பா.ஜ.க. மீண்டும் தனித்துப் போட்டி?

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில்  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில்  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 
கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் தனித்துப் போட்டியிடவே பா.ஜ.க விரும்புகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனை கட்சியுடன்  பா.ஜ.க. கூட்டணி அமைத்துத்  தேர்தலைச் சந்தித்தது. இரு கட்சிகளும் சம இடங்களில் போட்டியிட்டன. அப்போது அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என  சிவசேனை கட்சியிடம் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது பா.ஜ.க.வின் நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மோடி-
அமித் ஷா தலைமையில் போட்டியிட்ட பா.ஜ.க. அதிக இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது மகாராஷ்டிர மாநில பா.ஜ.க.  தலைவர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதும் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதும் பா.ஜ.க. நிலைப்பாட்டின் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாகும். தனித்துப் போட்டி என்ற முடிவுடன் அதிக இடங்களில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி உறுதி என்று பா.ஜ.க. கணக்குப் போடுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தல் உடன்பாட்டின்போதே அடுத்து வரும் சட்டப்பேரவைத்  தேர்தலில் சிவசேனை கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்றும் தொகுதிகளை பா.ஜ.க.-சிவசேனை இரண்டும் சமமாகப் பிரித்துக் கொள்வது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேயைச் சந்தித்த அப்போதைய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வெளிப்படையாக இதை அறிவித்தார். ஆனால், இப்போது அதைச் செயல்படுத்துவதில் பா.ஜ.க. ஆர்வம் காட்டாமல் விலகி நிற்கிறது.
கடந்த 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு போட்டியிட பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் தனித்துப் போட்டியிட வேண்டியதாயிற்று. சிவசேனையுடன் கூட்டணி இல்லாததால் முடிவு எப்படி இருக்குமோ என்ற கவலையுடன் பா.ஜ.க. போட்டியிட்ட போதிலும் எதிர்பாராத விதமாக 122 தொகுதிகளில் வென்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. (தேர்தலுக்குப் பின் பாஜகவை சிவசேனை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.)
2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பா.ஜ.க. வென்றது. இந்த முறை எப்படியும் 145 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீலும் பா.ஜ.க.
-சிவசேனை இடையே சமமான தொகுதிப் பங்கீடு என்பது சரிபட்டு வராது என்று பேசி வருகிறார்.
ஏற்கெனவே அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்ற தார்மீக நிர்ப்பந்தம் பா.ஜ.க.வுக்கு இருந்தாலும் இப்போது அந்த உடன்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. அதாவது  சிவசேனை, தங்களுக்கான தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு ஒத்துவராவிட்டால் தனித்துப் போட்டி என்ற முடிவில் பா.ஜ.க. இருப்பதாகத் தெரிகிறது.
2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 122 இடங்களிலும், சிவசேனை 63 இடங்களிலும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போதுள்ள நிலையில் வெற்றிபெற்ற 122 இடங்களிலும்  பா.ஜ.க. போட்டியிடுவது, அதேபோல சிவசேனை 63 இடங்களில் மீண்டும் போட்டியிடுவது, எஞ்சியுள்ள தொகுதிகளை, அதாவது எதிர்க்கட்சிகள்,  உதிரிக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டு வென்ற 108 தொகுதிகளை சிவசேனையுடன் பேசி பிரித்துக் கொள்வது என்றும் அதற்கான வழிமுறைகளை உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதனிடையே 12-க்கும் மேலான பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. மற்றும் சிவசேனை கட்சியில் ஐக்கியமாகிவிட்டனர். தேர்தல் நெருங்குவதால் மேலும் சிலர் வருவார்கள் என்றும் கருதப்படுகிறது. சிவசேனையுடன் கூட்டணி அமைந்தால் அந்தக் கட்சிக்கு அதிகபட்சம் 100 இடங்களுக்கு மேல் ஒதுக்குவதில்லை என்ற முடிவில் பா.ஜ.க. இருப்பதாகத் தெரிகிறது.
அதாவது, மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் 145 இடங்களில் பா.ஜ.க. வெற்றி
பெற வேண்டும். எனவே 160 இடங்களில் போட்டியிட்டால் எப்படியும் 145 என்ற இலக்கை எட்டிப் பிடித்துவிடலாம் என்று பா.ஜ.க. கருதுகிறது. ஆனால், சிவசேனை கட்சி இதை ஒருபோதும் ஏற்க வாய்ப்பில்லை. பா.ஜ.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவும் சிவசேனை தயாராக இல்லை. 
இன்னும் இரண்டு மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் சிவசேனையுடன் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்று முடிவு செய்ய வேண்டிய நிலையில்  பா.ஜ.க. உள்ளது.
பா.ஜ.க.வின் விருப்பம் தனித்துப் போட்டியிடுவதுதான். மகாராஷ்டிரத்தில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் பேசிவிட்டு கூட்டணி பற்றி முறையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
கடந்த தேர்தலைப் போலவே துணிச்சலுடன் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். ஒருவேளை எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் ஆட்சியமைக்கும் நிலையில் சிவசேனையின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் பா.ஜ.க. இருப்பதாகவே தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com