காலிகமாக  நீட்டிக்கப்பட்டு வருகிறது எனலாம். வங்கிகளுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் நிதி ஆதாரங்கள் அனைத்தும் மக்களின் வரிப் பணம் என்பதை நினைவில் கொண்டால், தற்போதைய பிரச்னைக்கு இது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல என்பது நன்கு புரியும்.
  தற்போதைய தேக்க நிலைமையைச் சமாளிக்க, பல தீர்வுகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன. நலிவுற்ற வங்கிகளைப் பிரித்தெடுத்து, அவற்றை நிரந்தரமாக மூடுவது என்பது அதில் எளிதான ஒரு தீர்வாகும். ஆனால், இந்தத் தீர்வின் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
  மேற்குறிப்பிட்ட தீர்வால், நலிவுற்ற வங்கிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் பணியை இழக்க நேரிடும். நிதி நிலை குறைபாடு உள்ள இந்த வங்கிகளால் வாடிக்கையாளரின் வைப்புத் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி, அது வங்கித் துறை மீதான அவநம்பிக்கை என்ற விஷ விருட்சம் வளர்வதற்குக் காரணமாக அமையும். 
  காலம் காலமாக, தேனீக்கள்போல் இந்த வங்கிகளால் உருவாக்கப்பட்ட வாடிக்கையாளர் என்ற தேன்கூடு உடைந்து சிதறும். இதன் பாதிப்புகள், இந்திய வங்கி சரித்திரத்தில் ஆறாத வடுக்களாக மாறும்.  எனவே, இது சமூக நோக்குடன் கூடிய ஒரு தீர்வல்ல என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த மாதிரி பெரும் பாதிப்புகளைத் தவிர்த்து, நலிவுற்ற வங்கிகளைப் பாதுகாக்கும் சிந்தனைகளில் வளர்ந்ததுதான், ஒருங்கிணைப்பு என்ற மாற்று யோசனையாகும்.
  இதன் விளைவாக, ஒரே மாதிரி சேவையை வழங்கும் பல வங்கிகளின் ஒருங்கிணைப்பு மூலம் நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உருப்பெற ஆரம்பித்தன. நலிவுற்ற வங்கிகளை, பொருளாதார பலம் பொருந்திய வங்கிகளுடன் இணைப்பது, அந்த முயற்சிகளில் முக்கியத்துவம் பெற்றது. 
  அதன் முதல் கட்டமாக, 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஸ்டேட் வங்கியுடன், அதன் 5 துணை வங்கிகள் மற்றும் மகிளா வங்கியும் இணைக்கப்பட்டன. அடுத்த கட்டத்தில், 2019-ஏப்ரல் மாதம், பரோடா வங்கியுடன், விஜயா வங்கி மற்றும்  நலிவுற்ற தேனா வங்கியும் இணைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 4 பெரிய வங்கிகளுடன், நலிவுற்ற வங்கிகள் உள்பட 6 சிறிய வங்கிகளின் இணைப்புக்கான முன்னோட்ட அறிக்கை, கடந்த வாரம் வெளியாகியுள்ளது.  இந்த அறிக்கையின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகிய 4 வங்கிகள் இணைப்புக்கான இழுப்பு இன்ஜின்களாக செயல்படும். அவற்றுடன், யுனைடெட் வங்கி, ஓரியண்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகிய வங்கிகள் இணைக்கப்படும். 
  இந்த இணைப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றவுடன்,  பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆகக் குறையும். இந்த இணைப்புகளால், வங்கி பணியாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற உறுதி மொழியும், அறிவிப்பில் இணைந்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயம். பணியாளர்களைப் பாதிக்காத கடந்த இரு இணைப்பு நடவடிக்கைகளுமே அதற்கு சாட்சியாகும். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், நலிவுற்றிருக்கும் வங்கிகள் என்ற நோயாளியை, பக்க விளைவுகள் இல்லாமல் காப்பாற்ற இணைப்பு ஒன்றுதான்  சிறந்த சிகிச்சை என்பதை அனைவரும் இந்தத் தருணத்தில் புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். 
  நலிவுற்ற வங்கிகளைக் காப்பதைத் தவிர, இந்த மாதிரி இணைப்புகளின் மூலம் மேலும் பல நன்மைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.  எண்ணிக்கை குறைவால், நிர்வாக எல்லை கட்டுப்பாட்டுத் திறன் மேம்பாடு அதில் முதன்மை இடம்பெறுகிறது. கட்டுப்பாட்டுத் திறன் மேம்பாடு என்பது வங்கிகள் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பல பிரச்னைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கியது ஆகும்.
  இணைப்புகள், வலுவான நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி, வங்கிகளின் கடன் வழங்குதல், கடன் வசூல் போன்ற அவற்றின் செயல்பாட்டுத் திறனை பல மடங்கு அதிகரிக்கும்.  அதனால், வர்த்தகம்  வளர்ச்சி அடைந்து,  அரசு ஒதுக்கீடுகளை எதிர்பார்க்காமல், அவற்றின்  மூலதன தேவைகளை சுயமாகப் பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய வலு கிடைக்கும். இந்த மேம்பாடுகள் தொழில் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, இந்தியப் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும்.
  வங்கித் துறையில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு இணைப்பு ஒன்றுதான் தீர்வு என்ற தீர்க்கமான முடிவுக்கு வர முடியாவிட்டாலும், அதில், பக்க விளைவுகளை தவிர்த்த சில தீர்வுகள் அடங்கி இருக்கின்றன. அதே சமயம், வங்கிகளை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும், அது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் வங்கித் துறையில் இணைப்புகள் என்ற விவேகமான முடிவுக்கு பச்சைக் கொடி காட்டுவோம்.
  கட்டுரையாளர்:
  வங்கி அதிகாரி (ஓய்வு)
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai