Enable Javscript for better performance
எங்கே தொலைந்தது மனிதம்?- Dinamani

சுடச்சுட

  

  எங்கே தொலைந்தது மனிதம்?

  By சுரேந்தர் ரவி  |   Published on : 13th September 2019 01:45 AM  |   அ+அ அ-   |    |  

  ஓர் அடர்ந்த காடு. அங்கு ஒரு குருவி, பெருமுயற்சியுடன் நீண்ட நாள்களாகக் கட்டிய தனது கூட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது. அந்தக் காட்டில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் தீ பிடிப்பது வழக்கம். அதை அந்தக் குருவி நன்கு அறிந்திருந்தது. ஒருவேளை அது வசிக்கும் இடத்தில் தீ பிடித்தால், அதிலிருந்து தப்பிக்கும் வழிகள் அனைத்தும் அந்தக் குருவிக்குத் தெரிந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத் தீயினால், அந்தக் குருவிக்கும், அதன் கூட்டுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
  ஆனால், இந்த ஆண்டு குருவிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசவில்லை. வழக்கமான தீ விபத்தாக இல்லாமல், மிகப் பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குருவியின் கூடு சிக்கிக் கொண்டது. எனினும், அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த அந்தக் குருவி தப்பித்துவிட்டது. ஆனால், அஸ்ஸாமில் வாழ்ந்து வந்த 19 லட்சம் குருவிகளால் தப்ப முடியவில்லை.
  அமேசானில் பற்றிய தீ, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) என்ற பெயரில் அஸ்ஸாமிலும் பரவியது. இரண்டு இடங்களிலும் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள அரசுகள், கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி அரசியல் செய்து வருவதுதான் கவலையை ஏற்படுத்துகிறது.
  இந்தப் பிரச்னையில் அரசியலை விட்டுவிடுவோம். ஏனெனில், பெரும்பாலான பிரச்னைகளுக்கு அரசியல் கண்ணோட்டத்தில் தீர்வு கிடைக்காது என்பது நிதர்சனம். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான அடிப்படை ஆணிவேரைத் தேடினால், மனிதநேயமும் சகிப்பின்மையும் காணாமல் போன இடத்தில் அது புதைந்து கிடக்கும்.
  எங்கே தொலைந்தது நம்முள் இருந்த மனிதநேயம்? குடும்பங்களிடையேயும், மக்களிடையேயும் காணப்பட்ட ஒற்றுமை, வரலாற்றின் எந்தப் புள்ளியில் காணாமல் போனது? யாதும் ஊரே யாவரும் கேளிர், உலகமே ஒரு குடும்பம் போன்றவையெல்லாம் ஏடுகளுக்குள்ளேயே சிறைபட்டுவிட்டனவா? அவை மக்களின் மனதில் குடியேறவில்லையா? இரண்டு உலகப் போர்களையும், பாகிஸ்தான் பிரிவினையின்போது எழுதப்பட்ட ரத்த சரித்திரத்தையும் கண்டபிறகும்கூட, மனிதம் இன்னும் உயிர்த்தெழவில்லையா?
  வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், உள்ளூர் கலாசாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்; இங்குள்ள வளங்களையும், வேலைவாய்ப்புகளையும் பறித்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள். ஆங்கிலத்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுவதைப் போன்ற அறியாமை அல்லவா இந்தக் குற்றச்சாட்டுகள்? நம் மொழியும், கலாசாரமும் வெளிநாட்டினரிடம் தோற்கும் அளவுக்கு வலிமை குன்றியதா என்ன?
  வெளிநாட்டினரும் போற்றிப் புகழ்ந்த கலாசாரம் அல்லவா நம்முடையது? அப்படியிருக்கையில், அவர்களை வாழ வைத்து நாம் வாழ வேண்டாமா? வளங்கள் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்தப் புள்ளிக்குள்தான், சுயநலம் என்னும் ஆணிவேரிலிருந்து முளைத்த சகிப்பின்மை பெருவிருட்சமாகி நிற்கிறது.
  1901-ஆம் ஆண்டில் 23.84 கோடி மக்களுக்கும், 1951-ஆம் ஆண்டில் 36.11 கோடி மக்களுக்கும், 2011-இல் 121 கோடி மக்களுக்கும் அடைக்கலம் அளித்து வாழ வைத்தது நம் நாடு. இன்று சுமார் 135 கோடி மக்களை வாழ வைத்து வருகிறது. மேலும், இலங்கையில் இருந்து வந்தவர்களையும், மியான்மரிலிருந்து வங்கதேசம் வழியாக வந்த ரோஹிங்கயா அகதிகளையும்கூட நாம் வாழவைத்துத்தான் வருகிறோம். நாளை நாட்டின் மக்கள்தொகை 150 கோடியாக உயர்ந்தாலும், அவர்களைக் காக்கும் அளவுக்கான வளங்களைக் கொண்டதுதான் நமது நாடு.
  ஏற்கெனவே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் கும்பல் கொலைகளும், மதம் சார்ந்த தாக்குதல்களும் மக்களின் சகிப்புத்தன்மை மீது கேள்வி எழுப்பி வருகின்றன. 
  சிரியாவில் நிகழ்ந்த போர் லட்சக்கணக்கான மனிதர்களை அகதிகளாக்கியது. பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதால், அந்த நாடுகளிலிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். அவர்களைத் தடுக்க நாட்டு எல்லையில் சுவரெழுப்புவது, அகதிகளை ஆதரிக்கும் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து நீக்குவது போன்ற மனிதத்தன்மையற்ற செயல்கள் இன்னும் அரங்கேறிதான் வருகின்றன.
  சிரியாவிலிருந்து கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியேறிய அகதிகள் சென்ற கப்பல் மூழ்கியதில், ஆலன் குர்தி என்ற 3 வயதுக் குழந்தை மத்தியத் தரைக்கடலின் கரையில் சவமாகக் கிடந்ததும், மெக்ஸிகோவிலிருந்து கடந்த ஜூன் மாதத்தில் அகதியாக வெளியேறியவரும், அவரின்மகளும் இறந்து நீரில் மிதந்ததும் இன்னும் நம் கண்களை விட்டு அகலாத காட்சிகளாகவே இருக்கின்றன. என்ஆர்சி பட்டியல் காரணமாக இதுபோன்ற நிலைமை யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். மக்களின் மனிதத்தை மீட்டெடுப்பதே அதற்கு ஒரே வழியாகும்.  
  அதே வேளையில், இன்னொரு முக்கியக் கேள்வியும் எழுகிறது. என்ஆர்சி இறுதிப் பட்டியலில் விடுபட்டுள்ள 19 லட்சம் பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கட்டும். அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என வங்கதேச அரசு அறிவித்து விட்டது. இந்திய அரசும், என்ஆர்சி பணிகள் அனைத்தும் உள்நாட்டு விவகாரம் என்று விளக்கமளித்துவிட்டது.
  அப்படியிருக்கையில், மக்களின் வரிப் பணத்தையும், அதிகாரிகளின் நேரத்தையும்  4 ஆண்டுகளாகச் செலவிட்டு, 19 லட்சம் பேரை சட்டவிரோதக் குடியேறிகள் என்று முத்திரை குத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் முயற்சிபோல் அல்லவா இது இருக்கிறது?
  அகதிகள் என்று பெயர்சூட்டப்பட்டவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பதும், வாழ்ந்து வரும் நாட்டில் அங்கீகாரமின்றி இருப்பதும், குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால் தாக்கப்படுவதும் மனிதநேயமும், சகிப்புத்தன்மையும் மக்களிடையே இல்லாதவரை என்றைக்கும் குறையப் போவதில்லை. நாடு முழுவதிலும் கூடிய விரைவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பணிகள் தொடங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai