கூண்டுக்குள் சிக்காத சட்ட மேதை!

குரைக்கும் நாய்களுக்கெல்லாம் நான் பதில் செல்ல வேண்டியதில்லைபிரபல வழக்குரைஞர் ராம் ஜேத்மலானியை மோசமாக விமர்சித்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்ன வார்த்தைகள் இவை.

குரைக்கும் நாய்களுக்கெல்லாம் நான் பதில் செல்ல வேண்டியதில்லைபிரபல வழக்குரைஞர் ராம் ஜேத்மலானியை மோசமாக விமர்சித்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்ன வார்த்தைகள் இவை. 1987-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17-ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உள்ளிட்ட அனைத்து முக்கிய பத்திரிகைகளிலும் இது வெளியானது. 
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் இந்திய அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வீடன் நாட்டு வானொலி தெரிவித்த செய்தியின் பின்னணியில்தான் ராஜீவ் காந்தி மேற்கண்டவாறு விமர்சித்திருந்தார். இந்தச் செய்தி விஷமத்தனமானது மட்டுமல்ல, அதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை என்றும் கூறியிருந்தார். தமது புகழைக் குறைக்கவும், தமது அரசை நிலைகுலையச் செய்யவும் வெளியிடப்பட்டுள்ள செய்தி என்றும் கருத்துக் கூறியிருந்தார்.
அந்தக் காலத்தில் அதிகார பலம் வாய்ந்த ராஜீவ் காந்தி அரசின் ஊழல்களை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. அதைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் நிறுவனம் மீது அதிரடி சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்கு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். அரசைக் கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
போஃபர்ஸ் ஊழல் புகார்களை ராஜீவ் காந்தி மறுத்ததை அடுத்து, நீங்கள் உண்மையிலேயே நேர்மையானவர் என்றால்,  இந்த ஊழலில் எங்களுக்குத் தொடர்பில்லை, இது பற்றி முழுவிசாரணை நடத்தி யாருக்காவது இதில் தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று கூறுவதுதானே என்று ஜேத்மலானி கேட்டார். ஜேத்மலானியின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்று ஒரு எம்.பி., ராஜீவிடம் துருவித் துருவிக் கேட்டபோது அவர் தெரிவித்த காட்டமான வார்த்தைகள்தான் மேற்கூறப்பட்டவை.
1987-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி   நானும், ராம்நாத்ஜியும் காலை நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு கரோல் பாக் ஹனுமன் கோயிலுக்குச் சென்றுவிட்டு நேராக ராம் ஜேத்மலானி வீட்டுக்குச் சென்றோம். ராமநாத்ஜி ஜேத்மலானியிடம், ராம் இன்று பத்திரிகையை படித்தீர்களா? பிரதமர் ராஜீவ் உங்களை குரைக்கும் நாய் என்று விமர்சித்திருக்கிறாரே, அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டபோது, அது தொடர்பான கடிதத்தைத்தான் தயார் செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு, கடிதத்தின் முதல் வரியையும் படித்துக் காட்டினார். பிரதமர் அவர்களே! நீங்கள் அதிர்ஷ்டக்காரர். நான் குரைக்கும் நாய்தான். ரத்த வெறி பிடித்த வேட்டை நாயல்ல. ஆனால், ஒன்றை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திருடனைக் கண்டால்தான் நாய் குரைக்கும். நான் இன்று முதல் அடுத்த 30 நாள்களுக்கு உங்களிடம் தினமும் 10 கேள்விகள் எழுப்பப் போகிறேன். ஒன்று, அதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்; அல்லது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் ஜேத்மலானி. ராஜீவுக்கு எதிராக அவர் போர் தொடுக்கத் தொடங்கிவிட்டதைக் கண்டு நாங்கள் ஆச்சர்யம் அடைந்தோம். 
அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில், திருடனைப் பார்த்து நாய் குரைக்கத் தொடங்கி விட்டது - சொல்கிறார் ஜேத்மலானி என்று தலைப்பிட்டு செய்தி வெளியானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வெளியிட்ட அந்தக் கேள்விகள் அனைத்துப் பிராந்திய மொழி பத்திரிகைகளிலும் வெளியாயின.
அரசியலில் தூய்மையானவர் என்று எல்லோராலும் கருதப்பட்ட ராஜீவ் காந்தி, ஜேத்மலானியின் கேள்விக்கணைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடியபோது, ராஜீவின் நேர்மை மீது மக்களுக்குச் சந்தேகம் எழும் வகையில் அவரது அரசின் ஊழல்களை தோலுரித்துக் காட்டினார்.
1975-இல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதற்கு முன்பிருந்தே ராம் ஜேத்மலானிக்கும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு எதிராக இந்திரா காந்தி பதிவு செய்த பல வழக்குகளில் ஜேத்மலானிதான் ஆஜராகி வாதிட்டார். பிகார் இயக்கத்துக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணனும், நானாஜி தேஷ்முக்கும் தலைமை வகித்தபோது அதற்கு ராம்நாத்ஜி ஆதரவாக இருந்தார். அப்போது அவர்கள் அரசை சீர்குலைக்க முயல்வதாக இந்திரா காந்தி குற்றஞ்சாட்டியதுடன் நெருக்கடி நிலையை அறிவித்தார். ராம்நாத் கோயங்கா இந்தியாவில் இருந்தபடியும், ராம் ஜேத்மலானி வெளிநாட்டில் இருந்தபடியும் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி வந்தனர்.
1980-களில் அம்பானி குழுமம், பிரபலமான எல் அண்ட் டி நிறுவனத்தை கபளீகரம் செய்ய முயன்றபோது எக்ஸ்பிரஸ் பக்கம் நின்று அம்பானியின் முயற்சியை தடுத்து நிறுத்தினார்.  இதைத் தொடர்ந்து அப்போதைய குடியரசுத் தலைவர் ஜைல் சிங், பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தின் நகலை எக்ஸ்பிரஸ் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசின் ரகசிய காப்புச் சட்டத்தை மீறிவிட்டதாக என் மீதும், கோயங்கா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான் கைது செய்யப்பட்டேன். பின்னர் ராஜீவுக்கு ஜைல் சிங் எழுதிய கடிதங்கள் போலியானவை என்பதை தோலுரித்துக் காட்டியதை அடுத்து எங்கள் மீதான நடவடிக்கையை அரசு கைவிட்டது.
ராஜீவ் ஆட்சியில் சிபிஐ அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பலமுறை சோதனை நடத்தியும் 300-க்கும் மேலான வழக்குகளை போட்டபோதிலும் ராம் ஜேத்மலானியும், ராம்நாத் கோயங்காவும் கொஞ்சம்கூட அசரவில்லை. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதை சந்திக்கத் தயாராக இருப்பதாகவே தெரிவித்தனர்.
ஒரு சிறந்த வழக்குரைஞரான ராம்ஜேத் மலானி எதற்கும் அஞ்சாதவர். எந்தச் சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்ட கடைசிவரை தனது தரப்பினருக்காக வாதாடுபவர். இந்திரா காந்தி கொலையாளிகள் தரப்புக்காக அவர் வாதாட முன்வந்தபோது அவருக்கு எதிராக பலத்த குரல்கள் எழுந்தன. அந்த காரணத்துக்காகவே அவர் பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.
அவரது வாதத் திறமையால் குற்றவாளிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டபோது அவரைப் பலரும் பாராட்டினர். பா.ஜ.க.வும் மீண்டும் அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டது. ஒரு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் தரப்பில் நியாயம் இருக்கிறது என்று தெரியவந்தால், நீதியை நிலைநாட்ட அவருக்கு ஆதரவாக வாதாடுவதில் தவறில்லை என்பது அவரது கருத்து. இதே போன்று, ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக அவர் ஆஜராக முன்வந்தபோது அவரின் செயல்மீது யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவரது துணிச்சல் பாராட்டுக்குரியது.
மனு சர்மா என்பவர் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவருக்காக ஜேத்மலானி வாதாடினார். இதை அவரது நண்பர்களே விரும்பவில்லை. ஆனாலும் அவர் தொழில் தர்மத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
அரசியலில் ஊழலை எதிர்க்கிறீர்கள். ஆனால், நீதிமன்றத்தில் ஊழல்பேர்வழிகளுக்கு ஆதரவாக ஆஜராகிறீர்கள். அது எப்படி என்று கேட்டபோது, ஊழல் செய்து சட்டவிரோதமாக பணம் சேர்த்தவர்களில் பலர் காங்கிரஸ்காரர்களாக இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு கூட்டாளிகளாக இருப்பார்கள். பணக்காரர்களிடம் அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்காக வாதாடுவது எனது தொழில். அதே நேரத்தில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது எனது கொள்கை என்று பதில் சொன்னார் ராம் ஜேத்மலானி.
ராம்நாத்ஜிக்காக பல வழக்குகளில் அவர் வாதாடியபோதும் அதற்காக அவர் கட்டணம் ஏதும் வாங்கிக்கொள்ளவில்லை. ராம்நாத்ஜி அவரிடம் ஒரு முறை வழக்குக்காக உங்களை (ஜேத்மலானி) நாடி வருபவர்களிடம் கட்டணத்தை எப்படி நிர்ணயிக்கிறீர்கள் என்று கேட்டபோது, அது எனது வாடிக்கையாளரின் பர்ஸ் கனமாக இருப்பதையும், அவரது பிரச்னைகளையும் பொருத்தது என்று சிரித்துக்கொண்டே கூறினார். 
வழக்குரைஞர் என்ற வகையில் அவர் சட்ட அறிவு நிறைந்தவர். அவரது ஞாபக சக்தியும் அலாதியானது. வழக்கின் தன்மையை அறிந்துகொண்டு, அதிலுள்ள சட்ட நுணுக்கங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு தன் கட்சிக்காரருக்கு அளிக்கப்பட்ட தண்டனை தவறானது என்று நிரூபித்து அவரை விடுவிப்பது அவருக்கே கைவந்த கலை.
ஜனநாயகவாதியான ஜேத்மலானி, சர்வாதிகாரம் எந்த உருவத்தில் வந்தாலும் அதனை எதிர்த்துக் குரல்கொடுக்கத் தயங்கியதில்லை. 2013-ஆம் ஆண்டு, கட்சி மேலிடத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கியதற்காக அவர் பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், எதற்கும் அசராத ஜேத்மலானி, தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது சட்ட விரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறி வழக்கு தொடுத்தார். இறுதியில் அவரது இடைநீக்கத்தை பா.ஜ.க. திரும்பப் பெற வேண்டியதாயிற்று.
போலித்தனம் என்பது அவரது அகராதியில் இல்லை. தனக்கு மனதில் பட்டதை செயல்படுத்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. வாழ்க்கையில் தனக்கென சில நியதிகளை வகுத்துக்கொண்டு அதை இம்மியும் பிசகாமல் கடைப்பிடித்து வந்தார். அவர் சாதாரண மனிதர் அல்லர், உன்னதமானவர். சட்டம் மற்றும் அரசியல் உலகில் அவரைப் போன்ற ஒருவரை இனி காண்பது அரிது.
கட்டுரையாளர்:
ஆசிரியர், துக்ளக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com